Thursday, December 19, 2013

சீமான்- “நாம்தமிழர் கட்சி தீக்குளிப்பதை ஆதரிக்கவோ அங்கீகரிக்கவோ மாட்டாது”தனக்குத் தானே தீமூட்டிக் கொண்டு சாகும் தீக்குளிப்புக்கு எதிரான விழிப்புணர்வு போராட்டம் The Weekend Leader இனால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் தமது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களின் கவனத்தை அவர்களின் திசையில்திருப்பவும் முப்பது இளந்தமிழர்கள் தமது இன்னுயிரை மாய்த்துள்ளனர்.  

அதைப் பற்றிய நீண்ட கலந்துரையாடலின் பின்னர், முத்துக்குமார், செங்கொடி, அப்துல் ரவூப் போன்ற தமிழர்களின் தியாகத்தை மறக்காமல் நினைவு கூரும் அதேவேளையில் இன்று முதல் தீக்குளித்து தமது உயிரை மாய்த்துக் கொள்வதை போற்றுவதோ அல்லது அதை அங்கீகரிப்பதோ இல்லை என நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துள்ளது.
தீக்குளிப்பதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது தான் கூட ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கையில் துன்பப்படும் தமிழர்களுக்காக தற்கொலை செய்யும் எண்ணத்தைக் கொண்டிருந்ததாகவும் ஆனால் சாவதை விட குறிக்கோளை அடைய வேறு வழிகள் உண்டு என்பதை உணர்ந்ததால் அந்த எண்ணத்தைக் கைவிட்டதாகவும் குறிப்பிட்டார் செந்தமிழன் சீமான்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களைப் பற்றி பேசுகையில் இளைய தமிழர்கள் அந்த வருந்தத் தக்க முடிவுக்கு வந்ததன் காரணம், தமிழ்நாட்டுத் தமிழர்கள் அவர்களின் ஈழத்தமிழ்ச் சகோதரர்களின் துன்பத்தை கண்டும், காணாமல் இருந்தது தான் என்றார் அவர்.
ஈழத்தமிழர்களின் படுகொலைகளைப் பார்த்து கவலையால் வாடினார் முத்துக்குமார் ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதைப்பற்றி சிறிதளவும் கவலைப்படாமல், தமது வேலையைப் பார்த்துக் கொண்டும், கூட்டம் கூட்டமாக கடைகளுக்கும், சினிமாவுக்கும், மதுக்கடைகளுக்கும் படையெடுத்தனர்.
தமிழ்ச்சகோதரத்துவமும், இனவுணர்வும் இறந்து போனதால் அதற்கு உயிர் கொடுக்க எண்ணிய முத்துக்குமார் அதற்காக தனது உயிரை ஈந்தார் எனக் குறிப்பிட்டார் திரு.சீமான் அவர்கள்.
1980களில் இந்திய- இலங்கை கிரிக்கெட் விளையாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக தனக்குத் தானே தீமூட்டி தன்னுயிரை மாய்த்தார் அப்துல் ரவூப். ஆர்வலராகிய செங்கொடி, சமுதாயத்தில்நடைபெறும் பல தீங்குகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டு கொலைத்தண்டனைக்காக காத்திருக்கும் அனைவரும் தூக்கில் இடப்படக் கூடாது என்பதையும் வேண்டி தீக்குளித்தார்.
தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டவர்களை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதித்தன, அத்துடன் அவர்கள் அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மையான நிலவரத்தையும் நன்கு அறிந்திருந்தனர் என்பதையும் அறிவுறுத்தினார் திரு.சீமான்.
"நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்வதை ஒருபோதும் வரவேற்றதில்லை ஆனால் உயரிய குறிக்கோளுக்காக தமது உயிரையே ஈந்தவர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டியிருந்தது."
தீக்குளிப்பது போன்ற செயல்களில் விலைமதிக்க முடியாத உயிர்கள் இழக்கப்படுவதை நிறுத்த ஒரு தீர்க்கமான முடிவை தமிழ்ச் சமுதாயம் எடுக்க வேண்டியது கட்டாயமானது. அதிலும் தமிழினத்தின் நலன்களின் அக்கறை கொண்ட இளம் தமிழர்கள் சாவுக்குப் பதிலாக வாழ்வைத் தேர்ந்தெடுத்து சனநாயக முறையில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்பது The Weekend Leader சஞ்சிகையின் கருத்தாகும். 
இளம் தமிழர்களின் தீக்குளிப்பும் உயிர்த்தியாகமும் ஈழத்தமிழர்களின் துன்பத்தையோ அல்லது தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையின் கைகளில் துன்புறுவதையோ நிறுத்தவில்லை. அரசாங்கம் உயிர்த்தியாகங்களை மதிப்பதில்லை. ஐநூறுக்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட பின்னர் இன்றும் அவர்களின் தொல்லை தொடர்கிறது. மக்களின் உரிமைகளுக்காகப் பேசியவர்களுக்கு பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. பொதுக்கூட்டங்களில் பேச எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.  இந்த நிலையை மாற்ற ஒரே வழி வாக்குகளின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தான். தமிழர்களின் நலன்களைக் காக்கும் கட்சிகளுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள்.
இனிமேல் நாம் தமிழர் கட்சி எவருடைய தீக்குளிப்பையும் அங்கீகரிக்கவோ அல்லது போற்றவோ செய்யாது என உறுதியளித்ததுடன் இளைய சமுதாயம் தமது உயிர்களைக் காத்து சமுதாயத்தின் நலன்களுக்காக உழைப்பதுடன், அரசியல் அதிகாரத்தைப் பெற்று தமது கனவை நனவாக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

No comments: