Sunday, June 30, 2013

தமிழ் இந்துக்கள் தமிழ்க் கிறித்தவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்
இலங்கையில் இருந்தாலென்ன  உலகத்தில் எந்த மூலை முடுக்குச் சென்றாலும் தமிழை, தமிழ்ப்பண்பாட்டை மறக்காதவர்கள் இலங்கையின் தமிழ்க் கிறித்தவர்கள். இலங்கைச் சைவத்தமிழர்கள் குறிப்பாகக் யாழ்ப்பாணச் சைவத்தமிழர்கள் தமிழ், தமிழுக்கு முன்னிடம் என்று பீற்றிக் கொண்டாலும், புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயிலைக் கட்டி, தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்ல, கேரளத்திலிருந்தும் பார்ப்பனர்களை அழைத்து வந்து  சாதியையும், சமக்கிருதத்தையும்,  வளர்த்து விட்டது தான் மிச்சம்.

ஆனால் தமிழ்க் கிறித்தவர்கள் எங்கு போனாலும் தமிழில் பூசை தமிழில் சொற்பொழிவு, அழகான தமிழில் பாடல் என்று தமிழுக்கு முதலிடம் கொடுக்கின்றனர்.  சுவிற்சர்லாந்தில் உள்ள கருப்பு மாதாவின் தேவாலய வருடாந்த திரு விழாவை ஈழத் தமிழ்க் கிறித்தவர்கள் தமிழில் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்று இந்தக் காணொளியில்  பாருங்கள்.

இதைப் பார்க்கும் பொது அன்னை மரியாளுக்கு தமிழில் தமிழர்களின் வேண்டுதலைப் புரிந்து  கொள்ள முடிகிறது   ஆனால் தமிழ்க்கடவுள் முருகனுக்கும் அன்னை மாரியம்மனுக்கும் மட்டும் ஏன் சமக்கிருதம் தேவைப்படுகிறது என்று வியக்காமலிருக்க முடியவில்லை. அது கூட குறிப்பிட்ட சாதியினர் சொன்னால் மட்டும் தான் புரிகிறது. இந்த விடயத்தில் கிறித்தவரல்லாத ஈழத் தமிழர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

தமிழர்களின் கோயில்களில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கும் போராட்டங்கள் பல தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டாலும் பல காரணங்களால் அவர்களால் அதில் வெற்றி கொள்ள முடியவில்லை. ஈழத்தமிழர்களின் கோயில் நிர்வாகிகள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கோயில்களிலாவது முற்று முழுதிலும் தமிழில் பூசையை நடத்தாது விட்டாலும், தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க ஆவன செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்  கோயில்களில் தமிழிலும் பூசை செய்யப்படும் என்ற அறிவிப்பாவது இருக்கும் ஆனால் ஈழத்தமிழர்களின் கோயில்களில் அதுவும் கிடையாது எல்லாம் சமக்கிருதத்தில் தான்.  அதனால் தமிழைக் கோயில்களில் பூசை செய்யும் மொழியாக்கும் புரட்சி  ஈழத்தமிழர்களிடமிருந்து தொடங்க வேண்டும். ஈழத் தமிழ்க் கிறித்தவர்களைப் போன்றே நாங்களும் எமது வழிபாட்டை தமிழாக்க வேண்டும்.

அத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆலயங்களில்  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் முறையாகப் பயிற்சி பெற்ற தமிழர்கள்  அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும். இதே நடைமுறையை சிங்கப்பூர், மலேசியா, பிஜீ போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் பின் பற்றினால், சாதியொழிவது மட்டுமல்ல, தமிழர்களின் இந்து மதம் மீண்டும் தமிழாக்கப்படும். தகுதியற்றவர்களையும் பிறப்பின் அடிப்படையில் குருமார்களாக்கும் முட்டாள்தனம் நீங்கும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டும் கோயில்களில் நியமிக்கப்படாத  தமிழர்கள்.

Saturday, June 29, 2013

ஈழத்தமிழ்மகன் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா- 2013

ஈழத்தில் பிறந்து தமிழ்தொண்டாற்றிய வண. பிதா. தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு (July 4-7, 2013) கொண்டாடப்படுகிறது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையும் கனேடியத் தமிழர் பேரவையும் இணைந்து TORONTO, CANADA வில் நடத்தும் தமிழ் விழா, ஈழத்தமிழ் மகன், தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.  ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் இணைந்து தமிழ்த்தொண்டாற்றிய ஈழத்தமிழ் மகனுடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது மிகவும் சிறப்பானதாகும். எல்லைகள், மதம் எல்லாவற்றையும் கடந்து தமிழ் எங்களை இணைக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.

பக்தியின் மொழி தமிழ்

"If Latin is the Language of Law and of Medicine 
French the Language of the Diplomacy 
German the Language of Science 
And English the Language of Commerce 
Then Tamil is the Language of Bhakti 
The devotion to the sacred and the holy."  
-Rev. Fr. Thaninayakam –

தனிநாயகம் அடிகளார் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஊர்காவற்துறையில் கரம்பன்  என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு, சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு ஆவணி 2, 2013  இல் பிறந்தார்.  

தனிநாயக அடிகளின் இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு என்பதாகும். பிற்காலத்தே இவர் தமிழில் கொண்ட தீராத காதலினால் உரோமன் கத்தோலிக்க குருவாக நியமிக்கப்பட்டபோது தனது பெயரினை சேவியர் எஸ் தனிநாயகம் என்ற தனது முன்னோர்களின்  தமிழ்ப் பெயரினையும் சேர்த்துக் கொண்டார். 

அடிகளாரது தந்தை நாகநாதன், மற்றும் அவரது தந்தைவழிப்  பரம்பரையினர் யாழ்ப்பாண வைபவமாலையிலும், கையிலாயமாலையிலும்  குறிப்பிடப்படும் நெடுந்தீவைச் சேர்ந்த இருமரபுந்துய்யதனிநாயக முதலி வழிவந்தவர்கள். 
"…இறைவனிகர் செல்வன் எழில்செறிசே யூரன்
நிறைபொறுமை நீதியக லாதான் - நறைகமழும்
பூங்காவி மார்பன் புகழுளவெள் ளாமரசன்
நீங்காத கீர்த்தி நிலையாளன் - பாங்காய்
இனியொருவர் ஒவ்வா இருகுலமுந் துய்யன்
தனிநா யகனெனும்போர் தாங்கு - முனியவனை
மற்றுமுள பற்று நகர்வளமை சூழ்ந்திடுதென்
பற்று நெடுந்தீவு பரிக்கவைத்துச் சுற்றுபுகழ்…" 

இன்றைக்கு தொன்மையும், வளமும், வனப்பும் இணைந்த ஒரு மொழியைப் பேசுபவர்களாக நாம் இருக்கிறோம். தோண்டத் தோண்ட திகட்டாத தேன்சுவையைக் கொட்டித்தரும் தொன்மை தமிழுக்கு உண்டு. தமிழுடன் தோன்றிய பல மொழிகள் அழிந்துபோனாலும் நவீனத்தைக் குழைத்து இற்றை வரைக்கும் இளமையாய் வாழ்ந்துவருவது அதன் சிறப்பு. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் தமிழ் மொழியின் சிறப்புக்கு வளம் சேர்த்த ஏராளமானோர் இருக்கிறார்கள். இவர்களின் ஒப்பற்ற உழைப்பாலும், அர்ப்பணிப்பாலுமே தமிழ் மொழி தொன்மையும் நவீனமும் ஒருங்கே அமைந்ததாய் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அந்தவகையில் தமிழ்மொழியின் பெருமையை உலகளாவிய ரீதியில் பறைசாற்றிய ஒருவர் அருட்திரு சேவியர் தனிநாயகம் அடிகளார். தமிழை உலகமெலாம் பரவும்வகை செய்து ஈழத்தமிழினத்துக்கே பெருமை சேர்த்தவர் தனிநாயக அடிகள்.

சேவியர் தனிநாயகம் அடிகளார் 1913ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி ஊர்காவற்றுறையிலே பிறந்தார். இவரின் இயற்பெயர் சேவியர் ஸ்ரனிஸ்லோஸ். இவர் தனது ஆரம்பக் கல்வியை காவலூர் புனித அந்தோனியார் கல்லூரியிலும், இடைநிலைக்கல்வியை சம்பத்திரிசியார் கல்லூரியிலும் (1920 - 1922) கற்றார். பின்னர் கத்தோலிக்க குருவாக விரும்பி கொழும்பு புனித பேர்னாட் குருமடத்தில் இணைந்து (1934) மெய்யியல் துறையில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து உரோமை வத்திக்கான் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். ஐரோப்பாவில் இருந்தபோதே ஆங்கிலத்துடன் லத்தீன், இத்தாலிய, பிரெஞ்சு, ஜேர்மனிய, ஸ்பானிய, போர்த்துக்கேய மொழிகளில் புலமை பெற்றவராக விளங்கினார். 

தமிழ் நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் புனித தெரேசா உயர்நிலைப்பள்ளியில் துணைத் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். இலங்கையில் கற்றபோதும் தமிழ் பயிலும் வாய்ப்பு இலங்கையில் அவருக்கு வாய்க்கப்பெறவில்லை. வடக்கன்குளத்தில் இருந்தபோதே பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயில ஆரம்பித்தார். 1945இல் தமிழ்நாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  சங்க இலக்கியத்தை ஆய்வு செய்து 'தமிழ்ப்பாடல்களில் இயற்கை' என்ற பெயரில் கட்டுரை சமர்ப்பித்து முதுமானிப் பட்டம் பெற்றார்.

தமிழ் மொழிக்கான ஆய்வுகள் அதிகமில்லாத அந்த நாட்களில் தமிழ் மொழிக்கான ஆய்வு அமைப்பு ஒன்றை உருவாக்கும் ஆர்வம் கொண்டு தனிநாயக அடிகள் உழைத்து வந்தார். ஜப்பான், சிலி, பிரேசில், பெரு, மெக்சிக்கோ, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மொழியியல் ஆய்வு தொடர்பாகப் பயணித்தார். தமது பயணத்தின் போது ஐரோப்பிய நூலகங்களில் உள்ள பழந்தமிழ் நூல்களைக் கண்டறிந்தார். இவற்றில் கார்த்தீயா (1556), தம்பிரான் வணக்கம் (1578), கிறித்தியானி வணக்கம் (1579), ஆன்டம் டி புரொசென்கா என்பவரால் தொகுக்கப்பட்ட முதலாவது தமிழ்-போர்த்துக்கீச அகராதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஏனைய மொழிகளுக்காக நடைபெறும் ஆய்வுகளைக் கண்டு தமிழுக்கும் இவ்வாறான ஆய்வுகள் தேவை எனக் கூறினார். தமிழ் குறித்த செய்திகளை ஆங்கிலத்தில் வெளிக்கொணர்ந்தாற் தான் தமிழின் பெருமையை எனைய சமூகத்தவர் உணர்ந்துகொள்வார்கள் என்பதற்காய் Tamil Culture என்ற சஞ்சிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 

பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1961 இல் மலேசியா சென்று மலேயாப் பல்கலைக்கழகத்தில் 1969 வரை இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மலேசியாவில் பணி புரியும் காலத்தில் புதுடெல்கியில் வ. . சுப்பிரமணியத்துடனும் இன்னும் இருபத்தாறு அறிஞர்களுடனும் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை தோற்றுவித்தார். இந்நிறுவனம், உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழாராய்ச்சி மாநாடொன்றினை இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது. அதன் முதல் மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 - 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தனிநாயக அடிகள் நடத்தினார். புரொயென்காவின் போர்த்துக்கீச-தமிழ் அகராதியை அங்கு மீள்பதிவாக்கம் செய்து இம்மாநாட்டில் வெளியிட்டார். சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

1970இல் மூன்றாவது தமிழாராய்ச்சி மாநாடு பாரிசிலும், 1974 இல் நான்காவது தம்ழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்திலும் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றன. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாரய்ச்சி மாநாட்டினையொட்டி யாழ் நகரமே விழாக்கோலம் பூண்டது. இது சிங்கள அரசுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மாநாட்டின் இறுதி நாளில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் 10 தமிழர்கள் பலியானார்கள். ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இதுபெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அடிகளார் 'தமிழ்த் தூது', 'உலகப் பயணங்களின் பட்டறிவு', 'ஒன்றே உலகம்' அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார். அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய உரை திருவள்ளுவர் என்னும் பெயரில் நூலாகியுள்ளது. 

அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்து என்ற நூல் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்ற தனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.

1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இவரின் இறப்புக்குப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கலாநிதி பட்டம் வழங்கிக் சிறப்பித்தது. தனது சேவையால் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த தனி நாயக அடிகளார் பிறந்த நூறாவது ஆண்டு இந்த வருடமாகும்.

The roving Ambassador of Tamil


Today, Tamil is one of the few Indian languages taught in many universities of the
world. Scholars, who are not of Tamil origin, have undertaken Tamil research.
International conferences on Tamil studies are conducted frequently in many
countries. Tamil festivals are celebrated in many parts. All this was possible, thanks
to the strenuous efforts by one individual: Xavier S. Thaninayagam, a catholic priest
from Jaffna, who was professor and head of Indian Studies, University of Malaysia,
from 1961 to 1969.  Scholars, who are not of Tamil origin, have undertaken Tamil research.

International conferences on Tamil studies are conducted frequently in many
countries. Tamil festivals are celebrated in many parts. All this was possible, thanks
to the strenuous efforts by one individual: Xavier S. Thaninayagam, a catholic priest
from Jaffna, who was professor and head of Indian Studies, University of Malaysia,
from 1961 to 1969.
Ref: Various

Wednesday, June 19, 2013

ஈழத்தமிழர்களை உசுப்பேத்தி விடும் தமிழ் நாட்டுத் தமிழர்கள்!
தமிழ், தமிழ் என்று  ஈழத்தமிழர்களை உசுப்பேற்றி விடும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் இதே போன்று தமிழ்நாட்டிலும் பேசி தமிழுணர்வைத் தூண்டினாலென்ன?  

இலங்கையில் வாழும் தமிழர்களை விட, தமிழ் பேசாத நாடுகளில் வாழும்  புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழுக்குக் கொடுக்கும் முன்னுரிமையை விடக் குறைவாகத் தான் தமிழ் நாட்டில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.தமிழ்நாட்டில் தமிழை எழுத வாசிக்கத் தெரியாமலே பட்டதாரியாகி, நல்ல வேலையையும் பெற்று தமிழ் எழுதத் தெரியாமலே அமோகமாக வாழவும் முடியும். ஆனால் ஈழத் தமிழர்களோ மேலை நாடுகளில் பிறந்து, அந்த நாட்டுக் குடியுரிமையுமுள்ள தமது குழந்தைகளைக் கூட , என்ன வேலைப்பழு இருந்தாலும், அதற்கென தமது  நேரத்தை  ஒதுக்கி, பல மைல்களுக்கு அப்பாலிருக்கும் பாடசாலைகளுக்கும், ஆசிரியர்களிடமும் அழைத்துச் சென்று தமிழ் கற்பிக்கிறார்கள். அதனால் தமிழ் நாட்டுத் தமிழுணர்வாளர்கள் எல்லாம் வெளிநாட்டுக்குச் சென்று ஈழத்தமிழர்களிடம் மட்டும் தமிழின் அருமை பெருமைகளைப் பேசுவதுடன் நிறுத்தி விடாமல்தமிழை இழந்தால் நாம் எமது அடையாளத்தை இழந்து விடுவோம் என்பதையும், தமிழ் நாட்டுப் பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு கட்டாயமாக தமிழை எழுதப் படிக்க கற்பிக்க வேண்டுமென்பதை தமிழ்நாட்டிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அதை விட அவலம் என்னவென்றால் ஏற்கனவே தமிழ் நாட்டு இளஞ்சமுதாயத்தினரிடம் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம்  இன்றைக்கோ நாளைக்கோ என உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் தமிழை முற்றாகவே இல்லாமல் செய்து விடும் வகையில் தமிழக அரசுக்குச் சொந்தமான கல்லூரிகளிலேயே ஆங்கில மொழிவழிக் கல்வித்திட்டத்தையும், ஆரம்பித்தால் இப்பொழுதே தமிழ் பேச வெட்கப்படும் தமிழ் நாட்டுக் கல்லூரி மாணவர்கள், முற்று முழுதாக தமிழை மறந்து விடுவார்கள். அதை எதிர்த்து கவிஞர் வைரமுத்து அவர்கள் தமிழ்நாட்டில் ஏற்கனவே பேசியிருக்கிறாரோ இல்லையோ எனக்குத் தெரியாது. அவர் அதைப்பற்றியும், தமிழைப் பற்றியும்   இவ்வாறு தமிழ் நாட்டிலும் பேசி தமிழ் நாட்டுத் தமிழர்களையும் உசுப்பேற்றி விட வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள். 


அத்துடன் வானொலி அல்லது தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில், ஒன்றில் ஆங்கிலத்தை மட்டும் முற்றிலும்  பேச வேண்டும் அல்லது தமிழை மட்டும் பேச வேண்டும், இரண்டையும் சேர்த்துக் குழப்பியடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும். உண்மையில் தமிழ்நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும், அதில் பங்கு பற்றும் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்கள் கூட, இயல்பாகவே அவர்கள் பேசும் தமிழைப்  பேசாமல், தேவையில்லாமல், வேண்டுமென்றே ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேசும் பொது, அவர்களின் தலையில்  ஓங்கி ஒரு  குட்டு வைக்க வேண்டும் போன்ற உணர்வு எனக்கு ஏற்படுவது வழக்கம். முடிந்தால் தமிழ் நாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி அங்கு குறைந்தது மூன்று மாத பயிற்சியளிக்கலாம். :)

கண்கலங்காதீர்கள் தர்மம் மறுபடி வெல்லும்  சுவிஸில் கவிப்பேரரசு வைரமுத்து 
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் அடையாளம் அழிவதில்லை, தமிழ் வரலாறு அழிவதில்லை, அதை தூக்கி நிறுத்த அடுத்த தலைமுறை வந்தே தீரும் என கவிப்பேரரசு வைரமுத்து சுவிட்சர்லாந்தில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் தெரிவித்தார்.  
கவிப்பேரரசு வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுகவிழா நேற்று மாலை சுவிட்சர்லாந்து லுசேன் நகரில் எழுத்தாளர் கல்லாறு சதீஸ் தலைமையில் நடைபெற்றது.
தாய் மண்ணை விட்டு வந்தாலும் தமிழ் மொழியை தமிழ் பண்பாட்டை இன்றும் மறக்காமல் நெஞ்சில் சுமந்து வாழும் ஈழத்தமிழர்களால் உலகம் எல்லாம் தமிழ் வாழும் என்றும் அங்கு உரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்தார்.  

Tuesday, June 18, 2013

சிங்களவர்களின் தேசிய நடனம் தமிழர்களிடமிருந்து இரவல் வாங்கியது.

இலங்கையின் தேசிய நடனம் என்று சிங்களவர்கள் பெருமையுடன் குறிப்பிடுவது கண்டிய நடனத்தைத் தான். அது இலங்கையில் சிங்களவர்களின் கோயில் திருவிழா, திருமணம், அரசாங்க நிகழ்ச்சிகள், வெளிநாட்டவர்களின் வரவேற்பு விழாக்கள், ஏன் சாதாரண திறப்பு விழாக்களில் கூட சிங்களவர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தின் அடையாளம் எனக் குறிப்பிட்டு, சிங்களவர்கள் பீற்றிக் கொள்வதை எங்களில் பலரும் அறிவோம் ஆனால் அந்த, சிங்களவர்களின் தேசிய நடனம் என  அழைக்கப்படும் அந்த கண்டிய நடனத்தைக் கூட சிங்களவர்கள் தமிழர்களிடமிருந்து தான் இரவல் வாங்கினார்கள் என்ற உண்மை பல தமிழர்களுக்கே தெரியாது.
சிங்கள கலை, கலாச்சாரம், கட்டிடம், உடை, உணவுப்பழக்கம் என எதை எடுத்து கூர்ந்து கவனித்தாலும்  அவையனைத்திலும் சுயமானத்தன்மை(Originality) இல்லாதிருப்பதையும்
அவையெல்லாம் மற்றவர்களிடமிருந்து இரவல் வாங்கியவையே அல்லாமல் ஒரு மண்ணும் சிங்களவர்களின் மண்டையிலிருந்து உருவாகவில்லை என்பது தெளிவாகும்

நையாண்டிவண்ணம்/NAIADI WANNAMA
தமிழர்களுக்கு தமது வரலாற்றுச் சின்னங்களையும், தமது முன்னோர்களின் கலைகளைக்  கூட பாதுகாக்கவோ அல்லது உரிமையுடன் சொந்தம் கொண்டாடவோ தெரியாது. ஆக மிஞ்சிப் போனால் பழமையான பாதுகாக்கப்பட வேண்டிய கலைவடிவையும், சினிமாப்பாட்டையும்  கலந்து மானாக மயிலாக மாறி ஒரு டப்பாங்கூத்தாடி தம்மைத் தாமே கோமாளிகளாக்கிக் கொள்வார்கள். ஆனால் சிங்களவர்கள் அப்படியல்ல. சிங்களவர்களோ தமிழர்களிடமிருந்து எல்லாவற்றையும் இரவல் வாங்கி, அவற்றில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டுஅதன் கலையழகைச் சீரழிக்காமல் தம்முடையதாக்கிக் கொள்வார்கள். 

அது மட்டுமன்றி  தமிழர்கள் தான் அந்த கலைவடிவத்தை சிங்களவர்களிடமிருந்து இரவல் வாங்கியதாக வாதாடுவதுடன், அதற்கு மகாவம்சத்தில் கூட ஒரு கதையை ‘ஆதாரத்தை’ உருவாக்கிக் காட்டுவார்கள். அப்படியான வரலாற்று, கலாச்சார திரிப்புகளுக்கு அரச ஆதரவும் இருப்பதால் தான் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் நிலங்களில் எல்லாம் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அடாவடித்தனம் பண்ணி, ஈழத்தமிழர்களை வந்தேறு குடிகளாக்க முனைகிறார்கள் சிங்கள பிக்குகளும் சிங்கள வரலாற்றாசிரியர்களும். அதைப் பற்றி பின்பு பார்ப்போம்.

எப்படி தமிழர்களின் சதிராட்டத்தை பார்ப்பனர்கள் கடத்திக் கொண்டு போய், சில மாற்றங்களைச் செய்து, மெருகூட்டிப்   பரதநாட்டியமாக்கி அதை பரதமுனிவர் என்ற ஒரு வடநாட்டவன் உருவாக்கியதாகக் கதை விடுகிறார்களோ, அது போல் தான் சிங்களவர்களும்  இலங்கையின் தேசிய நடனம் என இப்போது அழைக்கப்படும் கண்டிய  நடனத்தை, தமிழர்களிடமிருந்து கற்று, சில மாற்றங்களைச் செய்து தமதாக்கிக் கொண்டார்கள்.

சிங்களவர்களின் தேசிய நடனம் அல்லது கண்டிய நடனத்தின் வேர்கள், அதன் சொற்கள் நாட்டியத்தின் விதிகள் அனைத்தும் இன்றும்  தமிழ் மொழியிலிருக்கும் போது கண்டிய நடனம் எவ்வாறு தனது தமிழ்த் தொடர்பை இழந்தது என்பதைப் பார்ப்போம்.  கண்டிய நடனத்தின் முக்கியமான பாகத்துக்குப் பெயர் ‘வண்ணம’ (தமிழில் வண்ணம்). பரத நாட்டியத்தில் கூட பல தமிழ்ச் சொற்கள் சமக்கிருதப்படுத்தப்பட்டு விட்டன, ஆனால் கண்டிய நடனத்தில் நாட்டிய விதிகளுக்கான தமிழ்ச் சொற்கள் இன்றும் தமிழாகவே இருப்பதை நாம் காணலாம். 
அனுமான் வண்ணம்/HANUMA WANNAMA
சிங்கள மொழி தமிழிலிருந்து ஆயிரக்கணக்கான சொற்களை இரவல் வாங்கியுள்ளது, ஆனால் அந்த சொற்கள் எல்லாம் கடைசி எழுத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, சிங்கள உச்சரிப்புக்கேற்றதாக உருமாற்றப்பட்டிருக்கும். தமிழைப் போன்று சிங்களச் சொற்கள் ம், ள், ர், ன் இல் முடிவதில்லை, அதனால் உதாரணமாக இலக்கம் என்ற  தமிழ்ச் சொல் சிங்களத்தில் இலக்கம எனவும்  அம்பலம், அம்பலம ஆகவும் தமிழில் எதிரி, சிங்களத்தில் எதிரிய, தமிழில் கடிவாளம், சிங்களத்தில் கடிவாளம, தமிழில் காப்பு, சிங்களத்தில் காப்புவ இப்படி ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் இரவல் வாங்கப்பட்டு சிங்களமாக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.. ஆனால் கண்டிய நடனத்தின் நாட்டிய விதிகளில் இன்றும் சுத்தமான தமிழ்ச் சொற்கள் அப்படியே எந்த வித மாற்றமுமில்லாமல், அதாவது சிங்களமயப்படுத்தாமல்  உபயோகத்திலுள்ளன. கண்டிய நடனம் தமிழ் வேர்களிலிருந்து தான் வந்தன என்பதற்கு அது ஒரு நல்ல ஆதாரமாகும்.

கண்டியரசன் நரேந்திர சிங்கன் (1707-1737) மதுரையையாண்ட தமிழ் பேசும் நாயக்கர் அரச குடும்பத்தின் இளவரசியை தனது பட்டத்தரசியாக்கிக் கொண்டான். அக்காலத்தில் பல சிங்கள அரசர்களின் வழக்கமும் அது தான். ஏனென்றால் பல சிங்கள அரச குடும்பத்தினர் கத்தோலிக்க மதத்துக்கு மாறியும் போத்துக்கேயருடன் கலப்பு மணம் செய்து கொண்டதாலும், கண்டியின் சிம்மாசனத்தில்  அமரும் தூய்மையை (Ritual Purity) இழந்து விட்டதாக புத்த பிக்குகள் நினைத்ததாலும், சிங்கள அரசர்கள் மதுரையில் இருந்து பெண் எடுத்தனர். 

அந்த இளவரசிகளுடன் மதுரையின் அரசவை  நாட்டிய நங்கைகளும், இசைவல்லுனர்களும் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தனர். அவ்வாறு வருகை தந்த தமிழ்க் கவிஞர்கள், கண்டி மல்வத்தை விகாரையிலிருந்த புத்த பிக்குகளின் ஆலோசனையுடன் அவர்களுடன் இணைந்து ஒவ்வொரு வண்ணத்துக்கும் இயற்றிய நாலடிக் கவிதைகள் தான் சிங்களத்தில் இன்றும் கவி என அழைக்கப்படுகிறது. சிங்கள நடனத்தில் பதினெட்டு விதமான வண்ணங்கள் அதாவது நாட்டிய பாரம்பரியம் உண்டு.
பரதநாட்டியத்தில் அவை சமக்கிருதப்படுத்தப்பட்டு விட்டன, ஆனால் கண்டிய நடனத்தில் நாட்டிய விதிகளுக்கான தமிழ்ச் சொற்கள் இன்றும் தமிழாகவே இருப்பதை நாம் காணலாம். 
முசலடி வண்ணம்/MUSALDAI(RABBIT)WANNAMA 

தமிழ்நாட்டில் எவ்வாறு தமிழர்களின் நாட்டிய பாரம்பரியங்களையும் கலைகளையும், இசைக்கருவிகளையும்  குறிப்பிட்ட சாதியினரும், தேவதாசிகளும் மட்டும் பயின்று, ஆடி வந்தனரோ அது போன்றே இலங்கையில் சிங்களவர்கள் மத்தியிலும் தாழ்த்தப்பட்ட சாதிபிரிவினர்  இந்த நடனமாடுவதையும், பறை(சிங்களத்தில் 'பெற') அடிப்பதையும் அரசவையிலும் ஆலயங்களிலும், கிராமங்களிலும் செய்து வந்தனர். ஆனால் கண்டிய நடனத்துக்கும்  தமிழுக்கும் தமிழர்களுக்குமுள்ள தொடர்பை திட்டமிட்டு மறைத்தவர்கள் அவர்களல்ல. சுதந்திரத்துக்குப் பின்னால் சிங்களவர்களின் கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்க புறப்பட்ட, நகர்ப்புற, படித்த, உயர்சாதி சிங்களவர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் தான் திட்டமிட்டு, தமிழ் வேர்களை மறைத்து, கண்டி நடனத்தை சிங்களவர்களுடையது மட்டுமாக்கி, அதற்கு மகாவம்சத்துப் புராணக் கதையையும் இயற்றியவர்கள். தமிழர்களின் சதிராட்டம் எவ்வாறு பரதநாட்டியமாகி மேட்டுக்குடிகளின் கைகளில் போய் தனது தமிழ்த்தன்மையை இழந்ததோ அதே நிலை தான் இலங்கையில் கண்டிய  நடனத்துக்கும் ஏற்பட்டது.

கண்டி நாட்டியக்காரார்கள் வண்ணம், சிறுமருவு, அடவு, காத்திரம், மாத்திரை எனும் தமிழ் நாட்டிய மரபுகளை எந்த விதமான  சிங்களமயப் படுத்தலுமில்லாமல் தமிழ்ச்சொற்களையே இன்றும் சிங்களத்திலும் பாவிப்பதைக் காணலாம்.

அடவு:

இந்தச் சொல் தமிழர்களின் பாரம்பரிய சதிராட்டத்தில் (இன்றைய பாரத நாட்டியம்) போன்றே கண்டிய நடனத்திலும் பாதங்களின் அசைவுகளைக் குறித்தாலும், அது பாத அசைவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தஞ்சாவூர் பாரம்பரியத்தில் 65 அடவுகள் உண்டுஅவை பல்வேறு விதமான நாட்டிய அசைவுகளைக் குறிக்கின்றன. சிங்களவர்களின் தேசிய நடனமாகிய கண்டிய நடனத்திலும் ஒவ்வொரு வண்ணம்(ம) நாட்டியத்தின் முடிவிலும் ஆடப்படுவது அடவு ஆகும்.

காஸ்திரம் அல்லது காத்திரம்

இதுவும் ஒரு பலமான அல்லது கடுமையான நாட்டிய அசைவுகளைக் குறிக்கிறது. கண்டிய நடனத்தில் காத்திரத்தை தொடர்ந்து ஆடப்படும் அடிப்படை நாட்டிய அசைவுகளும், அதற்கேற்ப மேளத்தின் அடியும் மாத்திரை என அழைக்கப்படுகிறது. இரண்டாவது, மூன்றாவது மாத்திரைகளின் பின்னர் காத்திரம் சிக்கலான நாட்டிய அசைவாக மாறுகிறது. நாலாவது மாத்திரையின் பின்பு காத்திரம் நீண்ட நேரத்துக்கு ஆடப்படும். நாலாவது மாத்திரையில் நாட்டியமாடுபவர் சுதந்திரமாக,  அவரது விருப்பப்படி துள்ளவும், சுழன்றாடவும் முடியும். ஆனால் மேளம் அடிப்பவர் அவரது அசைவுகளைக் கவனமாக அவதானித்து, அவரது நாட்டிய அசைவுகளுக்கேற்ப மேளத்தை ஒலிக்க வேண்டும்.  சிங்கள நடனத்தில் வண்ணம் என்றழைக்கப்படும் நடனத்தின் உச்சகட்டம் இது.  

சிறுமருவு:
தமிழ்ச் சொல்லாகிய சிறுமருவு என்ற சொல்லை  மென்மையாக, மெதுவாக ஆடப்படும் நாட்டிய அசைவுகளுக்கு சிங்களவர்கள் இன்றும்  பாவிக்கிறார்கள். காத்திரத்தின் போது பலமான நாட்டிய அசைவுகளையும், சுழன்றும், துள்ளியும் ஆடிக் களைத்துப் போன நாட்டியக்காரரம், மேளகாரரும்  சிறுமருவின் போது இளைப்பாறிக் கொள்ளுவர்.  
இவை மட்டுமன்றி சிங்களவர்கள் தமிழர்களின் வேறு பல நாட்டிய, கலை வடிவங்களை இரவல் வாங்கியிருக்கிறார்கள். தமிழ்பெயர்களையும் அப்படியே வைத்துக் கொண்டே மகாவம்ச காலத்தில் விஜயன்  நையாண்டி நடனமாடினார் புத்தர் பறந்து வந்திருந்து பார்த்தார்  என்று வாய் கூசாமல் பொய் கூறித் தமக்கும் தமிழர்களுக்கும் மட்டுமல்ல, தமது கலைகளுக்கும் தமிழர்களுக்கும் கூடத் தொடர்பில்லை என மறுப்பார்கள் சிங்களவர்கள்.

நையடி (Naiadi) அல்லது நையாண்டி

நையாண்டி பாரம்பரியம்  இன்றும் தமிழ்நாட்டில் உண்டு. இலங்கையிலும் சிங்களவர்களால் கதிர்காம முருகனை வேண்டி பம்பை, நையாண்டி மேளம் என்பவை ஆடப்பட்டன. ஆனால் இன்று விஸ்ணு கோயில்களிலும் ஆடப்படுகிறது. பம்பை, நையாண்டி என்று தமிழ் பெயர்களால் அழைத்துக் கொண்டே அது வட இந்தியாவிலிருந்து மகிந்த தேரோ அறிமுகப்படுத்தினார் என்று கூறும் சிங்களவர்களுமுண்டு.

உடெக்கி (சிங்களம்) அல்லது உடுக்கு(தமிழ்)

தமிழர்களைப் போலவே உடெக்கி மேளத்தை சிவனுடனும் அதிலிருந்து வரும் ஒலியை விஷ்ணுவுடனும் தொடர்பு படுத்துகின்றனர் சிங்களவர்கள்.

Thammettam drummer/ தம்பட்டம் 

பந்தெறு (சிங்களம்)/ பந்தெறி (தமிழ்)

பந்தெறு நடனம் கண்ணகி அல்லது பத்தினி தெய்வத்த்தின் அருளை வேண்டி ஆடப்படுகிறது. ஆனால் இந்த பந்தெறி நடனம் புத்தர் சித்தார்த்தன் என்ற பெயரில் இளவரசனாக இருந்த காலத்தில் போரின் வெற்றியைக் கொண்டாட கொண்டாடினாராம், அதனால் சிங்கள அரசர்களும் போர் வெற்றியைக் கொண்டாட ஆடினார்களாம் என்று சில சிங்களவர்கள் புருடா விடுவதுமுண்டு.

இந்தப் பதிவின்  நோக்கம் தமிழர்களுக்கும்சிங்களவர்களுக்கு மிடையிலுள்ள நெருங்கிய இன, கலை, கலாச்சாரத் தொடர்புகளைக் காட்டுவது மட்டுமல்ல, எங்களுடைய கலைகளையும், இலக்கியங்களையும், வரலாற்றையும் இரவல் வாங்கி அல்லது திருடிக் கொண்டவர்கள் எமது வரலாற்றைத் திரித்து தமிழர்களை வந்தேறிகளாக காட்ட முனைகிறார்கள். ஏனென்றால் அவர்களின் கையில் அரசும், ஆட்சியுமிருக்கிறது. 

அத்துடன் தமிழர்களாகிய நாங்கள் சிங்களவர்களுடன் ஒப்பிடும்போது எமது பழமையைப் பாதுகாப்பதுமில்லை, அதைப் பற்றிப் பெருமைப்படுவதும் குறைவு. நாங்கள் சிங்களவர்களைப் போல் மற்றவர்களின் வரலாற்றுத் தடயங்களைத் திரித்து எங்களுடையதென்று சொந்தம் கொண்டாடாது விட்டாலும் கூட எமது கலை, கலாச்சார, வரலாற்றுப் பாரம்பரியங்களை அழியாமலும், தமிழரல்லாத வர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும்.  


Ref: 
arts of Sri Lanka
TITLE: South Asian arts 
SECTION: Kandyan dance
The kandyan dance is highly sophisticated and refined. It flourished under the Kandyan kings from the 16th through the 19th centuries, and today it is considered the national dance of Sri Lanka. It has four distinct varieties: The pantheru, naiyadi, udekki, and ves (the most artistic and renowned). Its energetic movements and postures are reminiscent of India’s.
http://www.britannica.com/EBchecked/topic/310955/Kandyan-dance

 Vannama: A Classical Dance Form and its Musical Structure