Saturday, November 30, 2013

தில்லைக்கோயிலில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றுபடுவோம்!



உலக முழுவதுமுள்ள சைவத்தமிழர்களால் குறிப்பாக ஈழத்துச் சைவத்தமிழர்களால் கோயில் என்று போற்றப்படும் சிதம்பரம் சில தமிழெதிரிகளின் திட்டமிட்ட சதியால் மீண்டும் தமிழர்களின் கைகளை விட்டகலும் ஆபத்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தாய்த் தமிழகத்திலுள்ள  தமிழர்களுக்கு மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கும் சிதம்பரம் கோயிலுக்கும் உள்ள பாரம்பரிய தொடர்புகளை நினைவு கூர்ந்து, தமிழர்களின் சொத்தாகிய தில்லை ஆடவல்லானின் கோயில் தமிழர்களின் கட்டுப்பாட்டில், தமிழர்களின் கைகளில் இருக்க தமிழர்கள் அனைவரும் சாதி, மத, கட்சி, கொள்கை, வேறுபாடின்றி ஒன்றுபட வேண்டுமென்பது மட்டுமன்றி, அதற்காக போராடுகிறவர்களை தமிழர்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டுமென்பதையும்   ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டியது அவசியமாகும்.

மாணிக்கவாசகர் தமிழில் திருவாசகத்தைப் பாட அதனை தன் கையால் எழுதிக் கொடுத்தவர் சிதம்பரத்து ஆடவல்லான் என்பது சைவர்களின் நம்பிக்கை, அப்படியான கோயில் தமிழர்களின் கைகளில், அவர்களின் கட்டுப்பாட்டில்  தான் இருக்க வேண்டும் அல்லவா? அது மட்டுமன்றி ஈழத்தமிழர்கள் சிதம்பரத்துடனும், வேதாரண்யத்துடனும் கோயிலுடனும் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரும் கூட சிதம்பரத்தில் ஆருத்திரா தரிசனத்துக்கு யாழ்பாணத்திலிருந்து படகுகள் செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

சிதம்பரத்தை பூலோக கயிலாயமாகக் கொள்ளும் ஈழத்தமிழர்  மரபு:


ஈழத்தில் தட்சண கயிலாயம் என்றழைக்கப்படும் திருக்கோணேஸ்வரமும், திருக்கேதீஸ்வரம் போன்ற ஈழத்துக் கயிலாயங்கள் எல்லாம் போத்துக்கேயரால் அழிக்கப்பட்டு விட்ட நிலையில் சிதம்பரத்தைக் கயிலாயமாகக் கொள்ளும் மரபு இலங்கையில் தோன்றியதாலேயே வன்னிய அரசர்கள் சிதம்பரத்துக்கு பெருமளவில் தானம் செய்தனரென்பது, வன்னியனார் மட தர்மசாசனப் பட்டயத்தில் “பூலோக கைலாயமாகிய சிதம்பரத்திலே என்ற தொடர் வருவதிலிருந்து புலப்படுகிறது, 


சிதம்பரத்துக்கும் யாழ்ப்பாணத்துக்குமான நெருங்கிய தொடர்பு யாழ்ப்பாண மன்னர்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. யாழ்ப்பாண இராச்சியத்தின் காலத்தில்  சிதம்பரத்தில் ஈழத்தமிழர்களின் சார்பில் யாழ்ப்பாணத்தார் மடத்தை முதலில் ஏற்படுத்தியவன் யாழ்ப்பாண மன்னன் பரராசசேகரன். 

பரராசசேகரனது திருப்பணியை பற்றி விவரிக்கும் பட்டயமும், கயிலை வன்னியனார் மடதர்மசாதனப் பட்டயமும் பேராசிரியர் பத்மநாதனால்  ‘வன்னியர்’ என்ற நூலில் வெளியிடப்படுள்ளன. மன்னன் பரராசசேகரனே 1450 இல் யாழ்ப்பாணத்தை விட்டு, சிதம்பரத்துக்கு ஓடியதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

யாழ்ப்பாணத்தில் அன்னியர் ஆட்சியில் சைவத்துக்கும், சைவர்களுக்கும் ஏறபட்ட நெருக்கடிகளிலிருந்தும், பறங்கிகளுக்கு உணவுக்காக ஒவ்வொரு சைவசமயியும் பசுமாட்டைக்  கொடுக்க வேண்டி வற்புறுத்தியதாலும், "தமது சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தைக் காக்க சிதம்பரத்தைச் சரணடைதல் யாழ்ப்பாணத் தமிழர்களின்  வழக்கமாக இருந்து வந்துள்ளது." மன்னன் பரராசசேகரன் சிதம்பரத்தில் அமைத்த மடம் இராசாக்கள் தம்பிரான் மடம் என்ற பெயரில் இயங்கியது. 


யாழ்ப்பாணத்திலுள்ள வளம் நிறைந்த கிராமங்களாகிய அளவெட்டி, புத்தூர், அச்சுவேலி என்பன சிதம்பரத்திலுள்ள இந்த மடத்துக்கு மானியமாக விடப்பட்டன. 1467 இல் மன்னன் பராரசசேகரன் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி அரசுரிமையை மீளப் பெற்ற காலத்திலிருந்து இக்கிராமங்களின் வருவாய் சிதம்பரத்தும் பரராசசேகரன் மடத்துக்குப் போயிருந்திருக்க வேண்டும்.

சிதம்பரத்தில் கைமாறும் ஈழத்தமிழர் சொத்துக்கள்: 

போத்துக்கேயருடைய கொடுமைகளுக்குத் தப்பித் தமிழ்நாட்டுக்கு ஓடிய யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஞானப்பிரகாசர் கெளடதேசம் போய் வடமொழியிலும், வேதாகமங்களிலும் பெரும் புலமையெய்தி, திருவண்ணாமலை ஆதீனத்திலே துறவியாகி, சிதம்பரத்துக்கு திரும்பி வந்து, வடமொழியிலே எட்டு நூல்களும், சிவஞானசித்தியாருக்கு  உறையும் எழுதினார். இவரது புலமைச்சிறப்பு வேதாகம சமசதசாத்திர பாரங்கதர்” என்ற பட்டத்தை இவருக்குப் பெற்றுக் கொடுத்தது. ஞானப்பிரகாசர் குளம் என்ற பெயரிலே பெரியதொரு குலமும் ஞானப்பிரகாசர் மடமும், அவர் காலத்திலே சிதம்பரத்திலே தோன்றி இன்றும் நிலவுகின்றன.

யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் சிதம்பரத்தைக் கேந்திரமாகக் கொண்டு சைவசமய மறுமலர்ச்சியை வழிபடுத்த விரும்பினார் என்பது பலரும் அறிந்த விடயம். சிதம்பரத்துக்கு மற்றொரு பெயர கோயில். கோயிற்புராணத்தை அருளியவர் உமாபதி சிவாசாரியார். சிதம்பர மான்மியத்தை தமிழ் செய்தும், கோயிற்புராணத்துக்கு உரை செய்தும் வெளிப்படுத்தியவர் நாவலர் அவர்கள்.

பராசசேகரன் காலத்திலும் ஞானப்பிரகாச சுவாமிகள் காலத்திலும் கயிலைவன்னியன் காலத்திலும் ஏற்பட்ட சிதம்பரத்துடனான தொடர்பு பதினேட்டாம் நூற்றாண்டிலும் பேணப்பட்டு வந்துள்ளது.  கயிலை வன்னியனார் மட தர்மசாசனப் பட்டயம், சகாப்தம் 1644 (கி.பி.1722 இல்) வரையப்பட்டது. வன்னியர் சிதம்பரத்திலே பரராசமகாராசாவின் கட்டளை நடத்தும் சூரியமூர்த்தித் தம்பிரானிடம் தாம் விட்ட நிவந்தங்களை ஒப்படைத்தனரென்று செப்பேடு கூறுவதால், பரராச சேகரன் முன் சிதம்பரத்தில் அமைத்திருந்ததும், கயிலை வன்னியனால் ஆதரிக்கப்பட்டிருந்துமான இராசாக்கள் தம்பிரான் மடத்தை வன்னியரும் ஆதரித்து வந்தனரென்பது புலனாகின்றது
பண்டாரவன்னியன் 
தமக்குள்ள பொதுவாக ஒற்றுமைக் குறைவால் பிணங்கிப் போகும் இயல்பு கொண்ட பனங்காமப்பற்று. கரிக்கட்டுமூலைப்பற்று, தென்னைமரவாடிப்பற்று, மேற்பற்று, முள்ளியவளை, பச்சிலைப்பள்ளி வன்னியர்களும்.  இவர்களின் ஊர்களின் குடியானவர்களும் வயலுக்கு மூன்று மரக்கால் நெல் என்ற விகிதத்திலே சந்திராதித்தியவரை சிதம்பர மடத்துக்கு தானஞ் செய்வதாகச் செப்பேடு கூறுகிறது.  ஈழத்து வன்னிமைகளும், வன்னிமைகளில் உள்ள குடியானவர்களும் ஒற்றுமைப்பட்டு சைவசமயத்தின்  பெயரால் இவ்வளவு தியாகம் செய்யும் பொது யாழ்ப்பாணத்திலே சைவசமயம் எப்படி அழியும்?  திருக்கோணமலையிலும், யாழ்ப்பானத்திலுமிருந்த கயிலாசங்கள் அழிந்து விட்ட நிலையிலே, சிதம்பரத்தைக் கையிலாசமாகக் கொள்ளும் மரபு இலங்கையில் தோன்றியதாலேயே வன்னியர் சிதம்பரத்துக்கு இவ்வளவு தானம் செய்தனரென்பது இதே சாசனத்திலே “பூலோக கயிலாசமாகிய சிதம்பரத்திலே” என்ற தொடர் வருவதிலிருந்து புலப்படுகிறது.    

சேர். ராமநாதன் சமாதிக்கோயில் (பள்ளிப்படை)

இலங்கையில்  சிங்களவர்களால் the greatest Ceylonese of all times’  என்று போற்றப்படுபவரும், சிதம்பரத்தின் ஆடவல்லானின் ஆழ்ந்த பக்தனும், தனது செல்வத்தில் பெரும்பகுதியை சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு எழுதி வைத்தவருமாகிய  சேர் பொன்னம்பலம் இராமநாதனின் நினைவு நாள் இன்று 30 நவம்பர் .          




Related Posts:                         

சித‌ம்ப‌ர‌த்தில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ சின்னங்களைப் பாதுகாக்குமாறு செல்வி.ஜெயலலிதாவிட‌ம் வேண்டுகோள்.
http://www.viyaasan.blogspot.ca/2013/04/blog-post_4167.html
.

ஈழத்து வன்னியர் செப்புப்பட்டயம் - சித‌ம்ப‌ர‌ம் கைலைவ‌ன்னிய‌னார் ம‌ட‌மும், நிலங்களும் எங்கே?



Ref: 
பேராசிரியர்
கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை
தலைவர், தமிழ்த்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

http://noolaham.net
www.tamilnet.com


No comments: