Wednesday, September 4, 2013

இன்று யாழ். நல்லூர் முருகனின் தேர்த்திருவிழாவரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் உற்சவம் கடந்த 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் விண்ணதிரும் அரோகரா ஓசையுடன் தேர்த் திருவிழா நடைபெற்றது. 

இன்று அதிகாலை தொடங்கிய நித்திய பூஜை வசந்தமண்டப பூஜைகளைத் தொடர்ந்து காலை 7.15 மணிக்கு முருகப்பெருமான் சித்திரத் தேரில் எழுந்தருளி வந்து அடியவர்களுக்கு அருட்காட்சி கொடுத்து 9.25 மணியளவில் தேர் முட்டியை வந்தடைந்தது. 


முருகப்பெருமானின் தீர்த்தத் திருவிழா நாளை தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் போல் அல்லாமல் இம்முறை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் எதிர்ப்பால் அந்த மலையாளி மேளத்துக்கு நல்லூர்த்திருவிழாவில் அனுமதியளிக்காதது குறிப்பிடத்தக்கது.  

பாடலாசிரியர் புதுவை இரத்தினதுரை
இசை நாடா நல்லை முருகன் பாடல்கள்


தேரடியில் காலையிலே நானழுத வேளையிலே
நீ திரும்பிப் பார்க்கவில்லை முருகா - உன்
காலடியில் நான் இருந்து கண் சொரிந்த போதினிலே
கண்டு மனமிரங்கவில்லை முருகா

கண் திறந்து பார்க்க வில்லை முருகா - என்னை
கண்டு மனமிரங்கவில்லை முருகா

நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு
தொல்லை அற்று போகுமென்றார் முருகா - நான்
வெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதேன்
துள்ளி வந்து சேரலையே முருகா

வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே
வேறிடத்தில் நீ ஒளித்தாய் முருகா - நீ
ஏறி வந்த தேர் இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு
எங்கேயடா போய் ஒளித்தாய் முருகா

செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில்
உந்தன் அருள் வேண்டுமடா முருகா - நீ
வந்திருந்து பூச்சொரிந்தால் வாசலிலே கையசைத்தால்
வல்ல தமிழ்  வெல்லுமடா முருகா
8 comments:

க்ருஷ்ணகுமார் said...

அன்பின் வ்யாஸன்,

நல்லூர் முருகன் திருவிழா ஒளிக்கோப்புகளை தங்கள் தளம் வாயிலாகக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். எங்களுக்குக் குல தெய்வம் பழனியாண்டவர்.

முருகன் பழனி செல்லும் விழா பற்றிய ஒரு ஒளிக்கோப்பின் தலைப்பைப் பார்த்தேன். ஒளிக்கோப்பை இனிமேல் தான் காண வேண்டும். பழத்திற்காக பழனி சென்ற கந்தனின் நினைவாக இந்த நிகழ்வு ஈழத்தில் கொண்டாடப்படுகிறதா?

நான் ஹிந்துஸ்தானத்தின் வடவெல்லையில் வசித்து வருகிறேன். திருவிழாக் காட்சிகளையும் ரதோத்ஸவத்தையும் காணுகையில் எனக்கு எங்கள் பழனியாண்டவனின் தங்க ரதமே நினைவுக்கு வந்தது கண்கள் பனித்தன.

எல்லா ஒளிக்கோப்புகளையும் பார்க்கையில் சிறுவர் சிறுமியரின் கலை நிகழ்ச்சிகளையும் பார்க்க நேர்ந்தது. அருமை. அதுவும் முருகனாகவும் அவ்வைப்பாட்டியாகவும் வந்த சிறுவர் சிறுமியர் ஈழத்தமிழ் நடையிலே பேசியமை..... அவ்வைப்பாட்டியாக வந்த சிறுமி கிள்ளை மொழியிலே ஆத்திச்சுவடி சொல்லியது...... மிகவும் அருமை.

உத்ஸவ மூர்த்தியை ஒவ்வொரு வீடுகளிலும் வரவேற்கும் முறை வியக்க வைக்கிறது. ஒரு மேஜையிலே இரு நந்தா விளக்குகள் வைத்து அதனடுவில் பூர்ணகும்பம் வைத்து இறைவனை ஒவ்வொரு வீட்டிலும் வழிபடும் முறையின் அழகே அலாதி.

ஒவ்வொரு உத்ஸவத்திலும் எவ்வளவு பெரிய ஜனசமுத்ரம். கிட்டத்தட்ட பெரும்பாலான ஆடவர்கள் ஆலய வழிபாட்டு முறைப்படி மேற்சட்டை அணியாது வேஷ்டியணிந்து விழாவில் காணப்படுவது முறையான ஆலய வழிபாட்டில் யாழ் மக்களுக்கு இருக்கும் ச்ரத்தையை புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வளவு போர்கள் உயிரிழப்பு இவற்றுக்குப் பிறகும் தங்கள் கலாசாரத்தைப் பேணும் இந்த அடியார்களின் திருத்தாட்களில் என் சென்னியதே என்பதல்லால் வேறு என்ன சொல்ல இயலும்.

அடியார் குழாத்தின் ஹரஹரோஹரா ஒலி சமுத்ர அலைகளுடன் சமர் செய்யும் பாங்கு. அடியார்கள் திருப்புகழ் மற்றும் தேவாரமோதுதல். எத்தனையெத்தனை நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் விழாவில் பங்கு கொள்கின்றனர். அருமையய்யா அருமை.

உருகியுமாடிப் பாடியும் உணர்வினொடூடிக் கூடியும் உனதடியாரைச் சேர்வதும் ஒரு நாளே..... என எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் பாடியுள்ளார். உடலால் இயலாவிடினும் சில மணித்துளிகள் மனதால் இந்த அடியார் குழாத்துடன் கலந்தமை மனதிற்கு மிகுந்த சாந்தியை அளிக்கிறது. பரிச்ரமப்பட்டு இந்தக் கோப்புகளைப் பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள் பல.

திருப்புகழும் தேவாரமும் திவ்யப்ரபந்தமும் ஈழமெங்கும் உரத்து தொடர்ந்து ஒலிக்க மயிலேறும் பெருமாளின் தாள் இறைஞ்சுகிறேன்.

viyasan said...

////திருப்புகழும் தேவாரமும் திவ்யப்ரபந்தமும் ஈழமெங்கும் உரத்து தொடர்ந்து ஒலிக்க மயிலேறும் பெருமாளின் தாள் இறைஞ்சுகிறேன்.//

திரு. க்ருஷ்ணகுமார்,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நல்லூர்த்திருவிழா யாழ்ப்பாணத் தமிழர்களைப் பொறுத்த வரையில் தமது வீடுகளில் நடக்கும் திருமணங்கள் போல் முக்கியமானது. நல்லூர் திருவிழா நடக்கும் 26 நாட்களும் சைவ உணவும், கோயிலுக்குப் போவதும் முக்கிய கடமைகளில் ஒன்று. அதனால் தான் ஒவ்வொரு நாளும் கோயில் மக்களால் நிரம்பி வழிகிறது. ஈழத்தில் எல்லாக் கோயில்களிலும் இப்படித்தான். ஈழத்தமிழர்களின் சைவமும் தமிழும் பிரிக்க முடியாதது என்ற நம்பிக்கையின் அடிப்படை தான் இந்த விழாக்கள் எல்லாம். போத்துக்கேயரிடமிருந்து சைவத்தை காத்தவர்கள் யாழ்ப்பாணத்தமிழர்கள் அதனால் அந்த பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.

viyasan said...

//முருகன் பழனி செல்லும் விழா பற்றிய ஒரு ஒளிக்கோப்பின் தலைப்பைப் பார்த்தேன். ஒளிக்கோப்பை இனிமேல் தான் காண வேண்டும். பழத்திற்காக பழனி சென்ற கந்தனின் நினைவாக இந்த நிகழ்வு ஈழத்தில் கொண்டாடப்படுகிறதா?//

ஆம். அந்த புராணக்கதை மாம்பழத் திருவிழா என்ற பெயரில் 22ம் நாள் காலையில் கொண்டாடப்படுகிறது. முருகனும், பிள்ளையாரும் ஒன்றாக வீதி வலம் வந்த பின்னர், பிள்ளையார் மாம்பழத்தைப் பெற்றுக் கொண்டு கோயிலுக்குள் போவார். ஆனால் முருகன் ஆண்டி வேடம் போட்டுக் கொண்டு, பழனிக்குப் புறப்பட்டு போவதாக அடுத்த வழியாக கோயிலுக்குள் போவார். அந்த காணொளிகளை நீங்கள் இங்கே காணலாம்.

http://www.youtube.com/watch?v=F4GtVV22HQc

http://www.youtube.com/watch?v=5166Tdc5dyA

viyasan said...

//உத்ஸவ மூர்த்தியை ஒவ்வொரு வீடுகளிலும் வரவேற்கும் முறை வியக்க வைக்கிறது. ஒரு மேஜையிலே இரு நந்தா விளக்குகள் வைத்து அதனடுவில் பூர்ணகும்பம் வைத்து இறைவனை ஒவ்வொரு வீட்டிலும் வழிபடும் முறையின் அழகே அலாதி.//

தமிழ்நாட்டில் இந்த வழக்கம் இல்லையா? ஈழத்தில் இது சாதாரணமாக எல்லா ஊர்களிலும் நடைமுறையில் உண்டு, சுவாமி திருவுலா வரும் போது அந்த வீதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலும் குத்துவிளக்கு நிறை குடம் மலர்கள் வைத்தும் அத்துடன் சிலர் பழங்கள், இனிப்பு பண்டங்கள் என்பவற்றை என்பவற்றை வைத்தும் வரவேற்பார்கள்.

க்ருஷ்ணகுமார் said...

\\ தமிழ்நாட்டில் இந்த வழக்கம் இல்லையா? \\\

தமிழகத்தில் பூ,பழம், பக்ஷணாதிகள் இவற்றை தாம்பாளத்திலிட்டு உத்ஸவ மூர்த்திக்கு சமர்ப்பிப்பர். ஆனால் நேர்த்தியாக பூர்ண கும்பத்தை இரு நந்தாவிளக்குகளிடையே வைக்கும் அழகான பாங்கு நான் பார்த்த வரைக்கும் இல்லை.

விழா மொத்தம் எத்தனை நாட்களுக்கு நிகழ்கிறது?

ஓவ்வொரு நாள் விழாவில் என்னென்ன நிகழ்ச்சிகள் நிகழ்வது வழக்கம் போன்ற விபரங்கள் அறிய ஆவலாக இருக்கிறேன். நல்லூர்க் கந்தன் விழாவில் எங்கள் பழனிப்பதிவாழ் பாலகுமாரனை நினைவுறுத்தும் நிகழ்வுகள் நானறியாது ஒரு பாந்தவ்யத்தை அளிக்கிறதே.

தங்களுக்கு பரிச்ரமம் இருக்காது எனின் ஒட்டு மொத்த விழாவையும் தினசரி விழாக்குறிப்புகளுடன் ....... அந்தந்த தின காணொளிக் கோப்பு சஹிதம்...... தமிழ் ஹிந்து போன்ற வெகுஜன தளத்தில் பதிக்க இயலுமாயின்...... யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற படிக்கு மிகப் பல முருகனடியார் வாசித்து..... கண்டு மகிழும்..... பேறு கிட்டப்பெறுவார்களே.

ஈழத்தைச் சார்ந்த மதிப்பிற்குறிய ப்ரம்மஸ்ரீ மயூர கிரி சர்மா அவர்கள் தமிழ் ஹிந்துவில் பல வ்யாசங்கள் சமர்ப்பித்துள்ளார். நல்லூர்க் கந்தனின் திருவிழாப்படங்கள் சிலவற்றைக்கூட தன் வ்யாசத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் ஒட்டு மொத்த திருவிழா பற்றிய விரிவானதொரு வ்யாசம் தங்களாலோ அன்பர் மயூரகிரி சர்மா அவர்களாலோ தமிழ் ஹிந்து தளத்தில் சமர்ப்பிக்கப் பெறின் மிகப்பலரும் பயனுறுவர் என்பது என் அபிலாஷை.

கூடவே இந்த ஸ்தலத்தைக் காண வேண்டும் என்றும் எண்ணம் உண்டாகிறது. அதையும் எங்கள் பழனியாண்டவன் நடாத்தித் தருவான் என்று நம்பிக்கை உள்ளது.

எண்ணிறந்த நாட்களுக்கு என் நினைவை விட்டு அகலாது இந்தத் திருவிழாக் காட்சிகள்.

ஈழத்தில் இன்று வசித்து வரும் ஈழத்தமிழ் மக்கள் பற்றி எனக்கு மிகுந்த வ்யாகூலம் உண்டு. ஸ்ரீ ராஜ் ஆனந்தன் அவர்களின் தமிழ் ஹிந்து தளத்தில் பகிரப்பட்ட வ்யாசங்கள் வாயிலாக........ ஈழத்தின் கிழக்குப் பகுதிகளில் இருந்த சிவாலயங்கள், மாரியம்மன் மற்றும் நாட்டார் வழிபாட்டு ஆலயங்கள்...... ஈழத்தில் வசிக்கும் தமிழ் பேசும் முஸல்மாணிய சஹோதரர்களால் ஆக்ரமிப்புக்கு உள்ளாகி சிதைக்கப்பட்டுள்ளன என்பதை படக்காட்சிகளுடன் பகிர்ந்திருந்தமை நினைவுக்கு வருகிறது.

இன்று கிழக்கில் நிலைமை எப்படி? தமிழ் பேசும் முஸல்மாணிய சஹோதரர்கள் தமிழ் பேசும் ஹிந்து மக்களுடன் ஒப்புறவுடன் இருக்கிறார்களா? தமிழ் பேசும் க்றைஸ்தவ அன்பர்கள் தமிழ் பேசும் ஹிந்துக்களுடன் ஒப்புறவாக இருக்கிறார்கள் என்பது தங்கள் வ்யாசங்கள் மூலம் தெரிய வருகிறது.

இணைய தளத்தில் இது சம்பந்தமாகக் கூச்சலே காணப்படுகிறது. தங்களது பதிவுகள் கூச்சலின்றி சார்புகளின்றி தகவல்களின் தொகுப்புகளாக இருக்கின்றன. அதற்கும் எனது நன்றிகள்.

தங்களது வ்யாசங்களை வாசிக்கையில் ஹிந்துஸ்தானத்தின் வடவெல்லையில் லே(ஹ்), ஹிமாசலம், சிக்கிம் பகுதிகளில் இருக்கும் வஜ்ரயான பௌத்தத்திற்கும் ஈழத்தில் இருக்கும் தேராவாத பௌத்தத்திற்கும் ...... இந்த பௌத்தப் பிரிவுகளைப் பேணும் அன்பர்களின் மனோ நிலையிலும் பேதங்கள் இருப்பது தெரிய வருகிறது.

சிங்கள பௌத்தர்களில் ஈழத்தமிழர் நலன் பேணும் பௌத்தர்கள் அறவே இல்லையா? அல்லது அப்படி ஏதும் ஒரு பிரிவினர் பெயரளவுக்காவது இருக்கின்றனரா? அப்படி ஒருக்கால் இருப்பின் அவர்களது செயல்பாடுகள் யாவை என்பதனையும் தங்கள் வாயிலாக அறிய விழைகிறேன்.viyasan said...

திரு.க்ருஸ்ணகுமார்,

மன்னிக்கவும், உங்களுக்கு பதிலளிக்க தவறி விட்டேன். :(

//விழா மொத்தம் எத்தனை நாட்களுக்கு நிகழ்கிறது?//

எல்லாமாக 27 நாட்கள். நானும் High school உடன் இலங்கையை விட்டு வந்து விட்டேன், இங்கு நான் நல்லூரைப் பற்றி எழுதும் விடயங்கள் எல்லாம் எனது அம்மாவிடம் அல்லது மற்றவர்களிடம் கேட்டு எழுதுவது தான். அடுத்த வருடம் திருவிழாவுக்கு அங்கு போகலாம் என்றிருக்கிறேன்.

//ஓவ்வொரு நாள் விழாவில் என்னென்ன நிகழ்ச்சிகள் நிகழ்வது வழக்கம் போன்ற விபரங்கள் அறிய ஆவலாக இருக்கிறேன். நல்லூர்க் கந்தன் விழாவில் எங்கள் பழனிப்பதிவாழ் பாலகுமாரனை நினைவுறுத்தும் நிகழ்வுகள் நானறியாது ஒரு பாந்தவ்யத்தை அளிக்கிறதே.//

www.nalluran.com/ இந்த இணையத்தளத்தில் நல்லூர் பற்றிய பல விடயங்களை அறியலாம்.//ஈழத்தைச் சார்ந்த மதிப்பிற்குறிய ப்ரம்மஸ்ரீ மயூர கிரி சர்மா அவர்கள் தமிழ் ஹிந்துவில் பல வ்யாசங்கள் சமர்ப்பித்துள்ளார். நல்லூர்க் கந்தனின் திருவிழாப்படங்கள் சிலவற்றைக்கூட தன் வ்யாசத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் ஒட்டு மொத்த திருவிழா பற்றிய விரிவானதொரு வ்யாசம் தங்களாலோ அன்பர் மயூரகிரி சர்மா அவர்களாலோ தமிழ் ஹிந்து தளத்தில் சமர்ப்பிக்கப் பெறின் மிகப்பலரும் பயனுறுவர் என்பது என் அபிலாஷை.//

நன்றி. ஆனால் ப்ரம்மஸ்ரீ மயூர கிரி சர்மா போல் எழுதுமளவுக்கு எனக்கு சமய அறிவோ அல்லது தமிழ் அறிவோ கிடையாது.

//கூடவே இந்த ஸ்தலத்தைக் காண வேண்டும் என்றும் எண்ணம் உண்டாகிறது. அதையும் எங்கள் பழனியாண்டவன் நடாத்தித் தருவான் என்று நம்பிக்கை உள்ளது.//

நிச்சயமாக, யாழ்ப்பாணம் போவது பெரிய காரியமல்ல. நீங்கள் விரும்பினால், நல்லைக்குமரன் உங்களை நிச்சயமாக தன்னை தரிசிக்க வைப்பான்.

//எண்ணிறந்த நாட்களுக்கு என் நினைவை விட்டு அகலாது இந்தத் திருவிழாக் காட்சிகள்.//

ஈழத்தில் கோயில் திருவிழாக்கள் பயபக்தியுடன், மிகவும் சுத்தமானா ஆலயத்தில், சுத்தமான சூழலில் நடத்தப்படுபவை. கோயிலும் சூழலும் சுத்தமாக, எமது உடலும் சுத்தமாக இருக்கும் போது ஆன்ம சுத்தியும் தானாக ஏற்படுகிறது

viyasan said...

//..... ஈழத்தில் வசிக்கும் தமிழ் பேசும் முஸல்மாணிய சஹோதரர்களால் ஆக்ரமிப்புக்கு உள்ளாகி சிதைக்கப்பட்டுள்ளன என்பதை படக்காட்சிகளுடன் பகிர்ந்திருந்தமை நினைவுக்கு வருகிறது. //

உண்மை. ஆனால் முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப்படுவதை விட பல மடங்கு சிங்கள பெளத்த பிக்குகளாலும், அவர்களின் பெளத்த மதவெறி பிடித்த சிங்களவர்களாலும் அழிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் இந்துக்கள், குறிப்பாக பாஜகவினர் சிங்கள பெளத்தர்களால் அழிக்கப்படும் இந்துக் கோயில்களைப் பற்றி அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை.


//இன்று கிழக்கில் நிலைமை எப்படி? தமிழ் பேசும் முஸல்மாணிய சஹோதரர்கள் தமிழ் பேசும் ஹிந்து மக்களுடன் ஒப்புறவுடன் இருக்கிறார்களா?//

இப்பொழுது சிங்களவர்களின் இனவாதப் பீரங்கி முஸ்லீம்களின் பக்கம் திரும்பி இருப்பதால், அவர்கள் தம்மைக் காத்துக் கொள்ளும் கவலையில் இருக்கிறார்கள். ஆனால் அரேபிய பணத்தினாலும், அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லீமா அமைச்சர்களின் உதவியுடன் கிழக்கில் பல இந்துக் கோயில்களின் நிலங்கள் முஸ்லீமக்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது உண்மையே.

viyasan said...

//தமிழ் பேசும் க்றைஸ்தவ அன்பர்கள் தமிழ் பேசும் ஹிந்துக்களுடன் ஒப்புறவாக இருக்கிறார்கள் என்பது தங்கள் வ்யாசங்கள் மூலம் தெரிய வருகிறது.//

இலங்கையில் கிறித்தவர்களும், இந்துக்களும் தமிழர் என்ற முதல் அடையாளத்தில் இணைவதால், அவர்களிடம் மதப்பிரச்சனை என்ற ஒன்று கிடையாது. இந்து- கிறித்தவ நல்லிணக்கம் இலங்கைத் தமிழர்களிடம் உள்ளது போன்று வேறெங்கும் கிடையாது. அதை விட இந்து – கிறித்தவ கலப்பு மணங்களும் அதிகம். அதற்கு மதம் இடைஞ்சலாக இருப்பதோ அல்லது மதம் மாற வேண்டும் என்ற கட்டாயமோ கிடையாது.

//இணைய தளத்தில் இது சம்பந்தமாகக் கூச்சலே காணப்படுகிறது. தங்களது பதிவுகள் கூச்சலின்றி சார்புகளின்றி தகவல்களின் தொகுப்புகளாக இருக்கின்றன. அதற்கும் எனது நன்றிகள். //

உங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி.

//தங்களது வ்யாசங்களை வாசிக்கையில் ஹிந்துஸ்தானத்தின் வடவெல்லையில் லே(ஹ்), ஹிமாசலம், சிக்கிம் பகுதிகளில் இருக்கும் வஜ்ரயான பௌத்தத்திற்கும் ஈழத்தில் இருக்கும் தேராவாத பௌத்தத்திற்கும் ...... இந்த பௌத்தப் பிரிவுகளைப் பேணும் அன்பர்களின் மனோ நிலையிலும் பேதங்கள் இருப்பது தெரிய வருகிறது. //

இலங்கையில் இருப்பது தேராவாத பெளத்தம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டாலும் லும் அது சிங்கள் அரசியல் பெளத்தம் என்பது சரியானது, புத்தரின் போதனைகளுக்கும் சிங்கள பெளத்தத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

//சிங்கள பௌத்தர்களில் ஈழத்தமிழர் நலன் பேணும் பௌத்தர்கள் அறவே இல்லையா? //

ஒரு சில சாதாரண சிங்களவர்கள் இருந்தாலும் சிங்கள பிக்குகளுக்குப் பயந்து அவர்கள் வாய் திறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

//அல்லது அப்படி ஏதும் ஒரு பிரிவினர் பெயரளவுக்காவது இருக்கின்றனரா? அப்படி ஒருக்கால் இருப்பின் அவர்களது செயல்பாடுகள் யாவை என்பதனையும் தங்கள் வாயிலாக அறிய விழைகிறேன்.//

உங்களின் வேண்டுகோளுக்காக அப்படி யாரும் உள்ளனரா என்ற தகவலை அறிய முயல்கிறேன்.

நன்றி.