Friday, July 5, 2013

இளவரசனின் மரணம் கொலை என்கிறார் முன்னாள் IAS அதிகாரி சிவகாமி


நிச்சயம் இளவரசன் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை.. நீதி விசாரணை வேண்டும் – திருமாவளவன்.
சென்னை: தர்மபுரி இளவரசனின் சாவு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்றும், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 'விசாரணை கமிஷன்' அமைத்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தொல்.திருமாவளவன் கூறினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது 'திவ்யாவின் கணவர் இளவசரன் தற்கொலை செய்திருக்கிறாரே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் அளித்த பதில்:"திவ்யாவின் கணவர் இளவரசன் மரணம் அடைந்திருக்கும் இந்த செய்தி, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ரயில் பாதை ஓரம் தலையில் மட்டும் அடிபட்டு, மூளை சிதறிய நிலையில், குப்புற விழுந்து பிணமாக கிடந்திருக்கிறார். உடலில் வேறு எந்த இடத்திலும் காயம் இல்லை. அவர் இறந்த நேரத்தில் அந்த வழியாக எந்த ரயிலும் போகவில்லை என்று தெரிய வருகிறது. 


அவருடைய சாவு தற்கொலையாக இருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை.திவ்யாவை சிலர் மிரட்டி, நீதிமன்றத்தில், 'இளவரசனோடு இனி வாழமாட்டேன்' என்று சொல்ல வைத்திருக்கிறார்கள். ஜூலை 1-ந் தேதி நடந்த விசாரணையில், 'எனது கணவரோடு வாழ விரும்புகிறேன்' என்று சொல்லிய அவர், அடுத்து 3-ந் தேதி நடந்த விசாரணையில், அவருக்கு எதிராக பேசியிருக்கிறார். இது இளவரசனுக்கு நன்றாகவே தெரியும்.எப்படியும் திவ்யா தன்னை தேடி வருவார் என்று நம்பிக்கையோடு இருந்தான். ஆகவே, அவன் தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை என்று தெரிய வருகிறது.இந்த நிலையில், அவனுடைய சடலம் ரெயில் பாதையில் கிடப்பது, பெரும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு, இளவரசனின் சாவு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் 'விசாரணை ஆணையம்' அமைத்து விசாரிக்க வேண்டும்.

திவ்யா மற்றும் அவருடைய அம்மா, தம்பி ஆகியோருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. அவர்கள் மூவரும் சிலரின் பிடியில் சிக்கியிருப்பதாக தெரிய வருகிறது. ஆகவே, மூவரையும், அரசாங்கம் தன்னுடைய பாதுகாப்பில் வைக்கவேண்டும்.திவ்யாவை, நீதிமன்றத்தில் முன்னுக்குபின் முரணாக பேசவைத்த சக்திகள் யார்? என்பதை அடையாளம் காணவேண்டும். இளவரசனின் இந்த சாவில் திட்டமிட்ட சதி இருப்பதாகவே நம்புகிறோம். அது கொலையாக இருந்தாலும், தற்கொலையாக இருந்தாலும், அதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்," என்றார்.Ref: Thatstamil.com

8 comments:

ராஜி said...

நடந்ததை பேசிக்கொண்டு இருப்பதை விட திவ்யாவை கண்காணிக்கனும். அவளையாவது இழக்காம இருக்கனும்

viyasan said...

@ராஜி,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது இந்தளவுக்கு மோசமாக இருக்குமென்று நினத்துப்பார்த்ததேயில்லை. உண்மையில் இந்தக் கொலை என்னைப்போன்ற சாதிக்கொடுமைகளை நேரடியாக அனுபவித்தறியாதவர்களையெல்லாம், யாரோ தூக்கத்திலிருந்து உலுப்பி எழுப்பி விட்டது போலிருக்குமேன்பது நிச்சயம். நானே பல முறை தாழ்த்தப்பட்ட தமிழர்கள் எந்தளவு கொடுமைகளுக்குள்ளாகிறார்கள் என்பதை உணராமல், விதண்டாவாதம் செய்திருக்கிறேன். எனக்கும் பல தலித் நண்பர்கள் சென்னையில் உள்ளார்கள் ஆனால் கிராமத்து சாதிவெறியின் கொடுமை, இன்றுவரை எனக்குத் தெரியாது. சாதி வெறியர்களின் சாதி வெறிக்கு அநியாயமாக இரண்டு அப்பாவிகள் பலி கொடுக்கப்பட்டு விட்டார்கள். இளவரசனும் திவ்வியாவும் அடுத்த பிறப்பிலாவது ஒன்று சேரட்டும்

நந்தவனத்தான் said...

சகோ வியாசன், இதைவிட பல கொடுமைகள் இன்னமும் நடந்தேறியே வருகின்றன. இதில் பாமக உள்ளே புகுந்து இதை அரசியலாக்கி சாதி ஓட்டுக்களை அள்ள முற்பட்டதால் இது பெரிய அளவிற்கு பிரபலமாகிவிட்டது. சாதி காரணமாகவே பெரும்பாலான தமிழக காதல்களுக்கு சங்கு ஊதப்படுகிறது. காதல் பிரச்சனை தாண்டி உயர்சாதி வகுப்பினர் வசிப்பிடங்களில், கோவில்களில் தலித்கள் நுழைய முடியாது. உடனே தலித் மக்களை புனிதர்கள் என எண்ணி விடாதீர்கள், அவர்களுக்குள் ஆயிரம் பிரிவினைகள், ஒடுக்கல்கள். எங்களுரில் தலித் திருமணத்தில் நரிகுறவர் இனத்தவருக்கு சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது.

இவற்றையெல்லாம் திராவிட இயக்கமும் பெரியாரும் சமாளித்த விதம்தான் அலாதியானது. எல்லாவற்றையும் தூக்கி பிராமணர்கள் மீது போட்டுவிட்டு மீதமுள்ள அனைவரும் புனிதராகிவிட்டார்கள். ஆதலால் பிறசாதி மக்களுக்கு குற்ற உணர்வு என்பதே இல்லை. உடனே பிராமணர்களுக்கு குற்றவுணர்வு வந்துவிட்டதா என கேட்காதீர்கள். குற்றவுணர்ச்சி போன்ற கருமமெல்லாம் தமிழ்நாட்டில் ஒருத்தனுக்குமில்லை. பார்பனரின் சிறப்பு குற்றம் சாதி பிரமிட்டின் உச்சத்தில் இருப்பது. மற்றபடி பிராமணர் முதல் தலித்துகள் வரை அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சாதி வெறியுண்டவரே.

அப்புறம் இங்குள்ள இணைய போராளிகள். திவ்யா- இளவரசன் திருமணத்தை ஆதரித்து பேஸ்புக், பிளாக்கர் என் ஒண்ணுவிடாமல் எழுதி தள்ளும் எத்தனை பேர் கலப்பு திருமணம் செய்தவர்கள்? 10% தேறினாலே அதிகம். புரட்சி என்பது தன்னிலிருந்து அல்லவா துவங்கவேண்டும்? அம்மா ஒத்துக் கொள்ளவில்லை, என்னை ஒருத்தளும் காதலிக்கவில்லை என நொண்டி சாக்கு சொல்லுவார்கள். ஏன் மேட்ரிமோனியல் விளம்பரத்தில் தலித் பெண்தான் வேண்டும் எனில் கிடைக்காமலா போகும்? சரி விடுங்கள். உங்கள் குழந்தைக்கு கலப்பு மணமா என்றால் என் மனைவிக்கும் குழந்தை மீது உரிமை உண்டே என்பார்கள். ஆனால் தமிழ் எழுத்துக்களே தீருமளவு இணையத்தில் எழுதுவார்கள்.அடப் போங்கடா!

வேகநரி said...

தேவையான பதிவு.
//தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது இந்தளவுக்கு மோசமாக இருக்குமென்று நினத்துப்பார்த்ததேயில்லை.//
இலங்கை மாதிரி ஜாதி இருக்கு இல்லை என்ற மாதிரி தமிழகத்திலேயும் என்று நினைச்சிருப்பீங்க. இப்ப பார்த்தீங்க தானே. கொலை வெறியோடு இங்கே ஜாதி இருக்கு. அருள் என்ற பதிவர் ஜாதிக்காக திருமணமானங்களையே பிரித்து அதை மார்தட்டி பெருமைபடும் காட்டுமிராண்டி தனம் கூட இருக்கு.

viyasan said...

சகோ. நந்தவனத்தான்,

எத்தனையோ கொலைகள் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் நடக்கின்றன ஆனால் இளவரசனை ஓட விரட்டிக் கடைசியில் கொலையும் செய்ததும என்னில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தது அவனுடைய தவறா? அதற்கு இப்படி ஒரு தண்டனை என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அந்த தாயின் மனம் எவ்வளவு வேதனைப்படும்.
நான் நினைத்தேன், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என்றெல்லாம் பீற்றித்திரியும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், திவ்யாவும் இளவரசனும் குடும்பம் நடத்திய பின்னர், எக்கேடு கேட்டாவது போ என்று விட்டு விடுவார்கள் என்று நினைத்தேன், ஆனால் சாதி வெறி, தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு எல்லாவற்றையும் விழுங்கி விட்டது. அப்படித்தான் இலங்கையில் நடந்திருக்கும. இந்தக் கொலையைச் செய்தவர்கள் அல்லது அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவரையும் தூக்கி உள்ளே போட்டால் தான், இன்னொரு தமிழனுக்கு இந்தக் கதி நேராது.

viyasan said...

சகோ.வேகநரி,

நம்பவே முடியவில்லை. இப்படியான துயரமான சம்பவத்தில் கூட, அதிலும் பாதிக்கப்பட்ட பெண், அவர்களில் ஒருவராக இருந்தும் கூட, மரியாதைக்காகவாவது அடக்கி வாசிக்காமல் விளக்கம் கொடுக்கிறார். அதைப் பார்க்க அருவருப்பாக இருந்தது.

இந்தச் செய்தியை தமிழரல்லாத வட இந்திய நண்பர்களிடம் கூறிய போது அவர்கள் எல்லோரும் அந்த பெண் உயர்ந்த சாதி என நினைத்தார்கள், ஆனால் அவர்கள் இருவரும் தாழ்த்தப்பட்டவர்கள் தான் என்றதைக் கூறியதும், வட இந்தியர்களாலே அதை நம்ப முடியவில்லை. ஏனென்றால் வடக்கில் இப்படியான சாதிப் பிரச்சனைகளில் அநேகமாக பெண் மிகவும் உயர்ந்த சாதியாக இருப்பாராம்.

clarence I said...

good one and it's true

clarence I said...

nanraga sonnergal.