Monday, July 15, 2013

விடிய விடிய இராமர் கதை, விடிந்தால் பிறகு இராமர் சீதைக்கு என்ன முறை?”


1983ம் ஆண்டு ஆரம்பமான ஆயுதப் போராட்டம், துரதிஷ்டவசமாக 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு வந்துள்ளது. 
- தினமும் எமது பத்திரிகைகள், இணையத்தளங்களில் வெளியாகும் செய்தி - கொலை, பாலியல் வன்முறை, கைது, ஆட்கடத்தல், சிங்களக் குடியேற்றம், புதிய புத்த விகாரை, இராணு முகாம், அத்துடன் கோயில்கள் தேவாலயங்கள் பள்ளிவாசல்களின் அழிப்பு போன்றவை. 
- முன்னாள் போராளிகளும், மக்களும் இன்றும் தடுப்பு முகம்களிலும் வதைமுகம்களில் வாழுகின்றனர். விடுதலை செய்யப்பட்ட போராளிகள் பாதுகாப்பு பிரிவினரின் கண்காணிப்பின் கீழ் பல கஷ்டங்களுடன் வாழ்கின்றனர். 
- ராஜபக்ச அரசும், சிங்களவரில் பெரும்பான்மையானோர் - தமிழர்களுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கு என்ன அரசியல் பிரச்சனை உள்ளது என வெளிப்படையாக கூறிவருவதுடன், குறைந்தபட்ச அடிப்படை அரசியல் தீர்வான 13வது திருத்தச்சட்ட மாகாணசபை கூட தமிழர்களின் கைகளில் போகப்படாது என்பதில் கண்கணம் கட்டியுள்ளனர். 
- சர்வதேச சமூதாயம், ஐக்கிய சிறிலங்காவிற்குள்ளன தீர்வையே தாம் ஆதரிப்பதாக தொடர்ந்து கூறிவருகின்றனர். 
- எமக்குள் எந்த ஓற்றுமையும் இல்லாது, மாலுமி இல்லாத கப்பலாக திசை தெரியாது பிரயாணம் செய்கிறோம். 
யதார்த்தமான இவ் உண்மைகளை அலட்சியம் செய்துகொண்டு, இன்றும் சுதந்திரமான தமிழீழமே முடிவான அரசியல் தீர்வேன, புலம்பெயர்வாழ்வில் உள்ள சில நபர்களும் அமைப்புகளும் கூறுவதையே, “விடிய விடிய இராமர் கதை, விடிந்தால் பிறகு இராமா சீதைக்கு என்ன முறை” என கூறுகிறேன்.

1983ம் ஆண்டு ஆரம்பமான ஆயுதப் போராட்டம் மூலம், ஈழத்தமிழ் மக்களின் தாயாக பூமியான  வடக்கு கிழக்கில், மூன்றில் இரண்டு பங்கு, தமிழீழ விடுதலைப் புலிகளினால் மீட்கப்பட்டு, அங்கு சகல கட்டமைப்புக்கள் அடங்கிய தமிழீழ அரசு ஒன்று நடாத்தப்பட்டது. துரதிஷ்டவசமாக யாவற்றையும் இழந்தோம். ஆனால் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலின் பின்னர் எமது உண்மை நிலை என்ன என்பதை நாம் மறைத்து, மறந்துவிட முடியாது. 
கடந்த மூன்று நான்கு வருடங்களாக, எமது பத்திரிகைகள், இணைய தளங்களை புரட்டி பார்த்தால் - கொலை, பாலியல் வன்முறை, கைது, ஆட்கடத்தல், சிங்களக் குடியேற்றம், புதிய புத்த விகரை, இராணு முகாம், கோயில்கள் தேவலயங்கள் அழிப்பு போன்ற செய்திகளே காணப்படுகிறது. இதேவேளை ராஜபக்ச அரசு தமிழர்களுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் என்ன அரசியல் பிரச்சனை உள்ளது என ஏளனம் செய்யும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
இந்த வகையில் மிக துரிதமாக சிறீலங்க அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம், சிங்கள இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல் போன்றவற்றிலிருந்து எமது தாயகபூமியை உடன் காப்பாற்ற வேண்டியது உணர்வுள்ள தமிழர்களதும், தமிழ்பேசும் மக்களது கடமையாகும். 
இவற்றிற்கு உடனடி நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், எமது இனத்தின் அழிவிற்கு நாமே காரணமாவோம். அதாவது இரவு பகலாக நோயை கூறும் எம்மவர்களிடம், இதற்கு என்ன வைத்தியத்தை நாம் செய்யலாமென வினவினால், சிலர் சுதந்திரமான தமிழீழம் என சிந்தனையின்றி பதில் கூறுகிறார்கள். சுதந்திர தமிழீழத்தை காலப்போக்கில் நிச்சயம் அடைய வேண்டும். ஆனால் தற்பொழுது யாதார்தங்களை மறந்து நாம் பகற் கனவு காணமுடியாது. 
இன்று பேரம் பேசும் நிலையில் உள்ளோமா? 
அன்றும், இன்றும், என்றும், 80 வீதத்திலிருந்து 85 வீதமான தமிழீழ மக்களது லட்சியம் - சுதந்திர தமிழீழமே என்பதில் எவ்வித ஐயமில்லை. இவ் கொள்கையிலிருந்து யாரும் மாறவேண்டிய அவசியமுமில்லை. ஆனால், குறைந்தது மூன்று தசாப்தங்களாக சிங்கள அரசுகளுடன் மார்புதட்டி சமமாக வாழ்ந்த நாம் இன்று பேரம் பேசும் நிலையில் உள்ளோமா? ஆயுத போராட்டம் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மௌனித்துள்ள நிலையில், சிறிலங்கா அரசு இன்று எம்மை ஒரு இனமாகவோ, மக்களாகவோ கணக்கெடுப்பதே இல்லை. 
சிறிலங்கா மிகவும் திறமையான ராஜதந்திரத்துடன் அரசியல் செய்கிறது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. சர்வதேச சமூதாயத்தின் பார்வையை திசை திருப்புவதற்காகவும், தம்மால் தமிழர் தயாக பூமியில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றம், இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல் ஆகியவற்றை நிறைவாக நிறைவேற்றி முடிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதனாலும், தமிழர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை, 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் என இழுத்தடித்து  வருகிறது.  
இதற்கு ஏற்றப்போல, சில புலம்பெயர்வாழ் அமைப்புகளும், தலைவர்களெனப்படுவோரும், நாட்டில் அரசியல்வாதிகள் எனப்படுவோரும், தமிழீழம் தான் முடிவான தீர்வு, 13வது திருத்தச் சட்டம் ஓர் தீர்வல்ல என தினமும் அலட்டிக் கொள்கின்றனர். இவர்களது அறிக்கைகளை சிறிலங்காவின் தூதுவரலாயங்களே, சர்வதேச சமூதாயத்திற்கு விநியோகித்து வருகிறது என்பதை இவர்கள் இன்னும் அறியவில்லைபோலும். 
இன்று எமது தாயாகபூமியில் - சமூக, பொருளாதார, அரசியல், கலாசார ரீதியான முன்னேற்றங்கள் எதுவுமில்லை. அங்கு வாழும் மக்களை ஒரு கணம் தன்னும் சிந்தித்து, அவர்களது நிலைமைகள், தேவைகளுக்கு ஏற்ற வகையில், இன்றுவரை எந்த திட்டமும் எம்மால் முன்வைக்கப்படவில்லை. 
தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுத பலத்தினால் பெற முடியாததை, கதை அளப்பதன் மூலம், இரவோடு இரவாக நாம் அடைய முடியுமா என்பதை நாம் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். 
தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வேண்டிநின்ற காலம் போய், இன்று எமது தாயாகபூமியில் வாழம் மக்களை காப்பாற்ற முடியாத நிலையில் நாம் உள்ளோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. 
நம்மவர் கூறும் சுதந்திரம், சுயநிர்ணயம் சில நாட்களில், மாதங்களில், வருடங்களில் கைகூடுமானால் நாமும் இவர்களுடன் இணைந்து சேவை செய்வோம். ஆனால் தற்சமயத்தில் இது ஓர் கானல் நீர் என்பதே யாதார்த்தம். 
உடனடி தீர்வாக தமிழீழம் என்பது, தற்சமயத்தில் ஒன்றில் பகற் கனவாக இருக்கலாம், அல்லது இதை கூறுபவர்களிடையே ராஜபக்சவின் ஆட்கள் சிலர் மறைமுகமாக நின்று, இவர்களை தவறான வழிகளில் இட்டுச் செல்லலாம் என்பதே உண்மை. 

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வையும் ஒரு நோக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தம் மட்டுமே இன்றுவரை குப்பபை தொட்டிகளில் வீசப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு சிறிலங்க அரசு பதில் கூற கடமைப்பட்டுள்ளது. 
அன்று இவ் ஒப்பந்தம், எமக்கு ஏற்றதாக காணப்படவில்லை என்பது உண்மை. ஆனால் இன்று எமது தாயகபூமி உள்ள நிலையில், இலங்கை-இந்திய ஒப்பந்தம் தன்னும் கிடைத்தாலே, இதன் மூலம் தொடர்ந்து அடிமைப்பட்டு அழிந்து வரும் எமது இனத்தையும், எமது தாயாகபூமியையும் காப்பாற்ற முடியும் என்பதை யாரும் மறுக்க முடியாது. 
எந்தவொரு சிறிலங்க அரசும், தமிழ் மக்களுக்கு எந்த அரசியல் தீர்வையும் ஒருபொழுதும் முன்வைக்கப் போவதில்லை என்பது உண்மை. இதேபோல் இந்தியாவை அலட்சியம் பண்ணி நாம் எந்த அரசியல் தீர்வையும் அடைய முடியாது என்பது அடுத்த உண்மை. இவற்றிற்கு அனுபவரீதியான பல ஊதாரணங்கள் உண்டு.
இந்தியாவை பகைக்க வேண்டும் என எண்ணுபவர்கள், சிறிலங்காவின் மறைமுக நிகழ்சி நிரல்களுக்கு துணை போபவர்கள், இந்தியாவின் உதவியை நாம் தேடும் கட்டத்தில், சர்வதேச சமூதாயத்தின் வெளிப்படையான உதவி அங்கீகாரம் எமக்கு நிச்சயம் கிடைக்கும். 
வாக்கெடுப்பும் பாதுகாப்பு சபையும் 
மீண்டும் மீண்டும் கூறுகிறேன், ஓர் இனத்தின் சுதந்திரத்தை நிர்ணயிக்கும் வாக்கெடுப்பு எந்த நாட்டில் நடைபெறுவதனாலும், அது ஐ. நா. பாதுகாப்பு சபையினரின் அங்கீகாரத்தை பெற வேண்டும். ஏரித்திரியா, கிழக்கு தீமூர், தென்சூடான் ஆகியவை இதற்கு நல்ல உதராணமாகும். 
பாதுகாப்புச் சபையில் உள்ள சீன, ராஷ்ய சிறிலங்கவிற்கு எதிராக, எமக்கு சார்பாக இவ்வாக்கெடுப்பை நடைமுறைப்படுத்த அனுமதிக்கமாட்டார்கள் என்பதை இங்கு எழுதித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? 
ஸ்கொற்லாந்தின் நிலைமை வித்தியாசமானது. அவ் வாக்கெடுப்பு பிரித்தானிய அரசின் பூரண சம்மதத்துடன் நாடைபெறவிருக்கிறது. அதேபோல் கனடிய அரசின் சம்மதாதத்துடன் இரு தடவை கியூபெக் மாநிலத்தின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
ஆகையால் எமது விடயத்தில். சிலரது விதண்டாவாத சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காது, மிஞ்சியிருக்கும் எமது நிலத்தையும் இழக்காது, தற்பொழுது எமக்கு சாதகமாகவுள்ள விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த நாம் முன்வர வேண்டும். 
தமிழீழத்தை, தமிழர் தாயாக பூமியை நேசிப்பவர்கள் யாரும், 13வது திருத்தச் சட்டம், இந்தியா-இலங்கை ஒப்பந்தந்தை எதிர்க்க மாட்டார்கள். காரணம், தமிழீழத்திற்கான எதிர்காலப் பாதை, நிச்சயம் 13வது திருத்தச் சட்டமாகவே அமையும் என்பதை இவ் அமைப்புக்களையும் நபர்களுக்கு மேலாக சிங்களவர்கள் நன்கு அறிந்துள்ளார்கள். 
பாலஸ்தீன மக்களின் நிலையை சரியாக புரிந்தவர்கள் யாரும், எமது இனத்தை பாதாள குழியில் தள்ளுவதற்கு வழிவகுக்க மாட்டார்கள். பாலஸ்தீன மக்களுக்கு 57 நாடுகள் அடங்கிய, இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அமைப்பின் ஆதரவு மிக நீண்டகாலமாக இருந்தும், இன்று அவர்களது நிலையை பாருங்கள்! இன்று எமக்கு எந்த நாட்டின் ஆதரவு உள்ளது என்பதை, குருட்டுத்தனமான அரசியல் பேசுபவர்கள் ஒரு கணம் சிந்தித்து, தமது நிலைப்பாட்டில் முடிவெடுக்க வேண்டும், சுயநிர்ணயம், தமிழீழம் என்பது வானத்திலிருந்து விழும் பொருள் அல்ல. 
தமிழீழத்தை, தமிழர் தாயாக பூமியை நேசிப்பவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளது தலைவர் பிரபாகரன் கூறியவற்றை நினைவு கொள்ளவது வரவேற்கதக்கது. திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனின், உரைகளான: 
1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி, சுதுமலை பிரகடனம், 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி மாவீரர்தின உரை, 2008ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி மாவீரர் தின உரை ஆகியவற்றை தெளிவாக படித்து, தமது நிலைபாடுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். 
புலிகள் மாகாணசபையை நிராகரித்தார்களா? 
தழிழீழ விடுதலை புலிகள் மாகாணசபையை நிராகரித்தர்களா இல்லையா என்பதற்கான பதில், தழிழீழ விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகரும், தேசத்தின் புயல் மறைந்த அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் திருமதி. அடல் பாலசிங்கத்தினால், 2001ம் ஆண்டு ஆங்கிலம், தமிழில் எழுதி வெளியிடப்பட்ட, ,“The Will to Freedom” (த வீல் ரு பிறிடம்) என்ற புத்தகத்தில் பதில் உள்ளது. 
மாகாணசபை பற்றிய தகவல்களை அறிய விரும்பியோர்,“The Will to Freedom” (த வீல் ரு பிறிடம்), ஆங்கில வெளியீட்டின், “LTTE Stragegy and Premadasa’s agenda”, 256-258, என்ற பக்கங்களை படிக்கவும். 
இதே இடத்தில், ‘விடுதலை புலிகள் மக்கள் முன்னனி (PFLT) என்ற அரசியல் கட்சியை, தமிழீழ விடுதலைப் புலிகள் எதற்காக 1989ம் ஆண்டு பதிவு செய்தார்கள் என்பதையும், நாம் நினைவுபடுத்திகொள்ள வேண்டும். 
இவற்றை அறிந்தும் அறியாதவர்களாக, தற்பொழுது உள்ள ஒரு சிறிய வெற்றிடத்தை பாவித்து, தமது குறுகிய சிந்தனை, எண்ணங்களுக்கும் வடிவம் கொடுத்து, இது தான் தமிழீழ மக்களது அரசியல் சிந்தாந்தம் என பறைசாற்றுவது, நிச்சயம் எமது இனத்திற்கு அடிக்கும் சாவு மணியே. 
சிறிலங்கா அரசு, 6வது திருத்தச்சட்டத்தை வாபஸ்பெற வேண்டுமென்பதை தழிழீழ விடுதலை புலிகள் தமது நிபந்தனையாக முன்வைத்தார்களென்பதை யாரும் மறுக்கவில்லை. 
புலிகளை அழித்தவர்கள். 
இதே இடத்தில், புலம்பெயர் வாழ்வில் சிலருடைய வேறுபட்ட சிந்தனைகளை, மிக அண்மையில், “டெல்லி மாநாடு” என்ற போர்வையில், நாம் அறியக் கூடியதாகவிருந்தது. அவர்கள் கூறிய விடயம் சிந்தனைக்குரிய விடயமாகவிருந்தாலும், எமது உடன் பிறப்புக்களையும், எமது நிலத்தையும் நாம் சூதாட முடியாது. 
சிலர் கூறுவது என்னவெனில், தமிழீழ விடுதலை புலிகள் அழிப்பதற்கு பல மூலைகளிலும், பல வடிவங்களிலும், பல நிறங்களிலும் திட்டங்கள் தீட்டப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, சிங்கள அரசுகளுடன் ஒத்துழைக்கப்பட்டே நிறைவேற்றப்பட்டது. 
இதன் வடிவங்களில் ஒன்றாக, புலி எதிர்ப்பு தமிழ் அமைப்புக்களும், தமிழ் தலைவர்களும், தமிழ் புத்திஜீவிகள், கல்விமான்களும் அடங்குவார். இவர்கள் சிங்கள அரசுகளுடன் இணைந்து, வெற்றிகரமாக புலிகளை அழித்தவர்களெனவும், இன்று தமிழீழ விடுதலை புலிகள் இல்லாத நிலையில், சிங்கள அரசு தமிழர்களுக்கு என்ன அரசியல் பிரச்சனை உண்டு என்று கேட்பது மட்டுமல்லாது, இவ்விடயத்தில் இந்தியா உட்பட சர்வதேச சமுதாயத்தை பார்த்து சிறிலங்கா ஏளனம் செய்கிறது. 
இந்நிலையில், தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்கு சிங்கள அரசுடன் ஒன்றுபட்டு நின்ற தமிழ் அமைப்புக்களும், நபர்களும் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளை சிங்கள அரசிடமிருந்து பெற்று கொடுக்க கடமைப்பட்டுள்ளார்களென கூறுகிறார்கள். இக்கருத்து  ஆத்திரம், கோபம், உணர்ச்சி வசத்தில் உருவான கருத்தாகவே பார்க்க முடியுமே தவிர, இதை நாம் ஓர் ஆக்கபூர்வமான சிந்தனையாக கொள்ள முடியாது. 
இக் குழப்ப நிலை நீங்க வேண்டுமானால், நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கை ஓங்க வேண்டும் என்பதில், ராஜபக்ச ஆதரவு தமிழர் தவிர்ந்த, வேறு யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மேலும் மக்களிடையே செல்வாக்கு நிறைந்த முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன் போன்ற முக்கிய நபர்கள், புத்திஜீவிகள், கல்விமான்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கத்தவர்களாக இணைத்து செயல்பட வேண்டும். 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றவுடன் சில சர்ச்சைகள் எழுகின்றது ஒரு சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டுமென்ற கருத்தை கொண்டுள்ளனர். 
இது ஓர் சங்கடமான நிலையை உருவாக்கினாலும், எதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது என்பதனையும், அன்று இதன் சார்பாக தேர்தலில் போட்டியுட்டவர்கள், எதற்காக “வீட்டு” சின்னத்தில் தேர்தலில் நின்றார்கள் என்பதையும் நாம் ஒரு பொழுதும் மறக்க முடியாது. கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமா? 
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவுசெய்ய வேண்டுமென இன்று கூறுபவர்களில் பெரும்பான்மையானோர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட வேளையில், இதில் அங்கத்துவம் பெறாதவர்கள் மட்டுமல்லாது, அன்று அவர்கள் சிறிலங்க அரசுடன் நெருங்கமானாவர்கள். 
இதில் தமிழர் கூட்டணியும், புளோட் அமைப்பும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் தேர்தல்களில் இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்டால் மட்டுமே, இவர்களால் வெற்றி பெறமுடியுமென்ற கபடத்தனமான சிந்தனையை கொண்டவர்களென கூறப்படுகிறது. 
அன்று தமிழர் கூட்டணியின் நழுவல் போக்கிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது. அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கிய தமிழீழ விடுதலை புலிகள், இதை பதிவு செய்யாது, ஓர் சர்வ கட்சி அமைப்பாக காண்பிக்க வேண்டுமென்பதையே விரும்பியிருந்தார்கள். 
முன்பு சிறிலங்கா அரசிற்கு துணைபோன அமைப்புக்கள், தற்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நிலையில், இதை ஓர் அரசியற் கட்சியாக பதிவு செய்யப்படுமானால், முன்பு சிறிலங்கா அரசு மிக நெருக்கமாக நின்ற சிலர், தமது செல்வாக்குகளை பாவித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பதவிகளை பெற்ற பின்னர், மீண்டும் குத்துக்கரணம் அடிக்கமாட்டார்கள் என்பதற்கு, எந்தவித உத்தரவாதம் கிடையாதெனவும் சிலர் கூறுகிறார்கள்.
இந்நிலையில், யாரை யார் நம்பி ஒன்றிணைந்து, தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பது என்பது என்றும் கேள்வி குறியாகவே காணப்படுகிறது. 
சர்வதேசமயப்படுத்தல் 
மேலும், “டெல்லி மாநாடு” என்ற போர்வையில், இன்னுமொரு கருத்தையும் நாம் அறியக்கூடியதாகவிருந்தது. புலம்பெயர் தேசங்களில் உள்ள பெரும்பாலான அமைப்புக்களும், தனிநபர்களும், இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டவேளையில், அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு “டெல்லி மாநாட்டில்” பங்கெடுத்தால் மட்டுமே தாமும் அதில் பங்கு கொள்வதாக மாநாட்டு அமைப்பாளர்களுக்கு கூறியுள்ளார்கள். 
இதன் மூலம் நாட்டிலும், புலத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ள  செல்வாக்கு மிகத்தெளிவாகிறது. இவ் யாதார்த்தை ஏற்க மறுப்பவர்கள், மக்களின் செல்வாக்கை பெறாதவர்கள் மட்டுமல்லாது, தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஓரம் கட்டவேண்டுமென்ற நோக்குடன், தாம் விரும்பியவாறு கரிபூசுபவர்கள் பற்றி நாம் கவலைகொள்ளத் தேவையில்லை.  

ஆகையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடியவிரைவில் சர்வதேசமயப்படுத்தப்பட வேண்டும். தமிழர்கள் வாழும் சகல புலம்பெயர் தேசங்களிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளைகளை அமைத்து, அனுபவம் தகைமை, மக்கள்  செல்வாக்கு பெற்றவர்களை பொறுப்பில் அமர்த்தி, தமிழீழ மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை மேற்கு நாட்டு அரசாங்கங்களுக்கு உடனுக்கு உடன் எடுத்து கூறுவதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கு நாட்டு வெளிநாட்டு அமைச்சுக்களுடன்  நெருங்கிய உறவை பேண முடியும். அதாவது புலம்பெயர் தேசத்தில் உள்ள சில அமைப்புக்கள் நாட்டின் நிலைமைகளை உணராது, அரசியல் செய்வதை தவிர்த்து மக்களுடன் நிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே புலத்திலும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகச் சிறந்தது. 
ஆகையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக ஓர் சர்வதேச மாநாட்டை ஐரோப்பாவில் கூட்டுவதன் மூலம், புலம்பெயர்வாழ் தேசத்தில் உள்ள பெரும்பாலான அமைப்புக்கள், தனிநபர்களிடையே ஐக்கியத்தை உருவாக்க முடியும். 
கூட்டமைப்பு சர்வதேச மயப்படுத்தப்படுவதனால், ஏற்கனவே புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புக்கள் ஓரம்கட்டப்பட வேண்டிய அவசியமில்லை. காரணம் அவ் அமைப்புக்கள் தமக்கு பரீட்சார்த்தமான ஊர்வலங்கள், பரப்புரை வேலைகள், கல்வி, கலை கலாசார சேவைகள் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், வாணிபம், விடுதலைப் போராட்டத்தின் போது உயிர்நீத்த மக்கள் போராளிகளது நினைவு தினங்கள், மாவீரர் தினம் போன்றவற்றை வழமைபோல் நடாத்தலாம். 
இதன் மூலம் ஒருகருத்துடனான அரசியல் யாதார்தங்களை மேற்கு நாடுகள் அறிந்துகொள்வதுடன், எமது அரசியல் அபிலசைகளை மேற்கு நாட்டவர்களும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
இவ்விதமாக தமிழீழ மக்களது அரசியல் நகர்த்தப்படாவிடில், சிறிலங்க அரசினால் மூளை சலவை செய்யப்பட்டு, பாதுகாப்பு பிரிவின் கண்காணிப்பிற்கு உள்படுத்தப்பட்டு, என்ன செய்வதுவென அறியாது  வாழும் நபர்களினாலும், அரசியல் அறிவற்றவர்களும், மது மங்கை மோகத்தில் போராட்டத்திலிருந்து குத்துகரணமடித்தவர்களும் எமது அரசியல் அபிலசைகள் சிறிலங்கா அரசு பொய்கள் கூறி ஏலத்தில் விற்பதை தடுக்க முடியும். 
இதேவேளை நாம் இன்னுமொரு முக்கிய விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்பொழுது சிறிலங்கா அரசு, ஆவுஸ்திரேலியாவில், தமிழீழ விடுதலை புலிகளை தடை செய்யும் விடயத்தில் மிக கண்ணும் கருத்துமாக வேலைகளை மேற்கொள்கிறார்கள். 
ஏற்கனவே சில நாடுகளில் உள்ள தடை இன்னும் தளர்த்தப்படாத கட்டத்தில், 2007ம் ஆண்டில் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டாளர் மீதான சட்ட நடவடிக்ககைகள், கைதுகள் மீண்டும் புலம்பெயர் தேசங்களில் நடைபெறாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். 
இவை யாவற்றுக்கும் பரிகாரமாக, மக்கள் செல்வாக்கு அங்கீகாரத்தை பெற்ற தமிழர் கூட்டமைப்பே தமிழீழ மக்களை எதிர்காலத்தில் வழி நடத்த வேண்டும். 
“இருட்டில் பிரகாசம் தரும் சந்திரனை பார்த்து, விசர் நாய்கள் குலைத்தால், பிரகாசிக்கும் சந்திரனால் என்ன செய்ய முடியும்?” “குரைப்பவர்கள் குரைக்கட்டும், சந்திரன் தொடர்ந்து பிரகாசிக்கும்”tchrfrance@hotmail.com
ச. வி. கிருபாகரன்

No comments: