Tuesday, November 26, 2013

இந்தியச் சட்டங்களின் படி மோடியின் 'குழந்தை திருமணம் (பால்ய விவாகம்)' செல்லாது?


பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்கள் குழந்தைகள் (Children) என இந்திய உள்நாட்டுச் சட்டங்கள்  தெளிவாக வரையறுக்கும் போது 3 வயதில் பெற்றோர்களால் தீர்மானிக்கப்பட்டு 17 வயதில் நிச்சயதார்த்தம் நடத்தி முதலிரவே நடக்காத மோடியின் குழந்தை திருமணம் (பால்ய விவாகம்) இந்தியச் சட்டங்களின் படி செல்லாது என்கிறார் என்னுடைய குஜராத்தி நண்பர்.

Picture: Google
தனக்கு விவரம் தெரிந்தவுடன் குழந்தை திருமணத்தை கைவிட்டு, அந்த திருமணமே வேண்டாம் என, பிரம்மச்சாரியாகவே இருக்கத் தீர்மானித்துக் கொண்ட மோடி அவர்களைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால் அண்மையில் கூட அக்டோபர் 2013 இல் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையத்தில் குழந்தை திருமணத்தையும், விருப்பமற்ற வலுக்கட்டாய திருமணங்களையும்  இல்லாதொழிப்பதற்கான தீர்மானத்துக்கு ஆதவளித்த இந்தியா, அந்த தீர்மானத்தை ஒருங்கிணைந்து சமர்ப்பிப்பதற்கு (co-sponsoring ) இறுதிக்கட்டத்தில் மறுத்து விட்டதாக மனிதவுரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  ஏனென்றால் அந்த தீர்மானத்தை ஆதரித்து, ஒருங்கிணைந்து சமர்ப்பித்தால் அத்தகைய  சட்டங்களை , சர்வதேச கண்காணிப்பின் கீழ் இந்தியாவில் முழுமையாக நடைமுறைப்படுத்துவது கடினமானது என்பதாலாகும் என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த நிலை 2013 ஆண்டில்  என்றால் மோடி அவர்களின் இளமைக்காலத்தில் நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கலாம்.

இந்தியாவின் குழந்தைகள் திருமணத்தடைச்சட்டம், அந்த தடைச்சட்டத்தை மீறியவர்களுக்கு -பெற்றோர் உட்பட- சிறைத்தண்டனையை அளிக்கிறது.ஒவ்வொரு இரண்டாவது மணப்பெண்ணும் குழந்தையாக இருக்கும் நாட்டில், ஆக 400 பேர் மட்டுமே இந்தச் சட்டத்தின் கீழ் 2012 இல் கைது செய்யப்பட்டனர். இதிலிருந்து எந்தளவுக்கு இந்த குழந்தைத் திருமண தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறியலாம்.

குழந்தை திருமணத்தையும், கட்டாய அல்லது வற்புறுத்தி செய்யப்படும் திருமணத்தையும் மனிதவுரிமை மீறல்களாக  வரையறுக்கிறது ஐக்கியநாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானம்.
குழந்தை திருமணம் அல்லது பால்ய விவாகத்தில்  இந்தியா உலகில் 14வது இடத்தை வகிக்கிறது நைஜர், மாலி, பங்களாதேஷ் போன்ற நாடுகள் குழந்தை திருமணத்தில் முன்னணி வகிக்கின்றன,

. இந்தியாவில் குழந்தை திருமணம் சாதாரணமாக பரவலாக நடைபெற்ற மோடியின் இளமைக்காலத்தில் அவர் மூன்று வயதாக இருக்கும் போதே அவரது பெற்றோர் ஒருரு பெண்ணை நிச்சயித்து விட்டனர். அவரது 17வது வயதில் அவருக்கும்  14வயதுடைய ஜசோதா பென்னுக்கும் அக்கால  வழக்கப்படி திருமணமும் நடைபெற்றது, ஆனால் அதே குழந்தை திருமண வழக்கப்படி மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் தனிமையில் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. குஜராத்தில் அக்காலத்திலிருந்த  வழக்கப்படி அந்த சந்திப்பு அல்லது முதலிரவு, கவுணா (Gauna) எனப்படும் இன்னொரு சிறப்பு திருமணச் சடங்கு /இரண்டாவது திருமணச் சடங்கு (Special Ceremony) நடந்த பின்பே நடைபெறும். ஆனால் நரேந்திர மோடிக்கும் ஜசோதா பென்னுக்கும் அந்த இரண்டாவது திருமணச் சடங்கு- Gauna நடைபெறவேயில்லை. ஆனால் தனது பதினெட்டாவது வயதில் ஆர்.எஸ். எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட நரேந்திர மோடி, தனக்கு நடைபெற்ற குழந்தை திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல், பிரமச்சாரியாகவே இருக்க தீர்மானித்துக்  கொண்டார். அதனால் சம்பிரதாயப்படி பெயரளவில் திருமணம் நடைபெற்றாலும் கூட, அவர் ஒரு பிரம்மச்சாரி தான். அவரது குழந்தை மணப்பெண்ணும் வேறு திருமணம் செய்யாமல் தனிமையில் இருக்க தீர்மானித்துக் கொண்டார். 

இந்தியாவில் இன்றும் பரவலாக வழக்கத்திலுள்ள குழந்தை திருமணம் அல்லது பால்ய விவாகத்துக்கு, அறியாத வயதில், வலுக்கட்டாயமாகப் பலியாக்கப்படும்  லட்சக்கணக்கான இந்தியக் குழந்தைகளில் இந்த இருவரும்  (நரேந்திரபாய் மோடியும் ஜசோதா பென்னும்)  அடங்குவர்.


No comments: