Thursday, December 5, 2013

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களே உதவுங்கள்!




சுவரோவியம்: சிதம்பரத்தில் மாணிக்கவாசகரை வணங்கும் ஈழதேயத்தரசனும் மக்களும்.


தில்லைச் சிதம்பரத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உள்ள பாரம்பரிய தொடர்புகளையும் எமது முன்னோர்கள் எவ்வளவு பக்தியுடன் சிதம்பரம் கோயிலுடன் தமது தொடர்புகளை இடையறாது பேணி வந்தார்கள் என்பதையும் உணர்ந்து, தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் தேவாரங்களைப்  பாடவும்,  கோயில்களில் எல்லாம் உயர்ந்த கோயிலாகிய தில்லைச் சிதம்பரத்தில் இடையூறின்றி தமிழ் ஒலிக்கவும், கோயில் தமிழர்களின் கைகளில் தொடர்ந்திருக்கவும் போராடும் தமிழர்களுக்கு உங்களால் இயன்றளவு நன்கொடையை நல்கி அவர்களை ஆதரியுங்கள்.  இது புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயில் கட்டுவதை விட சிறந்த திருப்பணியாகும். 


தமிழ்நாட்டின் பழம்பெரும் கோயில்கள் இந்து தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. அவற்றில் தன்னை தமிழனாக அடையாளப்படுத்தும் ஒவ்வொரு தமிழனுக்கும், அவன் உலகின் எந்த மூலை முடுக்கில் வாழ்ந்தாலும் பங்குண்டு. ஏனென்றால் அவை தமிழர்களின் பழைமையை, விஞ்ஞான, தொழில்நுட்ப, கட்டிட, சிற்பக் கலைகளின் அறிவை உலகுக்குப் பறைசாற்ற தமிழர்களின் முன்னோர்கள் தமிழர்களுக்கு விட்டுச் சென்ற சொத்துக்கள்.
போலீஸ் பாதுகாப்புடன் சிற்றம்பலத்தில்தமிழில் 
பாடும் சிவனடியார்- ஒரு தமிழ்நாட்டுத் தமிழன்.
உதாரணமாக, இன்று இஸ்லாமியர்களாக உள்ள எகிப்தியர்கள் சிலை வணக்கத்தைக் கைக்கொண்ட தமது முன்னோர்கள் வணங்கிய கடவுள் சிலைகளை அல்லது பிரமிட்டுகளை தம்முடையவை அல்ல என்று புறக்கணிப்பதில்லை. அவர்களின் பழமையான, உலகப் புகழ் பெற்ற வரலாற்றை எண்ணி அவர்கள் பெருமைப்படுகிறார்கள். அது போன்று தமிழர்கள் அனைவரும்,சாதி, மத, நாடு வேறுபாடின்றி, தமிழர்களின் கோயில்கள் தமிழர்களின்  கரங்களிலிருந்து பறி போவதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.

தில்லைச்சிற்றம்பலத்தில் அன்று  மாணிக்கவாசகர் பாடியது போன்று இன்றும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பாடியே தீருவேன் என்று தனது தள்ளாத வயதிலும் போராடும் சிவனடியார்  ஆறுமுகசுவாமிக்கு உள்ள துணிச்சல் கூட தமிழ், தமிழ் என்று தொண்டை கிழியக் கத்தும் சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களுக்கும், ராமதாஸ், திருமாவளவன் போன்ற தமிழ்த் தலைவர்களுக்கும் கிடையாது போலிருக்கிறது.  சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தைப் பற்றி அவர்கள் மூச்சு விடாமலிருப்பதேன். சைவ மடாதிபதிகள் ஏன் மெளனம் சாதிக்கிறார்கள். தமிழ் தேவாரத்தை தில்லைச் சிற்றம்பலத்தில் பாடும் போராட்டத்தில் அவர்கள் தானே முன்னணியில் நிற்க வேண்டும்.



காணொளி: 
ராஜ ராஜ சோழன் தேவார திருமுறைகளை மீட்ட பின்னர் தில்லைச் சிற்றம்பலத்தில் நடராஜர் காலடியில் சமர்ப்பிக்கும் காட்சி.  (படம்: ராஜ ராஜ சோழன்).  அன்று ராஜ ராஜ சோழன் முன்னால் கைகட்டி வாய்புதைத்து நின்றனர், ஆனால் இன்று அதே தில்லைச் சிற்றம்பலத்தில் அதே தமிழ்த் தேவாரங்களைப் பாட எதிர்க்கின்றனர். சிற்றம்பலத்தில் தமிழில் தேவாரம் பாட தமிழர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழின், தமிழர்களின் இந்த இழி நிலைக்கு யார் காரணம்?

No comments: