Wednesday, August 28, 2013

யாழ்ப்பாணத்தில் கோலம் போட்டார் நவநீதம்பிள்ளை.


எந்த நாட்டுக்கு எத்தனை தலைமுறைகளுக்கு முன்னால் தமிழ்மண்ணை விட்டு வெளியேறியிருந்தாலும் தமிழ்ப்பண்பாடு தமிழ்ப் பெண்களிடமிருந்து விலகுவதில்லை போல் தெரிகிறது.

சிங்கள இனவாதிகளால் எரிக்கப்பட்டு, இப்பொழுது புதுப்பிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு நேற்று முன்தினம் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் டாக்டர். நவநீதம் பிள்ளை அவர்கள் நூலக வாயிலில் போடப்பட்டிருந்த  கோலத்தை தற்செயலாக, தனது கால்களால் தட்டி விட்டார்.  கோலம் கலைந்ததைக் கண்ட ஆணையாளர் உடனே குனிந்து அங்கே சிதறிப் போய்க்கிடந்த கோல மா, அரிசிகளைப் பொறுக்கி  கலைந்த கோலத்தை மீண்டும் சரிப்படுத்தி விட்ட பின்பே அவர் கருத்தரங்கில் கலந்து கொள்ளச் சென்றார். இலங்கைத் தமிழர்களும் அரிசி அல்லது நெல்லைக் காலால் தட்டினால் அதைக் குனிந்து  சரிப்படுத்தி விட்டும்,  சிலர் அதை தொட்டுக் கும்பிட்டு விட்டுத் தான் போவார்கள். நவிபிள்ளை கோலம் போட்டதை சிங்கள அதிகாரிகளும், ஏனைய பார்வையாளர்களும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டார்கள்.

மண்டேலா தொடக்கம் மகிந்த ராஜபக்ச வரை.......
Picture: athirvu

Tuesday, August 27, 2013

இவருக்காக ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் .தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் படும் இன்னல்களைப் பார்த்து ஆத்திரமுற்ற ஈழத்தமிழர் ஒருவர் தமிழ்நாட்டில் உண்மையான நிலவரம் தெரியாமல், உளறிக் கொட்டியிருப்பதைப் பார்த்தால் எந்த தமிழ்நாட்டுத் தமிழனுக்கும்   வெறுப்பு ஏற்படுவது  மட்டுமல்ல, உண்மையான தமிழுணர்வுடன் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கோடிக்கணக்கான தமிழ்நாட்டுத் தமிழர்களின் மனதையும், ஏன்,  உலகத் தமிழர்கள் அனைவரின் மனதையுமே இது புண்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அதனால் ஈழத்தமிழன் என்ற முறையில் எனது மன்னிப்பை தெரிவித்துக் கொள்வது மட்டுமன்றி ஈழத்தமிழர்கள் அனைவரும் இந்த மடையன் போல உண்மை நிலை தெரியாதவர்கள் அல்ல இவர் ஈழத்தமிழர்கள் அனைவரின் எண்ணத்தையும் பிரதிபலிக்கவில்லை என்பதையும் தெரிவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் என்ன குறுகிய நோக்கத்துக்காக ஈழத்தமிழர்களின் அவலத்தைக் கையிலெடுத்தாலும், தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வுபூர்வமான ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களை இவர் கொச்சைப்படுத்துவதை ஈழத்தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். என்னுடைய மின்னஞ்சலுக்கு  இந்த காணொளியை அனுப்பியதே தமிழுணர்வுள்ள நண்பன், ஒரு தமிழ்நாட்டு மாணவன் தான். அவரைப் போன்றவர்களின் உள்ளத்தை  இந்த காணொளி புண்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை.

மேலை நாடுகளில் உள்ள இலங்கை அகதிகளின் நிலையுடன், அதாவது மேலை நாடுகளுக்கு அகதிகளாகப் போகும் ஈழத்தமிழர்கள் ஒரு சில வருடங்களிலேயே அந்த நாட்டு குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர், அதை  இந்தியாவிலுள்ள அகதிகளின் நிலையுடன் ஒப்பிடுதல் தவறு என்பதை இவர் உணரவில்லை. அண்டை நாடுகளில் இருந்து வரும் பல அகதிகளுக்கு இந்தியா அடைக்கலம் அளித்தாலும் ஐக்கிய நாடுகள் சபையின் 1951 அகதிகள் சம்பந்தமான மாநாட்டிலும் அதைத் தொடர்ந்து 1967 Protocol இலும் இந்தியா கைச்சாத்திடவில்லை, அதை விட அகதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என்ற விடயத்தில் இந்தியாவிடம் ஒரு தேசிய கட்டமைப்பு கிடையாது, அதை விட சில இலங்கைத் தமிழ் அகதிகளை இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்பு படுத்தியிருப்பதாலும், இலங்கைத் தமிழ் அகதிகள் சம்பந்தமான முடிவுகள் பலவும் மத்திய அரசினாலேயே கையாளப்படுகின்றன. அதற்கு தமிழ்நாட்டுத் தமிழர்களைக் குறை கூறிப் பயனேதும் இல்லை, தமிழ்நாடு தனிநாடல்ல என்பதை இவர் உணரவில்லை போல் தெரிகிறது. பல ஈழத்தமிழர்கள் இந்த தவறை புரிகின்றனர். 

தமிழ்நாட்டு தமிழர்கள் விரும்பினாலும் அவர்களால் எங்களுக்காக படையனுப்ப முடியாது.  அது முடிந்தால் அவர்கள் எப்பொழுதோ தமது படையை அனுப்பி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை நடுக்கடலில் படுகொலை செய்வதை தடுத்திருப்பார்கள். இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் தமிழர்கள் அழிக்கப்படும் போது தமிழ்நாட்டுத் தமிழ் தலைவர்கள் சிலர் சுய நலத்துடன் இயங்கினர் என்பது உண்மை. அதற்கு காரணம் தமிழ்நாட்டுக்கு பெரியளவு ஆதரவு இந்திய மத்திய அரசில்  கிடையாது, அத்துடன் மலையாளிகளின் தமிழர் வெறுப்பும் சிங்களவர்களுக்கு சார்பாக வேலை செய்தது. அது மட்டுமன்றி இந்தியாவின் ஆரிய –திராவிட பிளவும் அதற்கு முக்கிய காரணமாகும். வட இந்தியர்கள் தமிழர்களை மட்டுமே திராவிடர்களாக கருதுகின்றனர்.

உண்மையில் இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்து, பெண்களைக் கற்பழித்து, அவர்களைத் தமது அடிப்படைத் தேவைகளுக்காகக் கூடக் குரல் கொடுக்காத முறையில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, சிங்களக் குடியேற்றங்களால் ஈழத்தமிழர்களின் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பறிக்கும் சிங்கள அரசுக்கு சவாலாக இருப்பது தமிழ்நாட்டு மக்களும் அவர்களின் உணர்வு பூர்வமான ஆதரவும் தானே தவிர புலம்பெயர்ந்த தமிழர்களின் பொருளாதார பலமோ அல்லது போராட்டங்களோ அல்ல.

"தமிழ்நாட்டில்  யாரும் ஈழப்பிரச்சினைக்காக என ஓட்டுப்போட்டு யாரையும் தேர்ந்தெடுப்பதில்லை என்பது அடிப்படை உண்மையாக" இருந்தாலும் கூட, இன அடிப்படையில், ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது துன்பம் நேர்ந்தால் அது தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்ற கருத்து உலகநாடுகளில் உள்ளது. சிங்களவர்களும் அப்படியே நம்புகிறார்கள். சில இந்தியர்கள் சொல்வது போல் சீமான், வைகோ, நெடுமாறன் போன்ற அரசியல் ஆதரவற்ற Fringe Elements தான் எங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள், ஈழத்தமிழர்களுக்கு பெரியளவில் தமிழ்நாட்டில் ஆதரவு கிடையாதென்பது ஒருவேளை உண்மையாக இருந்தாலும் கூட எதற்காக அதை நாங்களே வெளிப்படுத்தி சிங்களவர்களுக்குள்ள கொஞ்ச நஞ்ச பயத்தையும் போக்க வேண்டுமென்பதை  இந்த காணொளியில் பேசுபவர் உணரவில்லை என நான் நினைக்கிறேன். அல்லது இவரும் மகிந்தரின் செலவில் இலங்கைக்கு சுற்றுலா செல்லத் துடிக்கிறாரோ என்னமோ, எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்கிறதென்று யாருக்குத் தெரியும்.

இணையத்தளங்களிலுள்ள  இந்திய தேசியவாதிகள், தமிழர்கள் ஒன்றுபடுவதை விரும்பாத தமிழ் பேசும் திராவிடர்கள், எல்லாம் தெரிந்த, தலைக்கனம் கொண்ட, ராஜபக்ச ஆதரவு  வலைப்பதிவர்கள், ஈழத்தமிழர்களைப் பழிவாங்கத் துடிக்கும் தொப்பிபிரட்டிகள், சீமான், நெடுமாறன்  போன்ற தமிழீழ ஆதரவாளர்களை சாதி, மத அடிப்படையில் வெறுக்கும் சாதிமான்கள், தமிழெதிரிகள்  போன்றோர் இந்த முட்டாள் ஈழத் தமிழர் ஒருவரின்  உளறலை வைத்து சித்து வித்தைகள்  காட்ட முன்பே ஈழத் தமிழர்கள் அனைவரும் இவரது கருத்தை ஆதரிக்கவில்லை என்பதைத் தெரியப்படுத்துவதே  எனது நோக்கமாகும்.Monday, August 26, 2013

ஈழத்தமிழ் மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள் இன்று.
காக்கை வன்னியன் காட்டிக் கொடுத்ததால் வெள்ளையர்கள் பண்டாரவன்னியனின் ஆட்சியை வீழ்த்தினர். (காணொளி: ஈழத்தமிழ்ச் சிறார்களின்  நாட்டுக்கூத்து)


குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின்  நினைவுநாளில் இன்று வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஈழத்தின் வன்னிப் பகுதியில் அரசாட்சி செய்தவன் தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னியின் இறுதி மன்னன்.  மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு நாள் இன்றாகும்.
வெள்ளையருக்கு அடிபணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்தான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து  பீரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரப்புல்வெளியில் வாட்போரில் ஒரே முறையில்  60 பேரை கொன்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன். அடங்காப்பற்று, வன்னிமண்ணில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கைவன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்கினால் தோற்கடிக்கப்பட்டதன் நினைவுநாள் இன்றாகும்.

வன்னியில் ஒட்டுசுட்டானில் உள்ள கற்சிலைமடு என்னும் இடத்தில் வைத்து பண்டாரவன்னியன் வெள்ளையா்களினால் தோற்கடிக்கப்பட்டான். இதன் நினைவாக கற்சிலைமடுப்பகுதியில் பண்டாரவன்னியனிற்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. பின்னா் அது ஸ்ரீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.


இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்ட பின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது.
அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சு வரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான்.

ஆவணி 25ம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவு கூரப்படுகிறது. முன்பு, பண்டார வன்னியனின் நினைவு நாளாக வேறொரு நாள் தான் நினைவு கூரப்பட்டு வந்தது.  அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு என்னும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்ட பின் 1997ம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவு நாள் ஆவணி 25ம் நாள் என அறிவிக்கப்பட்டது.

ஆவணி 25 க்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு..?

அந்தக் காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள்.
அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய் விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான்.

அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்த நாள் தான் ஆவணி 25. பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவு கூருகின்றோம்.ஆங்கிலேயர் கற்சிலைமடுவில் நிறுவிய பண்டாரவன்னியன்  நினைவுக்கலுக்கு இலங்கை இராணுவம் செய்தது இது தான். 

நன்றி: http://eelamaravar.blogspot.ca/2010/11/207.html
              Tamilwin.

Sunday, August 25, 2013

மண்டேலா தொடக்கம் மகிந்த ராஜபக்ச வரை.......விடுதலைப் புலிகளின் பெண் வீரர்களை கண்டு சிங்களவர்கள் நடுங்கிய ஒரு காலம் இருந்தது. ஆனால் இப்பொழுது சிங்கள இனவாதிகளால் வெறுக்கப்படுவது மட்டுமன்றி  அவர்கள் பயப்படும்  ஒரேயொரு தமிழ்ப்பெண் ஐக்கிய நாடுகள் சபையின்  மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் டாக்டர். நவநீதம்பிள்ளை ஆகும்.

சிறையில் வாடிய தென்னாபிரிக்க தலைவர்  நெல்சன் மண்டேலாவுக்கு வழக்கறிஞர்களின் ஆலோசனை கிடைப்பதற்கு போராடி வென்றது தொடக்கம் இன்று மகிந்த ராஜபக்சவின் போர்க்குற்றங்கள் நீதியான முறையில் விசாரிக்கப்பட வேண்டுமென்று தொடர்ச்சியாக குரலெழுப்பும்  தமிழ்ப்பெண் செல்வி நவநீதம்பிள்ளை நாளை முதல் முறையாக இலங்கைக்கு வருகை புரிகின்றார்.

மாண்புமிகு நீதியரசர்(சி) செல்வி. நவநீதம் பிள்ளை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளராக 2003 இலிருந்து பதவி வகித்து வருகிறார். தென்னாபிரிக்க தமிழர்களில் ஒருவராகிய செல்வி. பிள்ளை தென்னாபிரிக்காவில் Natal Province இல் முதன் முதலாக வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்த பெண் ஆவார். அத்துடன் முதலாவது வெள்ளையரல்லாத இனத்தைச் சேர்ந்த சரவதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த பெண்மணி என்ற பெருமையும் அவருக்குரியது.

ஆரம்பகாலத்தில் வெள்ளையரல்லாத தென்னாபிரிக்க வழக்கறிஞர் என்ற வகையில், அவரது தோலின் நிறத்தின் காரணமாக, நீதிபதியின் அறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட செல்வி. நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கெதிரான போராட்டம் நடந்த காலகட்டத்தில் பல போராளிகளின் சார்பில்  வழக்குகளை நடத்தியவர் அத்துடன் அவரும் அவரது கணவரும் தென்னாபிரிக்காவின் தொழிற்சங்கவாதிகளாவர்.    தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவை அடைத்து வைத்திருந்த  ரொபின் தீவின் சிறைக்குப் பொறுப்பாக இருந்த சிறை அதிகாரிக்கெதிராக வெற்றிகரமாக வழக்கைத் தொடர்ந்து,  அங்கிருந்த நெல்சன் மண்டேலாவுக்கும் ஏனைய அரசியல் கைதிகளுக்கும் 1973 ஆண்டு வழக்கறிஞர்களின் ஆலோசனை கிடைக்க வழி செய்த பெருமையும் அவரைச் சாரும். அத்துடன் தென்னாபிரிக்காவின் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த முதல் இந்திய/தமிழ் வம்சாவழி  பெண் என்ற பெருமைக்கும் உரியவர் அவர். அவர் இணைந்து உருவாக்கிய Equality Now என்ற அமைப்பு இன்று உலகில் பெண்களின் உரிமைக்காகப் போராடுகிறது.


ருவாண்டா நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலைகளையும், மனிதவுரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் விசாரிக்கும் the International Criminal Tribunal for Rwanda வின் நீதிபதியாக இருந்து, உலகின் சட்டவரலாற்றில் முக்கிய தீர்ப்புகளில் ஒன்றான, போரில் கற்பழிப்பை ஆயுதமாக பயன்படுத்துவதும், பாலியல் துன்புறுத்தல்களும்  திட்டமிட்ட இன அழிப்பே என்பதை வரையறுத்து தீர்ப்பு வழங்கியவர். இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்புக்கும்,.மனிதவுரிமை மீறல்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமன்றி யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து ஒரே குரலில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு  நடுநிலையான சர்வதேச விசாரணை நடத்தப் பட வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், இலங்கை அரசினதும், இலங்கை சார்பு நாடுகளினதும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டவர். அதனால் எத்தனையோ முறை சிங்கள இனவாதிகளால் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டும், அவருக்கெதிராக போராட்டங்களும், அவர் ஒரு தமிழ்ப்பெண் என்ற காரணத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு சார்பாக நடந்து கொள்கிறார் எனவும், அவர் இலங்கைக்கு வருகை தருவதன் காரணம் இலங்கை அரசுக்கெதிராக போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சிகளைத் தயார் செய்து தடயங்களை சேகரிப்பதற்காக எனவும் அவரை வில்லியாக்கி, வெறுத்த சிங்களவர்களும், இலங்கை அரசும் இன்று சர்வதேச அழுத்தத்தின் காரணமாக அவருக்கு இலங்கை வருவதற்கு மட்டுமன்றி அவர் விரும்பும் இடங்களுக்கெல்லாம் சுதந்திரமாக பயணம் செய்யவும், அவர் விரும்பியவர்களைச் சந்திக்கவும், பூரண ஒத்துழைப்பளிக்க 
சம்மதித்துள்ளனர்.

இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் காணாமல் போனவர்களின் உறவினர்களும் பெற்றோர்களும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் செயலகத்துக்கு தமது முறைப்பாட்டைத் தெரிவிக்க இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முனைந்த போது அவர்களை கொழும்புக்குச் செல்ல விடாமல் தடுத்து திருப்பி அனுப்பியது இலங்கை அரசு. அதனால் வடக்கு, கிழக்கிலுள்ள பொதுமக்கள் தமது முறைப்பாட்டை நேரடியாக செல்வி பிள்ளையிடம் தெரிவிப்பர் என எதிர்பார்க்கபடுகிறது. அத்துடன் காணமல் போனவர்களின் துயரங்களும் அவர்களின் நிலையம் மிகவும் கொடுமையானது என ஆணையாளர் பிள்ளை அவர்கள் ஏற்கனவே கருத்து தெரிவுத்துள்ளார். 

திருகோணமலையில் 2006 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் ஒருவரின் தந்தை கடந்த வருட ஐ. நா. மனிதவுரிமைப் பேரவையின் கூட்டத்தில் கண்ணீர் மல்க தனது மகனின் கொலைக்கு நீதி கேட்டார். ஆணையாளர் செல்வி. பிள்ளை தனது இலங்கை பற்றிய இந்த ஆண்டறிக்கையில் திருகோணமலை படுகொலையைக் குறிப்பிட்டார், அதனாலேயே இலங்கை அரசு திருகோணமலை படுகொலையில் சம்பந்தப்பட்ட 12 அதிரடிப்படை வீரர்களை கைது செய்து விளக்க மறியலில் வைத்துள்ளது. அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு, விசாரணை எதுவும் ஆரம்பிக்கப்படாத போதிலும், இந்த விடயத்தில் தான்  இலங்கை படைகள் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்று முதன்முறையாக நீதித்துறையின் ஆணைக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Friday, August 23, 2013

கனடாவின் சீற்றம் – இதனால் தான் ஈழத்தமிழர்கள் இந்தியர்களின் மத்தியத்தை நம்புவதில்லை!


We Stand on Guard for Thee!
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகமாக  இந்தியராகிய கமலேஸ் சர்மா என்பவர் பதவி வகிக்கிறார் என்பது  யாவரும் அறிந்ததே. அவர் தனது பதவியின் கண்ணியத்தையும், பொறுப்பையும் காப்பாற்றும் வகையில் எல்லா நாடுகளுக்கும் பொதுவாக நடுநிலை வகிக்க வேண்டியவர். கனடாவும், பல மனிதவுரிமை நிறுவனங்களும் இலங்கையில் பொது நலவாய நாடுகளின் மாநாடு நடைபெறுவதை எதிர்த்தாலும், இலங்கையில் தான் அந்த மாநாடு நடைபெற வேண்டுமென்பதில் தீவிரமாக இருப்பவர் இந்த சர்மா என்பது குறிப்பிடத் தக்கது.

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் அத்துடன் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும், அத்துடன் இலங்கையின் மனிதவுரிமை மீறல்களில் முன்னேற்றம் காணப்படாது விட்டால் இலங்கையில் நவம்பர் 2013 இல் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார் கனடாவின் பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர். இலங்கை அந்த மாநாட்டை நடத்துவதும், அதைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைவராக இருப்பதும், 'accommodates evil', அதாவது தீவினைக்கு வழி சமைத்துக் கொடுப்பது என்றும் குறிப்பிட்டார் கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஜான் பயர்ட்.

இப்பொழுது கனடாவின் பொதுநலவாய நாடுகளுக்கான பிரதிநிதி செனட்டர் ஹியூ சீகல் அவர்கள் பொதுநலவாய நாடுகளின் செயலாளரும் இந்தியருமாகிய கமலேஷ் சர்மா மீது கனடாவின் சீற்றத்தை வெளிக்காட்டியுள்ளார்.

Senator Hugh Segal
இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி சிராணி பண்டாரநாயக்கவை சட்டத்துக்கு புறம்பான வகையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து பதவியிலிருந்து நீக்கியது பொதுநலவாய நாடுகளின் அமைப்பானது   ஜனநாயகம், நடுநிலையான நீதித்துறை போன்ற விடயங்களில் கொண்டுள்ள உயரிய கொள்கைகளுக்கு எதிரானதா என்றறிய பொதுநலவாய நாடுகளின் செயலாளரின் செயலகத்தால் சட்ட அறிஞர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட சட்டவியல் பரிந்துரையை   அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களின் செயல்குழுவுடன் இந்தியராகிய பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர்நாயகம்   கமலேஷ் சர்மா (இந்தியர்) ஏன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதைத் தன்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார் கனடாவின் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பிரதிநிதி செனட்டர் ஹியூ சீகல்.

Canada Slams Commonwealth SG Sharma Over Burying Legal Reports On Sri Lanka
http://www.colombotelegraph.com/index.php/canada-slams-commonwealth-sg-sharma-over-burying-legal-reports-on-sri-lanka/
PLEASE CLICK TO ENLARGE

இலங்கையின் உச்சநீதி மன்ற நீதிபதியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவரைப் பதவியிலிருந்து நீக்கியதைப்பற்றி உத்தியோக பூர்வமாக தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தவர் செயலாளர் கமலேஷ் சர்மா, அதனால் அவர் நடுநிலையான சட்டவியல், அரசியலமைப்பு வல்லுனர்களின் சட்டவியல் அறிவுரையை பெற்றிருக்கவேண்டும் என்பது யாவராலும் புரிந்து கொள்ளக் கூடியதே

 
ஆனால் அப்படி பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சட்டவியல் அறிவுரைகளும் அபிப்பிராயங்களும் பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களின் செயல்குழுவுடன் (CMAG, ) இலங்கை   சம்பந்தமாக  நடைபெற்ற நீண்ட கலந்துரையாடல் நடைபெறுவதற்கு முன்பாகவே ஏன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டார் கனடாவின் பொது நலவாய நாடுகளின் பிரதிநிதி.
மேன்மை தங்கிய பங்களாதேசின் வெளிவிவகார அமைச்சர் தலைமையில் இயங்கும் பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களின் செயல்குழுவினர் (“CMAG, )மேற்கொண்ட சந்திப்பின் முன்பாக,  செயலாளர் நாயகம் பெற்றுக் கொண்ட சட்ட அறிவுரைகளையும் அபிப்பிராயங்களையும் பெற்றுக் கொள்ள அவர்களுக்கு உரிமையுண்டு என்றார் கனடாவின் செனட்டர் ஹியூ சீகல்.

 
இதனால் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் ஒழிவு மறைவற்ற வெளிப்படையான தன்மைக்கு (Transparency) பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார் அவர்.
செயலாளர் நாயகத்தின் உயரிய செயலகத்தின் செலவில் பெற்றுக் கொண்ட சட்ட அறிவுரைகளும் ஆராய்ச்சிகளும் பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் பெற்றுக் கொள்வதற்கு  செயலாளர் நாயகத்தின் செயலகம் தடையாக இருக்கக் கூடாது என மேலும் தெரிவித்தார் கனடாவின் பிரதிநிதி.

 
கனடாவின் பிரதிநிதியின் கருத்தை ஒத்த கருத்தையே தெரிவித்தார் இலங்கையின் சட்டவியலாளர்கள் அமைப்பின் தலைவர் உபுல் ஜெயசூரியா. உண்மைத்தன்மைக்கு, வெளிப்படையான தன்மையையும் காக்கும் வகையிலும், கமலேஷ் சர்மா தனது சொந்தச் செலவில் சட்டவல்லுனர்களின் அறிவுரையை பெற்றுக் கொள்ளவில்லை என்பதாலும், அவரால் பெற்றுக் கொள்ளப்பட்ட சட்ட அறிவுரைகளையும் அபிப்பிராயங்களையும் பொதுநலவாய நாடுகளின் அங்கத்தினர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவரது கடமையாகும்.

Link:  Exclusive: Secretary General Hides Two Key Legal Findings On CJ Impeachment From CMAG
As exclusively reported in the Colombo Telegraph, Commonwealth Secretary General Kamalesh Sharma may have covered up two key independent legal opinions on the legality of Sri Lanka’s impeachment of Chief Justice Shirani Bandaranayaka, withholding the content of those opinions even from the powerful CMAG. Speculation in Commonwealth and diplomatic circles is that the Secretary General has decided not to disclose the content of the opinions because they may have forced him to act against Sri Lanka which is the next host of the Commonwealth Heads of Government Meeting this November, a top diplomat told Colombo Telegraph.

இந்தச் செய்தி, இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் இந்தியாவின் மலையாளி ஐ.நா அதிகாரி ஒருவர் எவ்வாறு ஒரு பக்கச் சார்பாக, சிங்களவர்களுக்கு ஆதரவாக  நடந்து கொண்டார் என்பதைத்  தான் இலங்கைத் தமிழர்களுக்கு நினைவுறுத்துகிறது. இந்த சர்மாவும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவும் நல்ல நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உயர் பதவியில் உள்ள இந்தியர்கள் கூட தமது பதவிக்கேற்ற முறையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ளாமல் ஒரு பக்கச்சார்புடன் நடந்து கொள்வதால் தான், இலங்கைப் பிரச்சனையில்  ஈழத்தமிழர்கள் இந்தியர்களை நம்புவதில்லை,  இந்தியர்களின்  மத்தியத்துவம்  அல்லது இந்தியர்களின் தலையீட்டுக்குப் பதிலாக, மேலை நாட்டவர்களை ஈழத்தமிழர்கள் விரும்புவதற்கு இதுவே காரணமாகும்.  தமிழரல்லாத இந்தியர்களின் இப்படியான சிங்கள சார்பு செயல்களுக்கு இந்தியாவின் ஆரிய-திராவிட பிளவும் முக்கிய காரணம் எனவும் சிலர் கூறுவர். 

இலங்கையில் நடைபெறவிருக்கும் வடமாகாண சபைக்கான தேர்தலிலும் கண்காணிப்பாளர்களாக இந்தியர்களையும், ஆசியநாட்டவர்களையும் மட்டும் தான் இம்முறை இலங்கை அரசு அழைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, August 19, 2013

தமிழ்நாட்டுத் தமிழர்களின் முட்டாள்தனம் ?  ஈழத்தமிழ்ப் பெண்களின் (இவர்கள் பார்ப்பனர்களல்ல) பரத நாட்டிய அரங்கேற்றம்- Toronto, Canada

 

"நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து நின்றது போதும்  தமிழா,

உன் கலைகள் அழிந்து கவலை மிகுந்து கண்டது போதும் தமிழா"

உண்மையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் முட்டாள்தனத்துக்கு எல்லையே இல்லைப் போலிருக்கிறது. வெறும் பார்ப்பன வெறுப்பும், பெரியாரிசமும் தமிழர்களை தமிழ் நாட்டில், தமிழர்களின் உள்ளத்தில் உருவாகி, தமிழர்களால் வளர்க்கப்பட்ட, இன்று உலகமே போற்றும்  நாட்டியக் கலை, சிற்பக்கலை போன்ற கலைகளிலிருந்து  அந்நியப்படுத்தி, அவைகளை அழிய விட்டு, அல்லது அதை இரவல் வாங்கியவர்கள் தமது உடைமையாக்கிக் கொள்ள  அனுமதித்து தமிழர்களை கலை, கலாச்சாரம் எதுவுமேயற்ற காட்டுமிராண்டிகளாக்கி விடுவார்களோ என்று என்னைப் போன்ற உலகத் தமிழர்களுக்கு  பயமாக இருக்கிறது.

பரத நாட்டியம் அழிந்து போகாமல் தேவதாசிகளால் பாதுகாக்கப்பட்டது அதனால் அதைப் புறக்கணிப்போம், கோயில்களை மக்களைத் துன்புறுத்திக் கட்டினார்கள் அதனால் அதையும் புறக்கணிப்போம்,  சிற்பக்கலையில் சிற்பங்கள் செய்பவர்களைச் சாதியடிப்படையில் பிரித்தார்கள் அதனால் அதையும் புறக்கணிப்போம், பெரியார் இந்துக் கடவுளை வெறுத்தார், அதனால் கடவுளையும் தமிழர்களின் தேவாரங்களையும் புறக்கணிப்போம், எமது முன்னோர்கள் கட்டிய கோயில்களில் பார்ப்பனர்கள் பூசை செய்கிறார்கள் அதனால் அவற்றையும் புறக்கணிப்போம், கரிகாலன் தனது கல்லணையைக் கட்டுவதற்கு இலங்கையிலிருந்து பிடித்து வந்த பன்னீராயிரம் சிங்கள பணயக் கைதிகளைப் பயன்படுத்தினான் அதனால் அவனையும் வசைபாடிக் குறை கூறுவோம், ராஜ ராஜ சோழன் கங்கை முதல் கடாரம் வரை தமிழர்களின் புலிக்கொடியை நாட்டினாலும் கூட அவன் பார்ப்பனர்களை ஆதரித்தான் அதனால் அவனையும் புறக்கணிப்போம், சங்க கால கவிதைகளில் கூட பார்ப்பன புலவர்களின் கவிதைகள் இருக்கின்றன அதனால் அவற்றையும் புறக்கணிப்போம். இப்படியே தமிழர்கள் எல்லாவற்றையும் புறக்கணித்தால், தமிழர்களிடம் தம்முடையது என்று கூறிக் கொள்ள அவர்களின்  கோவணத்தை தவிர வேறொன்றும் இல்லை என்று தான் மற்றவர்கள் கூறுவார்கள்.

பரதநாட்டியம் தமிழர்களுடையது, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அதை இரவல் வாங்கிய பார்ப்பனர்கள் அதற்கு மெருகூட்டி,  சமூகத்தில் அந்தக் கலைவடிவத்துக்கு இருந்த களங்கத்தைப் போக்கினார்களே தவிர அது வெளியிலிருந்து வரவுமில்லை. பரத முனிவர் உருவாக்கவுமில்லை.

உலகமே வியக்கும் பரதநாட்டியக் கலையை, தமிழ்நாட்டின், தமிழர்களின்  கலை என்ற உண்மையை மறைத்து வட இந்தியர்களின் கலையாக்க அல்லது தமது மாநிலத்தின் கலையாக்க பலர்  தென்னிந்தியர்கள் முயலும் போது அந்த தமிழெதிரிகளுக்கு துணை போகும் வகையில் தமிழர்களில் சிலரே பரதநாட்டியத்தை தூற்றுவதால், தம்மையறியாமலே தமிழர்களின் கலைகளைத் தமதாக்கவும், தமிழர்களை கலைகள் எதுவுமற்ற காட்டுமிராண்டிகளாக்கவும்  முனையும்  எமது எதிரிகளுக்குத் துணை போகின்றனர். திராவிடக் கொள்கைகளும், பெரியாரிசமும் தமிழர்களுக்கு செய்த கொடுமைகளில் இதுவுமொன்று. வெறும் பார்ப்பன வெறுப்பே அவர்களின் அடிப்படைக் கொள்கை அதனால் பார்ப்பனரல்லாத தமிழெதிரிகளை அவர்கள் கண்டு கொள்வதில்லை. எல்லா பார்ப்பனர்களும் தமிழர்களின் எதிரிகள் அல்ல எல்லா திராவிடர்களும் தமிழர்களின் நண்பர்களுமல்ல, என்னைக் கேட்டால், வீட்டிலும், வெளியிலும் தமிழன் என்ற அடையாளத்தை மட்டும் கொண்ட பார்ப்பனர்களை விட தமிழரல்லாத திராவிடர்கள் தான் தமிழர்களின் கலைகளை வரலாற்றைத் திரித்து, தமதாக்கக் துடிக்கும் தமிழெதிரிகள்.


எப்படியெல்லாம் ஈழத்தமிழர்களின் வரலாற்றைத் திரித்து, தமிழர்களிடம் இரவல் வாங்கிய கலைகளை தமதாக்கி, இன்று தமிழர்கள் தான் தம்மிடமிருந்து அவற்றை இரவல் வாங்கியதாக வாய்கூசாமல் கூறும் சிங்களவர்களின் அடாவடித்தனத்தை அனுபவித்த ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் தமிழர்களின் இசை, நாட்டிய, கட்டிடக் கலைகளை மற்றவர்கள் தமதென்று சொந்தம் கொண்டாடாமல் செய்ய வேண்டும், அவர்கள் அந்தக் கலைகளின் வரலாற்றை திரித்து விடாமல் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வு தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இல்லை. வெறும் பார்ப்பன வெறுப்பு அவர்களின் கண்களை மறைக்கிறது. உதாரணமாக, பல தமிழரல்லாதவர்கள், தமிழர்கள் என்ற போர்வையில், தமிழர்களின் மன்னர்களை தமிழரல்லாதவர்களாக்க, அதாவது தமிழரசர்கள் எல்லாம் வெளியில் இருந்து வந்தவர்கள், அவர்களின் வீரத்திலும், வெற்றியிலும் தமிழர்களுக்குப் பங்கில்லை, தமிழன் எப்பொழுதுமே ஆளப்பட்டவனே தவிர ஆண்டவன் அல்ல என்ற கருத்தை நாசூக்காக, இணையத்தளங்களில் பரப்புகின்றனர்.


தமிழர்களின் சதிராட்டம்- தேவதாசிகள்- ஜப்பானின் கெய்சா (Geisha) நடனம்


பரதநாட்டியத்தின் (சதிராட்டம்) உயிரும், வேர்களும் தமிழரின் வரலாற்றிலும், பண்பாட்டிலும் ஆழப்பதிந்திருக்கிறது. தமிழர்களின்  சதிர் தேவதாசிகளால் வளர்க்கப்பட்டதே தவிர அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல சிலப்பதிகாரத்திலேயே தமிழர்களின்  நாட்டியக் கலை விளக்கமாகக் கூறப்படுகிறது. மாதவியின் அரங்கேற்றத்தை விவரிக்கும் இளங்கோவடிகள் ஆட்டவகைகள், உடையலங்காரம், ஒவ்வொரு வகையான ஆட்டத்துக்கும் மேடையின் அளவு, அதற்கான ஆபரண அலங்காரங்களையும் குறிப்பிடுகிறார். தமிழர்களின் பண்டைக்கால நாட்டிய நன்னூல் "காணாமல்" போய்விட்டது.

சில பகுத்தறிவுச் சிங்கங்களின் வாதம் என்னவென்றால் பரதம் தேவதாசிகளால் வளர்க்கப்பட்டது அதனால் அதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும்  தேவதாசிகளை ஒத்த கெய்சா (Geisha) என்ற நடனப் பெண்கள் இருந்தனர். அவர்களின் நடனத்தை ஜப்பானின் தேசிய நடனமாக்கி, தமது பாரம்பரியக் கலைகளில் ஒன்றாக  அதைப் பாதுகாக்கின்றனர் ஜப்பானியர்கள்.   விபச்சாரத்தையும் மேற்கொண்ட Geisha நடனப் பெண்களால் ஆடப்பட்டது, வளர்க்கப்பட்டது என்பதற்காக,  பரத்தையர்களின் நடனம் என  ஜப்பானியர்கள் அதை வெறுக்கவில்லை அல்லது புறக்கணிக்கவில்லை. 

 பரத நாட்டியம் தமிழர்களுடையது அதை தமிழர்கள் புறக்கணிக்கக் கூடாது என்பவர்கள் எவரும் தேவதாசி முறையை ஆதரிக்கவில்லை. ஆனால் அவர்களால் அழிந்து போகாமல் காக்கப்பட்ட தமிழர்களின் நாட்டியக்கலை இக்காலத் தமிழர்களால் காக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு அழிந்து போய் விடக் கூடாதென்பது தான் அவர்களின் ஆதங்கம்.
Sunday, August 18, 2013

ஈழத்தில் மிருகபலி தடைசெய்யப்பட வேண்டியதா?
உலகில் பழமையான நாகரீகங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மிருகபலியை தமது வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் கடைப்பிடித்து தான் வந்துள்ளனர். இலங்கையில் முன்னேஸ்வரம் காளி கோயிலில் வருடாந்தம் பாரம்பரியமாக நடைபெறும் மிருகபலி கூட இலங்கையில் இலங்கைத் தமிழர்களின் தொன்மையை எடுத்துக்  காட்டுகிறது. பல நூற்றாண்டுகளாக எந்த வித இடையூறுமில்லாமல் நடைபெற்று வந்த நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக சிங்கள பெளத்த பிக்குகளினதும், சில சிங்கள அரசியல்வாதிகளின்  எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம் போன்ற  தலையீடுகளால் நடைபெறாது தடைபட்டது  மட்டுமன்றி, இன்று அரசாங்கம் தலையிடும் விடயமாக மாறிவிட்டது.
முன்னேஸ்வரம் காளி
தொன்று தொட்டு முன்னேஸ்வரம் ஆலயத்தில் நடைபெற்று வந்து கடந்த வருடம் தடைபட்ட  மிருகபலி இந்த ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களில் 22 ஆகஸ்டு 2013 அன்று நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது முன்னேஸ்வரம் பத்திரகாளி கோயில் நிர்வாகம்.  மிருகபலியை தடை செய்யும் சட்டங்கள் எதுவும் இலங்கையில் கிடையாது  இதை எதிர்த்து யாராவது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் அதை நீதித்துறை மூலம் எதிர்கொள்ள கோயிலின் வழக்கறிஞர்கள்  ஆயத்தமாக உள்ளனர் என தெரிவித்துள்ளார் முன்னேஸ்வரம் கோயிலின் பிரதமகுருக்கள். அத்துடன் கோயிலுக்கு அண்மையில் எந்தவிதமான போராட்டங்களையும் தடைசெய்துள்ளது சிலாபம் மாவட்ட நீதிமன்றம்.

 
மிருகபலி என்பது மத அடிப்படையில் மதச்சடங்குகளுடன் ஒரு மிருகத்தைக் கொல்வதாகும். இவ்வழக்கம் கடவுள் அல்லது கடவுளர்களைத் திருப்திப்படுத்தி, தமக்கு வேண்டுதலைப் பெற்றுக் கொள்வதற்காக பல மதங்களில் பல ஆயிரமாண்டுகளாக நடைமுறையிலிருந்து வரும் வழக்கமாகும். .யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், தென்னமெரிக்காவின் அஷ்ரெக் போன்ற ஆதிக்குடியினர் மட்டுமன்றி தமிழர்களும் கடவுளை மகிழ்ச்சிபடுத்த மிருகங்களைப் பலியிட்டுள்ளனர். மிருகங்களுடன் போராடுவது அல்லது மதசம்பந்தமான சடங்குகளுக்காக மிருகங்களைப் பலியிடும் பழமையான பாரம்பரியத்தின் கலாச்சார  தொடர்புகளை இன்றும் ஸ்பானிஸ் நாட்டவர்களின் மாட்டை அடக்குதல், தமிழர்களில் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்களிலும், மத அடிப்படையில்  மதச் சடங்குகளுடன்  மிருகங்களைப் பலியிடும்  shechita அல்லது   abī ah எனப்படும் யூதர்களினதும், முஸ்லீம்களினதும் வழக்கு முறைகளிலும் காணலாம்.

இந்த 21ம் நூற்றாண்டில் மிருகபலி என்பது காட்டுமிராண்டித்தனமானது, மிருகங்களைவதை செய்வது  கொடூரமானது ஆனால் ஒவ்வொரு தொன்மை வாய்ந்த மக்களும் கலாச்சரங்களும், பிற்கால கலாச்சாரங்களிலும், சமூகங்களிலும் காணப்படாத  இப்படியான “காட்டுமிராண்டித்தனமான” சில வழக்கங்களைக் கொண்டுள்ளனர்.
பெயருக்கேற்றவாறு இலங்கையிலுள்ள முன்னேஸ்வரம் கோயில் மிகவும் பழமையானது. இலங்கையில் புத்தமதத்தின் வருகைக்கும், சிங்கள என்ற இனம் உருவாக முன்பாக, சிங்கள- தமிழ் இனப்பிரிவினை  உண்டாகும் முன்பாக அங்கு வாழ்ந்த  மக்கள் சிவ வழிபாட்டை மேற் கொண்டிருந்தனர், இலங்கையின் நான்கு திசைகளிலும் ஐந்து பழம்பெரும் சிவாலயங்கள் இலங்கைத் தீவை இயற்கையின் சீற்றத்திலிருந்து கைப்பற்றுவதற்கு நிறுவினர். அவை வடக்கே நகுலேஸ்வரம், வடமேற்கே மாந்தை துறைமுகத்தினருகே கேதீஸ்வரம், கிழக்கில் கோணேஸ்வரம், மேற்கில் முன்னேஸ்வரமும் தெற்கே தொண்டேஸ்வரமும் ஆகும். 
அதனாலேயே இலங்கையை சிவபூமி என நம்புகின்றனர் ஈழத்தமிழர்கள். இலங்கையிலுள்ள எந்தவொரு பெளத்த மதவழிபாட்டுத் தலத்தை விடவும் பழமை வாய்ந்தது முன்னேஸ்வரம் ஆலயம்.


முன்னேஸ்வரம் ஆலயத்தைச் சுற்றியுள்ள ஊர்கள் மட்டுமல்ல, அந்த பிரதேசம் முழுவதும் சிங்களக் குடியேற்றங்களாலும், திட்டமிட்டு தமிழர்களை சிங்களவர்களுடன் கலந்து அவர்களின் தமிழடையாளத்தை தொலைந்து  போகச் செய்யும் வகையில் தமிழ்வழிப் பாடசாலைகள் அனைத்தையும் சிங்களத்தில் மட்டும் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளாக அரசாங்கம் மாற்றியதாலும், அங்கு பெரும்பான்மையாக வாழ்ந்த மீனவ சமூகங்கள் கிறித்தவ மதமாற்றத்துக்குட்பட்டதாலும் அங்கு வாழ்ந்த தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் தமது முன்னோர்களின் தமிழ் அடையாளத்தை மறந்து சிங்களவர்களாக மாறி விட்டனர்.


அவர்கள் சிங்களவர்களாகவும், பெளத்தர்களாகவும், கிறித்தவர்களாகவும் மாறிய போதும் தமது முன்னோர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், சடங்குகளையும், முன்னேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கும் பத்திரகாளியில் உள்ள நம்பிக்கையையும், அவர்களின் தமிழ் முன்னோர்கள் வருடா வருடம் மிருகங்களைப் பத்திரகாளிக்குப் பலியிடும் பழக்கத்தையும் கைவிட முடியவில்லை. முன்னேஸ்வரத்தில் மட்டுமன்றி  யாழ்ப்பாணத்தில் பல  கிராமங்களில் வைரவர் கோயில்களிலும், அண்ணமார் கோயில்களிலும் வேள்வி என்ற பெயரில் ஆண்டு தோறும் பெரிய அளவில் மிருகபலி நடைபெறுகின்றன. .

அதனால் தமிழ் இந்துக்கள் மட்டுமல்லாது முன்னேஸ்வரப் பகுதிகளில் வாழும் சிங்கள பெளத்தர்களும், கிறித்தவர்களும் கூட தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற பத்திரகாளிக்கு மிருகங்களைப் பலியிடுகின்றனர்.

 அஸ்வமேத யாகம் 
இலங்கையில் நடைமுறையிலுள்ள சிங்கள பெளத்தத்துக்கும், புத்தரின் உண்மையான போதனைகளுக்குமிடையே பாரிய வேறுபாடுண்டு. அதனால் தான் இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் பெளத்தத்தை Sinhala Political Buddhism என்பர்.  சிங்கள பெளத்தர்கள் புத்தரின் முக்கிய போதனையாகிய கொல்லாமையைக் கடைப்பிடிப்பவர்கள் அல்ல. சிங்கள பெளத்த பிக்குகள் கூட இறைச்சி, மீன் போன்ற எல்லா உணவு வகைகளையும் உண்பவர்கள். இலங்கையில் போரை நிறுத்துவதை எதிர்த்து. சமாதானத்துக்கெதிராகவும்,  போரைத் தொடர வேண்டியும்  ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதமும் இருந்தவர்கள் சிங்கள புத்த பிக்குகள்.

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான பல இனக்கலவரங்களை முன்னின்று நடத்தியவர்கள் சிங்கள புத்த பிக்குகள் என்பதை யாவரும் அறிவர். இன்று முஸ்லீம்களுக்கேதிராக போர்க்கொடி தூக்கியிருப்பவர்களும் அவர்கள் தான். வன்னியில் தமிழ்ச் சிறுவர்கள் கொலைசெய்யப்பட்ட போது கூட அதை வரவேற்று நியாயப்படுத்திய சிங்கள பெளத்த பிக்குகள்  முன்னேஸ்வரம் கோயிலில் நடைபெறும் மிருகபலிக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்ததன் விளைவாக அந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு  இடை நிறுத்தப்பட்டது.  

                                                                                                              Eid-ul-Adha animal sacrificing
கடந்த வருடம் பெளத்த பிக்குகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி முன்னேஸ்வரம் கோயிலுக்குள் நுழைந்து காளிகோயில் மிருகபலியை நிறுத்திய புகழ்பெற்ற இலங்கையின் சிங்கள அமைச்சர் ஒருவர் அந்தப் பேச்சையே இந்த வருடம் எடுக்கவில்லையாம். அவரது அடாவடித்தனத்தால் காளியின் ஆத்திரத்தை சம்பாதித்துக் கொண்ட அமைச்சருக்கு அன்றிலிருந்து அரசியலில் இறங்குமுகம் தானாம். ஒரு சில வாரங்களுக்கு முன்னாள் அவரது மகனையும் யாரோ நையப்புடைத்து அவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக்காலத்தில் கோயில்களில் மிருகபலியை ஆதரிப்பதோ அல்லது அதைக் கண்டு கொள்ளாமல் விடுவதோ என்னுடைய நோக்கமல்ல. உலகப்புகழ் பெற்ற காளி உபாசகராகிய சுவாமி விவேகானந்தர் கூடமிருகங்களைப் பலியிடுவதை எதிர்த்திருக்கிறார். ஆனால் சிறுபான்மையினரை குறிப்பாக தமிழர்கள் மீது கொலைவெறி கொண்டு போரைத் தூண்டிய சிங்கள புத்த பிக்குகள் திடீரென மிருகங்களில் காருண்யம் கொள்வதன் நோக்கம் இலங்கையில் தமிழர்களின் கோயில்களில், அவர்களின் மத சுதந்திரத்தில் தலையிடுவது தான். அத்துடன் பல சிங்களவர்களும் இந்து மதக் கோயில்களுக்குச் சென்று சடங்குகளைச் செய்வதைத் தடுப்பதுமாகும். அதானால் சிங்கள புத்த பிக்குகளும், இலங்கை அரசும்  தமிழர்களின் கோயில்களில் தமது மூக்குகளை நுழைப்பதற்கு இடமளிக்காமல் தமிழர்களும் அவர்களின் மதகுருமார்களும், தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த மிருகபலியைத் தடை செய்ய வேண்டும். அல்லது அதற்கான அனுமதியை நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும்.


 யாழ்ப்பாணத்துக் கோயில்களில் கோயிலுக்கென அளிக்கப்படும் மிருகங்களை ஏலத்தில் விற்று அந்த பணத்தை மட்டும் கோயிலுக்கு அளித்து விடுவார்கள், ஆனால் கோயிலில் வைத்து மிருகங்களைப் பலி கொடுப்பதில்லை.

காணொளி:

யாழ்.வல்வெட்டித்துறையில்(விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் ஊரில்) காத்தவராயன் பூசையும் பலியிடக் கொண்டுவந்த ஆடு, கோழிகளின் ஏலமும்.(பலியாகப் போகும் ஆடுகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில்  தெரிகிறது என்று நாதஸ்வரம் வாசித்துக்  கொண்டு போவது யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் நடக்கும். ):))