Monday, November 25, 2013

மலேசியத் தமிழர்களிடம் ஈழத்தமிழர்கள் பிச்சை வாங்க வேண்டும்!






மேலைநாடுகள் எங்கும் பரவி அந்தந்த  நாட்டுக் குடியுரிமையும் பெற்று இன்று செல்வாக்கோடு வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் இன்னும் நடைமுறைப்படுத்த முடியாத அல்லது தமிழ், தமிழ் என்று பீற்றிக் கொண்டாலும் நடைமுறைப்படுத்த முயலாத, தமிழர்களின் ஆலயங்களை தமிழாக்கும் பணியை அதாவது  தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து, பார்ப்பனர்கள் அல்லாதவரும் அர்ச்சகராலாம் அதுவும் அவர்கள் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்பதை உலகப் புகழ் பெற்ற பத்துமலை (Batu Caves) முருகன் கோயிலிலேயே பார்த்து அனுபவிக்கும்  பாக்கியம் சில வாரங்களுக்கு முன்பு எனக்குக்கிடைத்தது. இந்த விடயத்தில் மலேசியத் தமிழர்களிடம் ஈழத்தமிழர்கள் பிச்சை வாங்க வேண்டும்.
 
இம்முறை தீபாவளியை மலேசியாவில் கழிக்கும்  வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனது நெருங்கிய உறவினர்கள் எழுபது வருடங்களுக்கு மேலாக மலேசியாவில் வாழ்ந்து வந்தாலும் கூட இந்த முறை தான் முதன் முதலாக மலேசியாவுக்குப் போயிருந்தேன். ஆனால் இலங்கையை போல் தமிழ், தமிழர் என்ற தொடக்கத்துடன் பெயர் இல்லாமல், HINDRAF or Hindu Rights Action Force ( இந்து உரிமைகள் போராட்டக் குழு) போன்று, இந்து என்ற சொல்லுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, மலேசியத் தமிழர்கள் தமது தமிழர் என்ற அடையாளத்துக்குப் பதிலாக, இந்து என்ற அடையாளத்துக்குத் தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்திருந்த எனக்கு பத்து மலை முருகன் கோயிலில் அர்ச்சனைத் தட்டைக் கொடுத்தவுடன், நான் கேட்காமலேயே  தமிழில் அர்ச்சனை பண்ணத் தொடங்கிய பார்ப்பனரல்லாத அர்ச்சகரை பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியமாக மட்டுமல்ல, மகிழ்ச்சியாகவும் இருந்தது. தமிழ்நாட்டைப் போல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பும் அங்கிருக்கவில்லை. 

 தமிழில் அர்ச்சனை செய்தாலென்ன, சமக்கிருதத்தில் செய்தாலென்ன எல்லாம் ஒன்று தான் சிலர் நினைக்கலாம். ஆனால் அதில் பெரிய வேறுபாடு உண்டு என்பதை என்னால் அங்கு உணர முடிந்தது. எங்களுக்குத் தெரியாத மொழியில் பிழை பிழையாக ஐயர் ஏதோ முணுமுணுப்பதை விட, தமிழில் முருகனின் புகழைக் கூறி போற்றி, போற்றி என்று அர்ச்சனை செய்வது பக்தியுணர்வை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதனால் தான் தமிழ்க் கிறித்தவர்கள் லத்தீன் மொழியில் தமது பிரார்த்தனைகளை நடத்துவதை விடுத்து கிறித்தவத்தை தமிழாக்கினார்கள்.

மேலை நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் என்னடாவென்றால் மூலைக்கு மூலை கோயில்களை கட்டி பார்ப்பனர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பளித்து, சாதியை வளர்க்கும் போது உலகப்புகழ் பெற்ற பத்து மலை முருகன் கோயிலிலேயே பூணூல் அணியாத தமிழ் அர்ச்சகர்கள் மூலம் தமிழில் அர்ச்சனை செய்வித்து, தமிழ்க்கடவுள் முருகனுக்கு தமிழ் புரியும் , தமிழில் அவனை வணங்கலாம் என நடைமுறையில் செய்து காட்டி தமிழுக்கு முன்னுரிமை கொடுத்த மலேசியத் தமிழர்கள் உலகத் தமிழர்களின் பெருமதிப்புக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.


Picture Courtesy: Vinavu


அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களை புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆலயங்களில் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்.





6 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செய்தி மிக மகிழ்வைத் தந்தது. இவை ஈழத் தமிழர்களால் நடத்தப்படும் எந்த நாட்டிலுள்ள கோவில்களிலும் எந்தக் காலத்திலும் வரவே வராது.

ஜோதிஜி திருப்பூர் said...

நானும் வியந்து பார்த்த உண்மை. படங்கள் அழகு.

Avargal Unmaigal said...

இந்த பிரமண்டமான முருகனை நான் பார்த்து வியந்தது உண்டு வாய்ப்புகள் கிடைத்தால் மலேசியா சென்றால் இந்த கோயிலுக்கு சென்று வர ஆசை. அதற்கு அந்த முருகந்தான் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் tha.ma 1

viyasan said...

@யோகன் பாரிஸ்(Johan-Paris)

உங்களின் கருத்துக்கு நன்றி. எனக்கும் ஆச்சரியமாக மட்டுமல்ல, மகிழ்ச்சியாகவும் இருந்தது. தாய்த்தமிழகத்திலும் (தமிழ்நாடு,சேய்த்தமிழகத்திலும் (தமிழீழம்) முடியாத ஒன்றை, மலேசியத் தமிழர்கள் நடைமுறையில் செய்து காட்டியிருக்கிறார்கள். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஈழத்தமிழர்களிடம் நீறுபூத்த நெருப்பாக இன்னும் எரிந்து கொண்டிருக்கும் சாதிவெறி அவர்களை ஈழத்தமிழர்களின் கோயிலகளில் நடைமுறைப்படுத்த விடாது. ஆனால் விழ்ப்புணர்வு ஏற்பட்டால் எதுவும் நடக்கலாம், நடக்கும் என்று நம்புவோம். ஆனால் தமிழ், தமிழ் உணர்வு என்று பீற்றிக் கொள்ளும் பல புலம்பெயர்ந்த புலவர்களும், எழுத்தாளர்களும் கூட, எப்படா ஐயர் எல்லோருக்கும் முன்னால் என்னை மட்டும் முன்னுக்கு கூப்பிட்டு, காளாஞ்சி தருவார் என்று வாணீர் வடிக்கும் போது, நீங்கள் சொல்வதும் சரியாகத் தான் படுகிறது.

viyasan said...

@ஜோதிஜி திருப்பூர்

உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

viyasan said...

@Avargal Unmaigal

உங்களின் வருகைக்கு நன்றி. இது தான் உலகில் உயரமான இந்துக்கடவுளின் சிலை என நினைக்கிறேன். பெங்களூரில் இருக்கும் சிவனின் சிலை ஒரு கட்டிடத்தின் மேல் ஒரு குன்றில் வைக்க்ப்பட்டிருகிறதாம். மலேசியாவுக்குப் போகும் யாரும் இங்கு போகாமல் திரும்புவதாகத் தெரியவில்லை. பத்து மலை முருகன் உங்களின் விருப்பத்தை நிச்சயமாக நிறைவேற்றுவார்.