Sunday, August 18, 2013

ஈழத்தில் மிருகபலி தடைசெய்யப்பட வேண்டியதா?
உலகில் பழமையான நாகரீகங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மிருகபலியை தமது வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் கடைப்பிடித்து தான் வந்துள்ளனர். இலங்கையில் முன்னேஸ்வரம் காளி கோயிலில் வருடாந்தம் பாரம்பரியமாக நடைபெறும் மிருகபலி கூட இலங்கையில் இலங்கைத் தமிழர்களின் தொன்மையை எடுத்துக்  காட்டுகிறது. பல நூற்றாண்டுகளாக எந்த வித இடையூறுமில்லாமல் நடைபெற்று வந்த நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக சிங்கள பெளத்த பிக்குகளினதும், சில சிங்கள அரசியல்வாதிகளின்  எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம் போன்ற  தலையீடுகளால் நடைபெறாது தடைபட்டது  மட்டுமன்றி, இன்று அரசாங்கம் தலையிடும் விடயமாக மாறிவிட்டது.
முன்னேஸ்வரம் காளி
தொன்று தொட்டு முன்னேஸ்வரம் ஆலயத்தில் நடைபெற்று வந்து கடந்த வருடம் தடைபட்ட  மிருகபலி இந்த ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களில் 22 ஆகஸ்டு 2013 அன்று நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது முன்னேஸ்வரம் பத்திரகாளி கோயில் நிர்வாகம்.  மிருகபலியை தடை செய்யும் சட்டங்கள் எதுவும் இலங்கையில் கிடையாது  இதை எதிர்த்து யாராவது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் அதை நீதித்துறை மூலம் எதிர்கொள்ள கோயிலின் வழக்கறிஞர்கள்  ஆயத்தமாக உள்ளனர் என தெரிவித்துள்ளார் முன்னேஸ்வரம் கோயிலின் பிரதமகுருக்கள். அத்துடன் கோயிலுக்கு அண்மையில் எந்தவிதமான போராட்டங்களையும் தடைசெய்துள்ளது சிலாபம் மாவட்ட நீதிமன்றம்.

 
மிருகபலி என்பது மத அடிப்படையில் மதச்சடங்குகளுடன் ஒரு மிருகத்தைக் கொல்வதாகும். இவ்வழக்கம் கடவுள் அல்லது கடவுளர்களைத் திருப்திப்படுத்தி, தமக்கு வேண்டுதலைப் பெற்றுக் கொள்வதற்காக பல மதங்களில் பல ஆயிரமாண்டுகளாக நடைமுறையிலிருந்து வரும் வழக்கமாகும். .யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், தென்னமெரிக்காவின் அஷ்ரெக் போன்ற ஆதிக்குடியினர் மட்டுமன்றி தமிழர்களும் கடவுளை மகிழ்ச்சிபடுத்த மிருகங்களைப் பலியிட்டுள்ளனர். மிருகங்களுடன் போராடுவது அல்லது மதசம்பந்தமான சடங்குகளுக்காக மிருகங்களைப் பலியிடும் பழமையான பாரம்பரியத்தின் கலாச்சார  தொடர்புகளை இன்றும் ஸ்பானிஸ் நாட்டவர்களின் மாட்டை அடக்குதல், தமிழர்களில் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்களிலும், மத அடிப்படையில்  மதச் சடங்குகளுடன்  மிருகங்களைப் பலியிடும்  shechita அல்லது   abī ah எனப்படும் யூதர்களினதும், முஸ்லீம்களினதும் வழக்கு முறைகளிலும் காணலாம்.

இந்த 21ம் நூற்றாண்டில் மிருகபலி என்பது காட்டுமிராண்டித்தனமானது, மிருகங்களைவதை செய்வது  கொடூரமானது ஆனால் ஒவ்வொரு தொன்மை வாய்ந்த மக்களும் கலாச்சரங்களும், பிற்கால கலாச்சாரங்களிலும், சமூகங்களிலும் காணப்படாத  இப்படியான “காட்டுமிராண்டித்தனமான” சில வழக்கங்களைக் கொண்டுள்ளனர்.
பெயருக்கேற்றவாறு இலங்கையிலுள்ள முன்னேஸ்வரம் கோயில் மிகவும் பழமையானது. இலங்கையில் புத்தமதத்தின் வருகைக்கும், சிங்கள என்ற இனம் உருவாக முன்பாக, சிங்கள- தமிழ் இனப்பிரிவினை  உண்டாகும் முன்பாக அங்கு வாழ்ந்த  மக்கள் சிவ வழிபாட்டை மேற் கொண்டிருந்தனர், இலங்கையின் நான்கு திசைகளிலும் ஐந்து பழம்பெரும் சிவாலயங்கள் இலங்கைத் தீவை இயற்கையின் சீற்றத்திலிருந்து கைப்பற்றுவதற்கு நிறுவினர். அவை வடக்கே நகுலேஸ்வரம், வடமேற்கே மாந்தை துறைமுகத்தினருகே கேதீஸ்வரம், கிழக்கில் கோணேஸ்வரம், மேற்கில் முன்னேஸ்வரமும் தெற்கே தொண்டேஸ்வரமும் ஆகும். 
அதனாலேயே இலங்கையை சிவபூமி என நம்புகின்றனர் ஈழத்தமிழர்கள். இலங்கையிலுள்ள எந்தவொரு பெளத்த மதவழிபாட்டுத் தலத்தை விடவும் பழமை வாய்ந்தது முன்னேஸ்வரம் ஆலயம்.


முன்னேஸ்வரம் ஆலயத்தைச் சுற்றியுள்ள ஊர்கள் மட்டுமல்ல, அந்த பிரதேசம் முழுவதும் சிங்களக் குடியேற்றங்களாலும், திட்டமிட்டு தமிழர்களை சிங்களவர்களுடன் கலந்து அவர்களின் தமிழடையாளத்தை தொலைந்து  போகச் செய்யும் வகையில் தமிழ்வழிப் பாடசாலைகள் அனைத்தையும் சிங்களத்தில் மட்டும் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளாக அரசாங்கம் மாற்றியதாலும், அங்கு பெரும்பான்மையாக வாழ்ந்த மீனவ சமூகங்கள் கிறித்தவ மதமாற்றத்துக்குட்பட்டதாலும் அங்கு வாழ்ந்த தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் தமது முன்னோர்களின் தமிழ் அடையாளத்தை மறந்து சிங்களவர்களாக மாறி விட்டனர்.


அவர்கள் சிங்களவர்களாகவும், பெளத்தர்களாகவும், கிறித்தவர்களாகவும் மாறிய போதும் தமது முன்னோர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், சடங்குகளையும், முன்னேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கும் பத்திரகாளியில் உள்ள நம்பிக்கையையும், அவர்களின் தமிழ் முன்னோர்கள் வருடா வருடம் மிருகங்களைப் பத்திரகாளிக்குப் பலியிடும் பழக்கத்தையும் கைவிட முடியவில்லை. முன்னேஸ்வரத்தில் மட்டுமன்றி  யாழ்ப்பாணத்தில் பல  கிராமங்களில் வைரவர் கோயில்களிலும், அண்ணமார் கோயில்களிலும் வேள்வி என்ற பெயரில் ஆண்டு தோறும் பெரிய அளவில் மிருகபலி நடைபெறுகின்றன. .

அதனால் தமிழ் இந்துக்கள் மட்டுமல்லாது முன்னேஸ்வரப் பகுதிகளில் வாழும் சிங்கள பெளத்தர்களும், கிறித்தவர்களும் கூட தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற பத்திரகாளிக்கு மிருகங்களைப் பலியிடுகின்றனர்.

 அஸ்வமேத யாகம் 
இலங்கையில் நடைமுறையிலுள்ள சிங்கள பெளத்தத்துக்கும், புத்தரின் உண்மையான போதனைகளுக்குமிடையே பாரிய வேறுபாடுண்டு. அதனால் தான் இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் பெளத்தத்தை Sinhala Political Buddhism என்பர்.  சிங்கள பெளத்தர்கள் புத்தரின் முக்கிய போதனையாகிய கொல்லாமையைக் கடைப்பிடிப்பவர்கள் அல்ல. சிங்கள பெளத்த பிக்குகள் கூட இறைச்சி, மீன் போன்ற எல்லா உணவு வகைகளையும் உண்பவர்கள். இலங்கையில் போரை நிறுத்துவதை எதிர்த்து. சமாதானத்துக்கெதிராகவும்,  போரைத் தொடர வேண்டியும்  ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதமும் இருந்தவர்கள் சிங்கள புத்த பிக்குகள்.

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான பல இனக்கலவரங்களை முன்னின்று நடத்தியவர்கள் சிங்கள புத்த பிக்குகள் என்பதை யாவரும் அறிவர். இன்று முஸ்லீம்களுக்கேதிராக போர்க்கொடி தூக்கியிருப்பவர்களும் அவர்கள் தான். வன்னியில் தமிழ்ச் சிறுவர்கள் கொலைசெய்யப்பட்ட போது கூட அதை வரவேற்று நியாயப்படுத்திய சிங்கள பெளத்த பிக்குகள்  முன்னேஸ்வரம் கோயிலில் நடைபெறும் மிருகபலிக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்ததன் விளைவாக அந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு  இடை நிறுத்தப்பட்டது.  

                                                                                                              Eid-ul-Adha animal sacrificing
கடந்த வருடம் பெளத்த பிக்குகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி முன்னேஸ்வரம் கோயிலுக்குள் நுழைந்து காளிகோயில் மிருகபலியை நிறுத்திய புகழ்பெற்ற இலங்கையின் சிங்கள அமைச்சர் ஒருவர் அந்தப் பேச்சையே இந்த வருடம் எடுக்கவில்லையாம். அவரது அடாவடித்தனத்தால் காளியின் ஆத்திரத்தை சம்பாதித்துக் கொண்ட அமைச்சருக்கு அன்றிலிருந்து அரசியலில் இறங்குமுகம் தானாம். ஒரு சில வாரங்களுக்கு முன்னாள் அவரது மகனையும் யாரோ நையப்புடைத்து அவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக்காலத்தில் கோயில்களில் மிருகபலியை ஆதரிப்பதோ அல்லது அதைக் கண்டு கொள்ளாமல் விடுவதோ என்னுடைய நோக்கமல்ல. உலகப்புகழ் பெற்ற காளி உபாசகராகிய சுவாமி விவேகானந்தர் கூடமிருகங்களைப் பலியிடுவதை எதிர்த்திருக்கிறார். ஆனால் சிறுபான்மையினரை குறிப்பாக தமிழர்கள் மீது கொலைவெறி கொண்டு போரைத் தூண்டிய சிங்கள புத்த பிக்குகள் திடீரென மிருகங்களில் காருண்யம் கொள்வதன் நோக்கம் இலங்கையில் தமிழர்களின் கோயில்களில், அவர்களின் மத சுதந்திரத்தில் தலையிடுவது தான். அத்துடன் பல சிங்களவர்களும் இந்து மதக் கோயில்களுக்குச் சென்று சடங்குகளைச் செய்வதைத் தடுப்பதுமாகும். அதானால் சிங்கள புத்த பிக்குகளும், இலங்கை அரசும்  தமிழர்களின் கோயில்களில் தமது மூக்குகளை நுழைப்பதற்கு இடமளிக்காமல் தமிழர்களும் அவர்களின் மதகுருமார்களும், தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த மிருகபலியைத் தடை செய்ய வேண்டும். அல்லது அதற்கான அனுமதியை நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும்.


 யாழ்ப்பாணத்துக் கோயில்களில் கோயிலுக்கென அளிக்கப்படும் மிருகங்களை ஏலத்தில் விற்று அந்த பணத்தை மட்டும் கோயிலுக்கு அளித்து விடுவார்கள், ஆனால் கோயிலில் வைத்து மிருகங்களைப் பலி கொடுப்பதில்லை.

காணொளி:

யாழ்.வல்வெட்டித்துறையில்(விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் ஊரில்) காத்தவராயன் பூசையும் பலியிடக் கொண்டுவந்த ஆடு, கோழிகளின் ஏலமும்.(பலியாகப் போகும் ஆடுகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில்  தெரிகிறது என்று நாதஸ்வரம் வாசித்துக்  கொண்டு போவது யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் நடக்கும். ):)) 

No comments: