Monday, January 6, 2014

தமிழ்ப்பரதவர்கள் கிறித்தவர்களானது செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவா??


கத்தோலிக்கத்தின் கள்ள மௌனத்தையே விமர்சிக்கிறேன்! என்ற தலைப்பில் ஜோ டி குருஸ் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்க் கத்தோலிக்க எழுத்தாளர் அவர்கள் இந்த வார ஆனந்தவிகடனில் தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
அத்துடன் தமிழர்களின் பழம்பெருங்குடிகளாகிய பரதவகுல மக்களின் வரலாற்றைப் பற்றி, அவரது முன்னோர்கள் வணங்கிய தெய்வங்களாகிய குமரித்தாயும், தமிழ்க்கடவுள் முருகனும், முத்துக்குளித்து வளம் கொழித்த கொற்கையின் பரதவப் பாண்டியர்களின் தெய்வமாகிய முத்தாரம்மனும் எந்தளவுக்கு அந்த பரதவகுலத் தமிழர்களின் வாழ்க்கையில் இன்றும் பின்னிப்பிணைந்துள்ளனர் என்பதையும் தனது பேச்சில் துணிச்சலுடன் கூறுகிறார். எம்மதமும் சம்மதம் என்று கிறித்தவ ஆலயங்களுக்கும் சென்று, கிறித்தவர்களை விட பயபக்தியுடன் மடுமாதாவையும், வேளாங்கண்ணி மாதாவையும் அந்தோனியாரையும் வணங்குவது, தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத்தின் தமிழ்ச் சைவர்களுக்குப் புதியதல்ல, அது சாதாரணமான விடயம் ஆனால்   கத்தோலிக்கர்களாகிய தமிழ்நாட்டுப் பரதவர்கள் தமது தமிழ் முன்னோர்களின் காவல் தெய்வமாக, வழிகாட்டியாக விளங்கிய குமரியாத்தாளையும், முருகனையும் இன்றும்  வணங்குகிறார்கள் என்கிறார் அவர். 

காணொளி II - History and Our Identity:
http://www.youtube.com/watch?v=73QUxSSBWUc


முத்தாரம்மன்- குலசேகரப்பட்டணம்

"செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தவர்கள்..."


எமது தமிழ் முன்னோர்கள் கங்கை முதல் கடாரம் வரை சென்றார்கள் என்றால் நிச்சயமாக கொற்கை(தூத்துக்குடி)ப் பரதவர்களின் துணை இல்லாமல் சென்றிருக்க முடியாது. அவ்வாறு கடலையும், முத்துப்படுகைகளின் உரிமைகளை அதன் வளங்களையும்  தமது ஆளுமைக்குள் வைத்திருந்த தமிழ்ப் பரதவர்களுடன் போட்டி போட அவர்களின் வாழ்வாதாரத்தை, ஆளுமையைக் கைப்பற்ற வடுகர்களும் படையெடுத்து வந்த முகம்மதியர்களும் வந்ததால், அவர்களின் துப்பாக்கிகளிடமிருந்தும்  பீரங்கிகளிடமிருந்து தம்மையும், தமது நாட்டையும், அவர்களின் கடலையும் முத்துப் படுகைகளையும்  காப்பாற்றிக் கொள்ளத் தான் போத்துக்கேயரின் துணையை நாடி, அவர்கள் செய்த உதவிக்காக, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் தேடி கத்தோலிக்க மதத்தில்; வீழ்ந்து விட்டோம் என்கிறார் தமிழ்ப்பரதவ கத்தோலிக்கராகிய திரு. ஜோ டி குரூஸ்.

தாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் கத்தோலிக்க மதத்தை தழுவிய தமிழ்ப்பரதவர்கள் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்றுக் கொண்ட போது, நீ இந்த மத நம்பிக்கையிலிருந்து, வேறு மத நம்பிக்கைக்கு போகமாட்டாய் என்பதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்வது, அதனால் நீ மதிக்கக் கூடிய ஆள் அல்லது தெய்வத்தின் மீது ஆணையிட்டுச் சொல் என்று போத்துக்கேயர் கேட்ட போது, தமிழ்ப்பரதவர்கள் ஆணையிட்டுச் சொல்வதற்காக தேர்ந்தெடுத்த தெய்வம் எங்களுடைய குமரியாத்தா என்கிறார்.  “குமரியாத்தாவின் தலையில் சத்தியம் செய்து, ஆணையிட்டு நாங்கள் இன்றிலிருந்து அவளை வணங்க மாட்டோம், இவர்களை (கிறித்தவ தெய்வங்களை) வணங்குகிறோம் என்றார்கள். மரியாதை இங்கு யாருக்கு? தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் செய்து விட்டார்கள்.”  அதனால் இன்று இந்த பரதவ இனக்குழுவின் நாடி நரம்புகளில் ஓம் நமச்சிவாயம் அல்ல ஏசுக் கிறிஸ்துவும், மரிய மாதாவும் தான் இணைந்திருக்கிறார்கள்.
கத்தோலிக்கர்களான கொற்கை-குமரி மீனவர்களாlல் 
இன்றும் ’ஆத்தா’ என உள்ளன்புடன் அழைக்கப்படும் 
'குமரியாத்தாள்' (Goddess of Thenkumari)

"இந்த இனக்குழு ஒரு போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்துக்காகத் தான் கிறித்தவத்தில் இணைந்தார்களே தவிர தமது மதத்தை வெறுத்து ஆன்மீகத்தை தேடியல்ல. ஆன்மீகத்தை எம்மிடமிருந்து கற்றுக் கொள்ளத் தான் மேலை நாட்டவர்கள் மட்டுமல்ல, ஏசுக் கிறிஸ்து கூட இங்கே வந்தார். இன்றைய சூழலில் நான், பரதவர்களின் பிரதிநிதியாக உங்களின் முன்னால் பேசிக் கொண்டிருக்கிறேன், நான் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க நின்று கொண்டிருக்கிறேன். என்னுடைய அடையாளங்கள் மாறிப்போய் விட்டன. என்னுடைய நாட்டிலேயே எதிரியாகப் பார்க்கப்படுகிறேன். என்னுடைய கலாச்சாரத்திலேயே எதிரியாகப் பார்க்கப் படுகிறேன்.”

தூத்துக்குடி கிராமம், மீனவர்களின் பழைய தலைநகரம். போர்த்துக்கீசியர், பாதுகாப்புக் காரணங்களுக்காக புன்னைக்காயலைக் கைவிட்டு, தூத்துக்குடியை உருவாக்கினார்கள். மீனவர்களின் தாய் கிராமமாக விளங்கிய தூத்துக்குடியில், யவனர், சோனகர், சீனர் ஆகியோர் வணிகம் செய்தனர். ஆனால், தற்போதைய தூத்துக்குடியில் மீனவ மக்களின் வாழ்க்கை, துயரப் பெருங்கடலில் அமிழ்ந்துள்ளது. 
நான் இப்போதும் ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவனாகவே வாழ்கிறேன். அதற்காக எனக்கு ஒரு பக்குவம் வரக் கூடாதா என்ன? எனது மூதாதையர்களை வணங்க ஆசைப்படுகிறேன். குமரித்தாயை வணங்குகிறேன். அவள்தான் என் மூதாதை. அவள் ஒரு மீனவத் தெய்வம். இது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால், கத்தோலிக்கத்துக்கு நான் துரோகம் செய்வதாகச் சொல்கிறார்கள். எனக்கு கத்தோலிக்கத்தின் மீது எந்த வன்மமும் இல்லை! மதவாதம், எனக்குத் தெரியாத ஒன்று. எல்லா மதங்களிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். 
ரோம சாம்ராஜ்ஜியம், எங்கள் முன்னோர்களைச் சிந்திக்கவிடாமல் சிலுவையைச் சாத்தி அமைதியாக்கியது போல, நானும் சிந்திக்காமல் அமைதியாகிவிட முடியாது. பைபிளையும், ஜெப மாலையையும், பிரமாண்ட தேவாலயங்களையும் எங்கள் பொறுப்பில் விட்டுவிட்டு, எங்கள் சொத்துகளை அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டார்கள். தொழிலை, மீனவர்களின் தலைமையை அழித்தார்கள். ரோமர்கள், தங்களின் நாடு பிடிக்கும் ஆசையால் எங்களை ரோமன் கத்தோலிக்கர்களாக மாற்றினார்கள். இது எப்படி ஆன்மிகம் ஆகும்? கத்தோலிக்கம், தன்னை வளர்த்த வேருக்கு வெந்நீர் ஊற்றிவிட்டது. 

தென்தமிழக மீனவர்களின் கடல்சார் வாழ்வு முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுள்ளது. நாகையில் பல்லாயிரம் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அணு உலைக்கு எதிராக பல ஆண்டுகளாக மக்கள் போராடுகிறார்கள். ஆனால், கத்தோலிக்கம் மிகப் பெரிய கள்ள மௌனம் சாதிக்கிறது. இந்தப் பிரச்னைகளில் மதம் ஏன் தலையிட வேண்டும் என நீங்கள் கேட்கலாம். கொல்லப்பட்ட மீனவர்களில் பெரும்பான்மையானவர்கள் கத்தோலிக்கர்கள் எனும்போது அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு கத்தோலிக்கத்துக்கு இல்லையா? 
இந்த நிலையில் கத்தோலிக்கத்துக்கு எதிரான விமர்சனம் மீனவர்களிடம் பரவலாக உருவாகி வருகிறது. அதை நான் பிரதிபலிக்கிறேன்!''

யாழ்ப்பாண அரசனால் கிறித்தவர்கள் படுகொலை.


1544 இல் ஈழத்தில் மன்னார் மாவட்டத்தில் புனித சவேரியாரின் பிரதிநிதியால் கிறித்தவர்களாக தமிழ்ப்பரதவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட யாழ்ப்பாண அரசன் சங்கிலி குமாரன், தனது படைகளுடன் மன்னாருக்குச் சென்று மதம் மாறிய தமிழ்ப்பரதவர்கள் அனைவரையும்(700 பேர்) வெட்டிக் கொன்றான். அதற்குப் பழி தீர்க்குமாறு சவேரியார் கோவாவிலிருந்த போத்துக்கேய ஆளுனரை வலியுறுத்தியதால் தான் போத்துக்கேயர் யாழ்ப்பாண அரசின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினர் என்றும் கூறுவர். யாழ்ப்பாண அரசனால் கொல்லப்பட்ட மதம்மாறிய கிறித்தவர்கள் அனைவரையும் வேதசாட்சிகள் எனப் போற்றுவர் இலங்கைக் கத்தோலிக்கர்கள்.

முகம்மதியர்களிடமிருந்து முத்துப்படுகைகளையும், தமது கடலையும் பாதுகாக்கத் தான் தமிழ்ப்பரதவ குலமக்கள் போத்துக்கேயரின் உதவியை நாடி, அதற்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்க கிறித்தவத்தை தழுவினர் எனும் தமிழ்ப்பரதவ குலத்தவராகிய எழுத்தாளர் ஜோ டி குரூசின் கருத்துப்படி பார்த்தால்,மன்னாரிலும் அதன்படியே பரதவர்கள் கிறித்தவ மதத்தை தழுவியிருக்கலாம். இலங்கையில் மன்னாரில் மதமாறிய கிறித்தவர்கள் யாழ்ப்பாண அரசனால்  படுகொலை செய்யப்பட்ட இடமாகிய தோட்டவெளியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றும் அதிகளவில் முஸ்லீம்கள் வாழும் முஸ்லீம் கிராமங்கள் காணப்படுவதும் அதை உறுதி செய்கிறது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையில் தமிழன் என்ற அடையாளம் சாதி, மத வேறுபாடுகளுக்கு  அப்பாற்பட்டது. ஒரு சைவத்தமிழனுக்கு தமிழர்களின் வரலாற்றில், பாரம்பரியத்திலும், பண்பாட்டிலும்,  புகழிலும், வெற்றியிலும் மட்டுமல்ல, தோல்வியிலும் கூட எந்தளவுக்கு பங்குள்ளதோ அந்தளவுக்கு ஒரு கிறித்தவத் தமிழனுக்கும் உண்டு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கிறித்தவ தமிழர்களினதும், கத்தோலிக்க குருமார்களினதும் பங்களிப்பு நிகரற்றது என்பதில் எந்த ஈழத்தமிழர்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அதனால் வரலாற்று சம்பவங்கள் ஈழத்திலுள்ள மத வேறுபாடற்ற, நாங்கள் ஈழத் தமிழர்கள் என்ற உரிமையையும்  ஒற்றுமையையும் அசைத்து விட முடியாது.

க‌த்தோலிக்க‌ம‌த‌த்தால் தான் த‌மிழ்ப்ப‌ர‌த‌வ‌ர்கள் சிங்க‌ள‌ ம‌ய‌மானார்க‌ள்.

http://viyaasan.blogspot.ca/2013/04/blog-post_19.html

Ref:
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90845
  

No comments: