Sunday, November 24, 2013

டேவிட் கமரூனை எதிர்த்து இலங்கை முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்!


கொழும்பில் உள்ள பிரதான பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லீம்கள் பிரித்தானிய  பிரதமர் டேவிட் கமரூனுக்கெதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். டேவிட் கமரூனுக்கெதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளைக் கைகளிலேந்தியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர் இலங்கை முஸ்லீம்கள்.
  
இலங்கை அரசு நடுநிலையான முறையில் போர்க்குற்ற விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதத்துக்கிடையில் நடைமுறைப்படுத்தாது விட்டால் ஐக்கிய நாடுகள் சபையில் மனிதவுரிமைகள் ஆணையத்தின் ஊடாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச விசாரணையைக் கோரப் போவதாக பிரிட்டிஸ் பிரதமர் கூறியதை எதிர்த்து, அவருக்கெதிராக இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிரிட்டிஸ் பிரதமர் டேவிட் கமரூன் போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்கும் சென்றிருந்தார் என்பது மட்டுமன்றி, 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதல் வெளிநாட்டுத் தலைவருமாவர்.

நேற்று சிங்கள பெளத்த தேசியவாதிகளும் புத்த பிக்குகளும் கொழும்பிலுள்ள ஐக்கிய இராச்சியத்தின் தூதரத்தின் முன்பாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.




No comments: