Tuesday, July 9, 2013

"சாகணும்னு நினைக்கலைங்க. அம்மா அப்பா பயந்துட்டாங்க. அவங்களுக்கு பயம். எனக்கு வேதனை". – இளவரசன்இது இளவரசன் இந்தியா ருடே சஞ்சிகைக்கு கொடுத்த நேர்காணல். 

எதற்காக தொடர்ந்து இளவரசனை பற்றிய செய்திகளை எனது வலைப்பதிவில் பதிவு செய்கிறேன் என யாராவது வியக்கலாம். சாதிக் கொடுமை, சாதி வெறி எந்தளவுக்கு இருக்குமென்பதை எனக்கு உணர்த்தியது இளவரசனின் சாவு. அதைவிட அவனது அப்பாவித்தனமான முகத்தைப் பார்க்கும்போது, எனக்கு இல்லாத சகோதரனைப் போலவே உணர்கிறேன். அதை விட நாங்கள் ஈழத்தமிழர்கள் எங்களின் குடும்பத்தில் யாராவது இறந்தால், அவர்களின் இறுதிச்சடங்குகள் முடியுமட்டும் வேறு எதுவும் செய்ய மாட்டோம்.. எந்தளவுக்கு தமிழ்நாட்டு தலித்துக்கள் அதிலும் குறிப்பாக திருமாவளவனின் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈழத்தமிழர்கள் மீது சகோதரபாசத்துடன் நடந்து கொள்கிறவர்கள் என்பது உண்மையில் அவர்களுடன் பழகிப் பார்த்தவர்களுக்குத் தெரியும். அதற்கு நன்றிக்கடனை நான் என்னுடைய வலைப்பதிவில் காட்டுவதில் எனக்கு ஒருவித மனநிம்மதி ஏற்படுகிறது."சாகணும்னு நினைக்கலைங்க. அம்மா அப்பா பயந்துட்டாங்க. அவங்களுக்கு பயம். எனக்கு வேதனை. எப்படி தீர்த்துக்குறதுன்னு தெரியலை. அதான்
"நான் பிறந்த சாதிதான் இவங்களுக்குப் பிரச்சனையா போச்சு. இவ்வளவு செய்றவங்க எதையும் செய்வாங்க."  

காதலிக்கும்போதோ திருமணம் செய்துகொள்ளும்போதோ இப்படி தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியாவோம் என்று நினைத்தீர்களா?

 இல்லை. நிச்சயமாக இல்லை. எத்தனையோ பேர் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். அப்படித்தான் எங்க கல்யாணமும்னு நினைச்சேன். திவ்யாவும் அப்படித்தான் நினைச்சாங்க. முதல்ல கோபமாக இருப்பாங்க. அப்புறம் சமாதானமாகிடுவாங்கன்னு நினைச்சோம். இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுக்கூட பார்க்கவில்லை.  சாதி எவ்வளவு கொடூரமானது; அது என்னவெல்லாம் செய்யும்னு காதலிச்சபின்னால்தான் நல்லா புரியுது.

திவ்யா திடீரென்று தாயுடன் செல்லவேண்டும் என்று கூறியது ஏன்?

 திவ்யாவின் அம்மாவை பின்னணியில் இருந்து இயக்குகிறாங்க. அம்மாவின் உயிருக்கும் என் உயிருக்கும் ஆபத்து என்று மிரட்டியிருக்கிறாங்க. அதனால்தான் திவ்யா இப்படியொரு முடிவு எடுத்திருப்பாங்க. என்னைப் பிரிந்து அவங்களால் இருக்க முடியாது. இந்த மூன்றுவார பிரிவை திவ்யாவால் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு மணிநேரம்கூட என்னைப் பிரிந்திருக்க முடியலைனு அடிக்கடி சொல்வாங்க. எங்களைப் பிரிக்கும் திட்டத்தை பா.ம.க.வின் ஹெட் ஆஃபீஸ்லதான் போட்டிருக்காங்க. அதை செயல்படுத்திட்டாங்க.

திவ்யாவுக்கும் உங்களுக்கும் திருமணத்துக்குப் பின் பிரச்சனைகள் ஏதேனும் உண்டா?

  இல்லை. நாங்க ரொம்ப சந்தோஷமா இருந்தோம். ஊர் ஊரா பயந்து பயந்து வாழ்ந்தாலும் ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குறதே சந்தோஷமா இருந்துச்சு.

திருமணம் எங்கே நடந்தது? 

ஃபுட்பால் மேட்ச்சுக்காக திருச்சி போயிட்டிருந்தேன். ஓமலூர் போகும்போது அவங்க வீட்ல வேற இடத்துல கல்யாணம் பண்ணிக்குடுக்கப் பார்க்கிறாங்கன்னு திவ்யா போன் பண்ணினாங்க. என்னை அழைச்சுட்டுப் போன்னு சொன்னாங்க. ஆந்திராவில் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். 

திவ்யாவின் வீட்டினருக்கும் உங்களுக்குமான உறவு எப்படி?

திவ்யாவின் அப்பா நல்லவர். சாதி வித்தியாசம் பார்க்கமாட்டார். எங்க கல்யாணம் பிடிக்காம அவர் தற்கொலை பண்ணிக்கிட்டாருன்னு நானும் திவ்யாவும் இப்பவும் நம்பலை. அவங்க அம்மாவுக்கும்கூட பெரிசா எதிர்ப்பு இல்லை. எங்க கல்யாணத்துக்குப் பிறகு அவங்க அண்ணன் தம்பி எல்லோரும் அவங்ககிட்ட பேசுறதில்லை. ஆனால் சுற்றி உள்ளவங்கதான் அவங்களை தூண்டிவிடுறாங்க. எனக்கு கிடைக்க இருந்த போலீஸ் வேலையை சரியாய் ஆர்டர் வரப்போகுதுன்னு தெரிஞ்சே என் மேல் கேஸ் போட்டு அந்த வேலையை கிடைக்கவிடாமல் செய்தாங்க. இது எல்லாமே அம்மா செய்யலை. அவங்களை நிர்பந்தம் பண்ணி சுத்தி உள்ள சாதிக்காரங்க பண்றாங்க.  


தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள் எரிந்தபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?

குற்ற உணர்ச்சியாக இருந்தது. நானும் திவ்யாவும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூட நினைத்தோம். அவங்க அப்பா இறந்துபோவார் என்று நாங்க கனவிலும் நினைக்கலை. அப்பாவின் மரணம் திவ்யாவை ரொம்பவே பாதித்தது. ரொம்ப அழுதாங்க. அந்த நவம்பர் 7ம் தேதியை மறக்க முடியாது. திவ்யாவைப் பார்க்கணும்; திரும்ப கூட்டிட்டுப் போகணும்னு அவங்க தரப்புல கேட்டாங்க. நீங்க வாங்க..வந்து திவ்யா வந்தா தாராளமா கூட்டிட்டுப்போங்கன்னு சொன்னேன்நவம்பர் 7ம் தேதி எங்களைப் பார்க்க தொப்பூருக்கு திவ்யா தரப்பில் கொஞ்சம் பேர் எங்க ஊர் தரப்பில் கொஞ்சம் பேர் வந்தாங்க. திவ்யாவோட அப்பா அப்போ வரலை. அம்மா திவ்யாவை வரச் சொல்லி கேட்டாங்க. ஆனா திவ்யா திட்டவட்டமா வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. அவங்க திரும்பிப் போய் அரைமணி நேரத்துல திவ்யா அப்பா இறந்துபோன செய்தி வருது. ஊரை எரிக்கிறாங்கன்னு தகவல் வருது. டிவியிலயும் பார்த்தோம். இந்தளவுக்கு ஆகும்னு யாருக்குத் தெரியும். நான் பிறந்த சாதிதான் இவங்களுக்குப் பிரச்சனையா போச்சு. இவ்வளவு செய்றவங்க எதையும் செய்வாங்க. 


மனைவியை மீட்க என்ன செய்யப் போகிறீர்கள்? 

தொடர்ந்து போராடுவேன். மூணு ஊரைக் கொளுத்தினவங்க யாருன்னு அதிகாரிங்களுக்குத் தெரியும். ஆனா நடவடிக்கை எடுக்கலை. அவங்க மேல நடவடிக்கை எடுக்கணும். திவ்யா எங்க இருக்காங்கன்னு பப்ளிக்கா அறிவிக்கணும். எங்களைப் பிரிக்க நினைக்கிறவங்க யாரு..இதுக்குப் பின்னணி என்ன இப்படி எல்லாத்தையும் விசாரிச்சு அறிவிக்கணும். அவங்களால மனசறிஞ்சு என்னை வேண்டாம்னு சொல்ல முடியாது. சொல்ல மாட்டாங்க. திவ்யாகூட நான் பேசணும் முதல்ல. அப்புறம் பாருங்க. எல்லாமே சரியாகிடும்.  

12 comments:

ராஜி said...

அவனது அப்பாவித்தனமான முகத்தைப் பார்க்கும்போது, எனக்கு இல்லாத சகோதரனைப் போலவே உணர்கிறேன்.
>>
எனக்கும்தான் என்னவென்றே தெரியாத ஒரு சோகம் ரெண்டு நாளா!

viyasan said...

//எனக்கும்தான் என்னவென்றே தெரியாத ஒரு சோகம் ரெண்டு நாளா!//

அவன் அவசரப்பட்டு விட்டானோ அல்லது அவனது சொந்த நண்பனே அவனுக்கு எமனாக வந்தானோ யாருக்குத் தெரியும், முன்பின் தெரியாத எங்களுக்கே இந்த அநீதியைப் பார்க்கும் போது இப்படியிருந்தால், அவனைப் பெற்றவர்களின் மனம் எவ்வளவு வேதனைப்படும்.

வேகநரி said...

//எதற்காக தொடர்ந்து இளவரசனை பற்றிய செய்திகளை எனது வலைப்பதிவில் பதிவு செய்கிறேன் என யாராவது வியக்கலாம். சாதிக் கொடுமை, சாதி வெறி எந்தளவுக்கு இருக்குமென்பதை எனக்கு உணர்த்தியது இளவரசனின் சாவு.//

மனித நேயர்கள் அனைவரும் உங்கள பாராட்டுவார்கள் சகோ.
//நான் பிறந்த சாதிதான் இவங்களுக்குப் பிரச்சனையா போச்சு. இவ்வளவு செய்றவங்க எதையும் செய்வாங்க. -இளவரசன்//
என்ன ஒரு ஜாதி கொடுமை :(
ஜாதிவெறி பற்றுதல் கொண்டவங்க அதை வெளிக்காட்டி கொள்ளாம இப்போ காதலை போட்டு தாக்க தொடங்கியிருப்பதை அவதானிச்சிருப்பீங்க.

எனக்கு இன்று தான் தெரியும் இஸ்லாம் மதம் காதலை அனுமதிப்பதில்லை என்பதை. இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு உரிமை கிடையாது என்பது ஏற்கெனவே தெரிந்ததே.
//இஸ்லாம் காதலை முற்றிலுமாக எதிர்கின்றது தனியாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் சைத்தானும் இருக்கிறான் இது நபிகள்[ஸல்]அவர்களின் வாக்கு சைத்தானின் வேலை தீயதை அழகாக காண்பித்து கெட்ட செயலில் மனிதர்களை உட்படுத்துவதே அவன் வேலை.மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)July 8, 2013 at 2:35 PM//
http://nijampage.blogspot.co.uk/2013/07/vs.html
சரிதானே இந்திய இஸ்லாமியர் ஒருவர் அரபு இஸ்லாமிய பெண்ணை காதலித்தால் திருமணம் செய்ய வேண்டி வருமே:)

viyasan said...

//மனித நேயர்கள் அனைவரும் உங்கள பாராட்டுவார்கள் சகோ. //

நன்றி சகோ. ஆனால் நான் பாராட்டை எதிர்ப்பார்த்து எந்தப் பதிவையும் செய்வதில்லை, நான் தமிழ்நாட்டில் இப்பொழுது இருந்தால் இளவரசனின் வீட்டுக்குப் போய் ஆறுதல் கூறியிருப்பேன். என்னுடைய கருத்தை மற்றவர்கள் எதிர்த்தாலும் வெளிப்படையாக கூறுவது தான் என்னுடைய வழக்கம்.

//எனக்கு இன்று தான் தெரியும் இஸ்லாம் மதம் காதலை அனுமதிப்பதில்லை என்பதை. இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு உரிமை கிடையாது என்பது ஏற்கெனவே தெரிந்ததே.//

உண்மையாகவா? அனுமதி கேட்டுக் கொண்டு காதல் வருவதில்லை. அதனால் இஸ்லாம் அனுமதித்தாலும், அனுமதிக்காது விட்டாலும் முஸ்லீம்களுக்கும் நிச்சயமாகக் காதல் வரத்தான் செய்யும். அல்லாவுக்காக அவர்கள் காதலை மறந்து விடுவார்கள் அல்லது காதலை வெளிப்படுத்தாமல் சாகடித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால் வஹாபி இஸ்லாத்தில்ஆட்டம் பாட்டு, இசை எதற்குமே அனுமதியில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அண்மையில் பாகிஸ்தானில் இரண்டு அப்பாவி சகோதரிகள் சந்தோசமாக மழையில் ஆடிப் பாடியதற்காக, அவர்களின் சகோதரனே அவர்களை கொன்றதைப் பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா?


http://www.dailymail.co.uk/news/article-2351836/Smiling-sisters-shot-dead-dancing-rain-Pakistani-girls-15-16-killed-mother-making-video-stained-family-honour.html

indrayavanam.blogspot.com said...

நல்ல பதிவு படிக்கும் போது மனம் வேதனைபடுகிறது.

நந்தவனத்தான் said...

என்ன சகோ மட்டுறுத்தலா? இரண்டு தடவை பின்னூட்டமிட்டும் தெரிய மாட்டீங்குது?

viyasan said...

//என்ன சகோ மட்டுறுத்தலா? இரண்டு தடவை பின்னூட்டமிட்டும் தெரிய மாட்டீங்குது?//

இந்த பின்னூட்டத்தை மட்டும் தான் நான் பார்த்தேன். வேறு எங்கோ பதிவு செய்து விட்டீர்கள் போலிருக்கிறது. உங்களின் பின்னோட்டத்தை மட்டுறுத்தல் செய்ய எனக்கென்ன விசரா? :))

நந்தவனத்தான் said...

நன்றி. இரண்டாவது தடவை கவனித்துதான் வெளியிட்டேன். சரி விடுங்கள், எனக்கும் மூணாவது தடவையாக ஒரே விடயத்தை டைப்படிக்க அலுப்பாக இருக்கிறது. விசர் எனில் என்ன அர்த்தம்?

viyasan said...

//விசர் எனில் என்ன அர்த்தம்?//

மன்னிக்கவும், நான் என்னுடைய e-mail ஐயும் பார்த்து விட்டேன். உங்களிடமிருந்து ஒரேயொரு பின்னூட்டம் தான் வந்திருக்கிறது. இந்த 'விசர்' என்ற சொல்லை தெனாலி திரைப்படம் மூலம் கமலகாசன் தமிழ்நாட்டில் பிரபலப்படுத்தி விட்டார் என்று நினைத்தேன்.

ஈழத்தமிழில் “ எனக்கென்ன விசரா” என்றால் தமிழ்நாட்டில் “எனக்கென்ன லூசா” என்பது போன்றது. விசர் என்றால் பைத்தியம் அல்லது லூஸ் என்பது கருத்து, ஆனால் தமிழ்நாட்டில் விசரம் என்ற சொல்லுக்கு ‘விளக்கம்’ அல்லது ‘தெளிவு’ என்ற கருத்துண்டு என்றார் ஒரு தமிழ்நாட்டு நண்பர். அப்படியானால் விசரம் என்ற சொல் தான் இலங்கையில் சுருங்கி விசர் என்றாகி விட்டது போலும். அதாவது விளக்கம் இல்லாதவன் விசரன் (பைத்தியக்காரன்) என்று ஆகியிருக்கலாம்.

வேகநரி said...

சகோ நந்தவனத்தான் கருத்தை காண கிடைக்காதது எனக்கும் ஏமாற்றமே.

நந்தவனத்தான் said...

@சகோ வியாசன்
விளக்கத்துக்கு நன்றி. இவ்வார்த்தை தமிழகம் அறியாததுதான்.

@சகோ வேகநரி

உங்க பின்னூட்டம் படித்தவுடன் "இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கீடாங்களேய்யா" எனும் கைப்புள்ளை புலம்பல்தான் ஞாபகத்துக்கு வந்தது. ஆனாலும் உங்களின் கருத்துக்கு நன்றி!

நந்தவனத்தான் said...

@சகோ வியாசர்

இது விட்டுப்போய் விட்டது.
முன்பு ஒரு தடவை ஃபையர்பாக்ஸ் பயன்படுத்தும் போது இப்படி ஆகியது உண்டு. பின்னூட்டம் வெளியிடப்பட்டதாக அறிவிப்பு காட்டும், பின்னூட்டமும் தெரியும் (கட்டுப்பாடு இல்லா பதிவுகளில்). ஆனால் மீண்டும் சென்றால் பின்னூட்டம் இருக்காது. Add-on-கள் காரணமாக இப்பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பின்பு சரியாகி விட்டது. மீண்டும் அது போன்றதொரு பிரச்சனை தோன்றியிருக்கலாம். சிரமத்திற்கு மன்னிக்கவும், நன்றி.