Monday, August 26, 2013

ஈழத்தமிழ் மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள் இன்று.








காக்கை வன்னியன் காட்டிக் கொடுத்ததால் வெள்ளையர்கள் பண்டாரவன்னியனின் ஆட்சியை வீழ்த்தினர். (காணொளி: ஈழத்தமிழ்ச் சிறார்களின்  நாட்டுக்கூத்து)


குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின்  நினைவுநாளில் இன்று வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஈழத்தின் வன்னிப் பகுதியில் அரசாட்சி செய்தவன் தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னியின் இறுதி மன்னன்.  மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு நாள் இன்றாகும்.
வெள்ளையருக்கு அடிபணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்தான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து  பீரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரப்புல்வெளியில் வாட்போரில் ஒரே முறையில்  60 பேரை கொன்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன். அடங்காப்பற்று, வன்னிமண்ணில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கைவன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்கினால் தோற்கடிக்கப்பட்டதன் நினைவுநாள் இன்றாகும்.

வன்னியில் ஒட்டுசுட்டானில் உள்ள கற்சிலைமடு என்னும் இடத்தில் வைத்து பண்டாரவன்னியன் வெள்ளையா்களினால் தோற்கடிக்கப்பட்டான். இதன் நினைவாக கற்சிலைமடுப்பகுதியில் பண்டாரவன்னியனிற்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. பின்னா் அது ஸ்ரீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.


இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்ட பின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது.
அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சு வரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான்.

ஆவணி 25ம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவு கூரப்படுகிறது. முன்பு, பண்டார வன்னியனின் நினைவு நாளாக வேறொரு நாள் தான் நினைவு கூரப்பட்டு வந்தது.  அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு என்னும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்ட பின் 1997ம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவு நாள் ஆவணி 25ம் நாள் என அறிவிக்கப்பட்டது.

ஆவணி 25 க்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு..?

அந்தக் காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள்.
அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய் விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான்.

அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்த நாள் தான் ஆவணி 25. பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவு கூருகின்றோம்.



ஆங்கிலேயர் கற்சிலைமடுவில் நிறுவிய பண்டாரவன்னியன்  நினைவுக்கலுக்கு இலங்கை இராணுவம் செய்தது இது தான். 





நன்றி: http://eelamaravar.blogspot.ca/2010/11/207.html
              Tamilwin.

No comments: