Saturday, July 6, 2013

இளவரசனின் சாவு – பெரியாரிசத்தினதும் திராவிட அரசியலினதும் தோல்வி?
தமிழ்நாட்டில் ஒரு இளந்தமிழன்  ஓட, ஓட விரட்டப்பட்டு கடைசியில் தற்கொலை என்ற பெயரில் மூளை பிளந்து போய் தண்டவாளத்துக்குப் பக்கத்தில் கிடக்கும் நிலை  ஏற்பட்டதற்குக் காரணம் அவனது காதல் அல்ல.  
அவனது சாதியும், சாதியின் அடிப்படையில் பெரியாரின் முற்போக்கு சாதிமறுப்பு, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு போன்ற கருத்துக்களால் உந்தப்பட்டு ஒன்றிணைந்த  திராவிடர்கள் இன்றைக்கு தமக்குள் தாமே அடித்துக் கொண்டு சாகும் சாதி அரசியலும் தான். 
அதாவது சமூக ஏற்றத்தாழ்வுகளை  சாதி, மத வேறுபாடுகள் இல்லாத நிலைமையை உருவாக்குவதற்காக  ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட அரசியல் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய பின்னரும்  தமிழ் இளவரசன்களின் வாழ்க்கை தண்டவாளத்தின் அருகில் முடிவடைகிறதென்றால் திராவிட அரசியலும், பெரியாரிசமும் தமிழ்நாட்டில் தோல்வியடைந்து விட்டன என்பது தானே கருத்தாகும்.

பார்ப்பனர்களின் சாதி வெறியை மட்டும் எதிர்க்கும், இன்றைக்கு  அதற்கு அவசியமேயில்லாத போதும், செத்த பாம்பை தொடர்ந்து அடிப்பது போன்று  பல போராட்டங்களை எல்லாம் நடத்துகின்ற திராவிட இயக்கங்களும், திராவிட வீரர்களும் பெரியாரின் சீடர்களும் தமிழ்நாட்டில் பிராமணரல்லாத  மேல் சாதி, கீழ்சாதி வெறியர்களை அந்தளவு வீராப்புடன் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. அப்படி எதிர்த்திருந்தால் இளவரசனுக்கு இப்படியானதொரு முடிவு ஏற்பட்டிருக்காதல்லவா?


 திராவிட வீரர்கள் தான் போகட்டும், திராவிடம் தான் தமிழர்களின் இழிநிலைக்குக் காரணம் என்று விளக்கம் கொடுத்து நாம் தமிழர்களாகிய தமிழர்கள் கூட, சாதிவெறியில் தமிழனும், தமிழனும் அடித்துக்கொண்டு சாவதை எதிர்த்துப் பேசுகிறார்களில்லை. ஏனென்றால் வாக்குகளை இழந்து விடுவோம் என்ற பயம். 

நான் கூட தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் அதாவது தலித்துக்களின் (எனக்குப் பிடிக்காத வார்த்தை), தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் உண்மையான நிலை தெரியாமல், தமிழ்நாட்டில் ஆட்சி உண்மையான தமிழர்களின் கைகளில் போனால், தமிழர்களின் சமூக ஏற்றத்தாழ்வுகள் தாமாக மறைந்து விடும் என்றெல்லாம் கீற்றில் வாதாடியிருக்கிறேன். ஆனால் அது அவ்வளவு இலகுவானதல்ல என்பதை இளவரசனின் கொலை அல்லது தற்கொலை உணர்த்துகிறது. 

திராவிட அரசியல் எப்பொழுதுமே மேல்சாதிக்கார்களின் கையோங்கி இருந்ததுடன் திட்டமிட்டே தாழ்த்தப்பட்ட தமிழர்களும், தலித்துக்களும் ஒதுக்கப்பட்டனர். திராவிட இயக்கங்கங்களில் இயற்கையாகவே காணப்படும் மேல்சாதி ஆதிக்கம், காணி சீர்திருத்தச்சட்டம் அல்லது சாதீயக் கட்டமைப்பைக் குலைக்கும்  திட்டங்களை முழுமனதுடன் நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால்  சாதீய ஏற்றாத்தாழ்வுகளின் அடிப்படையை அவை எப்பொழுதே தகர்த்திருக்கும். நூறு ஆண்டு கால  திராவிட அரசியலின் பின்னரும் தமிழ் அரசியலில் ஒரு உயர்மட்டத் தலைவராக ஒரு தலித் இல்லை. இவ்வளவுக்கும் தமிழ்நாட்டில் 18-20%  வீதமானோர் தலித்துக்களாவர். இத்தகைய தொடர்ச்சியான பாகுபாடுகள் தலித்துக்களுக்கும் திராவிட அரசியலுக்கும் உள்ள இணைப்பை பரிசீலிக்க வேண்டிய நிலைக்கு தள்ளுகிறது.

திராவிட அரசியலில் ஓரங்கட்டப்படும் தலித்துக்கள்


திராவிட அரசியலில் தலித்துக்கள் ஓரங்கட்டபப்டுவது நடந்தது இன்று நேற்றல்ல. உதாரணாமாக, எதற்காக திராவிட இயக்கத்தின் நூற்றாண்டை 2012 இல் கொண்டாடினார்கள். ஆனால்  1912ம் ஆண்டுக்கு முன்பே தலித்து அறிவாளிகளும் முன்னோடிகளும் திராவிட அரசியலுக்கு அத்திவாரம் அமைத்து தமது கருத்தை விளக்கியுள்ளனர்.  உண்மையில் வண. ரத்தினம் (தலித் கிறித்தவர்) திராவிடர் கழகம் என்பதை 1886 இலேயே பதிவு செய்தார்.  அவரைத் தொடர்ந்து 1891 இல் தலித்துகளின் தலைசிறந்த தலைவர் அயோத்திதாசன்  திராவிட மகஜனசபாவைத் தொடங்கினார். ஆனால் அவையெல்லாம் மறைக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்டு விட்டன.


திராவிட இயக்கத்தை ஆரம்பித்ததே தலித்துகள் தான்.


இந்த தலித் முன்னோடிகள் திராவிட அரசியலிலிருந்து அழிக்கப்பட்டது, தலித்துக்கள் எவ்வாறு  திட்டமிட்டு திராவிட அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆனால் திராவிட அரசியலின்  சாதி எதிர்ப்பு வாய் வீரமும், மேடைப்பேச்சுக்களும்  சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, ஏழை தலித்துக்களைக் கவர்ந்தது அவர்களும் நம்பிக்கையுடன் இணைந்தனர். ஆனால் அந்த நம்பிக்கைக்கு ஈடாக அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

1968இல் உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டதற்காக நாற்பதுக்கும் மேற்பட்ட தலித் விவசாயக் கூலிகள் உயிரோடு எரிக்கப்பட்ட போதும், திராவிடத் தலைவர்கள் அமைதியாகத் தான் இருந்தனர், பல போராட்டங்களின் பின்னால் தான் அவர்கள் அதில் கவனம் செலுத்தினார்கள்.  அதே போல் 1974 இல் தலித்துகளின் புகழ் பெற்ற தலைவர் Dr. சத்தியவாணி முத்து அவர்கள் மேல்ஜாதி இந்து அரசியல்வாதிகள் தனது கடமையைச் செய்யத் தடுக்கிறார்கள் என்ற உண்மையை பேசியதற்காக திமுக விலிருந்து வெளியேறுமாறு செய்யப்பட்டார் . அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக பத்து சட்டசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்தும், அவர் கட்சியில் முக்கிய தலைவராக இருந்தும் கூட, அவரது தலித் நலன்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த மட்டுமல்ல, அவற்றை கட்சியால் ஏற்றுக் கொள்ளச் செய்யவும் முடியவில்லை.

சாதிமறுப்பு விடயத்தில் திராவிட இயக்கத்தின் உண்மையான தோல்வியை எந்தளவுக்கு சாதி இன்னும் தமிழ்நாடு  அரசியலில்  ஆதிக்கம் செலுத்துகிறது என்பதிலிருந்து அறியலாம். சாதி மறுப்பு செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல திராவிட அரசியல்வாதிகளால்  முடியவில்லை, அதில் அவர்கள் தவறி விட்டார்கள்,

தலித்துகளை ஒதுக்கும் அல்லது ஓரம்கட்டும் இந்த திட்டம், அதுவும் திராவிட அரசியல் நூறாண்டுகளைக் கடந்த பின்னர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது  தலித்துக்களல்லாத தமிழர்களின்  கட்சிகள் இணைந்து தமக்கென ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் வன்முறை தடைச்சட்டத்தை நீக்குமாறு வெளிப்படையாகக் குரல் கொடுக்கவும் தொடங்கி விட்டனர்.. ஆனால் மாநிலத்தில் வன்முறை தடைச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் அல்லது அந்த சட்டம் எத்தனை முறை நடைமுறைப்படுத்தப்பட்டது  என்ற எண்ணிக்கை, இல்லை என்று சொல்லுமளவுக்கு மிகவும் குறைவு.  நடைமுறைப்படுத்தப்படாத அந்தச் சட்டம் சட்டப் புத்தகத்தில் இருப்பதே பல ஆதிக்க சாதியினர்களைப் பயமுறுத்துகிறது. அண்மையில் சில தலைவர்கள் கலப்புத் திருமணங்களை தடை செய்யுமாறு குறிப்பாக தலித்துகளுடனான கலப்பு மணங்களை தடைசெய்யுமாறும் வெளிப்படையாக பேசுகின்றனர்.
தொடரும்:

( தலித்துகள் ஏன் ஈழத்தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்கின்றனர். )
குறிப்பு: (இந்தப் பதிவிலுள்ள சில தகவல்கள் நான் வாசித்த திராவிட இயக்கம் பற்றிய  கட்டுரைகளிலிருந்து அறிந்தவற்றின் தமிழாக்கம்)

8 comments:

நிரஞ்சன் தம்பி said...

திராவிட இயக்கத்தை ஆரம்பித்ததில் தலித்களின் பங்கு முக்கியமானவை, ஆனால் பிற்காலத்தில் தலித்கள் பல்வேறு மதங்கள், கட்சிகள் என பிரிந்துவிட்டனர். அம்பேத்காரின் சிந்தனைகளை உள்வாங்கவும் தவறி விட்டனர். தமிழகத்தின் சாதியத்துக்கு திராவிட இயக்கத்தின் தோல்வி என்பதை விட இந்து மதத்தினை அழிக்காமல் விட்டதன் விளைவு எனலாம், இந்து மதத்தின் விசம் என்பதை வெறும் திராவிட இயக்கதினால் ஒழித்துவிட இயலாது. அதற்கு பாரிய சமூக அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும். திராவிட இயக்க ஆட்சி உடைக்கப்பட்டு பார்ப்பனர்கள், முக்குலத்தோரால் கடத்தப்பட்டு அதிமுக ஆனதும் சாதியத்தை முற்றாக ஒழிக்க முடியாமல் போனதின் ஒரு காரணம். அதன் எதிர்விளைவாக திமுகவும் சாதிய ஒழிப்பில் மென்போக்கும், நடுநிலைமையும் பூண்டது. நல்லவேளை சாதி மறுப்பு திருமணத்தை தடை செய்யும் இந்து மத சட்டத்தை அம்பேத்கார் தூக்கி எறிந்தார் இல்லை எனில், நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். தலித்கள் அனைவரும் இந்து மதத்தில் இருந்தும், கிறித்தவத்தில் இருந்தும் வெளியேறிய தம் பண்டைய மதமான பவுத்ததை ஏற்க வேண்டும். அத்தோடு கலப்பு மணமும் புரிய வேண்டும், ஆதிக்க சாதிகளின் அடக்கல் மிரட்டல்களுக்கு அடி பணியாமல் பயணிக்க வேண்டும். இன்றில்லை எனில் என்றுமில்லாமல் போய்விடும் !

kkk said...

Viyasan said பார்ப்பனர்களின் சாதி வெறியை மட்டும் எதிர்க்கும் , இன்றைக்கு அதற்கு அவசியமேயில்லாத போதும், செத்த பாம்பை தொடர்ந்து அடிப்பது போன்று

Niranjan said தமிழகத்தின் சாதியத்துக்கு திராவிட இயக்கத்தின் தோல்வி என்பதை விட இந்து மதத்தினை அழிக்காமல் விட்டதன் விளைவு எனலாம், இந்து மதத்தின் விசம் என்பதை வெறும் திராவிட இயக்கதினால் ஒழித்துவிட இயலாது. அதற்கு பாரிய சமூக அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

suppudu said...

நீங்கள் எழுதிய கட்டுரைக்கும், நடந்துபோன சம்பவத்திற்கு என்ன தொடர்பு...!!????

வேகநரி said...

இளவரசனின் சாவு – பெரியாரிசத்தினதும் திராவிட அரசியலினதும் தோல்வி?
அருமையான நியாயமான கட்டுரை சகோ வியாசன்.
----------------
நண்பன் நிரஞ்சன் தம்பி,
//தமிழகத்தின் சாதியத்துக்கு திராவிட இயக்கத்தின் தோல்வி என்பதை விட இந்து மதத்தினை அழிக்காமல் விட்டதன் விளைவு எனலாம், இந்து மதத்தின் விசம் என்பதை வெறும் திராவிட இயக்கதினால் ஒழித்துவிட இயலாது. அதற்கு பாரிய சமூக அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.//
தமிழகம் மலேசியா இலங்கையெல்லாம் இந்துவாக இருந்து கொண்டே ஜாதிகளை நிராகரித்த இந்துக்களும் இருக்கிறாங்க.
//தலித்கள் அனைவரும் இந்து மதத்தில் இருந்தும், கிறித்தவத்தில் இருந்தும் வெளியேறிய தம் பண்டைய மதமான பவுத்ததை ஏற்க வேண்டும்.//
எமது பிரதேச மதமான பவுத்தத்தின் மீதான உங்க ஆர்வத்தில் நான் குறை காணல நண்பர்.
ஆனா நீங்க அரபு ஆக்கிரமிப்பையே நோக்கமா கொண்ட இஸ்லாம் பற்றி எதுவுமே இங்கே சொல்லல.:(

suppudu said...

எதை எதையோ முடிச்சிப்போட்டு அரசியல் செய்தாகிவிட்டது.. இந்த காதலால் இரண்டு மரணம் நிகழ்ந்திருக்கிறது.

தொடர்புடையு இரண்டு குடும்பங்களைத் தவிர மற்றவர்கள் யாரும் இதில் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தளவிற்கு இவர்களின் காதல்கதை ஊடகங்களுக்கு விருந்தாகியிருக்காது..என்பது என்னுடைய கருத்து !!!

viyasan said...

@நிரஞ்சன்,

சாதிப்பாகுபாடு இந்து மதத்தில் மட்டுமல்ல, கிறித்தவ தமிழர்கள் மத்தியிலும், ஏன் இஸ்லாமியர் மத்தியிலும் உண்டு என்பதை அம்பேத்காரே குறிப்பிட்டுள்ளார். அதனால் இக்காலத்தில் தமிழர்களுக்கு மத்தியில் காணப்படும் சாதிப்பாகுபாட்டுக்கு இந்து மதத்தையும், பார்ப்பனர்களையும் குற்றம் சாட்டுவது, எங்களது ஆற்றாமையைக் காட்டும் செயல். இளவரசனின் கொலைக்கு அல்லது தற்கொலைக்குக் காரணம் பார்ப்பனர்களுமல்ல, இந்து மதமுமல்ல. அப்படியானால் திவ்யா ஒரு கிறித்தவ வன்னியராக இருந்திருந்தால் வன்னியர்கள் இளவரசனை மகிழ்ச்சியோடு மணமகனாக ஏற்றிருப்பர்களா? இந்து மதத்தில் குறைபாடுகள் உண்டு அதற்கு பெளத்தத்தை ஏற்கவேண்டும் என்று சொல்வதைப் பார்க்கச்க் சிரிப்பு வருகிறது ஏனென்றால் இலங்கைத் தமிழர்களின் அழிவுக்கு இன்றைக்கும் காரணமாக இருப்பது பெளத்தமே தவிர சிங்களவர்கள் அல்ல.

viyasan said...

KKK,
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்து மதத்தினை அழித்தால் எப்படி சாதி அழியும் என்பதை மேலும் விளக்குங்கள் பார்க்கலாம்.

இந்து மதத்தால் தான் தமிழர்களிடம் இன்றும் சாதிபிரிவினை காணப்படுகிறதேன்றால், தமிழ்க் கிறித்தவர்களும் ஏன் சாதியடிப்படையில் அடிபட்டுக் கொண்டு சாகிறார்கள்.

சாதியை ஒழிப்பதற்கு இந்து மதத்தை அழிக்கத் தேவையில்லை, அதை நாங்கள் தமிழாக்க வேண்டும். இந்து மதத்துக்கென பைபிள், குரான் போன்ற நூல்களும், கட்டுப்பாடுகளும் கிடையாது. சாதியற்ற இந்துமதத்தை தமிழர்கள் உருவாக்க விரும்பினால், “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே” என்று தமிழன் நாவுக்கரசன் , பார்ப்பனர்களின் மனுதர்மத்தை துக்கிக் குப்பையில் போட்டது போன்று நாங்களும் போடலாம் என்பதற்கு பல உதாரணங்கள், தமிழர்களின் சைவத்திலும், மாலியத்திலும் உண்டு. அதனால் இந்து மதத்தால் தான் தமிழர்களிடம் சாதி இன்றும் நிலவுகிறது என்பது விவாதத்துக்குரியது. வேதங்களில் உள்ளா பூசை புனஸ்காரங்களை ஒதுக்கி, மனுதர்மத்தை காலில் போட்டு மிதித்து விட்டு, தமிழ்வழியில் கடவுளைக் கும்பிட்டுகொண்டும் ஒரு இந்துவாக இருக்க முடியும்.

viyasan said...

//நீங்கள் எழுதிய கட்டுரைக்கும், நடந்துபோன சம்பவத்திற்கு என்ன தொடர்பு...!!???//
சகோ. Suppudu,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இதற்குப் பதிலை நான் முதல் பத்தியிலேயே குறிப்பிட்டுள்ளேன்.
நீங்கள் அதை வாசிக்கவில்லையா?

..... அதாவது சமூக ஏற்றத்தாழ்வுகளை சாதி, மத வேறுபாடுகள் இல்லாத நிலைமையை உருவாக்குவதற்காக ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட அரசியல் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய பின்னரும் தமிழ் இளவரசன்களின் வாழ்க்கை தண்டவாளத்தின் அருகில் முடிவடைகிறதென்றால் திராவிட அரசியலும், பெரியாரிசமும் தமிழ்நாட்டில் தோல்வியடைந்து விட்டன என்பது தானே கருத்தாகும்..

அதாவது தமிழர்களின் நூற்றாண்டு கால திராவிட அரசியல் இளவரசன் போன்ற தமிழர்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த தவறிவிட்டது. அதிலும் திராவிட இயக்கங்களின் முன்னோடிகளே இளவரசன் போன்ற தலித் சமூகத்தலைவர்கள் தான். அப்படியிருந்தும் தலித்துக்கள் திட்டமிட்டு திராவிட அரசியலில் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள் என்பது தான் என்னுடைய இந்தப் பதிவின் சாரம்.

இந்தப் பதிவிலிருந்து நான் சொல்ல வருவதென்னவென்றால், திராவிட அரசியல் இளவரசன் போன்ற தமிழர்களுக்கு, அவர்களின் சாவிலும் குரல் கொடுக்காமல் அநீதி இழைத்து விட்டது, அதனால் தமிழர்கள், உலகத்தமிழர்கள் அனைவரும் இணையக் கூடிய சாதி, மத வேறுபாடற்ற, அரசியல் தலைமை தமிழர்களுக்குத் தேவை என்பது தான்.