Wednesday, January 15, 2014

இலங்கை - தமிழ்நாடு மீனவர் பிரச்சனையின் மறுபக்கம்??
தமிழ்நாட்டையும்  தமிழீழத்தையும் பிரிக்கும் கடலுக்குப் பாக்குநீரிணை என்பதற்குப் பதிலாக 'தமிழர் கடல்' அல்லது Sea of Tamils தான் சரியான பெயராக இருக்க முடியும். அதன் இருகரையிலும் வாழும் தமிழர்கள் தொன்று தொட்டு, எந்தவித பங்காளிச் சண்டையும், சச்சரவுமில்லாமல், மாற்றாரின்  தலையீடு எதுவுமின்றி முழு ஆளுமையுடன்  அதன் கடல் வளத்தை 
அனுபவித்து வந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.   
ஆனால் ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல் இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன.ஒவ்வொரு கதைக்கும் சம்பவத்துக்குப் பின்னாலும் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரிடமும் வேறுபட்ட கதைகளும், நியாயங்களும் இருக்குமென்பது என்பது யாவரும் அறிந்ததே.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலத்தில்,  
இலங்கைத் தமிழ் மீனவர்கள் தமது தொழிலைச்  சுதந்திரமாகச் செய்வதற்கு
இலங்கைக் கடற்படை அனுமதிக்காததாலும்யுத்தத்தால் தமது நாட்டிலேயே 
அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்ததாலும்தமிழ்நாட்டு மீனவர்கள்  தனிக்
காட்டு ராஜாவாகஎந்தவித போட்டியுமின்றி பாக்குநீரிணைமுழுவதிலும் 
மீன்பிடித்து வந்தனர் போட்டியின்றி பெருமளவில் மீன்கள் கிடைத்ததால்
பலரும் மீன்பிடியைத் தொழிலாகக் கொண்டனர்அதனால் மீன்பிடியை நம்பி 
வாழும் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தனஆனால்  பலநாடுகளின் கூட்டுச்சதியால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்நாட்டில் யுத்தம் முடிந்ததால்மீண்டும் தமது தொழிலைச் செய்யலாம் என எண்ணியிருந்த இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைபுலிகளின் பயம் இல்லாததாலும்வட கிழக்கை ஆக்கிரமித்திருக்கும் இலங்கைஇராணுவத்தினரின் பாதுகாப்புடனும்இலங்கையின்  வட கிழக்கில் தமிழர்களை சிறுபான்மையினராக்கினால் தான்இன்னொரு தமிழீழப் போராட்டம் தலையெடுக்காது என்பதையுணர்ந்த இலங்கை அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றக் கொள்கை
களாலும் ஊக்குவிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான சிங்கள மீனவர்கள்
இலங்கை அரசின் உதவியுடன் வடக்கிலும் கிழக்கிலும் குடியேறி தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்றனர். 

தமது  பாரம்பரிய மீனவ கிராமங்களிலேயே மீன்பிடித்  தொழிலைச் செய்ய முடியாத அவல நிலையில் உள்ளனர் வட-கிழக்கில் வாழும் ஈழத்தமிழ் மீனவர்கள்.(காணொளி: http://www.youtube.com/watch?v=PN-rckqZh68)

ஈழத் தமிழர்களின் இக்கட்டான நிலை


பாக்குநீரிணையில் அதாவது தமிழர்களின் கடலில் அதன் வளத்தைப் பங்கு போட வந்த புதியவர்(சிங்களவர்)களின் அட்டகாசத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திண்டாடும் ஈழத்தமிழ் மீனவர்களை, தமிழ்நாட்டுச் சகோதர மீனவர்களின் சில மீன்பிடி முறைகளும், அவர்களிடமுள்ள பாரிய வள்ளங்களும், வலைகளும், இயந்திரங்களின் பாவனை மட்டுமன்றி கடல்வாழ் உயிரினங்கள் முழுவதும் அழிந்து போய்விடாமல்  பாதுகாக்க வேண்டிய  தேவையையும்  உணராமல், வெறுமனே வர்த்தக நோக்கத்துடன் மட்டும் கடல்வளத்தை சூறையாடும் செயல்களும், ஈழத்தமிழ் மீனவர்களின் இந்த தலைமுறையை மட்டுமல்ல, அடுத்த தலைமுறைகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக் குறியாக்கி, தமிழினத்துக்கு காலம் காலமாக உணவளித்து, தமிழர்களின் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த பாக்குநீரிணையை சாக்கடலாக மாற்றி விடுமோ என ஈழத்தமிழர்கள் பலரும்  பயப்படுகிறார்கள்.  மத்திய கிழக்கிலுள்ள சாக்கடலில் எவ்வாறு மீனினங்களோ அல்லது கடல்வாழ் உயிரினங்களோ (ஒரு சில நுண்ணுயிர்களைத் தவிரஇல்லையோ அதுபோன்ற நிலை தமிழக மீனவர்களின் மீன்பிடி முறைகளினால் அதே நிலை பாக்குநீரிணையிலும் ஏற்படாது என உறுதியாகக் கூறமுடியாது. 
Photo courtesy: Groundsview

இலங்கைஇந்திய மீனவர்களின் 
பிரச்சனையில் ஈழத்தமிழர்கள்  எமது கருத்தை வெளிப்படுத்த முடியாமல், அதாவது மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாத நிலையில் உள்ளோம் என்பது தான் உண்மை. ஏனென்றால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது தமிழ்நாட்டு மீனவர்களின் உதவியையும், பங்களிப்பையும் யாரும் மறுக்க முடியாது.  

மிழ்நாட்டுக்கு தொப்புள்கொடி உறவுகள் என நினைத்து ஓடிவந்த ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் பல அவமானங்களையும், துன்பங்களையும், பயங்கரவாதிகள் என்ற பட்டத்தையும், அகதிகள் என்று இழிவாக நடத்தப்பட்டு, பலர் சிறை வாழ்க்கையையும்  அனுபவித்தாலும் கூட சாதாரண தமிழ் மீனவர்களும், அவர்களது குடும்பங்களும் தமிழர் என்ற முறையில் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட நன்றிக் கடனையும் ஈழத்தமிழர்கள் மறந்து விடவில்லை. அதனால், இந்திய மீனவர்களுக்கெதிராக போராட்டங்கள் நடத்துமாறு இலங்கை ராணுவம் வற்புறுத்தினாலும் கூட, அவர்கள் விருப்பமின்றியே சில ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்கின்றனர். 'ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்' என்ற மாதிரி, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஆதரவாகப் பேசினால், சிங்கள இராணுவத்துக்குக்  கோபம், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக ஏதாவது கூறினால், தமிழ்நாட்டுச் சகோதரர்களுக்குக் கோபம்,  ஈழத் தமிழர்களின் இக்கட்டான நிலை இது

தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி முறைகள் பாக்குநீரிணையில்  வாழும் 
உயிரினங்களினதும் நலன்களையும்எதிர்கால தமிழ்த் தலைமுறையினரின் 
வாழ்வாதாரத்தையும்கடல்வளங்களைப் பாதுகாப்பதையும் கருத்திற் கொண்டதாக அமைய வேண்டும் என்பது தான் ஈழத்தமிழர்களின் விருப்பமே 
தவிரஇலங்கைக்கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த காரணத்துக்காக 
அவர்கள்மனிதாபிமானமற்ற  முறையில்  நடத்தப்படுவதையும்கொல்லப்படுவதையும் எந்தக் காரணம் கொண்டும் நியாயப்படுத்துவதோ ஆதரிப்பதோ அல்லஇந்த நிலைக்குக் காரணமேதட்டிக் கேட்க தமிழர்களுக்கென சொந்தமாகஒரு நாடோ அல்லது தமிழர்கள் ஆளும் அரசோ இல்லாதது  தான்


தமிழ்நாட்டு மீனவர்களால் பாக்குநீரிணை சாக்கடலாகிறது??


image courtesy Google
தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி முறைகள் குறிப்பாக அடிமட்டத்திலிருந்து மீன்களையும், கடல்வாழ் உயிரினங்களையும் வாரி வரும் Bottom Trawling Fishing Method  மூலம் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் புல்டோசர் கொண்டு அழிப்பது போன்று மீன்பிடிக்கும் முறைகளை அவர்கள் முதலில் கைவிட வேண்டும் என்பது தான் ஈழத்தமிழ்  மீனவர்களின் வேண்டுகோள்

இப்படியாக  சுற்றாடலையும், கடலின் நலன்களையும், அங்கு வாழும் உயிரினங்கள் அழியப்படாமல் காக்கப்படவேண்டியதையும் கருத்தில் கொள்ளாத வகையில் Bottom Trawling முறையினால், ஒவ்வொரு இரவும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் தமிழ்நாட்டுக்  கடல் எல்லைக்குள் இருக்கும் பாக்குநீரிணையைச்  சூறையாடியதால் தான்,  இன்று தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் கடல்வளம் முற்றாக அழிந்து, இலங்கைக் கடல் எல்லைக்குள் மட்டும் மீன்வளம் அதிகளவில் காணப்படுகிறது. அதனால் இலங்கையின் கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைவது மட்டுமன்றி, இலங்கையின்  கடல்வளத்தையும் அழிக்கும் வகையில் மீன்பிடி வலைகளையும், மீன்பிடி முறைகளையும் பாவிப்பது முதலில் தடைசெய்யப்பட வேண்டும் என்பது இலங்கையின் கடல்சார் வல்லுனர்களின் கருத்தாகும்.

வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் ஐநூறு தொடக்கம் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு ட்ரோலர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்க நுழைகின்றன.  வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் பாரிய இயந்திரங்கள் பொருத்திய ட்ரோலர்கள் பாக்குநீரிணையில் மீன்பிடிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. அதனால் இந்த மூன்று நாட்களிலும் தமிழ்நாட்டு மீனவர்களின் வலுவுள்ள பெரிய மீன்பிடி ட்ரோலர்கள், இலங்கைத் தமிழ் மீனவர்களின் மீன்களையும், இறால்களையும்  அப்படியே அள்ளிக் கொண்டு போவதை மட்டுமல்ல, அவர்களின் Heavy Bottom Trawlers கடல்வாழ் உயிரினங்களனைத்துடனும் சேர்த்து  வடமாகாண ஈழத்தமிழ் மீனவர்களின் சிறிய வலைகளையும் அப்படியே கிழித்துக் கொண்டு போவதை, பார்த்துக் கொண்டு  என்ன செய்வதென்றறியாது தெரியாமல் தவிக்கிறார்கள் முப்பது வருடப் போரினால் பாதிக்கப்பட்டு, அதன் விளைவுகளிலிருந்து மீள முயற்சிக்கும் ஈழத்தமிழ் மீனவர்கள்


அப்படி இந்திய மீனவர்களின் பெரிய ட்ரோலர்களின் வலைகளில் அகப்படாமல் தப்பிய எஞ்சிய கடல்வளத்தை,  இன்று இலங்கையின் கரையோரம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கும் சிங்கள மீனவர்களிடம் கொடுத்து விட்டு, தமது உணவுக்கே அல்லாடும் நிலையை வடமாகாணத்தின் ஈழத்தமிழ் மீனவர்கள் அடைந்து கொண்டிருக்கின்றனர்ஆனால் யுத்தத்தின் முன்னர், வடமாகாண மீனவர்கள் இலங்கையின் மீன்பிடித் தொழிலில் முன்னணியில் இருந்தனர் என்பது மட்டுமல்ல, இலங்கையின் மொத்த கடலுணவு உற்பத்தியில் 41% வடமாகாண மீனவர்களால் உற்பத்தி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
                                                                                                                                                   Palk bay
மீன்பிடிக்கும் முறைகளிலேயே Trawling மூலம் மீன்பிடிப்பது மோசமான அழிவைக் கொடுக்கும் முறையாகும். இந்த Bottom Trawlers கடலின் தரைமட்டத்திலுள்ள அனைத்தையும்  அப்படியே வாரிக்கொண்டு வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரோலர்களின் சிறிய கண்ணுள்ள வலைகளில் வரி இறால், கடல்வெள்ளரிகள், நீலநண்டுகள், கணவாய் போன்றவற்றின் குஞ்சுகளும், குட்டிகளும், முட்டைகளும் கூட அகப்பட்டுக் கொள்கின்றன.  இந்திய ட்ரோலர்கள் இலங்கைக் கடலில் நிறைந்து காணப்படும், மீன், வரி இறால், கடல்வெள்ளரி, நண்டு, கணவாய் என்பனவற்றில் ஒவ்வொரு தொன்  அறுவடை செய்யப்படும் போதும், 5-10 தொன் மீன், இறால், கணவாய், கடல் முள்ளெலி குஞ்சுகள், மெல்லுடலிகள், கடற்புழுக்களை மட்டுமன்றி கடல் தாவரங்களையும் வாரிக் கொண்டு வருகின்றன. ட்ரோலர்களால் வாரிக்கொண்டு வரப்படுபவற்றில் 40-50 வீதமானவை உயிரற்ற நிலையில் மீண்டும் கடலுக்குள்ளேயே, வீசப்படுகின்றன. அத்துடன் தமிழ்நாட்டு மீனவர்களின்  இவ்வகையான  அடிமட்ட இழுவை முறை மீன்பிடிப்பினால் மணல் திட்டுக்களுக்கும், பவளப்பாறைகளுக்கும் கூட அழிவு நேரிடுகிறது. இவையெல்லாம் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை.  ஆனால் இலங்கைக் கடலின் மீன்வளத்தை  அழியாமல் காப்பதற்காக, இலங்கை மீனவர்கள் இப்படியான Bottom Trawling Fishing Method  மூலம் மீன் பிடிப்பது இலங்கை அரசால் தடை செய்யபட்டுள்ளது


தமிழ்நாட்டுக் கடலில் மீன்வளத்தை மீண்டும் வளர்த்தெடுக்க, அங்கு பாரியளவில் வர்த்தகத்துக்காக மீன்பிடித்தல் முற்றாக இடைநிறுத்தப்பட்டு  (Moratorium on Commercial fishing)  அங்குள்ள மீன்களும், ஏனைய கடல்வாழ் உயிரினங்களும் மீண்டும் வளர வாய்ப்பளிப்பளிக்க வேண்டும். இப்படியான இடைநிறுத்தம் அல்லது Fishing Moratorium மேலை நாடுகளிலும் வழக்கத்தில் உண்டு. உதாரணமாக கனடாவில் நியூபின்லாந்து அல்லது நியூபவுன்லாந்தில்(Newfoundland), அத்திலாந்திக் கடலில் கொட்(COD) மீன்களை அழிந்து போகும் அளவுக்கு மீன்பிடித்தால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மீனவர்கள் கடலில் கொட் மீன்களைப் பிடிப்பது   தடை செய்யப்பட்டு, அந்தவகை மீன்கள் மீண்டும் வளர வழி செய்யப்பட்டுள்ளது.  ஆனால் உணவுக்காக சிறியளவில் மீன்பிடிப்பதை அனுமதிப்பதற்காக அந்த தடை இடைக்கிடையே தளர்த்தப்பட்டது. அப்படியான இடைநிறுத்தம் செய்யப்பட்டதால், நியூபவுன்லாந்தின் அத்லாந்திக் கடலில் கிட்டத்தட்ட அழிந்து போன கொட் மீன்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் அறிகுறிகள் காணப்படுகின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள். அந்த மீன்பிடித்தடையால் தொழில் வாய்ப்பை இழந்த மீனவர்களுக்கு வேறு தொழில்களில்  பயிற்சியும், அவர்களின் வாழ்க்கைக்கு அரசாங்கத்தால் மானிய உதவிகளும்  வழங்கப்பட்டன. அந்த நடைமுறையை இந்திய அல்லது தமிழ்நாடு அரசும் மேற்கொண்டால் தமிழ்நாட்டுக் கடல் எல்லைக்குள்  அழிக்கப்பட்டும், அழிந்து கொண்டுமிருக்கிற  மீன்வளத்தை மீண்டும் வளர்க்கலாம். தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனைக்கு அதுதான் முக்கிய தீர்வாக இருக்க முடியும். 2 comments:

Barari said...

நியாயமான அலசல். தமிழகத்து .தமிழ் செய்தி தாள்களை மட்டும் வாசித்து ஒரு பக்க சார்பு நிலையில் இருப்பவர்களுக்கு நல்ல விளக்கம்.

viyasan said...

@Barari

நன்றி.