Saturday, December 7, 2013

கலைஞர் வேண்டுகோள்: தீட்சிதர்களுக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது!
சில ஆண்டுகளுக்கு முன்னால் முதல் முறையாக சிதம்பரம் ஆடவல்லான் கோயிலுக்குப் போயிருந்த போது தீட்சிதர்களின் அடாவடித்தனத்தை நேரில் அனுபவித்தது மட்டுமல்ல, நான் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்பதை அனுபவத்தால் உணர்ந்து கொண்ட ஒரு தீட்சிதர் அவர் வைத்திருந்த  ஒரு கணக்குப் புத்தகத்தில் (Long Notebook) இவ்வளவு காசு தருவதாக நான் கையெழுத்து போடும் வரை சிவகாமியம்மன் கோயிலுக்குள் போய் தரிசிக்க விடவில்லை. நான் இதுநாள் வரை சிவகாமியம்மனை தரிசிக்கவுமில்லை. (அவர் பக்தியுடன் கேட்டிருந்தால் சிலவேளை கேட்கிற தொகையைக்  கொடுத்துமிருப்பேன்)  மறுத்ததற்காக அவர் என்னை முறைத்துப் பார்த்த பார்வையையும் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அதனால் தான் மீண்டும் அந்த நிலை சிதம்பரம் கோயிலில் வராதிருக்க, ஈழத்தமிழர்களின் வரலாற்றில் பின்னிப் பிணைந்த, சைவ சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட சைவசமயத்தைக்  கடைப்பிடிக்கும் ஈழத்தமிழர்களின் மெக்காவான சிதம்பரம் கோயில் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது முக்கியமானது என நம்புகிறேன், அதனால் தான் சிதம்பரம் பற்றிய பதிவுகளை இடுகிறேன்.

சிதம்பரம் கோயிலைக் காக்க தமிழக அரசின் அக்கறை தேவை: கலைஞர் கருணாநிதி 


  
சிதம்பரம் கோயில் விவகாரத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதே 1987ம ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தான் இடையிலே தீட்சிதர்கள் இடைக்காலத் தடை பெற்ற காரணத்தால் நடைமுறைக்கு வராமல் இருந்தது. 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது. அதற்கு தீட்சிதர்கள் இடையூறு விளைவிக்க எண்ணுகிறார்கள். அதற்கு இன்றைய தமிழக அரசு துணை போய்விடக் கூடாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.   
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சனை நீண்ட நெடுங்காலமாக பேசப்பட்டு கடைசியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2-2-2009 அன்று இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ வந்தது. அதனை எதிர்த்து, சிதம்பரம் தீட்சிதர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். அதிலே வெற்றி பெறமுடியவில்லை. அதன் பின்னர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வழக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதியிலிருந்து உச்சநீதி மன்றத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சுப்பிரமணியசாமி, உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கில் இணைந்து கொண்டு தீட்சிதர் சார்பில் அவரே வாதாடி வருகிறார்.  அப்போது அவர் திராவிட இயக்கத்தைப் பற்றி தேவையில்லாமல் தெரிவித்த கருத்துகளுக்கு மறுப்பு கூறி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி பதிலறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 
சிதம்பரம் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க அரசாணை எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதே 5-5-1987 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். “கோயில் நிர்வாகத்தில் பொது தீட்சிதர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாலேயே கோயிலுக்கு செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார்” என்று அரசுத் தரப்பில் வாதாடப்பட்டது.  
அந்த வழக்கு தான் பல ஆண்டுகளாக நீடித்து, திமு,க ஆட்சியில் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் தேதியன்று விசாரணை முடிந்து நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பில் கோயிலை நிர்வகிக்கும் உரிமை என்பது மதத்தின் ஒரு பகுதியோ, மத வழக்கமோ அல்ல. கோயில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனவே சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியானது. அதே போல் சிவனடியார் ஆறுமுகசுவாமி கோயிலுக்குள் தேவாரம், திருவாசகத்தை தமிழில் பாடலாம். அதற்கு பக்தர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. கோயிலுக்கு உள்ள ஏராளமான சொத்துக்களை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை முறையாக நிர்வகிக்கும் என்று நீதிமன்றம் நம்புகிறது.   
இந்த விடயத்தில்  கோயில் செயல் அதிகாரிக்கு பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை ஆணையர் ஒருவார காலத்துக்குள் கோயில் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கூறியிருந்தார். கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்க ஒரு வாரகாலம் அவகாசம் தந்தார். ஆனால் தீர்ப்பு வெளிவந்த அன்று மாலையே நிர்வாகத்தை தி.மு.க. கழக அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. இல்லா விட்டால். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்று அதன் பேரால் தொடர்ந்து சிதம்பரம் கோயிலை தங்கள் வசமே வைத்துக்  கொள்ள தீட்சிதர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றிருக்கும். 
இருந்தாலும் தீட்சிதர்கள் சார்பில்4-2-2009 அன்று உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தார்கள். இதற்குப் பிறகும் தீட்சிதர்கள் சும்மாயிருக்கவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்து, அந்த வழக்கு தான் தற்போது விசாரணைக்கு வந்திருக்கிறது.  இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ப.எஸ்.சவுகான், மற்றும் எஸ்.ஏ. பாப்டே கொண்ட அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசில் சார்பில் மூத்த வழக்குரைஞராய் நியமித்து வாதாட வேண்டுமென்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை கொடுத்துள்ளார். மேலும் 4-12-2013 அன்று சிதம்பரம் மக்கள் மன்றம் சார்பில் சிதம்பரத்தில் தமிழக அரசு இந்த வழக்கில் மூத்த வழக்குரைஞரை நியமிக்க வேண்டுமென்று கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடைபெற்று, அதிலே கி.வீரமணி, ஓதுவார் ஆறுமுகசுவாமி, முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் போன்றவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். 
“உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு மூத்த வழக்கறிஞரை வைத்து உரிய முறையில் வாதாடா விட்டால் தீட்சிதர்கள் பக்கம் ஒருதலை சார்பாக தீர்ப்பு சொல்ல வேண்டி வரும்” என்று நீதிபதிகளே எச்சரித்திருப்பதாகவும் செய்தி வந்துள்ளது.

மேலும் “டிசம்பர் 3 இல் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பிலான வழக்கறிஞர் வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே சம்பிரதாயத்துக்காக வாதாடினார்” என்றும் செய்தி வந்துள்ளது.  இந்த உத்தரவு ஏதோ திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக் காலத்தில், நான் முதல்வராக இருந்த போது பிறப்பிக்கப்பட்ட ஆணை என்பதால், அதன் காரணமாக தற்போதைய தமிழக அரசு அக்கறை இல்லாமல் இருந்து விடக் கூடாது, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதே 1987 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தான், இடையிலே தீட்சிதர்கள் இடைக்காலத் தடை பெற்ற காரணத்தால் நடைமுறைக்கு வராமல் இருந்து 2009 ஆம் ஆண்டு கழக ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது, அதற்கு தீட்சிதர்கள் இடையூறு விளைவிக்க எண்ணுகிறார்கள் அதற்கு இன்றைய தமிழக அரசு துணை போய்விடக் கூடாது என்பது தான் நம்முடைய விருப்பம் என்று கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.

Ref: Thatstamil.com

6 comments:

நந்தவனத்தான் said...

சகோ ஒடியாவிலுள்ள பூரி ஜகந்நாதர் கோயிலில் பண்டாக்கள் பண்ணும் லொள்ளு பற்றி பிராணரான கல்கி 1930களில் எழுதிய ஹாஸ்ய கட்டுரை ஒன்று உண்டு. அதைப்போல் நிலைமை இன்னும் இருப்பதாக சமீபத்தில் அக்கோவிலுக்கு சென்ற உறவினர் ஒருவர் சொன்னார். தீட்சதர்களும் அவ்வாறே நடந்து கொள்ளுகிறார்கள் என்பது வெட்கக்கேடு. எனக்கு என்னவோ பூசாரிகளான இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா என சந்தேகமாக இருக்கிறது. இவர்களையே பிச்சைக்காரனாக வைத்திருக்கும் கடவுள் நமக்கு எப்படி தரப்போகிறார் என்பதால் தான் இங்கெல்லாம் நான் போவதில்லை! ;) - வீட்டுக்காரம்மா தொல்லை செய்தால் ஒழிய.

தமிழ்நாட்டில் தீட்சதர்களின் அட்டகாசத்தை மக்கள் கண்டு கொள்ளமலிருக்க சில முக்கிய காரணங்கள் உண்டு.

1. தீட்சதர்களிடமிருந்து கோவில் அரசிடம் போனால் உடனே கட்சிக்காரர்கள் கொள்ளையிட ஆரம்பித்துவிடுவார்கள். கடவுள் நம்பிக்கை உள்ள தீட்சதர்களே இப்படி ஆடினால், நாத்திக அரசியல்வாதிகளிடம் சிக்கிய கோவில் சொத்து என்னவாகும் என எண்ணுங்கள். திருசெந்தூர் கோவில் வேல் பிரச்சனை ஒரு உதாரணம்! அரச நிர்வாகத்திலுள்ள பழனியில் இதை மாதிரி பலர் காசு புடுங்குவதாக என்னிடம் ஒருவர் சொன்னார். ஆனால் அரசு பராமரிப்பில் சிதம்பரம் கோவிலை சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்றார் இன்னொருவர். இதையெல்லாம் தமிழ்நாட்டு பக்தன் பார்க்காமல் கடவுளை நம்பாதவன் கொள்ளையடிப்பதைவிட ஐயருங்க கொள்ளையடிப்பது மேல் என்றே நினைக்கிறான்.

2. தேவாரம் பாடுவதற்கும் சமஸ்கிருத மந்திரம் சொல்வதற்கும் சாதாரண தமிழனுக்கு எவ்வித வேறுபாடுமில்லை. ஏன்னா சம்ஸ்கிருதம் மாதிரியே தேவாரமும் ஒருத்தனுக்கும் புரியாது! இதனால், ஐயமாரு பாடுறது சரியாத்தான் இருக்கும், சாமி கும்பிடாத குரூப் ஆளுக தேவையில்லாம பிரச்சனை பண்ணுகிறார்கள் என்றே அவன் எண்ணுகிறான்.


நீங்கள் எழுதியது போல சைவமடம் போன்ற பக்தர்கள் குழு போராடினால்தான் இதற்கு ஆதரவு கிட்டும். ஆனால் அவர்களுக்கு தீட்சதர்களுடம் பிரச்சனை பண்ண மனமில்லை. ஏனெனில் அடுத்தாக இந்த நாத்திக குரூப்புகள் இதே மாதிரி தங்கள் மீது பாய்ந்த தங்கள் சொத்துக்களை ஆட்டைய போட்டுவிடுவார்கள் என அவர்கள் பயப்படுகிறார்கள்... தமிழ்நாடு பகுத்தறிவாளர்கள் வரலாறு அப்படி!!!

என்னைப் பொறுத்தவரையில் தீட்சதரே இருந்துவிட்டு போகட்டும்... தமிழாலும் வழிபாடு வேண்டும், அகற்றப்பட்ட நந்தனார் சிலை மீண்டும் அமைத்து வழிபாடு செய்யவேண்டும். அப்போதுதான் தீட்சதர் செய்த பாவம் அகலும் என நினைக்கிறேன்!

viyasan said...

@நந்தவனத்தான்

// தீட்சதர்களிடமிருந்து கோவில் அரசிடம் போனால் உடனே கட்சிக்காரர்கள் கொள்ளையிட ஆரம்பித்துவிடுவார்கள். கடவுள் நம்பிக்கை உள்ள தீட்சதர்களே இப்படி ஆடினால், நாத்திக அரசியல்வாதிகளிடம் சிக்கிய கோவில் சொத்து என்னவாகும் என எண்ணுங்கள். திருசெந்தூர் கோவில் வேல் பிரச்சனை ஒரு உதாரணம்!//
அறநிலையத்துறையின் கீழேயுள்ள கோயில்களில் கட்சிக்காரர்கள் கொள்ளை யடிக்கிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் எதற்கு போலீஸ், சட்டம், நீதி எல்லாம் இருக்கிறது. என்ன காரணமாகவிருந்தாலும் ஒரு தனிப்பட்ட சாதிக் குழுவினரிடம் தமிழ்நாட்டில் பொதுச்சொத்தான கோயில்களை மட்டுமல்ல எதையுமே ஒப்படைக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்தாகும்.//அரச நிர்வாகத்திலுள்ள பழனியில் இதை மாதிரி பலர் காசு புடுங்குவதாக என்னிடம் ஒருவர் சொன்னார். ஆனால் அரசு பராமரிப்பில் சிதம்பரம் கோவிலை சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்றார் இன்னொருவர். //

இதில் எந்தளவு உண்மையுள்ளது என்று எனக்குத் தெரியாது. பழனியில் என்னிடம் யாரும் காசு பிடுங்கவில்லை. ஆனால் மதுரையில், அறநிலையத்துறையின் கீழுள்ள பல கோயில்களிலும், திருச்செந்தூரிலும் பிராமண அரச்சகர்கள் காசு பிடுங்குகிறார்கள். அது மட்டுமல்ல, அறநிலையத்துறையையே ஏமாற்றுகிறார்கள். 250 ரூபாய் ரிக்கட்டுக்கு இரண்டு பேருக்கு 500 ரூபாயை வாங்கி விட்டு, ஒரு குறைந்த விலை ரிக்கட்டை வாங்கி, அதைக் காட்டி இரண்டு பேரை அழைத்துக் கொண்டு போய். பின்னர் அதை விட மேலதிக தட்சனையையையும் கேட்டுப் பெறுகிறார்கள். இப்படி எத்தனையோ சுத்து மாத்துகள்.

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து எப்போவாவது தாய்த்தமிழ் நாட்டில் பழமையான, முன்னோர்களின் கோயில்களைத் தரிசிக்கப் போகும் எங்களைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கு அந்த செயல்களை எதிர்க்க வேண்டுமென்று தோன்றினாலும் நேரமோ, அல்லது துணிவோ உண்டாவதில்லை. ஏனென்றால் உள்ளூர்த்தமிழர்களாலேயே அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் முள்ளிவாய்க்காலில் நின்ற தமிழர்களைப் போல், தமிழ்னாட்டிலும் கம்பி வேலிக்குப் பின்னால் மணிக்கணக்காக கால் கடுக்க, தங்களின் கோயிலில் தமது கடவுளைப் பார்க்க பரிதாபமாக காத்திருக்கிறார்கள் அதே வேளையில் அங்கு வேலை செய்யும் பார்ப்பன அர்ச்சகர்கள் அவர்களின் முன்னாலேயே பணக்காரர்களை முன்னாள் அழைத்துப் போய் பணம் பண்ணுகிறார்கள்.

நந்தவனத்தான் said...

//தமிழ்நாட்டில் எதற்கு போலீஸ், சட்டம், நீதி எல்லாம் இருக்கிறது.//

போலிஸ் இருக்கிறது சட்டம் இருக்கிறது ஆனால் நீதி???

கோவில் சொத்தை கொள்ளையடிப்பதே கட்சி அரசியல்வாதிகள் எனும் போது அவர்களை எதிர்க்கும் துணிச்சல் எந்த போலிசுகாரனுக்கு உண்டு? முதலில் லஞ்சம் வாங்காத போலிஸ்காரனை காட்டுங்கள். அப்படி இருந்தால் அவன் ஆயுதப்படையில் ரிசர்வாக இருப்பான்.


//அதே வேளையில் அங்கு வேலை செய்யும் பார்ப்பன அர்ச்சகர்கள் அவர்களின் முன்னாலேயே பணக்காரர்களை முன்னாள் அழைத்துப் போய் பணம் பண்ணுகிறார்கள//

அதான் பேராசைகாரனாட பார்ப்பான் என்று பாரதி பாடிவிட்டான்.காசு அதிகம் புழங்கும் கோவில்களில் பார்ப்பனார் இப்படி நடப்பது அநியாயமே.


ஆனால் வருமானம் அதிகம் வராத கோவில்களில் சேவை செய்யும் சில நல்ல பார்ப்பனர்களும் இதை செய்ய காரணங்கள் உண்டு. இம்மாதிரி கோவில்களுக்கு உங்களை மாதிரி பக்தகோடிகள் போகவே மாட்டார்கள். எல்லோரும் சிதம்பரம் திருவண்ணாமலை என ஓடுவார்கள். ஆக ஆளில்லாத கோவில்களில் பணிபுரியும் பார்ப்பனர் பணக்காரர்களை சேவித்தே வாழ்வினை ஓட்ட வேண்டியிருக்கிறது. ஏனெனில் அரசு பூசை செய்யும் பார்ப்பனருக்கு தரும் சம்பளத்தை வைத்து தினமும் டீதான் சாப்பிட முடியும். உதாரணமாக சில வருடங்களுக்கு முன்பு கிடைத்த விபரப்படி, இராமேஸ்வரம் கோவில் பூசாரிக்கு அரசு தந்த சம்பளம் மாதம் ரூ 300 (+ கொஞ்சம் அரிசி) எனப் படித்தேன், ஆனால் அக்கோவிலில் பணிபுரியும் கடைநிலை ஊழியரின் சம்பளம் ரூ 2500. அரசின் விதிப்படி தட்டில் விழும் பணத்தைக்கூட பூசை செய்பவன் வீட்டுக்கு எடுத்து போக முடியாது, அக்கோவிலின் அரசு அதிகாரியிடம் தரவேண்டும். இந்நிலையில் அப்பார்பனன் எப்படி குடும்பத்தை நடத்துவான்? காசு தருபவனை முன்னாடி அனுப்பியே அவன் வாழவேண்டியிருக்கிறது.

Paramasivam said...

கோவில்கள் பற்றி பேச கலைஞருக்கு என்ன உரிமை உள்ளது?அரசுக்கும் அளிக்காமல் தீட்சதர்களுக்கும் அளிக்காமல் திருப்பதி தேவதானம் போன்ற சமய ஈடுபாடு கொண்ட மக்கள் கொண்ட குழு அமைத்து அவர்களிடம் அளித்தால் தான் கோவில் தூய்மை கொணரப்படும். பழனியையும் திருப்பதியையும் ஒப்பிடவும். திருப்பதி தமிழகத்தில் இருந்திருந்தால் .......ஐயோ.. இவ்வளவு சமுதாயப் பணிகள் செய்ய விட்டிருப்பாரா கலைஞர். வீரமணியின் தொண்டர் கையில் கொடுத்து, கோவில் பெயரை கெடுத்து, மற்றொரு பழனி ஆகி இருக்கும். இந்து அறநிலையத்துறை பற்றி........... இந்து கோவில்கள் மேல் ஏன் இந்த கோவம். இந்து பக்தர்கள் ஏன் உதாசீனப்படுத்தப் படுகிறார்கள்?

Paramasivam said...

ந்ந்தவனத்தான் கடைசியில் கூறியது தான் நடந்தால் அது இரண்டாவது தீர்வு.

varagan said...

சகோதரர் வியசன் அவர்களே

இங்குள்ள இந்து சமய அறநிலையகோவில்கள் அனனைத்திலும் ஆளும் கட்சிக்காரர்களே ஆதிக்கம்

அவர்கள் கடவுள் நம்பிக்கையை வைத்து கோவில் அறங்காவலராக இருப்பதில்லை எதோ வாரியத்தலைவராக காசு பார்ப்பதற்க்காக அல்லது பதவிக்காக கொடுக்கப்பட்ட பதவியை அனுபவிப்பர்.

அத்தனை பணியிலும் காசு பார்த்துவிடுவர்.

தீட்சதர்களுக்காக நான் இதை சொல்வில்லை.

நான் பிராமண சமுதாயத்தை சேர்ந்தவன் அல்ல.

கடவுளை நம்பாதவன் போராடுவதை நாம் ஆதரிக்க கூடாது.

இந்து சமயத்தை எதாவது ஒரு வகையில் எதிர்க்க வேண்டும் என்ற ஒரு பெரிய கூட்டத்தின் சதித் திட்டங்களில் இதுவும் ஒன்று.

தேவாரம் பாமரமக்களுக்கு புரிவதில்லை.சமஸ்கிருதமும் புரிவதில்லை.

உண்மையில் இங்குள்ள இளைஞர்கள் யாருக்கும் தேவாரம் பாடத் தெரியாது.அதன் அர்த்தம் வாசித்தால் கூட அவர்களால் புரிந்து கொள்ள அவர்களால் முடியாது. அது தான் உண்மை.

இங்கே ஜெபக் கூட்டங்கள் மூலம் இந்துக்கள் மதம் மாறிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் காலச்சாரத்தை இழந்து கொண்டு இருக்கிறார்கள்.
நெற்றியில் பொட்டில் இருந்து தலை முடி வாருதல் வரையில் கலாச்சாரம் மாறி வருகிறது.

ஈசா யோகா அன்பர்கள்,
சிதம்பரம் கோயிலில் சுத்தம் செய்ய, தங்களை அர்பணித்து செய்த சேவையை
யாரும் பார்ப்பதில்லை. அதை பற்றிய செய்தியை ஊடகங்களை பரப்பவதில்லை.

சிதம்பரம் மட்டும் அல்ல அனைத்து இந்து கோவில்களில்களிலும் பணத்திற்க்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

இது தவிர்க்கப்படவேண்டும்

சில கோவில்கள் இதற்கு விதிவிலக்கு.

அவை பெரும் பாலும் தனியார் கோவில்கள்.

போரட்டத்தை சைவமடம் அல்லது இந்து முண்ணனி Rss போராடினால் அதற்கு இந்துக்களின் ஆதரவு இருக்கும்.

மற்றபடி இதை இங்குள்ள இந்துக்கள் கம்யுனிஸட், திராவிட , மாற்று மத ஆதரவு இயக்கமாகவே பார்க்கின்றனர். அது தான் உண்மை.