Monday, September 16, 2013

செல்வி. ஜெயலலிதாவிடம் ஒரு வேண்டுகோள்!


உலகில் தமக்கென ஒரு கொடியில்லாத தேசிய இனம் தமிழினமாகத் தானிருக்க வேண்டும். ஏழு கோடி தமிழர்கள் உலகெங்கும் பரவி வாழ்ந்தாலும் கூட எங்களுக்கென, தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான கொடி தமிழர்களுக்கு கிடையாது. அதனால் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான, தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய  கொடியை வடிவமைக்க ஒரு குழுவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  செல்வி, ஜெயலலிதா அமைக்க வேண்டுமென்பது அன்பான வேண்டுகோள்.

சில நாட்களுக்கு முன்னர் லண்டன் மெட்ரோபொலிட்டன் போலீஸ் சேவைகளினது இணையத்தளத்தில் ஒவ்வொரு மொழிக்கும் அந்தந்த நாடுகளின் அல்லது மொழியை பேசும் மக்களின் கொடிகளை அந்த மொழிகளில் சேவைகளை பெறுவதற்கு அழுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழ் மொழிக்கு விடுதலைப் புலிகளின் கொடியின் படம் போடப்பட்டிருந்தது, ஆனால் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் அதைப்பற்றி முறைப்பாடு செய்து  புலிக் கொடியை இணையதளத்திலிருந்து அகற்றி விட்டது.  


 
தமிழ்நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதாலும், தமிழ்நாடு அரசு உலகில் அங்கீகரிக்கப்பட்டதொன்றாக இருப்பதாலும் தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும். அத்துடன் இலங்கையில் அமையப் போகும் வடமாகாண அரசின் ஆலோசனையையும் செல்வி. ஜெயலலிதா பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் கூட கன்னடர்களும் சீக்கியர்களும் தமக்கென தனிக்கொடியை வைத்திருக்கின்றனர் ஆனால் தமிழர்களுக்கு மட்டும் தனித்துவமான கொடி இருப்பதாக தெரியவில்லை. கனடா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு மாநிலங்களும் மட்டுமன்றி ஒவ்வொரு நகரமும் தமக்கென தனிக் கொடிகளைக் கொண்டுள்ளன.

பல நாடுகளில் பரந்து வாழும் நாடு கடந்த தேசிய இனமாகிய தமிழர்களுக்கு அடையாளமாக தனித்துவமான, தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான கொடி தமிழர்களுக்கும், தமிழ் மொழியைக் குறிப்பதற்கும் தேவை. தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் தேசியக் கொடிகளை தமிழினத்தை அல்லது தமிழ் மொழியை சுட்டிக் காட்ட பயன் படுத்த முடியாது ஏனென்றால் நாங்கள் வாழும் நாடுகளில் தமிழ் மொழி மட்டும் தேசிய மொழி அல்ல. அத்துடன் தமிழர்களுக்கென சொந்தமாக ஒரு நாடு கிடையாது.

கங்கை முதல் கடாரம் வரை தமது புலிக்கொடியை நாட்டிய தமிழர்கள் இன்று நாடற்று, கொடியற்று, நாதியற்று இருக்கிறார்கள். இந்த இழிநிலை மாற புலிக்கொடியையே தமிழர்கள் மீண்டும் தமது கொடியாக கொள்ள வேண்டும் ஏனென்றால் ராஜ ராஜ சோழன் காலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கும் , இலங்கைக்கும் வெளியே தமிழர்களின் கொடி என உலகுக்கு தெரிந்த கொடி எதுவென்றால் அது புலிக்கொடிதான்.


கேழன் மேழிகலை யாளி வீணை சிலை 
கெண்டை யென்றினைய பல்கொடி
தாழ மேருவிலு யர்த்த செம்பியர்
த னிப்பு லிக்கொடித ழைக்கவே.

-கலிங்கத்துப்பரணி-

29 comments:

நம்பள்கி said...

வெளி நாட்டு தமிழ் அருஞர்கள் சேர்ந்து செய்யவேண்டிய முயற்சி இது.

தமிழ்நாட்டில் இருந்து கொடி வந்தால்..அந்த கொடியில் தமிழ் பெருமை அறவே இருக்காது; மணிப்ரவாள சமஸ்கிரத தாக்கம் தான் இருக்கும்.

Bagawanjee KA said...

புலிக் கொடி என்றால் பிரச்சினை என்று முதலில் கூறிவிட்டீர்கள் ஆகையால் மதுரையில் பறந்த மீன் கொடிதான் என் கண்ணுக்கு தெரிகிறது !

குட்டிபிசாசு said...

//கங்கை முதல் கடாரம் வரை தமது புலிக்கொடியை நாட்டிய தமிழர்கள்//

…சோழர்களுடைய கொடி தான் புலிக்கொடி. பாண்டியனுடைய மீன் , சேரனுடைய வில் அம்பு, பல்லவருடைய எருது கூட நாம் கொடியாக பயன்படுத்தலாம். விடுதலைப்புலிகளுடைய கொடி ராணுவ அமைப்புக்கான கொடி போல உள்ளது. துப்பாக்கிகள் இல்லாமல் புலி மட்டும் இருந்தால் நன்றாக இருக்கும். எதுக்கும் விடுதைப்புலிகள் அவர்களுடைய சின்னத்திற்கு காப்பிரைட் வாங்கிவைப்பது நல்லது. :))

http://en.wikipedia.org/wiki/Tamil_Nadu_Kongu_Ilaignar_Peravai

//இந்தியாவில் கூட கன்னடர்களும் சீக்கியர்களும் தமக்கென தனிக்கொடியை வைத்திருக்கின்றனர் //

பஞ்சாபி மொழி பேசுவோர் இந்தியக்கொடியை போட்டுக்கொண்டுள்ளார்கள். சீக்கியரின் மதக்கொடியை போடவில்லை.

…//ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு மாநிலங்களும் மட்டுமன்றி ஒவ்வொரு நகரமும் தமக்கென தனிக் கொடிகளைக் கொண்டுள்ளன.//

…இந்தியாவில் மாநிலங்களுக்கு கொடி இல்லை. முத்திரை உண்டு. தமிழகத்திற்கு கோவில்கோபுரம் உள்ள முத்திரை.

http://en.wikipedia.org/wiki/File:TamilNadu_Logo.svg

குட்டிபிசாசு said...

//தமிழ்நாட்டில் இருந்து கொடி வந்தால்..அந்த கொடியில் தமிழ் பெருமை அறவே இருக்காது; மணிப்ரவாள சமஸ்கிரத தாக்கம் தான் இருக்கும்.//

வியாசன் கொடியைத் தானே சொன்னார். புத்தகமா போட சொல்கிறார் மணிப்ரவள தாக்கம் வர.

நம்பள்கி said...

அவ்வளவு தான் நாம் ஆட்களைப் பற்றி உங்களுக்கு தெரியும். கொடியின் அடியில் ஒரு வாசகம்...சத்யமேவ ஜெயதே மாதிரி {தமிழ் அல்லாமல்} ஒன்னு கண்டுபிடிச்சு போடுவாங்க. சுத்தத் தமிழ் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்! அவ்வளவு எரிச்சல் தமிழ் மொழி மீது!
________________________
குட்டிபிசாசு said...
//தமிழ்நாட்டில் இருந்து கொடி வந்தால்..அந்த கொடியில் தமிழ் பெருமை அறவே இருக்காது; மணிப்ரவாள சமஸ்கிரத தாக்கம் தான் இருக்கும்.//

வியாசன் கொடியைத் தானே சொன்னார். புத்தகமா போட சொல்கிறார் மணிப்ரவள தாக்கம் வர.

viyasan said...

//வெளி நாட்டு தமிழ் அருஞர்கள் சேர்ந்து செய்யவேண்டிய முயற்சி இது.
தமிழ்நாட்டில் இருந்து கொடி வந்தால்..அந்த கொடியில் தமிழ் பெருமை அறவே இருக்காது; மணிப்ரவாள சமஸ்கிரத தாக்கம் தான் இருக்கும்.//

நீங்கள் சொல்வது சரி, கொடியில் சமக்கிருத வாடை இருக்கவே கூடாது. உலகத் தமிழறிஞர்களின் ஆலோசனையுடன், ஈழம், தமிழக மக்களின் கருத்துக்களை மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர் மற்றும் மேலைநாடுகளில் வாழும் தமிழர்களின் கருத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். கொடியை வடிவமைக்க ஒரு போட்டியை நடத்தி, அதில் தெரிவாகும் வடிவமைப்புகளை உலகத்தமிழர் மத்தியில் வாக்கெடுப்புக்கு விடலாம். ஆனால் இது தமிழ்நாடு அரசின் தலைமையில் நடைபெற வேண்டும். அதனால் செல்வி. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அவர் இதை முன்னெடுக்க வேண்டும் ஏனென்றால் இப்பொழுது அவருக்கு உலகத் தமிழர் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது என்று நினைக்கிறேன்.

viyasan said...

//புலிக் கொடி என்றால் பிரச்சினை என்று முதலில் கூறிவிட்டீர்கள் ஆகையால் மதுரையில் பறந்த மீன் கொடிதான் என் கண்ணுக்கு தெரிகிறது ! //
@Bagawanjee KA
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. புலிக்கொடி பிரச்சனையில்லை. விடுதலைப் புலிகளின் துப்பாக்கி ஏந்திய புலிக் கொடியை பல மேலைநாடுகள் ஈழத்தமிழர்களின் கொடியாக ஏற்றுக் கொண்டாலும், அதில் எந்த வித மாற்றமும் செய்யப்படாத படியால், இலங்கை அரசு அது விடுதலைப்புலிகளின் கொடி, உங்களின் நாட்டில் தடை செய்யப்பட்ட கொடி, என்று ராஜதந்திர உயர் மட்டத்தில் முறைப்பாடு செய்கிறார்கள். அந்தப் புலிக்கொடியிலேயே சில மாற்றங்களைச் செய்து அதை தமிழர்களின் கொடியாக தமிழக அரசு பிரகடனப்படுத்தலாம்.

viyasan said...

//…சோழர்களுடைய கொடி தான் புலிக்கொடி. பாண்டியனுடைய மீன் , சேரனுடைய வில் அம்பு, பல்லவருடைய எருது கூட நாம் கொடியாக பயன்படுத்தலாம். விடுதலைப்புலிகளுடைய கொடி ராணுவ அமைப்புக்கான கொடி போல உள்ளது. துப்பாக்கிகள் இல்லாமல் புலி மட்டும் இருந்தால் நன்றாக இருக்கும். //

@குட்டிப்பிசாசு,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எல்லாக் கொடிகளும் தாழ, மேருவில் உயர்ந்த செம்பியர் தனிப்புலிக்கொடி தழைக்கவே என்கிறது கலிங்கத்துப் பரணி. அதனால் கலிங்கத்துப்பரணி வாழ்த்தும் அந்த தனிப்புலிக் கொடியை, ராஜராஜ சோழன் காலத்திலிருந்து பிரபாகரன் காலம் வரை தமிழரின் வீரத்தை உலகுக்குக் காட்டிய தனிப்புலிக் கொடியை நாங்கள் தமிழர்கள் அனைவரும் எமது கொடியாக ஏற்றுக் கொள்வது தான் சரியானது என நான் நினைக்கிறேன்.

viyasan said...

//பஞ்சாபி மொழி பேசுவோர் இந்தியக்கொடியை போட்டுக்கொண்டுள்ளார்கள். சீக்கியரின் மதக்கொடியை போடவில்லை. //

லண்டன் மெட்ரோபொலிட்டன் போலீஸ் சேவைகளினது இணையத்தளத்தில் பஞ்ச்சாபியர்களுக்கு இந்தியக் கொடி போடப்பட்டிருக்கிறது, ஆனால் எல்லா தமிழர்களுக்கும் பூர்வீகம் இந்தியா அல்ல. லட்சக் கணக்கான உலகத்தமிழர்கள் இந்தியாவை தமது தாய் நாடாகவோ அல்லது பூர்வீக நாடாகவோ நினைப்பதில்லை. இலங்கைத் தமிழர்களும் இந்தியாவிலிருந்து தான் போனார்கள் என்று சிலர் வாதாடினாலும் கூட, எங்களின் முன்னோர்கள் இந்தியாவிலிருந்து போகவில்லை, அவர்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகளிலிருந்து போனார்கள். ராஜ ராஜ சோழனோ அல்லது அவனது படையினர் எவருமே இந்தியா என்ற சொல்லையே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.



//…இந்தியாவில் மாநிலங்களுக்கு கொடி இல்லை. முத்திரை உண்டு. தமிழகத்திற்கு கோவில்கோபுரம் உள்ள முத்திரை. //

முத்திரையைப் பெருமையுடன் பறக்க விட முடியாது. எங்களின் கொடியை ஏற்றுவதில் உள்ள பெருமையும், திருப்தியும் வெறும் முத்திரையில் வாராது. அதை விட கன்னடர்கள் தமக்கென தனிக்கொடி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு காவிரியின் தண்ணீரைத் தரமாட்டோம் என்று நடத்தும் போராட்டங்களில் எல்லாம் அதை பெருமையுடன் பறக்க விடுகிறார்கள். அந்தக் கொடி அவர்களை ஒருங்கிணைக்கிறது.அப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது முத்திரையைத் தூக்கிக் காட்டுவார்களா என்னமோ, அப்படி நான் கேள்விப்பட்டதில்லை.

இக்பால் செல்வன் said...

மொழி அடையாளக் கொடி இருப்பது நலமே, ஏற்கனவே தமிழ்த் தாய் பண் கூட நமக்குண்டு. ஆனால் வெறும் சோழர்களின் புலிக் கொடியை எவ்வாறு ஒட்டு மொத்த தமிழர்களின் கொடியாக முன் மொழிய முடியும் சொல்லுங்கள். பொதுவாக தமிழர் கொடியாக கருப்பு - சிவப்பு கொடியே உருவாக்கப்பட்டது அதனையே இன்று அனைத்து தமிழ் கட்சிகளும் பயன்படுத்துகின்றன. அத்தோடு உலகத் தமிழ் அமைப்புகள், நீல வண்ணத்தில் உலக உருண்டையும் பனை மரமும் கொண்ட கொடியைப் பயன்படுத்தினார்கள். ஆனால் அந்த இணைய தளத்தில் மொழிக்கு அந்த மொழி பேசும் முதன்மை நாட்டின் கொடியல்லவா இட்டிருக்கு அப்படி என்றால் முறைப்படி இந்தியா கொடி தான் இட்டிருக்க வேண்டும். ஏனெனில் போர்த்துகீய மொழிக்கு போர்த்துகல் கொடி இட்டமையை கவனிக்க, வங்காளம் இந்தியாவில் பேசப்பட்ட போதும் பெரும்பான்மையினர் உள்ளமை வங்கதேசம் என்பதால் வங்கதேச கொடி இடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தேசக் கொடிகளை அம் மொழி புழங்கும் முக்கிய நாட்டை ஒட்டி இடுவதே உலக மரபு.

நந்தவனத்தான் said...

சகோ, உங்களுக்கு ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கும் முறையே தெரியல. அந்தம்மா பெயரை சொன்னால் கோபிச்சுக்கும். டாக்டர் புரட்சிதலைவி அம்மா என்று மரியாதையாக அழைத்து பின் கோரிக்கை வைத்தால் பரிசீலிக்கப்படும். அதை விடுத்து பெயரை சொல்வது அது தமிழ்நாட்டு அரசியல் கலாச்சாரத்துக்கே விரோதமானது. பெயர் சொல்லுவதும் கெட்ட வார்த்தை சொல்லுவதும் தமிழ்நாட்டில் ஒன்றாக ஆக்கிவிட்டது திராவிட புரச்சி. பெரியார், கலைஞர், பேராசிரியர், புரட்சிதலைவர், புரட்சிதலைவி என விளித்து கோரிக்கை விடுக்க பழகி கொள்ளவும்!

இந்தம்மாவை விட கலைஞரிடம் கோரிக்கை விடுப்பது ஈசி. இங்கிலாந்து நடிகர்கள் குத்தாட்டம் போடும் ஒரு பாரட்டுவிழா ஏற்பாடு செய்யவும். கவர்ச்சி நடிகைகள் வந்து கொடியை பெற்றுக்கொள்வார்கள் என்றால் அவர் எழுச்சியோடு வருவார்(வயாக்ரா சாப்பிட்டுகிட்டான்னு கேட்கபடாது!).
____________

ஜெயலலிதாவிடம் இந்த கோரிக்கை விடுப்பது பிரயோசனமில்லாத ஒன்று. இந்தியாவில் காஷ்மீர் தவிர எந்த மாநிலத்துக்கும் கொடியை வைத்துகொள்ளும் உரிமை இல்லை. கன்னட கொடி ஆரம்பத்தில் ஒரு கட்சிக் கொடியாகத்தான் இருந்தது. இப்போது அதை கன்னடம் சார்ந்த போராட்டத்தில் பயன்படுக்கிறார்கள். இந்த கொடிக்கும் கர்நாடக மாநில அரசுக்கும் சம்மந்தமில்லை. நாங்கள் இந்தியக் கொடியை மாத்திரமே பயன்படுத்துவதாக என அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது.

ஆகவே ஜெ தமிழ்நாட்டில் அரசு பணியிலிருப்பதால் அவரால் கொடியை அறிவிக்கவே முடியாது. பதவி இறங்கிய பின்பு கொடியை அவர் என்ன அறிவிப்பது? உலக தமிழறிஞர் கூடி கொடியை முடிவு செய்யலாம், ஆனால் நம்மாளுகளுக்குள் ஒற்றுமை வந்து, ஒரு கொடியை அறிவிச்சு... இதெல்லாம் நடக்குற காரியமா?

ஜோதிஜி திருப்பூர் said...

இலங்கை ஆட்சியாளர்கள் தீயா வேலை செய்றாங்களோ? நம்மாளுங்க திருட்டுத்தனமாய் வேலை செய்வாங்க. இங்கே பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு இன்னமும் புலி எதிர்ப்பில் தீவிர கவனத்துடன் செயல்படுபவர்களைப் பார்க்கும் போது உருவாகும் மன உளைச்சல் அளவில்லாதது.

viyasan said...

//மொழி அடையாளக் கொடி இருப்பது நலமே, ஏற்கனவே தமிழ்த் தாய் பண் கூட நமக்குண்டு. //

அந்த தமிழ்த் தாய் பண் கூட தமிழ்நாட்டுக்கே மட்டுமே தவிர ஈழத்தமிழர்களுக்கல்ல. நாங்கள் பாரதியாரின் “வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி” பாடலை தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடுவதையே விரும்புகிறோம். அதையே சுதந்திரத்துக்குப் பின்னர் ஈழத்தமிழர்கள் பாடசாலைகளிலும் , விழாக்களிலும் பாடி வருகிறார்கள்.

//வெறும் சோழர்களின் புலிக் கொடியை எவ்வாறு ஒட்டு மொத்த தமிழர்களின் கொடியாக முன் மொழிய முடியும் சொல்லுங்கள். //

சோழர்கள் தமிழ் மூவேந்தர்களில் ஒருவர். அத்துடன் சோழர்களின் கொடி தான் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வெளியே பலராலும் அறியப்பட்ட கொடி. தமிழர்களின் பெருமை வாய்ந்த வரலாற்றை எடுத்துக் கூறும் கொடி. உலகத்தமிழர்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் புலிக் கொடி ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

//பொதுவாக தமிழர் கொடியாக கருப்பு - சிவப்பு கொடியே உருவாக்கப்பட்டது //
அது திராவிடக் கட்சிகளின் நிறமே தவிர தமிழர்களுடையதல்ல.

//அத்தோடு உலகத் தமிழ் அமைப்புகள், நீல வண்ணத்தில் உலக உருண்டையும் பனை மரமும் கொண்ட கொடியைப் பயன்படுத்தினார்கள். //

அந்தக் கொடியைப் பற்றி எத்தனை தமிழர்களுக்கு தெரியுமோ தெரியாது. அப்படியான ஏதோ ஒரு சில தமிழ் ஆர்வலர்கள் சேர்ந்து உருவாக்கும் கொடியைப் பற்றி நான் இங்கு பேசவில்லை.

நான் பேசுவது உலகில் வாழும் தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்ப்டக் கூடிய கொடியை வடிவமைத்து அதை வாக்கெடுப்புக்கு விட்டு உலகத் தமிழர்கள் அதை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு போற்றி பெருமைப்படக் கூடிய கொடியைப் பற்றியே தவிர சில திராவிட வீரர்கள் கூடிக் கதைத்து உருவாக்கிக் கொண்ட கருப்பு –சிவப்புக் கொடியைப் போன்ற கொடியைப் பற்றியல்ல.தமிழ்நாடு முதலமைச்ச்சர் இந்த விடயத்தை முன்னெடுக்க வேண்டுமென்று கூறுகிறேனே அவரோ அல்லது தமிழ்நாட்டு மக்களை மட்டும் ஒரு கொடியைத் தீர்மானிக்குமாறு கேட்கவில்லை. தமிழர்களுக்கு ஒரு கொடி அதைப் பற்றித் தான் நான் பேசுகிறேனே தவிர, தமிழ்நாட்டுக்கல்ல.

viyasan said...

//ஆனால் அந்த இணைய தளத்தில் மொழிக்கு அந்த மொழி பேசும் முதன்மை நாட்டின் கொடியல்லவா இட்டிருக்கு அப்படி என்றால் முறைப்படி இந்தியா கொடி தான் இட்டிருக்க வேண்டும். //

தம்மை தமிழராக புள்ளிவிவரக் கணக்கெடுப்பில் மேலை நாடுகளில் அடையாளப்படுத்துகிறவர்கள் ஈழத்தமிழர்கள் தான் அந்த அடிப்படையில் தான் அந்த இணையத்தளத்தின் மொழி வழி சேவைகள் உருவாக்கப்பட்டன. அப்படியிருக்க, எப்படி ஈழத்தமிழர்கள் இந்தியக் கொடியை தமிழைக் குறிக்க அனுமதிக்க முடியும், அதை அனுமதிப்பதை விட லண்டனில் வாழும் ஈழத்தமிழர்கள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவார்கள். :))

viyasan said...

// திராவிட புரச்சி. பெரியார், கலைஞர், பேராசிரியர், புரட்சிதலைவர், புரட்சிதலைவி என விளித்து கோரிக்கை விடுக்க பழகி கொள்ளவும்!//

சகோ.நந்தவனத்தான்,

நன்றி.:) நானும் அப்படித்தான் கோரிக்கை விட்டிருப்பேன். நீளமான தலையங்கமிட்டால் தமிழ்மணத்தில் பெயர் மறைந்து விடுகிறது. அதை விட இந்த விடயத்தில் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டை விட வேறுபட்டவர்கள் என்பது முதலமைச்சருக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். கண்டபடி பட்டமளிக்கும் அரசியல் கலாச்சாரம் இலங்கையில் கிடையாது.


//ஜெயலலிதாவிடம் இந்த கோரிக்கை விடுப்பது பிரயோசனமில்லாத ஒன்று. இந்தியாவில் காஷ்மீர் தவிர எந்த மாநிலத்துக்கும் கொடியை வைத்துகொள்ளும் உரிமை இல்லை.//

நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் போலிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஒரு கொடி அமைக்குமாறு நான் கேட்கவில்லை, அப்படி அமைத்தால் நல்லது தான் ஆனால் நான் கேட்பது எல்லாம், தமிழர்களுக்கென ஒரு கொடி. அதாவது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான கொடி. அதில் இந்திய மத்திய அரசு தலையிட வேண்டிய தேவையேயில்லை. அந்தக் கொடியை இந்திய சட்டங்கள் அனுமதிக்காது விட்டால், அரச நிகழ்ச்சிகளில் பறக்க விட வேண்டிய அவசியமுமில்லை. ஆனால் தமிழர்கள் கலந்து கொள்ளும் தமிழ் சம்பந்தமான நிகழ்வுகளில், தமிழர்கள் அனைவரையும் அடையாளப்படுத்தும், ஒன்றிணைக்கும் ஒரு கொடியாக அது அமைய வேண்டும், அதை வடிவமைக்க செல்வி, ஜெயலலிதா முதலமைச்சர் என்ற முறையில் இல்லாது விட்டாலும், ஒரு தமிழ் அரசியல் தலைவர் என்ற வகையில் அதற்கென ஒரு குழு அமைத்து முன்னெடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.

viyasan said...

//கன்னட கொடி ஆரம்பத்தில் ஒரு கட்சிக் கொடியாகத்தான் இருந்தது. இப்போது அதை கன்னடம் சார்ந்த போராட்டத்தில் பயன்படுக்கிறார்கள். இந்த கொடிக்கும் கர்நாடக மாநில அரசுக்கும் சம்மந்தமில்லை.//

அதேபோல் எப்படி கன்னடர்கள் தமக்கென கொடி வைத்திருக்கிறார்களோ அதே போல் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் எல்லோருக்கும் ஒரு பொதுவான கொடி தேவை என்பது தான் எனது கருத்தாகும்,

/ஆகவே ஜெ தமிழ்நாட்டில் அரசு பணியிலிருப்பதால் அவரால் கொடியை அறிவிக்கவே முடியாது. பதவி இறங்கிய பின்பு கொடியை அவர் என்ன அறிவிப்பது? உலக தமிழறிஞர் கூடி கொடியை முடிவு செய்யலாம், ஆனால் நம்மாளுகளுக்குள் ஒற்றுமை வந்து, ஒரு கொடியை அறிவிச்சு... இதெல்லாம் நடக்குற காரியமா?//

அப்படியானால் தமிழறிஞர்கள் ஒன்று கூடி கொடி அமைக்கும் குழுவை அமைக்க வேண்டும். ஆனால் அந்தக் கொடி உலகத் தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். சும்மா அண்ணா திமுகவும், திமுகவும் மாறி, மாறி பொங்கலையும், சித்திரையையும், தமிழர்களின் வருடப்பிறப்பாக அறிவித்து குழப்பிக் கொள்வதை போலிருக்க கூடாது.

viyasan said...

//இலங்கை ஆட்சியாளர்கள் தீயா வேலை செய்றாங்களோ? நம்மாளுங்க திருட்டுத்தனமாய் வேலை செய்வாங்க. இங்கே பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு இன்னமும் புலி எதிர்ப்பில் தீவிர கவனத்துடன் செயல்படுபவர்களைப் பார்க்கும் போது உருவாகும் மன உளைச்சல் அளவில்லாதது.//

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இது தான் தமிழினத்தின் சாபக்கேடு, சகோதரயுத்தமும், உட்பகையையும் தான் தமிழினத்தின் வீழ்ச்சிக்கு முதல் காரணம்,

இக்பால் செல்வன் said...

அவ் இணைய தளத்தில் அனைத்தும் அங்கீகரிக்கப் பட்ட தேசங்களின் கொடியே உள்ளது, தனியார் கொடிகளை பொது பயன்பாட்டு ஏற்க மாட்டார்கள், தனி நிகழ்வுக்கு வேண்டும் எனில் வைத்துக் கொள்ளலாம். லண்டனில் வாழும் பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் பூர்விகம் இலங்கை என்பதால், விரும்பா விட்டாலும் இலங்கை கொடியே இடம் பெற இயலும், வங்காளிகள் பல வங்கதேசிகளாய் உள்ளபடியால் வங்காள கொடியிட்டுள்ளனர் (இந்திய வங்காளிகள் குறைவு என்பதால் இந்தியக் கொடி இடப்படவில்லை). அதே போல பஞ்சாபிகள் அங்கு பலரும் சீக்கிய கொடியை இடவில்லை, பாகிஸ்தானிலும் பஞ்சாபி மொழி பேசுவோர் உள்ள போதும் லண்டன் பஞ்சாபிகள் பலரும் இந்திய வம்சாவளிகள் என்பதால் இந்தியக் கொடியிட்டுள்ளனர். எதார்த்தப் பூர்வத்தில் இலங்கைத் தமிழ் வம்சாவளிகள் இலங்கை கொடி தான் இட வேண்டி வரும். தனியார் கொடியோ, பயங்கரவாத அமைப்புகளின் கொடியோ ஏற்கப்படாது. தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டுக்குத் தான் முதலமைச்சர் புதுவைக்கு கூட அவரில்லை என்பதால் உங்கள் கோரிக்கையே அபத்தமானது. வேண்டும் எனில் உலகத் தமிழ் மாநாட்டுக் குழுவிடம் கோரிக்கை வையுங்களேன். !

ஜீவன்சிவம் said...

தஞ்சை பெரிய கோவிலையும், புலியையும் இணைத்து ஒரு கொடியை உருவாக்கலாம்

நம்பள்கி said...

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!

அயல் நாட்டு தமிழர்கள் சங்கத்தில், குழாமில் நன் சேராததற்கு ஒரே காரணம்: அவர்கள் எதையும் தமிழ் நாடு அரசிடம் கொண்டு செல்கிறார்கள். அது தவறல்ல! ஆனால், ஏன் அப்படி செய்கிறார்கள் என்று பார்த்தல் ஏமாற்றமே மிஞ்சும்.

இங்கு நாம் தேர்ந்து எடுக்கும் தலைகள் அவர்கள் சொந்த ஆதாயத்திர்க்காக வெளி நாட்டு தமிழர்களை முட்டாள் ஆக்கிவிட்டு , தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் agent போல செயல்படுகிறார்கள்; செயல் பட்டார்கள். அவர்களை அந்த ஆட்சியளார்கள் நனறாகவே கவனித்தார்கள்.

இந்த அவலம், அசிங்கம் எம்ஜீயார் ஆட்சி காலத்தில் ஏற்ப்பட்டது; இன்றும் தொடர்கிறது!

பெயர் வைக்க ஏன் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளிடம் போகவேணும். நாம் பிறந்தது தமிழ்நாடாக இருக்காலம். இன்று நாம் வெளி நாட்டு தமிழர்.

மு மாலிக் said...
This comment has been removed by a blog administrator.
வேகநரி said...

சகோ இக்பால் செல்வன்,
//அந்த இணைய தளத்தில் மொழிக்கு அந்த மொழி பேசும் முதன்மை நாட்டின் கொடியல்லவா இட்டிருக்கு அப்படி என்றால் முறைப்படி இந்தியா கொடி தான் இட்டிருக்க வேண்டும். ஏனெனில் போர்த்துகீய மொழிக்கு போர்த்துகல் கொடி இட்டமையை கவனிக்க வங்காளம் இந்தியாவில் பேசப்பட்ட போதும் பெரும்பான்மையினர் உள்ளமை வங்கதேசம் என்பதால் வங்கதேச கொடி இடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தேசக் கொடிகளை அம் மொழி புழங்கும் முக்கிய நாட்டை ஒட்டி இடுவதே உலக மரபு.//
நீங்க சொன்னதுவே உண்மை. அதுவே நியாயமானதுமாகும்.தமிழ் என்ற இடத்தில் இந்தியா கொடியை தான் அவசியம் போட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழ் என்ற இடத்தில் இலங்கையில் இருந்த எல்ரிரிஈ கொடியை போட்டது இங்கிலாந்து மென்றோபொலிற்ரன் பொலிஸ் உள்ள சில அதிகாரிகளின் விஷமதானமான நடடிக்கையாக தான் இருக்க வேண்டும். துருக்கி பாஷைக்கு சைப்பிரஸில் துருக்கி பேசுவோர் வாழ்ந்தாலும் துருக்கி தேச கொடியை தான் அடையாளமாக போட்டிருப்பை கவனிக்கலாம்.

viyasan said...

//அவ் இணைய தளத்தில் அனைத்தும் அங்கீகரிக்கப் பட்ட தேசங்களின் கொடியே உள்ளது, தனியார் கொடிகளை பொது பயன்பாட்டு ஏற்க மாட்டார்கள், தனி நிகழ்வுக்கு வேண்டும் எனில் வைத்துக் கொள்ளலாம். //

அவர்கள் எல்லாம் தெரிந்து கொண்டு, ஈழத் தமிழர்கள் அங்கு பெரும்பான்மையாக இருப்பதாலும் தன , புலிக்கொடியை தமிழைக் குறிக்க தமது இணையத்தளத்தில் பதித்தார்கள். இது நடந்து பல வாரங்களாகி விட்டன. இதை பத்திரிகைகள் வெளியிட்டதும் தான் இலங்கை அரசு விழித்துக் கொண்டு, உய்ரமட்டத்தில் ராஜ தந்திர ரீதியாக தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. இன்னும் விடுதலைப் புலிகள் பிரிட்டனின் தடை செய்யப்பட்டிருப்பதால் தான் தமிழைக் குறிக்க புலிக் கொடியை அனுமதிப்பதை இலங்கை அரசு சுட்டிக் காட்டுகிறது. அந்தந்த நாடுகளின் கொடி தான் இருக்க வேண்டுமென்று எதுவும் கிடையாது, அப்படி என்றால் அவர்கள் புலிக் கொடியை முதலிலேயே போட்டிருக்க மாட்டார்கள். , விடுதலைப் புலிகலின் மீதுள்ள தடை பிரிட்டனில் நீக்கப்பட்டால், ஒரு இந்தப் பிரச்சனையே வந்திருக்காது., இலங்கைத் தமிழர்கள் என்ன சின்னத்தைக் கொடுத்தாலும் அவர்கள் குறித்துக் கொள்வார்கள். அந்த இணையத்தளத்தில் கொடிகள் இருப்பதன் நோக்கம் இலகுவாக மொழியை அடையாளப்படுத்துவது தவிர, அந்த நாட்டுக் கொடிகளைக் குறிப்பதற்காக அல்ல. அப்படியானால், இப்பொழுது பாஞ்சாபி, தமிழ் ஆகிய இரண்டு இந்திய மொழி இணைக்கப்பட்டிருப்பது போல், நாளைக்கு தெலுங்கர்களும், மலையாளிகளும் மற்றும் பல இந்திய மொழி பேசுபவர்களும் லண்டனில் குடியேறினால், அந்தஇணையதளம் முழுவதும் இந்தியக் கொடியாலேயே நிரம்பி விடும்.

viyasan said...

//தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டுக்குத் தான் முதலமைச்சர் புதுவைக்கு கூட அவரில்லை என்பதால் உங்கள் கோரிக்கையே அபத்தமானது. வேண்டும் எனில் உலகத் தமிழ் மாநாட்டுக் குழுவிடம் கோரிக்கை வையுங்களேன். !//

உலகத் தமிழ்மாநாட்டுக் குழுவை விட செல்வி. ஜெயலலிதா இந்த விடயத்தை முன்னெடுத்தால், தலைமை தாங்கினால் அது மிகவும் பிரபலமடையும், அத்துடன் உலகத்தமிழர்களை மட்டுமன்றி ஏனைய இந்தியர்களையும் என்ன நடக்கிறது என்பதை அவதானிக்கச் செய்யும், அதனால் தான் செல்வி. ஜெயலிதாவை, அதற்கென குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டேனே தவிர அவரைக் கொடியைத் தீர்மானிக்கச் சொல்லவில்லை, அவர் நிச்சயமாக உலகத் தமிழ் அறிஞர்களையும் அந்தக் குழுவில் ஒருங்கிணைப்பார் என நம்புகிறேன்.

ஜெயலலிதாவை முதலமைச்சர் என்ற முறையில் அல்லாமல், இபோதைய காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதியை விட செல்வி, ஜெயலலிதாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் நல்லெண்ணமும், நன்மதிப்பும் உண்டு, அதனால் தான் அவரிடம் இந்த வேண்டுகோளை வைத்தேன். புதுவைக்கு அவர் முதலமைச்சராக இல்லாமல் இருப்பது இதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடாது. என்ன இருந்தாலும் பெரும்பான்மை தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழர்களின் அரசியல் தலைவர் அவர்.

viyasan said...

//தமிழ் என்ற இடத்தில் இலங்கையில் இருந்த எல்ரிரிஈ கொடியை போட்டது இங்கிலாந்து மென்றோபொலிற்ரன் பொலிஸ் உள்ள சில அதிகாரிகளின் விஷமதானமான நடடிக்கையாக தான் இருக்க வேண்டும்.//

விஷமத்தனமும் இல்லை ஒரு மண்ணுமில்லை. லண்டனில் தமிழர்கள் என்ற வகையில் ஈழத்தமிழர்கள் தான் பெரும்பான்மையினர். அவர்கள் என்ன அடையாளத்தை விரும்புகிறார்களோ அதைத் தான் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பார்கள். Global Tamil Forum தான் இந்தக் கொடியை மெற்றோபொலிற்ரன் பொலிசுக்குக் கொடுத்தது. பிரிட்டனில் விடுதலைப்புலிகள் இன்னும் தடை செய்யப்பட்டிருபதால் தான் இலங்கை அரசு முறைப்பாடு செய்ய முடிகிறது அல்லது பிரிட்டனின் உள்ளநாட்டு விடயத்தில் அவர்கள் தலையிட முடியாது.

viyasan said...

//பெயர் வைக்க ஏன் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளிடம் போகவேணும். நாம் பிறந்தது தமிழ்நாடாக இருக்காலம். இன்று நாம் வெளி நாட்டு தமிழர். //

நம்பள்கி அண்ணா,

உங்களின் ஆதங்கம் உங்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவருக்கும் உண்டு. ஆனால் என்ன செய்வது இது தான் நிலை என்றால், அதை முற்றாக ஒதுக்கித் தள்ளி விட்டு ஒன்றும் செய்ய முடியாது, நீங்களும், நாங்களும் வெளி நாடுகளில் வாழ்ந்தாலும், தமிழ் நாட்டையும், தமிழீழத்தையும் முற்றாக ஒதுக்கி விட முடியாது. இந்தக் கொடி, வெளிநாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழவதும் வாம் தமிழர்கள் அனைவருக்குமாக, அதனால் அந்த விடயம், தமிழ்நாட்டில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் அதனால் தான் நான் செல்வி. ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தேன். தலையிருக்க வாலாட முடியாது. :))

viyasan said...

//தஞ்சை பெரிய கோவிலையும், புலியையும் இணைத்து ஒரு கொடியை உருவாக்கலாம்//

என்னைப் பொறுத்த வரையில் இதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொடிதான், நன்றி.

Unknown said...

ஆம்.ஆயிரம் ஆண்டுகள் முற்பட்ட தஞ்சை பெரிய கோயிலும் புலி சின்னம் இனைந்து ஒரு கொடி தான் சரியாய் இருக்கும்.

Unknown said...

ஆம்.ஆயிரம் ஆண்டுகள் முற்பட்ட தஞ்சை பெரிய கோயிலும் புலி சின்னம் இனைந்து ஒரு கொடி தான் சரியாய் இருக்கும்.