Friday, September 13, 2013

இந்திய அகதிகளின் வருகையில் திடீர் அதிகரிப்பு!


பல இந்தியர்கள் ஈழத்தமிழர்கள் அகதிகளாக மேலைநாடுகளுக்கு போவதை நக்கலடிப்பதையும், அகதிகள் எனக் கூறி ஈழத்தமிழர்களை அவமானப்படுத்துவதையும்  நாமறிவோம்.  அவர்கள் உண்மையில் தமிழர்களா அல்லது தமிழ்நாட்டில் வாழும் தமிழ்பேசும் திராவிடர்களா என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் தான் கண்டவன், நின்றவன், வந்தவன், போனவன், பிழைப்பு தேடி வந்தவன், பிச்சை எடுக்க வந்தவன், அப்பன் ஆச்சி தமிழர் இல்லாதவன், எல்லோருமே, நாலு வார்த்தை தமிழில் பேசக் கற்றுக் கொண்டவுடன், நானும் தமிழ் பேசுகிறேன், எனக்கும் தமிழ் நாட்டை ஆள ஆசையாயிருக்கு, அதனால் நானும் தமிழன் தான் என்று வாதாடுகிறார்கள். 
அது ஒருபுறமிருக்க, அதிலும் குறிப்பாக  யாராவது ஈழத்தமிழர்கள் தமிழ், தமிழர், தமிழ்நாடு சம்பந்தமாக தமது கருத்தைத் தெரிவித்தால், அல்லது தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றால் அல்லது தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் எனக் கருத்து தெரிவித்தால், தமிழ் பேசும் அவர்கள்  கூறுவது என்னவென்றால் ஈழத்தமிழர்களால், தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஓட்டைக் கப்பலில், அல்லது கள்ளத்தோணியில் ஏற வேண்டி வருமாம்.  அதிலும் ஒரு மெத்தப்படித்தவர் ஒரு படி மேலே போய் யாழ்ப்பாணத்தமிழர்கள் தமிழ்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தப் பார்க்கிறார்கள், அதனால் இந்தியர்களாகிய தமிழ்நாட்டு தமிழர்கள் ஈழத்தமிழர்களைப் போல் கள்ளத்தோணியில் ஏற வேண்டி வரும் என்றார். அப்படிக் கூறுபவர்களுக்கு உண்மையில் கள்ளத்தோணியின் உண்மையான சரித்திரம் தெரியாது என்பது மட்டும் தெளிவாகிறது. 

ஈழத்தமிழர்கள் அகதிகளாக மற்ற நாடுகளுக்குப் போனதற்கு காரணம் உள்நாட்டுப் போர், சிங்கள இனவேறி, இனக்கலவரம் என்பது உலகம் முழுவதுக்கும் தெரியும் ஆனால் சில நாட்களுக்கு முன்னால் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையின் படி இந்தியாவிலிருந்து அகதிகள் அமெரிக்காவில் குவிகிறார்களாம். அதிலும் இந்திய அகதிகளின் வருகையில் திடீர் அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.  அந்த செய்தியைப் பார்க்கும் போது “பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை” என்ற ஈழத்துப் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
Indian Boat People in Canada 1914

ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் அகதிகளாகக் குவியும் போது, இலங்கைத் தமிழர்களால் இனிமேல் தான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதாவது இந்தியர்கள் இனிமேல் கள்ளத்தோணியில் ஏறவேண்டி வரும் என்பது போல் உளறியவர்களின் வாயை அடக்குவது போல் உள்ளது United States Department of Homeland security இன் இந்த செய்தி. 


உண்மையில் வெளிநாடுகளில் தமது உயிரைக் காப்பற்ற அகதிகளாக புகலிடம் கேட்குமளவுக்கு இந்தியாவில் நிலைமை இல்லை.  இந்தியா உண்மையில் சுமாரான சனநாயக நாடு, இலங்கையிலுள்ளது போன்ற நிலை இந்தியாவில் இல்லை. அப்படியானால் அமெரிக்காவில் அகதியாக அடைக்கலம் கோரும் இந்தியர்களில் பெரும்பாலானோர் பொய்களைச் சொல்லி அமெரிக்க அரசின் சட்டங்களை துர்ப்பிரயோகம் செய்வது மட்டுமன்றி,  உள்நாட்டுப் போர், இனவழிப்புகளிலிருந்து தப்பி அல்லது அரசியல் காரணங்களுக்காக உயிரைப் பாதுகாக்க ஓடிவரும் உண்மையான அகதிகளுக்கென உருவாக்கப்பட்ட அமெரிக்க அகதி நடைமுறைகளையும், அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளையும் ஏமாற்றுகிறார்கள்.

இந்த லட்சணத்தில் இலங்கைத் தமிழர்களை அகதிகள் என நக்கலடிப்பவர்களையும், அவர்களால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கள்ளத்தோணியில் ஏற வேண்டி வருமென உளறும் இந்தியர்களையும் நினைக்க சிரிப்பு தான் வருகிறது.

இலங்கைத் தமிழர்களாவது தமது சொந்தக் காசைக் கொடுத்து ஓட்டைக் கப்பலிலோ, அல்லது ஓட்டைப் பிளேனிலோ ஏறி அந்தந்த நாடுகளுக்குப் போய் நேரடியாக இறங்குகிறார்கள் ஆனால் இந்தியர்கள் என்னடாவென்றால் ஓட்டைக் கப்பல், ஓட்டைப்பிளேன் எல்லாம் ஏறி தென்னமெரிக்க நாடுகளில் எல்லாம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அலைந்து, மெக்சிகோவில் இறங்கி பல மைல் தூரம் பாலைவனம் எல்லாம் கடந்து அமெரிக்க எல்லையில் போய் புகலிடம் கேட்டு அழுகிறார்களாம், அது மட்டுமல்ல ஆயிரக்கணக்கானோர்  அமெரிக்க சிறைகளில் வருடக் கணக்கில் வாடுகிறார்கள். அதிலும் வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொரு இரவும் குறைந்தது இரண்டு டசின் (24 பேர்) இந்தியர்கள் இந்தியாவில் தமக்கு நடந்த 'சோகக் கதைகளை', அதாவது அரசியல் காரணங்களால் அவர்களின் உயிருக்கு ஆபத்து என்பதை நம்பக் கூடிய விதமாக சொல்லி அமெரிக்கர்களை நம்பவும் வைக்கிறார்களாம். 

  

No comments: