Saturday, September 7, 2013

மணிமேகலைக்கு அமுதசுரபியை கொடுத்ததே ஈழத்தமிழர்கள் தான்!
கலைஞர் கருணாநிதியின் போதாத காலம், அவர்   “அன்னை” சோனியாவை தமிழர்களின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலையின்  கதாநாயகியுடன் ஒப்பிட்டு அவருக்கு 'ஐஸ்' வைத்தாலும் வைத்தார், எல்லோரும் அதைப்பற்றி விவாதிக்க தொடங்கி விட்டார்கள். 

இதில் கல்யாணச் சந்தடியில் மாப்பிள்ளையை மறந்து போனது போல அந்த மணிமேகலையான மணிமேகலைக்கே அந்த அமுத சுரபியைக் (அட்சயபாத்திரத்தை) கொடுத்தவர்கள் நாங்கள், ஈழத்தமிழர்கள் என்பதை எல்லோரும்  மறந்து விட்டார்கள் போல் தெரிகிறது, அதாவது சோனியாவிடம் ஈழத்தமிழர்கள் அமுதசுரபியைக் கொடுப்பார்களா என்பதை யாரும் சிந்தித்துப் பார்த்ததாக தெரியவில்லை. :)


மணிமேகலையை இயற்றிய சீத்தலைச் சாத்தனார்  மணிபல்லவம் எனக் குறிப்பிடுவது யாழ்ப்பாணக்குடாநாடு என்பது யாவராலும் ஒப்புக்கொண்டதொன்று. மணிமேகலை இரண்டு முறை யாழ்ப்பாணம் சென்றார், மணிமேகலையில் குறிப்பிடப்படும் நாகதீவு அல்லது மணிபல்லவம் தான் நாகதீவு, மணிபல்லவம், நாகதிவயினதீவு, நாகதீபம் என்றெல்லாம் அழைக்கப்படும் யாழ்ப்பாணத்திலுள்ள நயினாதீவாகும். 

அறுபத்துநான்கு சக்திபீடங்களில் ஒன்றாகிய பழமை வாய்ந்த நயினாதீவு (நாகதீபம்) நாகபூசணி அம்மன் கோயிலும், புத்தர் வருகை தந்ததாக சிங்களவர்களால் நம்பப்படும் பெளத்த விகாரையும், இத்தீவில் தான் உண்டு. அமுதசுரபி கிடைக்கப்பெற்ற கோமுகிப் பொய்கையின் தீவும் இதுதான். மணிபல்லவம் தீவில்  இரண்டு நாக அரசர்களின் (சகோதரர்கள்) இரத்தின சிம்மாசனத்துக்கான சண்டையைத் தீர்த்து வைக்க புத்தர் அங்கு வந்ததாகக் குறிப்பிடுகிறது சிங்களவர்களின் மகாவம்சம்.


படம்: 
மணிபல்லவம் தீவில்  நாகர்களின்  (ஈழத்தமிழர்களின் முன்னோர்கள்) சகோதர யுத்தத்தை (எங்களின் பரம்பரை வழக்கம்) புத்தர் சாக்கியமுனி சமாதானமாக தீர்த்து வைக்கும் காட்சி. மணிமேகலை மணிபல்லவத்தில் (யாழ்ப்பாணத்தில்) அமுதசுரபியைப் பெற்ற கதை

ஆபுத்திரன் தான் தங்குவதற்கு வேறு இடமின்றித் தென் மதுரையை அடைந்து சிந்தாதேவியின் கோவிலின் முன்னேயுள்ள அம்பலத்தை இருப்பிடமாகக் கொண்டு கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி வீடுதோறும் சென்று பிச்சை வாங்கினான். அவன் அந்த அம்பலத்தில் ஓர் இரவில் தூங்கும் பொழுது சிலர்வந்து "பெரும்பசி எங்களை வருத்துகின்றது' என்றார்கள். அதைக்கேட்ட ஆபுத்திரன் அத்துன்பத்தைத் தீர்க்க இயலாதவனாய் மிகவும் வருத்தமடைந்தான்.

அச்சமயத்தில் சிந்தாதேவி ஆபுத்திரன் முன்தோன்றி உணவை எடுக்க எடுக்க குறையாத அமுதசுரபியை அவன் கையில் கொடுத்தது. அதனால் ஆபுத்திரன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். பின்னர்ச் சிந்தாதேவியைப் பணிந்து வணங்கினான்.

சிந்தா தேவி! செழுங்கலை நியமித்துநந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி!ஏனோ ருற்ற இடர்களை வாய்

அதன் பின்னர் அப்பாத்திரத்தைக் கொண்டு, பசியால் மிகவும் வருந்தி யாசித்த அவர்களுக்கு உணவளித்து மகிழ்வித்தான். அன்று முதல் அவ்வாறே எல்லா உயிர்களுக்கும் உணவளிப்பா னாயினன். உண்பதற்காக மனிதர்கள் பலர் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். விலங்குகளும் பறவைகளும் அவனைப் பிரியாமல் அன்புடன் சூழ்ந்து கொண்டன. ஆபுத்திரன் அவ்வாறு இருக்கையில், இந்திரன் ஒருநாள் அவனது புண்ணிய மிகுதியைத் தனது பாண்டுகம்பள நடுக்கத்தால் அறிந்தான். அதனால் அவனுக்கு வரங்கொடுக்க நினைத்து ஒரு முதிய வேதியனது வடிவுடன் வந்து நின்று, "நான் இந்திரன்: வரங் கொடுத்தற்கு வந்தேன் நீ விரும்பியது யாது? உன்னுடைய தானத்தின் பயனைப் பெற்றுக் கொள்வாயாக'' என்று கூறினான்.

ஆபுத்திரன் விலாவெலும்பு ஒடியும் வண்ணம் சிரித்து வறுமையால் வாடியவர்களின் பசியினைத் தீர்த்து அவர்களது இன்முகத்தை நான் காணும்படி செய்கின்ற வகை ஒன்றே எனக்கு போதுமானதாகும். வேறொன்றும் எனக்கு வேண்டுவதில்லை' என்று அவனை மதியாது சொன்னான். இந்திரன் கோபித்து பசித் துன்பத்தால் வருந்துவோர் இல்லையாகும்படி செய்யவேண்டுமென்று மனதில் நினைந்து எங்கும் மழை பெய்வித்து மிக்க செல்வத்தை உண்டாக்கினான். அதனால் பசித்து வருவோர் இலராயினர் அதுகண்டு ஆபுத்திரன் முன் இருந்த அம்பலத்தை நீங்கி ஊர்தோறும் சென்று யாருக்கேனும் உணவு வேண்டுமா என்று கேட்டான். அது கேட்ட யாவரும் செல்வ மிகையால் அவனை இகழந்தார்கள். உணவு யாசிப்போர் இல்லாமையால் அவன் பெருஞ்செல்வத்தை இழந்தோரைப் போன்று வருந்தித் தனியே எங்கும் சென்று கொண்டிருந்தான்.

                                                                          மணிபல்லவத்தீவு
அக்காலத்தில் கப்பலில் வந்த சிலர் அவனைக் கண்டு சாவகநாடு மழையில்லாமையால் மிகுந்த வறுமையுற்றதென்றும் அதிலுள்ள உயிர்கள் பெரும்பாலும் பசியால் இறந்தனவென்றும் கூறினர். அது கேட்டு அவன் அந்நாட்டிற்குச் செல்ல நினைத்து ஒரு கப்பலில் ஏறினான். அக்கப்பல் சென்று மணிபல்லவத்தினருகே ஒரு நாள் தங்கிற்று. அவன் அத்தீவில் இறங்கினான்

இறங்கிய ஆபுத்திரன் ஏறிவிட்டானென்று மாலுமி எண்ணி இருளில் அக்கப்பலை வேற்றிடம் செலுத்திக் கொண்டு போயினான். அது தெரிந்த ஆபுத்திரன் மிகுந்த வருத்தமடைந்து, பலருக்கு உணவளிக்கும் இப்பாத்திரத்தை வைத்துக் கொண்டு  இத்தீவில்  இருக்கமாட்டேன். (செல்வம் நிறைந்த , பசி, பஞ்சமற்ற நாகதீவில் அமுதசுரபியின் தேவை இருக்கவில்லை.) என்று கூறி அமுதசுரபி பாத்திரத்தைத் தொழுது ஆண்டுக்கு ஒரு நாள் நீ தோன்றுவாயாக'' என்று கூறி மணிபல்லவத் தீவிலிருந்த கோமுகிப் பொய்கையில் அதை விட்டு விட எண்ணி மிக்க கருணையோடு கூடித் தருமம் செய்தலையே மேற்கொண்டு எல்லா உயிர்களையும் பாதுகாப்போர் யாரேனும் இத்தீவுக்கு வந்தால் அவர் கையில் புகுவாயாக என்று சொல்லி அப்பொய்கையில் விட்டுவிட்டு தான் பட்டினி கிடந்து உயிர் துறந்தான்.

அப்பொழுது அத்தீவிற்குச் சென்ற நான் அவனைக் கண்டு நீ என்ன துன்பமடைந்தாய்? என்று கேட்டேன் , அவன் நிகழ்ந்தவற்றைச் சொல்லி மணிபல்லவத்தில் உடம்பை வீழ்த்திவிட்டு எல்லா உயிர்களையும் பாதுகாக்கும் எண்ணத்தோடு சென்று சாவகநாட்டு அரசனுடைய பசு வயிற்றில் பிறந்தான். இந்திரன் செய்த செயலால் அமுத சுரபிக்கு வேலையின்றிப் போக ஆபுத்திரன் மணிபல்லவத் தீவில் அமுதசுரபியை விட்டு உயிர்நீத்தான். 

உதயணன் பின் தொடர்ந்ததன் காரணமாக மணிபல்லவத் தீவிற்கு வந்த மணிமேகலை அமுதசுரபி பற்றி கேள்விப்பட்டு அதனை பெற முயன்று வெற்றி பெறுகிறாள். அப்போது அவளுக்கு ஆபுத்திரனின் வரலாறு எடுத்துரைக்கப்படுகிறது. 


தருமபீடீகையைக் காத்துக் கொண்டிருக்கும் தீவதிலகை என்னும் பெண்மணி புத்தபீடீகையில் அமுதசுரபி இருக்கும் செய்தியை அறிவிக்கின்றாள். அந்தப் பீடீகைக்கு முன் கோமுகி என்னும் பொய்கை உள்ளது. அப்பொய்கையின் உள்ளிருந்து அமுதசுரபி என்னும் அட்சயப்பாத்திரம் ஒவ்வொரு ஆண்டும் புத்த பெருமான் பிறந்த நன்னாளாகிய வைகாசி மாதம் பௌர்ணமி நாளில் மேலே வந்து தோன்றும் இன்றும் அந்நாளே. தோன்றும் பொழுதும் இதுவே. பழம்பிறப்புணர்ச்சியை அடைந்தமையால் உன் கைக்கு அப்பாத்திரம் கிடைக்கும் என எண்ணுகின்றேன் என்று தீவதிலகை மணிமேகலைக்கு அறிவுறுத்தினாள். 

மகிழ்ச்சியுற்ற மணிமேகலை அமுதசுரபியைப் பெறுவதற்கு விரும்பி புத்த பீடீகையைத் தொழுது அவளுடன் சென்று கோமுகி பொய்கையை வலம்வந்து நின்றவுடன் அப்பாத்திரம் பொய்கையின் உள்ளிருந்து வந்து மணிமேகலையின் கையை அடைந்தது. அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை பூம்புகாருக்குச் சென்றாள். பூம்புகாரில் அறவணடிகளைச் சந்தித்து ஆபுத்திரனின் வரலாற்றையும் அமுதசுரபியின் வரலாற்றையும் கேட்டறிந்தாள். பின்னர் ஆதிரையிடம் முதலில் பிச்சைப் பெற்று அமுதசுரபியின் மூலம் பசிப்பிணி நீக்கி வந்தாள் என மணிமேகலை குறிப்பிடுகிறது.

இந்தக் கோயில் உள்ள இடத்திலிருந்த கோமுகியில் தான் மணிமேகலைக்கு அமுதசுரபி (ஈழத்தமிழர்களால் பாதுக்கப்பட்டது) கிடைத்தது  . எப்படித்தான்  தவிர்க்க முயன்றாலும் எனது பதிவில் கோயில்கள் வந்து விடுகின்றன ஏனென்றால் சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை.  :)

யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம்


நன்றி:

மணிமேகலையில் அமுதசுரபி என்னும் தொன்மம் 

No comments: