Tuesday, August 27, 2013

இவருக்காக ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் .தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் படும் இன்னல்களைப் பார்த்து ஆத்திரமுற்ற ஈழத்தமிழர் ஒருவர் தமிழ்நாட்டில் உண்மையான நிலவரம் தெரியாமல், உளறிக் கொட்டியிருப்பதைப் பார்த்தால் எந்த தமிழ்நாட்டுத் தமிழனுக்கும்   வெறுப்பு ஏற்படுவது  மட்டுமல்ல, உண்மையான தமிழுணர்வுடன் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கோடிக்கணக்கான தமிழ்நாட்டுத் தமிழர்களின் மனதையும், ஏன்,  உலகத் தமிழர்கள் அனைவரின் மனதையுமே இது புண்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அதனால் ஈழத்தமிழன் என்ற முறையில் எனது மன்னிப்பை தெரிவித்துக் கொள்வது மட்டுமன்றி ஈழத்தமிழர்கள் அனைவரும் இந்த மடையன் போல உண்மை நிலை தெரியாதவர்கள் அல்ல இவர் ஈழத்தமிழர்கள் அனைவரின் எண்ணத்தையும் பிரதிபலிக்கவில்லை என்பதையும் தெரிவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் என்ன குறுகிய நோக்கத்துக்காக ஈழத்தமிழர்களின் அவலத்தைக் கையிலெடுத்தாலும், தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வுபூர்வமான ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களை இவர் கொச்சைப்படுத்துவதை ஈழத்தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். என்னுடைய மின்னஞ்சலுக்கு  இந்த காணொளியை அனுப்பியதே தமிழுணர்வுள்ள நண்பன், ஒரு தமிழ்நாட்டு மாணவன் தான். அவரைப் போன்றவர்களின் உள்ளத்தை  இந்த காணொளி புண்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை.

மேலை நாடுகளில் உள்ள இலங்கை அகதிகளின் நிலையுடன், அதாவது மேலை நாடுகளுக்கு அகதிகளாகப் போகும் ஈழத்தமிழர்கள் ஒரு சில வருடங்களிலேயே அந்த நாட்டு குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர், அதை  இந்தியாவிலுள்ள அகதிகளின் நிலையுடன் ஒப்பிடுதல் தவறு என்பதை இவர் உணரவில்லை. அண்டை நாடுகளில் இருந்து வரும் பல அகதிகளுக்கு இந்தியா அடைக்கலம் அளித்தாலும் ஐக்கிய நாடுகள் சபையின் 1951 அகதிகள் சம்பந்தமான மாநாட்டிலும் அதைத் தொடர்ந்து 1967 Protocol இலும் இந்தியா கைச்சாத்திடவில்லை, அதை விட அகதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என்ற விடயத்தில் இந்தியாவிடம் ஒரு தேசிய கட்டமைப்பு கிடையாது, அதை விட சில இலங்கைத் தமிழ் அகதிகளை இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்பு படுத்தியிருப்பதாலும், இலங்கைத் தமிழ் அகதிகள் சம்பந்தமான முடிவுகள் பலவும் மத்திய அரசினாலேயே கையாளப்படுகின்றன. அதற்கு தமிழ்நாட்டுத் தமிழர்களைக் குறை கூறிப் பயனேதும் இல்லை, தமிழ்நாடு தனிநாடல்ல என்பதை இவர் உணரவில்லை போல் தெரிகிறது. பல ஈழத்தமிழர்கள் இந்த தவறை புரிகின்றனர். 

தமிழ்நாட்டு தமிழர்கள் விரும்பினாலும் அவர்களால் எங்களுக்காக படையனுப்ப முடியாது.  அது முடிந்தால் அவர்கள் எப்பொழுதோ தமது படையை அனுப்பி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை நடுக்கடலில் படுகொலை செய்வதை தடுத்திருப்பார்கள். இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் தமிழர்கள் அழிக்கப்படும் போது தமிழ்நாட்டுத் தமிழ் தலைவர்கள் சிலர் சுய நலத்துடன் இயங்கினர் என்பது உண்மை. அதற்கு காரணம் தமிழ்நாட்டுக்கு பெரியளவு ஆதரவு இந்திய மத்திய அரசில்  கிடையாது, அத்துடன் மலையாளிகளின் தமிழர் வெறுப்பும் சிங்களவர்களுக்கு சார்பாக வேலை செய்தது. அது மட்டுமன்றி இந்தியாவின் ஆரிய –திராவிட பிளவும் அதற்கு முக்கிய காரணமாகும். வட இந்தியர்கள் தமிழர்களை மட்டுமே திராவிடர்களாக கருதுகின்றனர்.

உண்மையில் இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்து, பெண்களைக் கற்பழித்து, அவர்களைத் தமது அடிப்படைத் தேவைகளுக்காகக் கூடக் குரல் கொடுக்காத முறையில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, சிங்களக் குடியேற்றங்களால் ஈழத்தமிழர்களின் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பறிக்கும் சிங்கள அரசுக்கு சவாலாக இருப்பது தமிழ்நாட்டு மக்களும் அவர்களின் உணர்வு பூர்வமான ஆதரவும் தானே தவிர புலம்பெயர்ந்த தமிழர்களின் பொருளாதார பலமோ அல்லது போராட்டங்களோ அல்ல.

"தமிழ்நாட்டில்  யாரும் ஈழப்பிரச்சினைக்காக என ஓட்டுப்போட்டு யாரையும் தேர்ந்தெடுப்பதில்லை என்பது அடிப்படை உண்மையாக" இருந்தாலும் கூட, இன அடிப்படையில், ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது துன்பம் நேர்ந்தால் அது தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்ற கருத்து உலகநாடுகளில் உள்ளது. சிங்களவர்களும் அப்படியே நம்புகிறார்கள். சில இந்தியர்கள் சொல்வது போல் சீமான், வைகோ, நெடுமாறன் போன்ற அரசியல் ஆதரவற்ற Fringe Elements தான் எங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள், ஈழத்தமிழர்களுக்கு பெரியளவில் தமிழ்நாட்டில் ஆதரவு கிடையாதென்பது ஒருவேளை உண்மையாக இருந்தாலும் கூட எதற்காக அதை நாங்களே வெளிப்படுத்தி சிங்களவர்களுக்குள்ள கொஞ்ச நஞ்ச பயத்தையும் போக்க வேண்டுமென்பதை  இந்த காணொளியில் பேசுபவர் உணரவில்லை என நான் நினைக்கிறேன். அல்லது இவரும் மகிந்தரின் செலவில் இலங்கைக்கு சுற்றுலா செல்லத் துடிக்கிறாரோ என்னமோ, எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்கிறதென்று யாருக்குத் தெரியும்.

இணையத்தளங்களிலுள்ள  இந்திய தேசியவாதிகள், தமிழர்கள் ஒன்றுபடுவதை விரும்பாத தமிழ் பேசும் திராவிடர்கள், எல்லாம் தெரிந்த, தலைக்கனம் கொண்ட, ராஜபக்ச ஆதரவு  வலைப்பதிவர்கள், ஈழத்தமிழர்களைப் பழிவாங்கத் துடிக்கும் தொப்பிபிரட்டிகள், சீமான், நெடுமாறன்  போன்ற தமிழீழ ஆதரவாளர்களை சாதி, மத அடிப்படையில் வெறுக்கும் சாதிமான்கள், தமிழெதிரிகள்  போன்றோர் இந்த முட்டாள் ஈழத் தமிழர் ஒருவரின்  உளறலை வைத்து சித்து வித்தைகள்  காட்ட முன்பே ஈழத் தமிழர்கள் அனைவரும் இவரது கருத்தை ஆதரிக்கவில்லை என்பதைத் தெரியப்படுத்துவதே  எனது நோக்கமாகும்.6 comments:

சார்வாகன் said...

சகோ வியாசன்,

காணொளியில் பேசிய ஈழ சகோதரன் பேச்சில் நான் குற்றம் காணவில்லை. காஷ்மீர் பண்டிட்களுக்கோ,திபெத்திய அகதிகளுக்கோ கொடுக்கப் பட்ட உரிமைகள், இங்கு(இந்தியாவில்) முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இல்லை என்பது சுடும் உண்மை.

தமிழக அரசியல் தலைகள் ஈழம் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்தவில்லை. எனக்கே இணையம் வந்து பல ஈழ சகோக்க்களுடன் உரையாடியே ஒரு புரிதல் ஏற்பட்டது.

தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு என்ற ஒற்றைப் புள்ளியில் ,வெளிநாட்டு ஈழ சகோக்கள் சிந்திக்கலாம். ஆனால் ஈழத்தில்,வாழும் தமிழர்களுக்கு இப்போது 13ஆம் திருத்தம் சார் தீர்வு கிடைப்பது கூட சிக்கல் ஆகி விட்டது.

ஈழம் என்பது தமிழர்,சிங்கள் முரண் மட்டும் அல்ல, அமெரிக்க,இந்திய,சீன அரசியல் போட்டியாகி விட்டது என்பதுதான் எதார்த்த உண்மை.

ஒருவேளை சிரியாவில் அமெரிக்க தாக்குதல் நடத்தினால், அதன் அமெரிக்க சீன முரண் விளைவு ஈழம் வரை எதிரொலிக்கும். பாருங்கள் இரு இடத்திலும் ஒரே சமயத்தில் கண்காணிப்பு குழுக்கள்.

நன்றி!!!

viyasan said...

//காணொளியில் பேசிய ஈழ சகோதரன் பேச்சில் நான் குற்றம் காணவில்லை. காஷ்மீர் பண்டிட்களுக்கோ,திபெத்திய அகதிகளுக்கோ கொடுக்கப் பட்ட உரிமைகள், இங்கு(இந்தியாவில்) முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இல்லை என்பது சுடும் உண்மை.//

சகோ. சார்வாகன்,

இந்திய மத்திய அரசு ஈழத்தமிழ் அகதிகளுக்கு பாராபட்சம் காட்டுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு தமிழ்நாட்டுத் தமிழர்களின், அதிலும் குறிப்பாக மாணவர்களின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவது ஈழத் தமிழர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியது.

அதிலும் குறிப்பாக இந்தக் காணொளியில் அவரது தொனி, முகபாவனை எல்லாமே அருவருப்பைத் தருகின்றன. அந்தக் குரங்குச் சேட்டைகளில் அவர் சொல்ல வந்த சில உண்மைகள் கூட காணாமல் போய் விடுகின்றன. இவரது கருத்துக்களை, இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் படும் அவதியை, அழாகாக, அமைதியாக மரியாதையுடன் எடுத்துக் கூறியிருக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து.

viyasan said...

//ஒருவேளை சிரியாவில் அமெரிக்க தாக்குதல் நடத்தினால், அதன் அமெரிக்க சீன முரண் விளைவு ஈழம் வரை எதிரொலிக்கும். பாருங்கள் இரு இடத்திலும் ஒரே சமயத்தில் கண்காணிப்பு குழுக்கள்.//

சகோ. சார்வாகன்,

அப்படியாவது ஒரு நல்ல தீர்வு, அதாவது நாங்கள் எமது பாரம்பரிய மண்ணை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கூடிய தீர்வு கிடைத்தால் நல்லது.

எத்தனையோ நன்கு படித்த தமிழ்நாட்டுத் தமிழர்களே ஈழத் தமிழர்கள் எல்லோரும் இலங்கைக்கு பஞ்சம் பிழைக்க போனவர்கள் என்று இன்னும் நினைத்துக் கொண்டிருக்கும் போது இலங்கை விடயத்தில் நீங்கள் இவ்வளவு அக்கறையும், பல விடயங்களையும் தெரிந்து கொண்டிருப்பதையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

para balakumar said...

டியர் வியாசன் ,

மேற்குறிப்பிட்ட காணொளியில் பேசும் மன்னிக்கவும் திட்டும் ஈழத்தமிழர் பொதுவாக தமிழ்நாடு , இந்திய அரசியல்வாதிகளை குறி வைக்காது , ஈழ போராட்டத்துக்கு சார்பாக குரல் கொடுப்பவர்களையும் , குறிப்பாக மாணவர் போராட்டங்களையுமே சாடுகிறார் .

இது போன்ற கருத்துக்கள் இந்திய தேசிய வாதிகளுக்கு தங்கள் மொழியில் சொல்வதானால் இந்திய வாலாயங்களுக்கு உவப்பானதே.

ஒரு ஈழத்தமிழன் இந்திய அரசின் துரோகங்களையும் காட்டி கொடுப்புக்களையும் புட்டு புட்டு வைத்தால் துள்ளி எழுந்து திட்டி தீர்ப்பார்கள் .

ஆனால் மெற்குறிப்பிட்ட ஈழத்தமிழனின் பிதற்றலை நியாயமான பிதற்றல் என நற் சான்றிழ் கொடுக்கிறார்கள்.

13 வது திருத்த சட்டம் நடைமுறைப்படுத்துவதே சிக்கல் ஆகி விட்டதென முதலைக்கண்ணீர் விடுபவர்கள் .

அந்த சிக்கலுக்கு காரணமே இந்திய அரசு தொடர்ந்து ஈழத்தமிழர் முதுகில் குத்தி வருவதுதான் என்பதை வசதியாக மறைத்து விட்டு உலக அரசியல் , பூகோள அரசியல் என ஏதேதோ கப்ஸா விட்டு விடயத்தை திசை திருப்பி வருகிறார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஈழத்தமிழர் சார்பாக இந்தியாவே கையொப்பம் இட்டிருக்கிறது.

எனவே 13 வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த நிர்ப்பந்திக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கே உண்டு.

ஆனால் 25 வருடங்களுக்கு மேலாக தனது இந்த கடப்பாட்டினை இந்திய அரசு தட்டி கழித்தே வருகிறது.

இந்திய அரசின் இந்த துரோகத்தனத்தை மறைப்பதற்குத்தான் இந்திய வாலாயங்கள் அமெரிக்க - இந்தியா - சீனா என உலக அரசியல் பேசி விடயத்தை திசை திருப்பி வருகிறார்கள்.

வேகநரி said...

சகோ வியாசன்,
தமிழகத்தில் Madras Cafe படத்தை தமிழங்க பார்க்க அனுமதிக் கூடாது என்று போராடும் ஜனநாயக விரோத குழுக்கள் உள்ள பிற்போக்குதனம் நிலவும் நிலையில் இந்த வீடியோவை மற்றவங்க பார்ப்பதற்கு வெளியிட்ட நீங்க பாராட்டுகுரியவர்.
இந்த வீடியோவில் இலங்கை சகோ சொல்வது ஒவ்வொன்றும் உண்மை.அவர் கேட்கிறார் தமிழகத்தில அவங்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கு ஆனா ஈழம் தொப்பிள்கொடியுறவு?
ஈழம் என்பது தமிழக அரசியல்வாதிங்களுக்கு தமிழக பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப கிடைத்த அருமையான பொக்கிஷம். இங்கே ஜாதி கட்சி நடத்தி இதர தமிழர்களின் குடிசைகளை தீவைத்து கொழுத்துவார்கள். பின்பு ஈழத்துக்கு ஆதரவு என்று ஒரு அறிக்கை விடுவாங்க. இப்போ பாரதிக ஜனதாவும் Madras Cafe எதிர்பு மூலம் இந்த நாடகத்தில இணைஞ்சிருக்கு.

//ஈழத்தமிழர்களுக்கு பெரியளவில் தமிழ்நாட்டில் ஆதரவு கிடையாதென்பது ஒருவேளை உண்மையாக இருந்தாலும் கூட எதற்காக அதை நாங்களே வெளிப்படுத்தி சிங்களவர்களுக்குள்ள கொஞ்ச நஞ்ச பயத்தையும் போக்க வேண்டுமென்பதை இந்த காணொளியில் பேசுபவர் உணரவில்லை என நான் நினைக்கிறேன்.//
தவறு சகோ சிங்கலவங்களுக்கு தமிழக பூச்சாண்டி பயத்தை ஏற்படுத்துவதன் மூலமே தீர வேண்டிய பிரச்சனைகள் எல்லாம் மிக மோசமாக்கபடுகிறது. இது பலருடைய தேவையாக இருக்கிறது. இலங்கை தமிழர்களும் சிங்கலவங்களும் ஒரு இணக்கபாட்டுக்கு வருவதை தமிழக அரசியல்வாதிகள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள்.இலங்கை தமிழளர்கள் சிங்கலவங்க ஒற்றுமைக்கு எதிராக இறுவரை போராடுவாங்க. அவர்கள் தேவையும் அதுவே. தமிழக பிரச்சனைகளில் இருந்து மக்களை ஈழம் சொல்லியே திசை திருப்புவதற்கு தமிழக அரசியல்வாதிகளுக்குள்ள உள்ள வசதி வேறு அரசியல்வாதிகளுக்கு கிடையாது.
அப்புறம் அந்த தமிழகமாணவர்களின் போரரட்டம்- தமிழகமாணவர்களுக்கு தலைக்கு பின்னால் ஒரு ஒளிவட்டம் கட்டி அவங்களை புனிதாரக்கி அவங்களை எப்படி நசமாக்கியாவது பயனடைவதே அரசியல்வாதிகள் நோக்கம்
-------------------
//ஒருவேளை சிரியாவில் அமெரிக்க தாக்குதல் நடத்தினால் அதன் அமெரிக்க சீன முரண் விளைவு ஈழம் வரை எதிரொலிக்கும். பாருங்கள் இரு இடத்திலும் ஒரே சமயத்தில் கண்காணிப்பு குழுக்கள்.//

சகோ சார்வாகன்,
சிரியாவில் அமெரிக்காவினால் ஏற்பாடு செய்யபட்ட கண்காணிப்பு குழு வரலாம். இலங்கையிலே தான் ஏற்கெனவே வலிமை கொண்ட சீமான், வைகோ கண்காணிப்பு குழுக்கள் இருக்கே.

para balakumar said...

டியர் வேகநகரி ,

மீண்டும் ஒருமுறை இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்க்கு செய்த துரோகத்தை மறைப்பதற்கு தமிழக அரசியல்வாதிகள் மேலும் மாணவர்கள் மேலும் அந்தப்பழியப்போடுவற்கு முயற்சித்து உள்ளீர்கள்.

ஈழத்தமிழர் பிரச்சனை என்பது வெளிநாட்டு விவகாரம் இதில் மத்திய அரசு தவிர்த்து தமிழக அரசியல்வாதிகளின் பங்கு என்பது காத்திரமானதல்ல .அழுத்தங்கள் மட்டுமே கொடுக்க முடியும்.
இதையும் கருணானிதி , ஜெயாவால் மட்டுமே செய்ய முடியும்.
இதில் கருணாவுக்கு கிடைத்த வாய்ப்புக்களை அவரது குடும்ப நலன் களுக்கு மட்டுமே பயன்படுத்தினார்.

ஈழத்தமிழர்க்கான பாதகமான முடிவுகள் அனைத்தயும் இந்திய மத்திய அரசே எடுத்தது.

தாங்கள் அதனை மறைப்பதற்கு சுலபமாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளியும் மாணவர்களையும் பழி சுமத்தி வருகிறீர்கள்.

சும்மா சொல்லக்கூடாது நல்ல சாமர்த்தியம்தான்.

பொதுவாகவே இந்திய வாலா (க்களுக்கு) யங்களுக்கு இந்தப்புத்தி உண்டு.

இந்திய அரசு செய்யும்நரித்தனங்களையும் துரொகங்கள்யும் மறைப்பதற்கு படாத பாடு படுவார்கள்.அத்ற்காக வேண்டி மற்றவர்கள் மீது பழி போடுவதும் , திசை திருப்பலகளை மேற்கொள்வதும் அவர்களுக்கு கை வந்த கலை.

ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்து தமிழ் நாட்டில் மக்கள் வாக்களிப்பது இல்லை என்றும் அது பெரிய விடயமாக அங்கு பாரக்கபடுவதுமில்லை என தங்களது முன்னைய பின்ன்னூட்டங்களில் தெரிவித்துள்ளீர்கள்.

அப்படியாயின் எவ்வாறு தமிழ்க அரசியல்வாதிகள் தமிழ் நாட்டு பிரச்சனையை திசை திருப்புவதற்கு ஈழ்ப்பிரச்சனையை பயன்படுத்த முடியும் என்பதைநீங்கள் தான் விளக்க வேண்டும்.

நன்றி...