Wednesday, June 19, 2013

ஈழத்தமிழர்களை உசுப்பேத்தி விடும் தமிழ் நாட்டுத் தமிழர்கள்!
தமிழ், தமிழ் என்று  ஈழத்தமிழர்களை உசுப்பேற்றி விடும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் இதே போன்று தமிழ்நாட்டிலும் பேசி தமிழுணர்வைத் தூண்டினாலென்ன?  

இலங்கையில் வாழும் தமிழர்களை விட, தமிழ் பேசாத நாடுகளில் வாழும்  புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழுக்குக் கொடுக்கும் முன்னுரிமையை விடக் குறைவாகத் தான் தமிழ் நாட்டில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.தமிழ்நாட்டில் தமிழை எழுத வாசிக்கத் தெரியாமலே பட்டதாரியாகி, நல்ல வேலையையும் பெற்று தமிழ் எழுதத் தெரியாமலே அமோகமாக வாழவும் முடியும். ஆனால் ஈழத் தமிழர்களோ மேலை நாடுகளில் பிறந்து, அந்த நாட்டுக் குடியுரிமையுமுள்ள தமது குழந்தைகளைக் கூட , என்ன வேலைப்பழு இருந்தாலும், அதற்கென தமது  நேரத்தை  ஒதுக்கி, பல மைல்களுக்கு அப்பாலிருக்கும் பாடசாலைகளுக்கும், ஆசிரியர்களிடமும் அழைத்துச் சென்று தமிழ் கற்பிக்கிறார்கள். அதனால் தமிழ் நாட்டுத் தமிழுணர்வாளர்கள் எல்லாம் வெளிநாட்டுக்குச் சென்று ஈழத்தமிழர்களிடம் மட்டும் தமிழின் அருமை பெருமைகளைப் பேசுவதுடன் நிறுத்தி விடாமல்தமிழை இழந்தால் நாம் எமது அடையாளத்தை இழந்து விடுவோம் என்பதையும், தமிழ் நாட்டுப் பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு கட்டாயமாக தமிழை எழுதப் படிக்க கற்பிக்க வேண்டுமென்பதை தமிழ்நாட்டிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அதை விட அவலம் என்னவென்றால் ஏற்கனவே தமிழ் நாட்டு இளஞ்சமுதாயத்தினரிடம் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம்  இன்றைக்கோ நாளைக்கோ என உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் தமிழை முற்றாகவே இல்லாமல் செய்து விடும் வகையில் தமிழக அரசுக்குச் சொந்தமான கல்லூரிகளிலேயே ஆங்கில மொழிவழிக் கல்வித்திட்டத்தையும், ஆரம்பித்தால் இப்பொழுதே தமிழ் பேச வெட்கப்படும் தமிழ் நாட்டுக் கல்லூரி மாணவர்கள், முற்று முழுதாக தமிழை மறந்து விடுவார்கள். அதை எதிர்த்து கவிஞர் வைரமுத்து அவர்கள் தமிழ்நாட்டில் ஏற்கனவே பேசியிருக்கிறாரோ இல்லையோ எனக்குத் தெரியாது. அவர் அதைப்பற்றியும், தமிழைப் பற்றியும்   இவ்வாறு தமிழ் நாட்டிலும் பேசி தமிழ் நாட்டுத் தமிழர்களையும் உசுப்பேற்றி விட வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள். 


அத்துடன் வானொலி அல்லது தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில், ஒன்றில் ஆங்கிலத்தை மட்டும் முற்றிலும்  பேச வேண்டும் அல்லது தமிழை மட்டும் பேச வேண்டும், இரண்டையும் சேர்த்துக் குழப்பியடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும். உண்மையில் தமிழ்நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும், அதில் பங்கு பற்றும் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்கள் கூட, இயல்பாகவே அவர்கள் பேசும் தமிழைப்  பேசாமல், தேவையில்லாமல், வேண்டுமென்றே ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேசும் பொது, அவர்களின் தலையில்  ஓங்கி ஒரு  குட்டு வைக்க வேண்டும் போன்ற உணர்வு எனக்கு ஏற்படுவது வழக்கம். முடிந்தால் தமிழ் நாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி அங்கு குறைந்தது மூன்று மாத பயிற்சியளிக்கலாம். :)

கண்கலங்காதீர்கள் தர்மம் மறுபடி வெல்லும்  சுவிஸில் கவிப்பேரரசு வைரமுத்து 
தமிழர்களின் தோல்வி என்பது தற்காலிகமானதுதான், தர்மம் மறுபடி வெல்லும், தமிழ் அடையாளம் அழிவதில்லை, தமிழ் வரலாறு அழிவதில்லை, அதை தூக்கி நிறுத்த அடுத்த தலைமுறை வந்தே தீரும் என கவிப்பேரரசு வைரமுத்து சுவிட்சர்லாந்தில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் தெரிவித்தார்.  
கவிப்பேரரசு வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுகவிழா நேற்று மாலை சுவிட்சர்லாந்து லுசேன் நகரில் எழுத்தாளர் கல்லாறு சதீஸ் தலைமையில் நடைபெற்றது.
தாய் மண்ணை விட்டு வந்தாலும் தமிழ் மொழியை தமிழ் பண்பாட்டை இன்றும் மறக்காமல் நெஞ்சில் சுமந்து வாழும் ஈழத்தமிழர்களால் உலகம் எல்லாம் தமிழ் வாழும் என்றும் அங்கு உரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்தார்.  

12 comments:

Avargal Unmaigal said...

ஈழத்தமிழர் மட்டுமல்ல வெளிநாட்டில் வாழும் அனைத்து தமிழர்களுமே ஏதாவது ஒரு முறையில் தம் குழந்தைகளை கொஞ்சமாவது தமிழை கற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால் தமிழகத்திலோ ??????

viyasan said...

உங்களின் வருகைக்கு நன்றி. தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்த எத்தனையோ பேருக்கு தமிழ் எழுத வாசிக்க தெரியாது. அதை ஒரு சிலர் பெருமையாகக் கூட நினைக்கின்றனர் என்பதை என்னால் உணர முடிந்தது. ஏனென்றால் தமிழ் படிக்கத் தெரியாதென்றால், சமுதாயத்தில் அவர்களின் உயர்ந்த அந்தஸ்தை காட்டுகிறது போன்ற நினைப்பு, அப்படியொரு நிலை இருக்கும் வரை எல்லோரும் தமிழக் கற்க மாட்டார்கள். தமிழ் நாடு அரசு தமிழ் நாட்டில் வாழும் எல்லா மாணவர்களுக்கும் தமிழைக் கட்டாய பாடமாக்க வேண்டும், அது ஒன்று தான் வழி.

Anonymous said...

தமிழகம் என நீங்கள் சென்னையை மையமாக்கி கூறுகின்றீர்கள். பிற தமிழக பகுதிகளில் தமிழ் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. சென்னையை மையமாக அரசியல், ஊடகங்கள், கலைத்துறை என அனைத்திலும் தமிழல்லாதோரின் ஆதிக்கம் இருப்பதலாயே தமிழ் தேயும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்த இலங்கை மலையக தமிழர், மலேசியா, சிங்கப்பூர், ஏன் மும்பை தாராவி, பெங்களூர், மணிப்பூர் மோரேயில் கூட தமிழ் தலைமுறை பல கடந்து வாழ்கின்றது. ஈழத்தமிழர் பலர் தமிழ் பயிற்றுவிக்க முயல்வது உண்மை, பாராட்டத்தக்கவை, ஆனால் பெரும்பாலான புலம் பெயர் ஈழத்தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் எழுத, வாசிக்க, ஏன் பேசவே தெரியாது. சிலர் மாத்திரமே முயன்று வருகின்றனர். குறிப்பாக 12 தர நிலை தமிழ் தேர்வு எழுதும் தமிழ் மாணாக்கார் எண்ணிக்கையை பார்த்தாலே புரியும். தமிழ் வாழவேண்டும் வாழும் ஆனால் தாயகத்தில் சிரத்தை எடுத்தால் மட்டுமே, புலத்தில் உத்தரவாதமில்லை, குறிப்பாக மேற்கு நாடுகளில்.

viyasan said...

நீங்கள் சொல்வது சரி. புலம்பெயர்ந்த தமிழர்களில் குறைந்த எண்ணிக்கையில் 12ம் தரத்தில் தமிழ் கற்கும் தமிழ் மாணவர்கள் குறைவாக இருப்பதன் காரணம் தமிழ் நாட்டைப் போல் அல்லது சென்னையில் உள்ளது போல், தமிழ் கற்பது அந்தஸ்தைக் காட்டாது அல்லது fashion இல்லை என்பதற்காக அல்ல, உதாரணமாக ரொறன்ரோ, கனடாவில் தமிழை ஒரு பாடமாகக் கற்று அதை பல்கலைக்கழக அனுமதிக்கு Credit Course ஆக எடுக்கலாம். ஆனால் தமிழ் பாடம் நடப்பது மாலையில் மட்டும் தான், பல மாணவர்கள் பகுதி நேர வேலை செய்து கொண்டும் படிப்பதால், மாலை நேரத்தில் தமிழ் வகுப்புக்களுக்கு போக முடியாமல் போகிறது. ஆனால் சிறுவயது பாடசாலை மாணவர்கள் இப்பொழுது ஒழுங்காகப் போகிறார்கள். என்னுடைய மருமகனை நான் வேலை முடிந்து வந்து தமிழ் வகுப்புக்கு கூட்டிப் போய், வகுப்பு முடிந்ததும் மீண்டும் போய்க் கூட்டி வருவதால் எனக்கு அது தெரியும்.

வேகநரி said...

சகோ வியாசன், அருமையான அவசியமான கட்டுரை. தலைப்பே உண்மையை சொல்லுதே
ஈழத்தமிழர்களை உசுப்பேத்தி விடும் தமிழ் நாட்டுத் தமிழர்கள்! தமிழை இலங்கை தமிழர்கள் பாதுகாக்க வேண்டுமாம். இவங்க ஆங்கிலத்தில் கல்வி கற்று பேசும் போது ஆங்கிலத்துடன் கலந்து பேசி பெருமையடைவதற்காக மட்டும் ஒரு மொழியாக தமிழை கொஞ்சம் படித்து ஆங்கிலத்துடன் தமிழை கலந்து பேசி பெருமை பெருமயடைவாங்களாம். அடிபட்டு செத்தாவது இலங்கையில் ஒரு தமிழ் நாடு ஒன்று எடுங்க என்று உசுப்பேத்திய மாதிரி தான்.
//அத்துடன் வானொலி அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், ஒன்றில் ஆங்கிலத்தை மட்டும் முற்றிலும் பேச வேண்டும் அல்லது தமிழை மட்டும் பேச வேண்டும், இரண்டையும் சேர்த்துக் குழப்பியடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்.//
மிக சரியாக சொன்னிங்க சகோ. இங்கிருந்து தான் தமிழை பேசுவது என்பது அவமானமானது,ஆங்கிலத்துடன் கலந்து தமிழ் சொற்களை விடுவதன் மூலம் பெருயைடையலாம் என்று தமிழகத்திற்கு பரப்பபடுகிறது.

viyasan said...

//மிக சரியாக சொன்னிங்க சகோ. இங்கிருந்து தான் தமிழை பேசுவது என்பதுஅவமானமானது,ஆங்கிலத்துடன் கலந்து தமிழ் சொற்களை விடுவதன் மூலம் பெருயைடையலாம் என்று தமிழகத்திற்கு பரப்பபடுகிறது.//

நன்றி சகோ. வேகநரி. தமிழ்நாட்டு தொலைகாட்சிகளில் தேவையில்லாமல் ஆங்கிலத்துடன் தமிழைக் கலப்பது என்னைப் போல் உங்களுக்கும் எரிச்சலையூட்டியிருக்கிறது போல் தெரிகிறது. ஆங்கிலம் கற்பது முக்கியம் அதே வேளையில் தமிழைத் தமிழர்கள் அனைவரும் கற்பது அதை விட முக்கியம் என்பதை தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் அனைவரும் உணரும்நிலை வருமென நம்புவோம்.

Anonymous said...

தமிழ் கற்கும் வாய்ப்பை அரசு ஊக்குவிக்க வேண்டும், தமிழக தொ.கா கெடுக்கும் தமிழ் என்ன சொல்ல. தமிழகத்தில் தமிழ் வாழ வில்லை எனில் எங்கும் தமிழ் வாழவியலாது. உணர வேண்டும் தமிழர்கள். முதலில் தமிழகத்தில் பல தமிழர்களுக்கும், யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் ழகரம் வரவே வராது. :( கொடுமை. !

Anonymous said...

டொராண்டோவில் மட்டுந்தான் தமிழ் கிரடிட் கிடைக்கும், ஆனால் அதை கற்போரின் தொகை குறைவே. மாணாக்கர் மட்டுமல்ல கற்றுக் கொடுக்கும் பள்ளிகள், ஆசிரியர்களும் தரம் குறைவே. அத்துடன் கணிசமான பெற்றோர் தவிர பல தமிழ் பெற்றோர் பிள்ளைகளிடமே ஆங்கிலத்தில் தான் பேசுகின்றனர். இதே மனநிலையும் பல தமிழக பெற்றோர்களும் செய்வது இன்னும் கொடுமை.

viyasan said...

//முதலில் தமிழகத்தில் பல தமிழர்களுக்கும், யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் ழகரம் வரவே வராது. :( கொடுமை. )///

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். ழகரம் அதாவது வாழைப்பழத்தை ‘வாயைப்பயம்’ என்பது போல் உச்சரிக்க வேண்டுமென்றால், அப்படி எந்த ஈழத்தமிழரும் (நான் உட்பட) உச்சரிப்பதை நான் பார்த்ததில்லை. ஆனால் ல, ள, ன, ண உச்சரிப்பை ஈழத்தமிழர்கள் தெளிவாக உச்சரிப்பார்கள். தமிழ்நாட்டில் நன்றாகத் தமிழ் படித்தவர்கள் கூடப் பேசும் பொது தமில் என ஒலிப்பதை நான் கேட்டிருக்கிறேன். தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்கள் கூட ல,ள பிழை விடுவார்கள், அன்னை (அம்மா) யை அண்ணை என்பார்கள், முல்லைப்பெரியாறு என்பதை முல்லைப்பெரியார் ஆக்கி, முல்லைப்பெரியார் என்று பத்திரிகைகளில் வந்ததை நான் தமிழ்நாட்டில் பார்த்து அதிர்ந்து போனேன். பெரிய பத்திரிகைகள் கூட முல்லைபெரியார் என்று குறிப்பிட்டிருந்தன.

வேகநரி said...

//Niranjan Thampi said...பல தமிழ் பெற்றோர் பிள்ளைகளிடமே ஆங்கிலத்தில் தான் பேசுகின்றனர். இதே மனநிலையும் பல தமிழக பெற்றோர்களும் செய்வது இன்னும் கொடுமை.//
தமிழ் பேசும் ஒரு மானிலத்தில் தமிழகத்தில் தமிழ்பேசுவது கவுரவ குறைவு என்றும் ஆங்கிலம் பேசுவது பொருமை என்றும் மனநிலை இருப்பது மோசமானது நண்பர். வெளிநாட்டில் உள்ளவங்களுக்கு தமிழ் பேச வேண்டும் என்ற அவசியமில்ல அப்படியிருக்க அவங்க தங்கள் பெற்றோர் மொழி என்று தமிழை பேச எழுத முயற்சிக்கிறாங்க. இது பாராட்டபட வேண்டியது.ஆனா தமிழ் தமிழகத்தில் தமிழை பேசுவது அவமானம் ஆங்கிலந்தில் தமிழை கொஞ்சம் கலந்து பேசினா பெருமை,ஆங்கிலம் மூலம் கல்வி கற்றால் பெருமை என்ற மனநிலையை இது தான் மிகவும் அபாயகரமானது நண்பர்.
//தமிழ் வாழவேண்டும் வாழும் ஆனால் தாயகத்தில் சிரத்தை எடுத்தால் மட்டுமே புலத்தில் உத்தரவாதமில்லை//
முழுக்க உண்மை.

அதிரடி சொர்ணாக்கா said...

"பல தமிழர்களுக்கும், யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் ழகரம் வரவே வராது. :( கொடுமை. !"

பக்கத்தில் நின்று பார்த்தமாதிரி பேசுகின்றார். முதலில் ஈழம் வந்து அவர்கள் எப்படி பேசுகின்றார்கள் என்பதை பார்த்துவிட்டு பின்னூட்டம் போடுங்கள்.

அதிரடி சொர்ணாக்கா said...

"பல தமிழர்களுக்கும், யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் ழகரம் வரவே வராது. :( கொடுமை. !"

பக்கத்தில் நின்று பார்த்தமாதிரி பேசுகின்றார். முதலில் ஈழம் வந்து அவர்கள் எப்படி பேசுகின்றார்கள் என்பதை பார்த்துவிட்டு பின்னூட்டம் போடுங்கள்.