Thursday, December 12, 2013

பெரியாரின் கையில் தேவாரம்??


தமிழின் இனிமையை, தொன்மையை அதன் அருமை பெருமையை அறியாதவர்களைப் பார்த்து “செந்தமிழ்ப்பயனறியாத அந்தக மந்திகள்” என்று ஏளனம் செய்தவர் சம்பந்தர். 'நாளும்தமிழ் வளர்க்கும் ஞானசம்பந்தன்' என்றும் 'நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன்' என்றும் 'தமிழ்ஞானசம்பந்தன்' என்றும் தன்னை தமிழால் அடையாளப்படுத்தியவர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார். 

பிறப்பால் பிராமணராக இருந்தாலும் உள்ளத்தால் தமிழர். இவர் தமிழ், தமிழ் என்று தமிழைப் போற்றியதால் தில்லைத் தீட்சிதர்கள் மட்டுமல்ல, எந்தப்பார்ப்பனருமே  நீச பாசையாகிய தமிழைப்போற்றிய சம்பந்தனின் பெயரை இக்காலத்தில் கூட தமது குழந்தைகளுக்கு சூட மாட்டார்களாம்.


ஈழத்தமிழர் தலைவர் சம்பந்தன்.TNA   
அது மட்டுமன்றி சம்பந்தர் நீச பாசையாகிய தமிழைப் போற்றியதால் ஆத்திரமுற்ற தமிழெதிரிகள் அவரது திருமண நாளிலேயே அவரை ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டி உயிரோடு கொழுத்தி விட்டு சோதியில் கலந்தார் என்று கூறி விட்டார்களாம் என்றும் வினவு இணையத்தளத்தில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அப்படிப் பார்க்கப் போனால் திருஞானசம்பந்தர் அந்தக் காலத்து சுப்பிரமணிய பாரதியார் போன்றவர். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன்னை தமிழனாக அறிமுகப்படுத்தியவர்.  எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தன்னை தமிழனாக அடையாளப்படுத்தி, நின்றதமிழ், சங்கமலிசெந்தமிழ், சந்தமாலைத் தமிழ், தண்தமிழ், முத்தமிழ் குன்றாத்தமிழ், குற்றமில்தமிழ், ஞானத்தமிழ் என்று பற்பல அடைமொழிகளால் தமிழ்மொழியைப் போற்றியவர்.

தமிழனாகத் தன்னை அடையாளப்படுத்தியதால் உயிரோடு எரிக்கப்பட்ட ஞானசம்பந்தரை, அதாவது தமிழுக்காக தனதின்னுயிரை நீத்த ஞானசம்பந்தரை, எப்படி பெரியாரும் அவரது சீடர்களும் சிறுமைப்படுத்தினார்கள் என்பதைப் பார்ப்போம். 

இது பெரியார் ஈவேரா அவர்கள் (குடிஅரசு சித்திரபுத்திரன் கட்டுரை, 12.8.1944 இல் எழுதியது.
 பெரியபுராணம் - நஞ்சைக் கக்கும் மதவெறி : 
"ஆலவாய் அழகராம் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் பாடும் திருத்தொண்டர் புராணத்தைச் (பெரிய புராணத்தை) சைவ மெய்யன்பர்கள் தலைமேல்வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால் அந்த நாள் முதலே கட்சி மாறித் தனங்களும், மாற்று மதத்துக்காரனர் மனைவியரை மானபங்கப்படுத்த வேண்டும் என்னும் மதவெறியுணர்ச்சியும், 8000 சமணர்களை ஈவிரக்கமின்றிக் கழுவேற்றிக் கொன்ற கயமைத்தனங்களும் பெரியபுராணத்தில் பதிவாகியுள்ளன." 
மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கௌசிகம் என்னும் தலைப்பில் 3 ஆவது பாட்டு. 
'மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்  
திண்ணகத்திரு வாலவா யாய்அருள்
பெண்ணக கத்தெழில் சாக்கியப் பேய்அமண்
தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே'  
(இந்தத் திராவிடர்களின் (பெண்களை) - மனைவிகளை, தானே கற்பழிக்கத் திருவுளமேஎன்பது சம்பந்தர் பாடினதா? அல்லது வேறு யாரையாவதா? அல்லது இதற்கு வேறு பொருளா? என்கிற விபரத்தைப் பண்டிதர்கள் - சைவப் பண்டிதர்கள், அல்லது கிருபானந்தவாரியார், திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் போன்ற சைவ அன்பர்கள் விளக்கினால் கடப்பாடுடையவனாக இருப்பேன். (குடிஅரசு சித்திரபுத்திரன் கட்டுரை, 12.8.1944).
இது பெரியாரின் கையில் தேவாரம் பட்ட பாட்டைக் காட்டுகிறது. பெரியார் இந்த தேவாரத்தின் உண்மையான பொருளை அறியாது விட்டால் அல்லது அவருக்கு சந்தேகம் இருந்திருந்தால் குடிஅரசு பத்திரிகையில் எழுது முன்பாக அந்த தேவாரத்தின் உண்மையான பொருளை யாரிடமாவது கேட்டறிந்திருக்க வேண்டும் அல்லவா? அவர் அப்படிச் செய்யாமல் தன்னிட்டத்துக்கு கருத்து தெரிவித்ததைப் பார்க்கும் எவருக்குமே நிச்சயமாக அவரின் தமிழ் அறிவைப்பற்றி சந்தேகம் வருவது தவிர்க்க முடியாதது. 

இதை வாசித்த திராவிடர்களும் பெரியாரிஸ்டுகளும் திருஞானசம்பந்தர் சாக்கியர்களின் (பெளத்தர்கள்) பெண்களை கற்பழிக்க அருளுமாறு கேட்டுக் கொண்டதாக, தமிழ் தேவாரத்தின் பொருளையே தவறாகப் புரிந்து கொண்டு பல வலைப்பதிவுகளில் ஞானசம்பந்தரை தூற்றி இருக்கிறார்கள். உதாரணத்துக்கு:  இணையத்தளத்தில் ஒரு வலைப்பதிவில் கீழேயுள்ள பதிவை  பார்க்க நேர்ந்தது.

"பெண்ணகத்து எழில்சாக்கியப் பேய் அமண் தென்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே" 
மேலே உள்ள வரிக்கு விளக்கம் தரத் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். சமண சமயத்தின் மேல் உள்ள வெறியின் காரணமாக சமணம் மற்றும் புத்தப் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார் சம்பந்தர். 
"அன்பே சிவம்" என்று சைவம் கூறிக் கொண்டு இருக்க அக்கூற்றுக்கு மாறாக ஞானசம்பந்தர் பாடி இருப்பது எவ்வாறு சைவத்தினை வளர்த்திருக்கும். இரண்டுக் கருத்துக்களும் முரண்பட்டு அல்லவா இருக்கின்றன. அப்படி என்றால் ஞானசம்பந்தர் வளர்த்தது என்ன? 

ஆனால் உண்மையில் ஞானசம்பந்தரின் "மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம் திண்ண காத்திரு வாலவா யாய்அருள் பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண், தெண்ணர் கற்பு அழிக்கத் திரு வுள்ளமே" என்ற தேவாரத்தில் வரும்  தெண்ணர் கற்பு அழிக்கத் திரு வுள்ளமே என்ற வரிகளின் பொருள்:
கற்பு < கல் என்னும் வேரினின்றும் தோன்றியது. மேற்கண்ட செய்யுளில் அது "கல்வி, அறிவு, கொள்கை நிலை/உறுதி" ஆகிய பொருள்களில் பயில்கிறது. அதாவ்து "அமணர் என்னும் அறிவிலிகளின் உள்ளத்தில் ஆழந்திருக்கும் சமண மதக் கல்வியைக் கொள்கையை, உறுதியை வேரோடு அழிப்பதற்குச் சிவனே உன் திருவுள்ளம் ஆயத்தந்தானே?" என்று வினவுகின்றார். 
மங்கையர்க்கரசியாரும் சம்பந்தரும்  
சங்கக் காலத்து மிக அரிய நூலான பதிற்றுப்பத்தில்:
"இரவல் மாக்கள் சிறுகுடி பெருக உலகந் தாங்கிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை" (59:7-9) -" என்றும்

இரக்கும் மக்களின் சிறுகுடியை வளம்பெருகுமாறு உலகத்தைக் காக்கும் மேம்பட்ட கல்வியை (கொள்கையை) உடையவனும் வில்லாளிகளின் கவசம் (மெய்ம்மறை) போன்றவனுமாகியவனே" என்று ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் சேரப் பேரரசனைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் படியுள்ளார்.
அத்தொகையின் பிறிதோரிடத்திலும் "....நல்லிசைத் தொலையாக் கற்ப!நின் தெம்முனையானே" (8ஆம் பதிகம்:10) "நல்ல புகழையும் உடைய அழியாத கல்வியையும் உடையவனே!.நின் போர் முனையில்.." என்று பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில் கிழார் பாடினார்.   
குறிப்பு: மேற்கண்ட சேரன்தான் அப்புலவருக்குப் பரிசிலாகத்
"தானும் தன் கோயிலாளும் புறம்போந்து நின்று கோயிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப அவர் யான் இரப்ப இதனை ஆள்க வென்று அமைச்சுப் பூண்டார்" 
கோயில் = அரண்மனை அதாவது:"தானும் தன் அரசியும் அரண்மனைக்கு வெளியே சென்று நின்று அரண்மனையிலுள்ள எல்லாம் கொள்ளுங்கள் என்று ஒன்பது இலட்சம் காணம் அளவுள்ள பொற்காசுகளை சிங்காதனத்தோடு கொடுப்ப, அப்புலவர் அரிசில் கிழார் அரசனையே மீண்டும் நான் இன்னுமொரு பரிசில் கேட்கிறேன்...நீயே அவ்வரசை யேற்று மீண்டும் ஆளவேண்டும் யான் அமைச்சனாகப் பணிபுரிகிறேன்" என்று கேட்டு அவ்வாறே நிகழ்ந்தது. இங்கே "அரசனுக்கென்ன அவன் பெரிய தொகையைக் கொடுப்பதில் என்ன கட்டம்" என்றேண்ணுவோர் கவனிக்க வேண்டியது, அவன் தன்னிடம் உள்ள *எல்லாவற்றையுமே கொடுத்ததுதான்! எல்லாவற்றையும் கொடுக்க ஆண்டிக்கும் அரசனுக்கும் ஒரே துன்பம்தான்! அதிற்றான் சங்கக்கால அரசர்களின் கற்பு வெளிப்படுகிறது.  

"தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிதனுறை வெண்காட்டைப்பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைல்லார்மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான்பெரியப் புகுவாரே" (இரண்டாம் திருமுறை 11-11)

(நன்றி. பெ.சந்திரசேகரன்.) 
Ref: 

பெரியாரும் தமிழும்

13 comments:

நம்பள்கி said...

ஞானசம்பந்தம்; திஞானசம்பந்தம் -- இந்த இரண்டு பேர்களும் வைத்த பிராமணர்களை நான் பார்த்ததே இல்லை---ஆனால், சைவர்கள் விரும்பி வைக்கும் பெயர்! என்ன காரணம்? ஒரு பிராமணர் பேரை வைக்க? To identify with a Brahamin?
tamil manam +1

viyasan said...

@நம்பள்கி

தமிழ்ச்சைவத்தின் அடிப்படை திருமுறைகளும், அறுபத்துமூன்று நாய்னமார்களும் தான். அதனால் தான் சைவர்கள் திருமுறைகளைப் பாடிய நால்வரின் பெயர்களையும் தமது குழந்தைகளுக்குச் சூடினர். நாய்னமார்களை எந்த உண்மையான சைவத் தமிழனும் சாதியடிப்படையில் பிரிக்க மாட்டான்.

Paramasivam said...


சமயக்குரவர் நால்வரும் மற்றும் 63நாயன்மாரும் பல் வேறு சாதியினர், சைவர்களால் ஆண்டவனுக்கு மேல் மதிக்கப்படுபவர்ஐள். பெரும் மகிழ்வுடன் அப் பெயர்கள் வைக்கிறார்கள். பரமசிவம்.

நந்தவனத்தான் said...

ரஷ்யர்கள் பொதுவாக ஸ்டாலின் என பெயரிடுவதில்லை. அப்படியிருக்கையில் கருணாநிதி தனது தனது பையனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கிறார். அதுக்கு காரணம் என்னவென்று நம்பிள்கீயின் மேலே உள்ள பின்னூட்டம் படித்ததும்தான் புரிந்ததது.! - To identify with Russians!

Murugan said...

குமார ஞானசம்பந்த சிவம் , ஞானசம்பந்த சிவம் எங்கள் ஊர் கோயில் அர்ச்சகர் பெயர்.
தென் மாவட்டத்தில் நான் பார்த்த ஒரு அய்யரின் பெயர் சொரிமுத்து ..
ஞானசம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய நாயன்மார்கள் ஆதி சைவ அந்தணர் குலத்தவர்.
பெரும்பாலும் சைவ கோயில் சிவாச்சாரியார்கள் ஞானசம்பந்தர் என்ற பெயர் வைப்பார்.
பெரும்பாலும் கடவுளர் பெயர் அல்லது பாட்டனார் பெயர் இவையே, பிராமணர் வீடுகளில் பெயர் வைக்க பயன்படுத்துகிறார்கள்

பெரும்பாலும் அவர்கள் வாழ்ந்த ஊரில் உள்ள கோயிலில் உள்ள கடவுள் பெயர்களை பெயர் வைக்க பயன்படுத்துகிறார்கள் .

தற்காலத்தில் எல்லாமே புதுமையான பெயர்கள் தான் எல்லா சமூகத்திலும் ...

viyasan said...

@Murugan

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்த சிவாச்சாரியர்கள் திராவிட சூத்திர பிராமணர்களாக இருக்கலாம். அதாவது தமிழ்நாட்டுப் பிராமணர்களில் பலர் உண்மையிலேயே தமிழர்கள், சில கோயில்களில் பண்டாரங்களாக, பூசாரிகளாக வேலை செய்யத் தொடங்கி , அதன் பின்னர் பிராமணர்களிடம் பெண்ணெடுத்து அடுத்த சில தலைமுறைகளில் ஆரியப் பிராமணர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள். இலங்கையிலும் வெள்ளாளர்களில் பலர் முதலில் பூசாரிகளாகி, குருக்களாகி, பின்னர் இரண்டு தலைமுறைகளில் பிராமணர்களாகினர் என்பதை இலங்கைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூட ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். சரியான கருங்காலிக் கட்டைகளைப் போல தோற்றமளிக்கும் பல பிராமணர்களை தமிழ்நாட்டில் பார்த்திருக்கிறேன் அவர்கள் எல்லாம் எல்லாம் சூத்திர தமிழ்ப் பிராமணர்களாகத் தானிருக்க வேண்டும் என்ன்பது என்னுடைய கருத்து. :)

viyasan said...

@நந்தவனத்தான்
"To identify with Russians!"

பூர்வஜென்மபந்தமாக இருக்கலாம். :)

Adhiraj said...

நணபருக்கு வணக்கம், சம்பந்தர் தேவராத்திற்க்கு புதிய விளக்கத்தையும் கண்டேன் ஏதோ பெரியார் கையில் தேவாரம் சிக்கி அல்லல் பட்டதாக் கூறி உள்ளீர்கள்...தமிழக்த்தில் சீர்காழி எனும் தளத்தில் ஆண்டு தோறும் நிகழும் திருமுலைபால் உற்சவம் எனும் நிகழ்வில் சம்பந்தர் பல்லகின் முன்னால் தலை மொட்டையடிக்கபட்டு இடையில் காவி உடை அணிந்து கையில் மயிற்பீலியுடன்(சமணரை உருவகபடுத்தி) நிற்க வைக்கபடுவார்களாம் அப்போது ஓதுவார்கள் பெருங்குரலெடுத்து சம்பந்தர் சமணபெண்களை என்ன செய்ய சொன்னார் என்று கேட்பார்களாம் மற்ற ஓதுவார்களும் சிவாச்சாரியார்கள் கற்பழிக்க சொன்னார் என்று உரக்க பாடுவார்களாம்..அது மட்டுமல்லாமல் சமணபெண்களை பற்றி இழிவாக விமர்சிப்பார்களாம் இந்த வழக்கம் பல காலம் நடந்த வரலாறு தங்களுக்கு தெரியுமா ....

viyasan said...

@Adhiraj

///ஓதுவார்கள் பெருங்குரலெடுத்து சம்பந்தர் சமணபெண்களை என்ன செய்ய சொன்னார் என்று கேட்பார்களாம் மற்ற ஓதுவார்களும் சிவாச்சாரியார்கள் கற்பழிக்க சொன்னார் என்று உரக்க பாடுவார்களாம்..அது மட்டுமல்லாமல் சமணபெண்களை பற்றி இழிவாக விமர்சிப்பார்களாம் இந்த வழக்கம் பல காலம் நடந்த வரலாறு தங்களுக்கு தெரியுமா ....///

மன்னிக்கவும் எனக்கு அதைப்பற்றி தெரியாது. அப்படி அந்த முட்டாள்கள் செய்வார்களேயானால், பெரியாரைப் போன்றே அவர்களுக்கும் அந்த தேவாரத்தின் உண்மையான பொருள் தெரியாது என்பது தான் கருத்து. அவர்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.

ஓதுவார்களுக்கும் சிவாச்சாரியார்களுக்கும் பயிற்சியளிக்கும் தமிழக அரசு தேவாரங்களை எப்படிப் பாடுவதேன்று மட்டும் சொல்லிக் கொடுக்காமல் அவற்றின் பொருளையும் கற்பிக்க வேண்டும், அவர்களுக்கு அதில் தேர்வு வைக்க வேண்டும். உதாரணமாக இலங்கையில் சைவசமயம் ஒரு பாடமாக மூன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. விரும்பினால் இந்து கலாச்சாரத்தை ஒரு பாடமாக பல்கலைக் கழகங்களிலும் கற்கலாம். அதாவது எங்களின் குழந்தைகளுக்குக் கூட தேவாரம் கற்பிக்கும் போது அதன் பொருளும் விளக்கப்படுகிறது.

உங்களைப் போன்ற தமிழர்கள் சீர்காழில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும் பொது உண்மையான பொருளை எடுத்துக் கூறலாம். அல்லது அறநிலையத்துறைக்கு அறிவித்து, அந்த விழாவில், அப்படி, முட்டாள் தனமாக உளறுவதை நிறுத்தச் செய்யலாம். உண்மை திரிக்கப்படுவதை தட்டிக்கேட்பதில் தவறில்லை.

நம்பள்கி said...

நம்பள்கி said...

ஞானசம்பந்தம்; திஞானசம்பந்தம் -- இந்த இரண்டு பேர்களும் வைத்த பிராமணர்களை நான் பார்த்ததே இல்லை---ஆனால், சைவர்கள் விரும்பி வைக்கும் பெயர்! என்ன காரணம்? ஒரு பிராமணர் பேரை வைக்க? To identify with a Brahamin?

[[தமிழ்ச்சைவத்தின் அடிப்படை திருமுறைகளும், அறுபத்துமூன்று நாய்னமார்களும் தான். அதனால் தான் சைவர்கள் திருமுறைகளைப் பாடிய நால்வரின் பெயர்களையும் தமது குழந்தைகளுக்குச் சூடினர். நாய்னமார்களை எந்த உண்மையான சைவத் தமிழனும் சாதியடிப்படையில் பிரிக்க மாட்டான்.]]

உங்கள் பதில் கேட்க இனிப்பாக இருக்கிறது; உண்மையான சைவத் தமிழனும் சாதியடிப்படையில் பிரிக்க மாட்டான் என்ற உங்கள் கூற்று உண்மைஎன்றால் ஏன் மீதி நாயன்மார்கள் பெயரை ஏன் வைப்பதில்லை? ஒன்று இரண்டு விதி வில்லக்குகள் இருக்கலாம்?

viyasan said...

@நம்பள்கி

ஈழத்தில் நாயன்மார்களின் இயற்பெயர்களை தமது குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கம் உண்டு. ஆனால் பல நாயன்மார்களின் பெயர்கள் ஆகுபெயர்கள். அவர்கள் செய்த தொண்டின் அடிப்படையில் வந்தவை உதாரணமாக குங்கிலியக்கலய நாயனார், எறிபத்தநாயனார் போன்றவை, அவற்றைத் தவிர ஏனைய பெயர்களை வைப்பது வழக்கம்.

உதாரணமாக முன்னாள் தமிழரசுக்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் துணைவியாருக்குப் பெயர் மங்கையர்க்கரசி. அதே போல் நந்தன் என்ற பெயர் ஈழத்தில் பலருக்கும் உண்டு. என்னுடைய மருமகனுக்கு நான் இட்ட பெயர் சேந்தன். ( ஒன்பதாம் திருமுறையாகிய திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார்)

மணிவாசகம் said...

இறை நம்பிக்கையும், மறை நம்பிக்கையும் அற்ற "வினவு" தளம் திருஞானசம்பந்தப் பெருமான் மீது சுமத்தும் இக்கறையை எப்படி துடைப்பது என்று ஏங்கி நின்ற வேளையில் தங்கள் மறுமொழி படித்துப் பெருமளவு மன அமைதி கொண்டேன். மிக்க நன்றி.

இதுபோலவே பலரும் திருஞானசம்பந்தப் பெருமான் சமணர்கள் எண்ணாயிரவரைக் கழுவில் ஏற்றக் காரணமானவர் என்று குற்றம் சுமத்துவதைத் துடைக்கவும் வழி காணுமாறு வேண்டுகிறேன்.


தாய்த் தமிழ் நாட்டில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஆதிசைவப் பிரிவினர். அவர்கள் சிவனை மட்டுமே ஆராதிப்பவர்கள். சிவாகமங்களை வேதத்துக்கும் அதிகமாக மதித்து ஓதுபவர்கள். அவர்கள் தாங்கள் சொல்லும் படி பிற்காலத்தில் பார்ப்பனர்களாக ஆனவர்கள் என்ற கருத்து ஏற்புடையதல்ல. ஏனெணில் தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள் அத்வைதிகள் (ஆதிசங்கரரை குருவாகக் கொண்டவர்கள்) த்வைதிகள் ( மத்வரைக் குருவாகக் கொண்டவர்கள்), விசிஷ்டாத்வைதிகள் அல்லது ஸ்ரீவைஷ்ணவர்கள் (ராமானுஜரைக் குருவாகக் கொண்டவர்கள்) ஆதிசைவர்கள் (கோவில் குருக்கள் - ஹரதத்தர், சந்தானக்குரவர்கள் நால்வர் - மெய்க்கண்டர், அருணந்தி சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்த சிவாச்சாரியார் ஆகியோர் மரபில் வந்தவர்கள். அவர்களது தத்துவங்களைக் கடைப்பிடிப்பவர்கள்) எனப்பல பிரிவினர் உள்ளனர். சிவன் கோவில் குருக்களாக அர்ச்சகராக ஆதிசைவப் பார்ப்பனர்கள் மட்டுமே வரமுடியும். அத்வைதிகள் சிவ வழிபாட்டினரானாலும் வர முடியாது.

சிதம்பரம் தீட்சிதர்கள் ஆதிசைவர்கள் அல்லர், அத்வைதிகளும் அல்லர், வேரு பிரிவு.

இவற்றில் எந்தப்பிரிவினரும் வேறு பிரிவினருடன் திருமண சம்பந்தம் செய்வதில்லை.

மணிவாசகம் said...

சைவம் குறித்த தங்களது பார்வை விரிவடைய தாங்கள் சைவம் தளத்தைப் படிக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

www.shaivam.org