Thursday, July 11, 2013

இளவரசனை கொன்றது யார்?

இளவரசன் ஓடுகின்ற புகைவண்டியில் பாய்ந்து தற்கொலை செய்திருந்தால் அல்லது புகையிரதம் அவனை முட்டியிருந்தால்; குர்லா எக்ஸ்பிரஸ் வண்டியின் சாரதி அந்தச் சம்பவத்தை எழுத்து மூலம் அடுத்த புகையிரத நிலையத்தில் -அதாவது ஹோசூர் புகையிரத நிலையத்தில் மட்டுமன்றி – பெங்களூருவிலுள்ள அந்தப் பிரிவு புகையிரத இலாகாவின் தலைமைச் செயலகத்திலும் சமர்ப்பித்திருப்பார்.ஆனால் ஹோசூரிலும், பெங்களூருவிலும் உள்ள புகையிரத நிலைய அதிகாரிகளிடம் மேற்கொண்ட விசாரணையில்  அப்படி எந்தவிதமான சம்பவமும் நடந்ததாக குர்லா எக்ஸ்பிரசின் சாரதி குறிப்பிட்டதற்கு எந்தவித குறிப்போ அல்லது அறிக்கையோ இல்லை.
“குர்லா எக்ஸ்பிரஸ் போனதன் பின்பு, மேலும் இரண்டு புகைவண்டிகள் அந்த வழியாக சென்றிருக்கின்றன.  அந்த இரண்டு புகைவண்டிகளிலுமிருந்த புகைவண்டி காவலர்களோ அல்லது சாரதியோ இளவரசனின் உடலைக் கண்டிருந்தால் நிச்சயமாக. அடுத்த புகைவண்டி நிலைய அதிபருக்கு அறிவித்திருப்பார்கள் என தி இந்து பத்திரிகைக்கு தெரிவித்தார் பெங்களூரு புகையிரத பிரிவின் உயர்மட்ட அதிகாரி பிரவீன் பாண்டே.
பயணிகள் வண்டியினதும்( passenger train)  Inter-city express இனது சாரதிகளும் கூட தண்டவாளத்தின் ஒரமாக அடிபட்டுக் கிடந்த எந்த உடலையும் காணவில்லை.  சாதாரணமாக  புகைவண்டியால் யாராவது தாக்கப்பட்டால். அந்த புகைவண்டியின் சாரதி அதை  அறிவிப்பார், உண்மையில் அவர் கடமையில் இருக்கும் பொது ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அதனை அறிவிக்க வேண்டும் என்பது சட்டமாகும். ஆனால் அப்படி எந்த முறைப்பாடும் தரப்படவில்லை என்கிறார் திரு. பாண்டே.

புகைவண்டியின் சாரதி தற்கொலை செய்தவரைக் காணாமல் போவதற்கும், சாத்தியங்கள் உண்டல்லவா என்று கேட்டதற்கு, தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத, புகையிரத இலாகாவின் அதிகாரியின் கருத்துப்படி- புகைவண்டியின் சாரதி தற்கொலை செய்தவரை காணாமல் போகும் நிலை, அந்த சம்பவம் இருட்டில் நடந்திருந்தால் அல்லது மிகவும் வளைவான பாதையில் புகைவண்டி வந்து கொண்டிருந்தால் அல்லது காலநிலை மிகவும்  மோசமாக இருந்தால்   மட்டும் சாத்தியமாகும் என்றார். ஆனால் இந்த தருமபுரி சம்பவத்தில் குர்லா எக்ஸ்பிரஸ் சம்பவம் நடந்த இடத்தை தாண்டும் போது நேரம் பகல் 12.50 p.m.


செய்தி : ஜீலை 10, 2013.

தர்மபுரியில் எவரும் எந்த புகைவண்டியாலும் ஜூலை 4ம் திகதி தாக்கப்படவில்லை என தென்மேற்கு புகையிரத திணைக்களம் (இலாகா) மீண்டும் அறிவித்துள்ளது. அன்று எவரும் புகைவண்டியால் அடிபட்டு தற்கொலை செய்யவில்லை என புகையிரதத் திணைக்களத்தின்  பெங்களூரூ  பிரிவின் முகாமையாளர் அனில்குமார் அகர்வால்,  தி இந்து பத்திரிகையிடம் தெரிவித்தார்.  கோயம்பத்தூர்- மும்பாய் கடுகதி (எக்ஸ்பிரஸ்) புகைவண்டியின் சாரதி அப்படி எந்த விதமான செய்தியையும் தெரிவிக்கவுமில்லை.

இளவரசனின் மரணம் பற்றிய செய்தியும், உடலில் தலையில் மட்டும் காயங்கள் காணப்படுவதுடன், புகைவண்டியில் மோதியிருந்தால் காணப்படக் கூடிய வேறு எந்த காயங்களும் உடலில் இல்லை என்பதும் புகையிரத தண்டவாளங்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பாளரால் தான் புகையிரத இலாகாவுக்கு அறிவிக்கப்பட்டது. அதே வேளையில், இறந்தவர் புகைவண்டியில் பக்கமாக இருந்து வந்திருந்தால் சாரதியின் கண்களில் அவர் படாமலிருக்கவும் வாய்ப்புண்டு எனவும் தெரிவித்தார்.

அப்படியானால் குர்லா எக்ஸ்பிரஸின் பின்னால் வந்த இரண்டு புகையிரதங்களின் சாரதிகளும் உடலைப் பார்த்திருக்கலாம் அல்லவா என்ற கேள்விக்கு அந்த இரண்டு சாரதிகளும் அப்படி எந்த விதமான செய்தியையும் தெரிவிக்கவில்லை என்றார் திரு. அகர்வால். தண்டவாளத்தின் இடையில் ஏதாவது உடல் கிடந்திருந்தால் சாரதிகள் நிச்சயமாக அந்த செய்தியைத் தெரிவித்திருப்பார்கள். ஆனால் தண்டவாளத்தின் அருகில் கிடந்திருந்தால், வேகமாக வரும் புகைவண்டியிலிருந்து, ஒருவர் தூங்குகிறாரா அல்லது இறந்து விட்டாரா என்று கூற முடியாது. (அவ்வளவு அருகில் யாராவது தூங்குவார்களா)

யாராவது புகையிரதத்தின் முன்னால் பாய்ந்திருந்தால் அல்லது அந்த நோக்கத்துடன் அங்கு நின்றிருந்தால் சாரதி கண்டிருப்பார். http://www.thehindu.com/news/national/tamil-nadu/no-official-record-of-train-running-over-ilavarasan/article4885690.ece

16 comments:

indrayavanam.blogspot.com said...

நல்ல அலசல் நண்பரே

வேகநரி said...

யோசிக்க வேண்டிய விசயம்.
சில தினங்களுக்கு முன் தமிழ் இணையத்தில 4தமிழ்மீடியா என்ற ஒன்றில் - இளவரசன் பாய்ந்து தற்கொலை நேரில் கண்ட புகைவண்டியின் சாரதி - என்று ஒரு செய்தி பார்த்தேன்.அந்த செய்தியே பொய் என்பது தெரிகிறது.

viyasan said...

சகோ. வேகநரி,

இந்த செய்தியைப் பாருங்கள்.

Meanwhile, the South Western Railway has reiterated that there was no run-over in Dharmapuri on July 4. Divisional Railway Manager, Bangalore Division, Anil Kumar Agarwal told The Hindu that the driver of Coimbatore-Mumbai Kurla Express had not given any such message.

“The driver has not given any message. The message of a death was reported by the Patrol Man. The body has only head injury…it has no other damage of the run-over kind. It is possible that he (the victim) came from the side and the driver might not have noticed,” he said.

Asked whether the drivers of two other trains which passed that way had noticed the body of Ilavarsan lying along the track, Mr. Agarwal said nobody had given any message. Had the body been lying between the tracks, the driver would have given a message. “Considering the speed of the train, if a person is lying near the track, it would be difficult to know whether he is sleeping, lying or dead.

The driver would know if someone jumps before the train or stands there purposely to be hit by the train,” he said.

The Hindu.

viyasan said...

//நல்ல அலசல் நண்பரே//

நன்றி. ஆனால் இது இந்து பத்திரிகையில் வந்த செய்தி. தமிழாக்கம் மட்டும் தான் என்னுடையது. :)

வேகநரி said...

சகோ வியாசன், நான் ஹிந்துவிலே வந்த மூலத்தை பார்க்க முடியாவிட்டாலும் முதலே நீங்க தந்த செய்தியை கட்டுரையை முழுமையா ஏற்று கொண்டுவிட்டேன். எனக்கு வெறுப்பை தந்தது தமிழில் செய்தி என்று 4தமிழ்மீடியாவின் பொறுப்பற்ற செயல்.இளவரசனின் மரணம் ஒரு படு கொலையாவே நான் உணர்கிறேன்.நன்றி சகோ

நந்தவனத்தான் said...

ரயில்வே சொல்வது போக, காவல் துறையினர் சுலபமாக தடய அறிவியலின் துணையுடன் இளவரசன் இரயிலில்தான் பாய்ந்து இறந்தாரா என கண்டறிய முடியும். இரயில் விபத்தில் மரணமுற்று இருந்தாலும், அவராக சென்று குதித்தாரா அல்லது தள்ளிவிடப்பட்டரா என்பது இன்னொரு கேள்வி.

ஆனால் காவல் துறையும் அரசும் தற்கொலை எனவே வழக்கை முடிக்க விரும்புகின்றன. அதற்கு இரு காரணங்கள் இருக்கக்கூடும். ஒன்று, கொலை என்றால் கொலையாளிகளை கண்டறியும் பொறுப்பு அரசினை சாரும். நேருவின் சகோதரரை கொன்ற கொலையாளிகளை பிடிக்காமல் இன்றுவரை திணறுவது போல இவ்வழக்கிலும் திணற அரசு விரும்ப இல்லை. இரண்டாவது காரணம், கொலை என அறிவித்தால் அதன் காரணமாக சாதி கலவரம் மூளும் வாய்ப்பு இருப்பதால் தற்கொலை என்று அரசு ஊத்தி மூடவே விரும்புவது போல் தெரிகிறது. இதனால் இளவரசன் கொலையுண்டிருந்தால் அவருக்கு நீதி கிட்டும் வாய்ப்பு குறைவுதான். ஆனால் அவருக்கு நீதி கிட்டுவதை விட அப்பாவி உயிர்கள் கலவரத்தில் மாய்வதை தடுப்பது மிக முக்கியமானது.

viyasan said...

சகோ. வேகநரி,

இன்றைக்கு இளவரசன் உயிரோடிருந்து திவ்யா தற்கொலை செய்திருந்தால், இளவரசன் நிச்சயமாக சிறையில் அல்லது காவல் துறையின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்திருப்பார். திவ்யாவின் வாக்குமூலத்தின் பின்னர் தான் கொலை அல்லது தற்கொலை நடந்திருக்கிறது.

மேலை நாடுகளில் கூட இப்படியான சம்பவம் நடந்தால், காதலியையும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, உறவினர்கள் அல்லது மற்றவர்களின் ஈடுபாடு அல்லது மூளைச்சலவை இல்லாமல் வாக்குமூலம் எடுத்திருப்பார்கள். ஆனால் திவ்யா இன்றும் தனது குடும்பத்துடன் தானிருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் இளவரசனின் காதலி மட்டுமல்ல, மனைவியும் கூட.

திவ்யாவைக் கைது செய்து, யாருடைய தூண்டுதலில் அல்லது அறிவுரையின் அடிப்ட்டையில் அவர் தனது கணவனுக்கெதிராககருத்தை தெரிவித்தார் என்பதை விசாரிக்க வேண்டும்.
திவ்யா தன்னை விட இளமையான இளவரசனை வற்புறுத்தி தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறி, கடைசியில் அவனது சாவுக்கும் காரணமாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. அதனால் முதலில் திவ்யாவை காவல் துறையின் கட்டுப்பாட்டில் (custody) கொண்டு வரவேண்டும். இன்னொரு அப்பாவி தலித் இளைஞன் தன்னுடைய பிறப்பை நொந்து கொண்டு இறக்கும் நிலை உருவாகவே கூடாது. இந்த அநியாயச் சாவுக்குக் காரணமாக இருந்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அது தான் என்னுடைய அவா. :(

viyasan said...

///அவருக்கு நீதி கிட்டுவதை விட அப்பாவி உயிர்கள் கலவரத்தில் மாய்வதை தடுப்பது மிக முக்கியமானது.///

Huh? அப்பாவி உயிர்கள் கலவரத்தில் மாய்வதைத் தடுப்பது காவல் துறையினதும் , தமிழ்நாடு அரசினதும் வேலை. அதற்காக இளவரசனுக்கு நீதி கிடைப்பதை விட்டுக் கொடுக்கலாம் என்பது ஏற்க முடியாததொன்று மட்டுமல்ல, அப்படியான கருத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

நந்தவனத்தான் said...

//தமிழ்நாடு அரசினதும் வேலை.//


சாதி கலவரம் மூண்டால் அதை அடுக்குவது எவ்வளவு கடினம் என்பதை அறியாமல் பேசுகிறீர்கள். கலவரத்திலும் அதை அடக்கும் போது இன்னமும் உயிர்கள் மடியும். மேலும் இரு சாதிகளிடையே பிளவும் அதிகமாகும். இளவரசனுக்கு அரசு பாதுகாப்பு அளித்திருக்கலாம், ஆனால் இப்போது சாதி கலவரம் மூளாமல் இரு சமூகங்களும் இணைவது குறித்தும் பாமக போன்ற சாதி கட்சிகள் ஒழிவது குறித்தும் மட்டும் சிந்திக்க வேண்டுமென்கிறேன்.

நீங்கள் மாண்டவரை பற்றி கவலைப்படுகிறீர்கள்.நான் உயிருள்ளவர்கள் மடியக்கூடாது என யோசிக்கிறேன். இளவரசனுக்கு நீதி கிட்டுவதில் எனக்கும் மகிழ்வுதான்.இளவரசனுக்கு நீதி தேவையில்லை என்பதல்ல எனது நிலை. இறந்தவருடைய நீதியை விட வாழும் மனிதரின் உயிர் மேலானது. எனது கருத்து ஏற்க கடினமானது என்பதை அறிவேன். ஆனால் நிஜ உலகில் நீதி என்பது பெரும்பாலும் கிட்டுவதே இல்லை. குறைந்தபட்சம் இருக்கும் உயிர்களாவது மிஞ்சட்டுமே!

viyasan said...

//ஆனால் இப்போது சாதி கலவரம் மூளாமல் இரு சமூகங்களும் இணைவது குறித்தும் பாமக போன்ற சாதி கட்சிகள் ஒழிவது குறித்தும் மட்டும் சிந்திக்க வேண்டுமென்கிறேன்.//

இளவரசனின் கொலையைச் செய்தவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் அல்லது தற்கொலையாக இருந்தால் அவனை அந்த நிலைமைக்கு தள்ளியவர்கள், திவ்யாவுக்கு மூளைச்சலவை செய்தவர்கள் அல்லது பயமுறுத்தியவர்கள் தண்டிக்கப்படும் வரை இந்த இரண்டு சமூகங்களும் இணையப் போவதில்லை.

ஏனைய சமூகங்களிலும் உள்ள சாதிப்பேய்களுக்குப் படிப்பினை கற்பிக்கும் வகையில், இளவரசனின் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அடையாளம் காண்பிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதை தமிழ்நாட்டுப் பத்திரிகள் மூடி மறைக்காமல் எழுத வேண்டும், நீதி கேட்க வேண்டும். இளவசரனுக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் அவன் தனது கண்களை மூடினாலும், பல தமிழர்களின் கண்களைத் திறந்து விட்டுப் போயிருக்கிறான் என்பது நிச்சயம்.

வேகநரி said...

சகோவின் தளத்தில ஒருபக்கத்திலே சுமத்திரன் எம்பி என்று ஒரு இலங்கை தமிழ் பெரியவர் உறுமுகிறார்.
"Muslim women can't walk on the streets of this country today"
இஸ்லாமிய நாடுகள் சிலவற்றில் காபீர் பெண்கள் அரபு உத்தரவு இஸ்லாமிய மார்க்கபடி மூடிக்கட்டிக்டு திரிய வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறாங்க என்பதை இவர் உணர்வாரா? கடைந்தெடுத்த அரபு இஸ்லாமிய பிற்போக்கு ஆண்களிடம் அடிமைப்பட்டு அவர்கள் சொல்லும் முக மூடியை அணிந்தே வேறு வழியில்லாம இஸ்லாமிய பெண்கள் காபீர் நாட்டு தெருக்களில் நடக்கிறார்கள்.இதை சுமத்திரன் பெரியவர் உணர்வாரா?

viyasan said...

சகோ. வேகநரி,

சுமந்திரனின் பேச்சு அவர் பெண்களைத் திரையிட்டு மறைப்பதை ஆதரிக்கிறார் என்று கருத்தாகாது. அவர் கூறுவதெல்லாம், முஸ்லீம் பெண்கள் அணியும் உடையின் அடிப்படையில் அவர்களைத் தாக்கக் கூடாது. அப்படி கறுப்புக் கூடாரத்தைத் தலையில் அணிந்து கொண்டு சென்ற முஸ்லீம் பெண் ஒருவர் மன்னம்பிட்டி என்ற இடத்தில் தாக்கப்பட்டிருக்கிறார். முஸ்லீம் பெண்களுக்கு இலங்கையில் பாதுகாப்பில்லை என்பது தான். இத்தனை முஸ்லீம் எம்பிக்கள் மகிந்த ராஜபக்சவின் காலடியில் கிடக்கும்போது , ஒரு தமிழ்த்தலைவர் தான் முஸ்லீம் பெண்களின் துன்பத்தைப் பற்றிப் பேசுகிறார். இலங்கை முஸ்லீம்கள் ஈழத்தமிழர்களுக்கிழைத்த கொடுமைகளுடன் , இது ஈழத்தமிழர்களின் பெருந்தன்மையைத் தான் காட்டுகிறது.

வேகநரி said...

சகோ, தாக்குதல் சம்பவங்களை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.மற்றும்படி பர்தாவுக்கு தடை வந்தால் குதுகலிக்க போவது இஸ்லாமிய பெண்கள் தான்.வகுப்புக்கோ, ஆபிஸ்சுக்கோ வந்தவுடன் பர்தாவை களட்டி வைத்துவிட்டு போகும் போது அப்பா அண்ணணுக்கு பயத்தில் மீண்டும் அணிந்து கொண்டு அவர்கள் போவதை பலர் சொல்லி அறிந்திருக்கிறேன்.
சாதியடிப்படையிலான இட ஒதுக்கீட்டைத் தவிர்த்து இலங்கையைப் போல் பின்தங்கிய மாவட்டங்களிலுள்ள மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அல்லது ஒவ்வொருவரின் வருமானத்தின் அடிப்படையிலான இட ஒதுக்கீடு செய்தால் அது நீதியானதாக இருக்கும்.
என்று நீங்க சொன்ன கருத்தை கண்டேன். மிக சரியானதும் உண்மையும். ஆனா தமிழகத்தில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடே நன்மையானது என்று ஒரு மூட நம்பிக்கை பதிந்து விட்டது.இதனால் ஜாதி வேற்றுமைகள் தான் வளரும்.

நந்தவனத்தான் said...

//அவன் தனது கண்களை மூடினாலும், பல தமிழர்களின் கண்களைத் திறந்து விட்டுப் போயிருக்கிறான் என்பது நிச்சயம்.//

கிழிச்சான், உங்களுக்கு நம்மாளுக மேல ரொம்ப நம்பிக்கை. அடுத்த குடும்பத்துக்கு அறிவுரை சொல்லும் நல்லவனுகளிடயே உங்க குழந்தையை தலித்துக்கு திருமணம் செய்விப்பீரா என கேளுங்க. ஒரிருவர் தேறினாலே அதிகம். இளவரசன் சாவினை பத்திரிக்கையில் படித்துவிட்டு ச்சூ கொட்டிவிட்டு அதை மறப்பவரே அதிகம். மேலும் இளவரசன் மாதிரி பலர் ஏற்கனவே செத்து போய்யிருக்கிறார்கள், செத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டில். இதில் அரசியல் புகுந்துவிட்டதால் பிரபலமாகிவிட்டது. மற்றபடி கிராமங்களில் இந்த மாதிரி நடப்பது, குறிப்பாக தென்மாவட்டங்களில் சகஜம். அப்பவெல்லாம் திருந்தாம இப்ப திருந்தீருவானுகளாக்கும்?

உதாரணமாக ஞானி எழுதிய இந்த கேஸ்...

//கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகில் உள்ள புதுகோரைப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் சாதியினை சார்ந்த இளைஞன் முருகேசன் .இவர் அண்னாமலை பல்கலைகழகத்தில் கெமிக்கல் இஞ்சினியரிங் பட்டம் பெற்றவர். கிராமத்தில் சொந்தமான விவசாய நிலங்கள் என பிறரைச் சாராது வாழும் பொருளாதார நிலை கொண்ட குடும்ப பின்னனியில் வளர்ந்தவர். அவர் அக் கிராமத்தை சார்ந்த வன்னியர் சாதி பெண்ணான கண்னகியினை காதலித்தார். இருவரும் 2003 மே மாதம் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின் முருகேசனுக்கு ஒரு நல்லவேலை கிடைத்ததும் தங்களின் திருமணத்தை வெளிப்படையாக சொல்வது என முடிவு செய்திருந்தனர். முருகேசனுக்கு திருப்புரில் வேலை கிடைத்ததும் கண்ணகியினை அழைத்து சென்றுவிட்டார். கண்னகியின் தகப்பனார் கிராம பஞ்சாயத்து தலைவர் . தனது சாதிய சக்திகளால் இரவோடு இரவாக முருகேசனின் குடும்பத்தை சேர்ந்த அவரது தகப்பனார், சித்தப்பா, தம்பி என அவரின் சொந்தக்காரகளை கடத்தி முருகேசன் ,கண்ணகி உள்ள இடம் குறித்து கேட்டு சித்தரவதை செய்தனர். நெய்வேலி நிலக்கரி சுரக்கத்திற்கு நிலக்கரி கண்டறிவதற்காக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்று குழியில் கயிறு கட்டி முருகேசனின் தம்பி தொங்கவிடப்படும் அளவு சித்திரவதைக்கு அந்த குடும்பம் உட்படுத்தப்பட்டது. இறுதியில் முருகேசனின் சித்தப்பா மூலம் இருவரையும் கிராமத்தில் சமாதானம் பேசுவதற்காக வரவழைக்கப்படுகின்றனர். அதனை நம்பி ஊருக்கு வந்தார்கள் காதலர்கள். ஆனால் ஊரின் நடுவில் ஒட்டுமொத்த கிராமமுமே வேடிக்கை பார்க்க கண்ணகிக்கும், முருகேசனுக்கும் வாயில் பூச்சி மருந்து விஷம் வலுக்கட்டாயமாக புகட்டப்பட்டது, அவர்கள் திமிறிய போது காதில் அந்த விஷம் ஊற்றப்பட்டது. அவர்கள் துடிதுடித்து செத்த பின்பு இருவரின் உடலும் கிராம சுடுகாட்டில் எரிக்கப்பட்டது...

நந்தவனத்தான் said...

தொடர்ச்சி...
இந்த நிகழ்வினை காவல் நிலையத்தில் சொன்ன முருகேசனின் தாயார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டார். பின் காவல்துறை கண்ணகியினை அவர் தந்தை கொன்றதாகவும், முருகேசனை,முருகேசனின் தந்தை மற்றும் சித்தப்பா கொன்றதாகவும் வழக்கு தாக்கல் செய்தது. சாட்சிகளை குற்றவாளிகளாக மாற்றும் போது சாட்சி சொல்ல ஆளின்றிப் போய்விடும் என்பதே காவல்துறையின் ஆதிக்க சாதி நலன்பேணும் கீழ்த் தரமான அந்த யுக்தி. இதில் வேடிக்கை என்னவென்றால் கண்ணகியின் தகப்பனார் துரைசாமி பஞ்சாயத்துகடந்த 2007 ல் விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மறவநத்தம் கிராமத்தை சார்ந்த சின்னசாமியின் மகள் தலைவர் என்பதால் ஒரு மாதத்திற்கு மேல் சிறையிலிருந்தால் பஞ்சாயத்து தலைவர் பதவி பறி போய்விடும் எனவே ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் வேண்டப்பட்டது, அதனை ஏற்று சிறைப்படுத்தப்பட்ட மூன்றே வாரத்தில் குற்றவாளிகளை விடுதலை செய்தது நீதிமன்றம். இவ் வழக்கு சி.பி.ஐ புலன் விசாரணைக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பொ.இரத்தினம் முயற்சியால் மாற்றப்பட்ட போதும்,பழைய நிலையே தொடர்கிறது. இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்னமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது.//

இன்னமும் பல காதல் விவகாரங்களை எழுதியுள்ளார் அவரது தளத்தில் .... http://tinyurl.com/pveajwd

இவை எல்லாம் வெளியே தெரிந்தவை. தெரியாதவை இன்னமும் அதிகம்!


இம்மாதிரியான ஒரு சமூகத்தில் ஒரு இளவரசனுக்கு நீதி கிடைத்து என்ன ஆகப் போகிறது? பல இளவரசன்கள் இப்படி கொல்லப்படுகின்றனர் அல்லது அவர்களது காதல் புதைக்கப்படுகிறது. இதற்கு காரணம் போலிஸோ அரசோ அல்ல. நாங்கள்தான் காரணம். ஈழத்துக்கு இந்திய ஆதரவு இல்லை ஏன்? அதற்கும் நாங்கள்தான் காரணம். எங்கள் நாட்டில் நாங்கள்தான் அரசு. நாங்கள் ஓட்டுப் போட்டுதான் தேர்ந்தெடுப்போம் ஆனால் அரசை ஏதோ வெள்ளைக்காரன் நடத்துகிற நினைப்பில் பேசுவோம். எல்லா அக்கிரமத்தையும் பார்ப்பான், அரசு, அரசியல்வாதிகள் என அடுத்தவர் மேல் போட்டுவிட்டு கொஞ்சமும் குற்ற உணர்வு இன்றி வாழுவோம். நாங்கள் திருந்தவும் போவதில்லை.

வேகநரி said...

சகோ நந்தவனத்தான், முருகேசனுக்கு நடந்த கொடுமை அதிர்சியடையவைத்தது.