Tuesday, June 18, 2013

சிங்களவர்களின் தேசிய நடனம் தமிழர்களிடமிருந்து இரவல் வாங்கியது.

இலங்கையின் தேசிய நடனம் என்று சிங்களவர்கள் பெருமையுடன் குறிப்பிடுவது கண்டிய நடனத்தைத் தான். அது இலங்கையில் சிங்களவர்களின் கோயில் திருவிழா, திருமணம், அரசாங்க நிகழ்ச்சிகள், வெளிநாட்டவர்களின் வரவேற்பு விழாக்கள், ஏன் சாதாரண திறப்பு விழாக்களில் கூட சிங்களவர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தின் அடையாளம் எனக் குறிப்பிட்டு, சிங்களவர்கள் பீற்றிக் கொள்வதை எங்களில் பலரும் அறிவோம் ஆனால் அந்த, சிங்களவர்களின் தேசிய நடனம் என  அழைக்கப்படும் அந்த கண்டிய நடனத்தைக் கூட சிங்களவர்கள் தமிழர்களிடமிருந்து தான் இரவல் வாங்கினார்கள் என்ற உண்மை பல தமிழர்களுக்கே தெரியாது.
சிங்கள கலை, கலாச்சாரம், கட்டிடம், உடை, உணவுப்பழக்கம் என எதை எடுத்து கூர்ந்து கவனித்தாலும்  அவையனைத்திலும் சுயமானத்தன்மை(Originality) இல்லாதிருப்பதையும்
அவையெல்லாம் மற்றவர்களிடமிருந்து இரவல் வாங்கியவையே அல்லாமல் ஒரு மண்ணும் சிங்களவர்களின் மண்டையிலிருந்து உருவாகவில்லை என்பது தெளிவாகும்

நையாண்டிவண்ணம்/NAIADI WANNAMA
தமிழர்களுக்கு தமது வரலாற்றுச் சின்னங்களையும், தமது முன்னோர்களின் கலைகளைக்  கூட பாதுகாக்கவோ அல்லது உரிமையுடன் சொந்தம் கொண்டாடவோ தெரியாது. ஆக மிஞ்சிப் போனால் பழமையான பாதுகாக்கப்பட வேண்டிய கலைவடிவையும், சினிமாப்பாட்டையும்  கலந்து மானாக மயிலாக மாறி ஒரு டப்பாங்கூத்தாடி தம்மைத் தாமே கோமாளிகளாக்கிக் கொள்வார்கள். ஆனால் சிங்களவர்கள் அப்படியல்ல. சிங்களவர்களோ தமிழர்களிடமிருந்து எல்லாவற்றையும் இரவல் வாங்கி, அவற்றில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டுஅதன் கலையழகைச் சீரழிக்காமல் தம்முடையதாக்கிக் கொள்வார்கள். 

அது மட்டுமன்றி  தமிழர்கள் தான் அந்த கலைவடிவத்தை சிங்களவர்களிடமிருந்து இரவல் வாங்கியதாக வாதாடுவதுடன், அதற்கு மகாவம்சத்தில் கூட ஒரு கதையை ‘ஆதாரத்தை’ உருவாக்கிக் காட்டுவார்கள். அப்படியான வரலாற்று, கலாச்சார திரிப்புகளுக்கு அரச ஆதரவும் இருப்பதால் தான் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் நிலங்களில் எல்லாம் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அடாவடித்தனம் பண்ணி, ஈழத்தமிழர்களை வந்தேறு குடிகளாக்க முனைகிறார்கள் சிங்கள பிக்குகளும் சிங்கள வரலாற்றாசிரியர்களும். அதைப் பற்றி பின்பு பார்ப்போம்.

எப்படி தமிழர்களின் சதிராட்டத்தை பார்ப்பனர்கள் கடத்திக் கொண்டு போய், சில மாற்றங்களைச் செய்து, மெருகூட்டிப்   பரதநாட்டியமாக்கி அதை பரதமுனிவர் என்ற ஒரு வடநாட்டவன் உருவாக்கியதாகக் கதை விடுகிறார்களோ, அது போல் தான் சிங்களவர்களும்  இலங்கையின் தேசிய நடனம் என இப்போது அழைக்கப்படும் கண்டிய  நடனத்தை, தமிழர்களிடமிருந்து கற்று, சில மாற்றங்களைச் செய்து தமதாக்கிக் கொண்டார்கள்.

சிங்களவர்களின் தேசிய நடனம் அல்லது கண்டிய நடனத்தின் வேர்கள், அதன் சொற்கள் நாட்டியத்தின் விதிகள் அனைத்தும் இன்றும்  தமிழ் மொழியிலிருக்கும் போது கண்டிய நடனம் எவ்வாறு தனது தமிழ்த் தொடர்பை இழந்தது என்பதைப் பார்ப்போம்.  கண்டிய நடனத்தின் முக்கியமான பாகத்துக்குப் பெயர் ‘வண்ணம’ (தமிழில் வண்ணம்). பரத நாட்டியத்தில் கூட பல தமிழ்ச் சொற்கள் சமக்கிருதப்படுத்தப்பட்டு விட்டன, ஆனால் கண்டிய நடனத்தில் நாட்டிய விதிகளுக்கான தமிழ்ச் சொற்கள் இன்றும் தமிழாகவே இருப்பதை நாம் காணலாம். 
அனுமான் வண்ணம்/HANUMA WANNAMA
சிங்கள மொழி தமிழிலிருந்து ஆயிரக்கணக்கான சொற்களை இரவல் வாங்கியுள்ளது, ஆனால் அந்த சொற்கள் எல்லாம் கடைசி எழுத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, சிங்கள உச்சரிப்புக்கேற்றதாக உருமாற்றப்பட்டிருக்கும். தமிழைப் போன்று சிங்களச் சொற்கள் ம், ள், ர், ன் இல் முடிவதில்லை, அதனால் உதாரணமாக இலக்கம் என்ற  தமிழ்ச் சொல் சிங்களத்தில் இலக்கம எனவும்  அம்பலம், அம்பலம ஆகவும் தமிழில் எதிரி, சிங்களத்தில் எதிரிய, தமிழில் கடிவாளம், சிங்களத்தில் கடிவாளம, தமிழில் காப்பு, சிங்களத்தில் காப்புவ இப்படி ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் இரவல் வாங்கப்பட்டு சிங்களமாக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.. ஆனால் கண்டிய நடனத்தின் நாட்டிய விதிகளில் இன்றும் சுத்தமான தமிழ்ச் சொற்கள் அப்படியே எந்த வித மாற்றமுமில்லாமல், அதாவது சிங்களமயப்படுத்தாமல்  உபயோகத்திலுள்ளன. கண்டிய நடனம் தமிழ் வேர்களிலிருந்து தான் வந்தன என்பதற்கு அது ஒரு நல்ல ஆதாரமாகும்.

கண்டியரசன் நரேந்திர சிங்கன் (1707-1737) மதுரையையாண்ட தமிழ் பேசும் நாயக்கர் அரச குடும்பத்தின் இளவரசியை தனது பட்டத்தரசியாக்கிக் கொண்டான். அக்காலத்தில் பல சிங்கள அரசர்களின் வழக்கமும் அது தான். ஏனென்றால் பல சிங்கள அரச குடும்பத்தினர் கத்தோலிக்க மதத்துக்கு மாறியும் போத்துக்கேயருடன் கலப்பு மணம் செய்து கொண்டதாலும், கண்டியின் சிம்மாசனத்தில்  அமரும் தூய்மையை (Ritual Purity) இழந்து விட்டதாக புத்த பிக்குகள் நினைத்ததாலும், சிங்கள அரசர்கள் மதுரையில் இருந்து பெண் எடுத்தனர். 

அந்த இளவரசிகளுடன் மதுரையின் அரசவை  நாட்டிய நங்கைகளும், இசைவல்லுனர்களும் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தனர். அவ்வாறு வருகை தந்த தமிழ்க் கவிஞர்கள், கண்டி மல்வத்தை விகாரையிலிருந்த புத்த பிக்குகளின் ஆலோசனையுடன் அவர்களுடன் இணைந்து ஒவ்வொரு வண்ணத்துக்கும் இயற்றிய நாலடிக் கவிதைகள் தான் சிங்களத்தில் இன்றும் கவி என அழைக்கப்படுகிறது. சிங்கள நடனத்தில் பதினெட்டு விதமான வண்ணங்கள் அதாவது நாட்டிய பாரம்பரியம் உண்டு.
பரதநாட்டியத்தில் அவை சமக்கிருதப்படுத்தப்பட்டு விட்டன, ஆனால் கண்டிய நடனத்தில் நாட்டிய விதிகளுக்கான தமிழ்ச் சொற்கள் இன்றும் தமிழாகவே இருப்பதை நாம் காணலாம். 
முசலடி வண்ணம்/MUSALDAI(RABBIT)WANNAMA 

தமிழ்நாட்டில் எவ்வாறு தமிழர்களின் நாட்டிய பாரம்பரியங்களையும் கலைகளையும், இசைக்கருவிகளையும்  குறிப்பிட்ட சாதியினரும், தேவதாசிகளும் மட்டும் பயின்று, ஆடி வந்தனரோ அது போன்றே இலங்கையில் சிங்களவர்கள் மத்தியிலும் தாழ்த்தப்பட்ட சாதிபிரிவினர்  இந்த நடனமாடுவதையும், பறை(சிங்களத்தில் 'பெற') அடிப்பதையும் அரசவையிலும் ஆலயங்களிலும், கிராமங்களிலும் செய்து வந்தனர். ஆனால் கண்டிய நடனத்துக்கும்  தமிழுக்கும் தமிழர்களுக்குமுள்ள தொடர்பை திட்டமிட்டு மறைத்தவர்கள் அவர்களல்ல. சுதந்திரத்துக்குப் பின்னால் சிங்களவர்களின் கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்க புறப்பட்ட, நகர்ப்புற, படித்த, உயர்சாதி சிங்களவர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் தான் திட்டமிட்டு, தமிழ் வேர்களை மறைத்து, கண்டி நடனத்தை சிங்களவர்களுடையது மட்டுமாக்கி, அதற்கு மகாவம்சத்துப் புராணக் கதையையும் இயற்றியவர்கள். தமிழர்களின் சதிராட்டம் எவ்வாறு பரதநாட்டியமாகி மேட்டுக்குடிகளின் கைகளில் போய் தனது தமிழ்த்தன்மையை இழந்ததோ அதே நிலை தான் இலங்கையில் கண்டிய  நடனத்துக்கும் ஏற்பட்டது.

கண்டி நாட்டியக்காரார்கள் வண்ணம், சிறுமருவு, அடவு, காத்திரம், மாத்திரை எனும் தமிழ் நாட்டிய மரபுகளை எந்த விதமான  சிங்களமயப் படுத்தலுமில்லாமல் தமிழ்ச்சொற்களையே இன்றும் சிங்களத்திலும் பாவிப்பதைக் காணலாம்.

அடவு:

இந்தச் சொல் தமிழர்களின் பாரம்பரிய சதிராட்டத்தில் (இன்றைய பாரத நாட்டியம்) போன்றே கண்டிய நடனத்திலும் பாதங்களின் அசைவுகளைக் குறித்தாலும், அது பாத அசைவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தஞ்சாவூர் பாரம்பரியத்தில் 65 அடவுகள் உண்டுஅவை பல்வேறு விதமான நாட்டிய அசைவுகளைக் குறிக்கின்றன. சிங்களவர்களின் தேசிய நடனமாகிய கண்டிய நடனத்திலும் ஒவ்வொரு வண்ணம்(ம) நாட்டியத்தின் முடிவிலும் ஆடப்படுவது அடவு ஆகும்.

காஸ்திரம் அல்லது காத்திரம்

இதுவும் ஒரு பலமான அல்லது கடுமையான நாட்டிய அசைவுகளைக் குறிக்கிறது. கண்டிய நடனத்தில் காத்திரத்தை தொடர்ந்து ஆடப்படும் அடிப்படை நாட்டிய அசைவுகளும், அதற்கேற்ப மேளத்தின் அடியும் மாத்திரை என அழைக்கப்படுகிறது. இரண்டாவது, மூன்றாவது மாத்திரைகளின் பின்னர் காத்திரம் சிக்கலான நாட்டிய அசைவாக மாறுகிறது. நாலாவது மாத்திரையின் பின்பு காத்திரம் நீண்ட நேரத்துக்கு ஆடப்படும். நாலாவது மாத்திரையில் நாட்டியமாடுபவர் சுதந்திரமாக,  அவரது விருப்பப்படி துள்ளவும், சுழன்றாடவும் முடியும். ஆனால் மேளம் அடிப்பவர் அவரது அசைவுகளைக் கவனமாக அவதானித்து, அவரது நாட்டிய அசைவுகளுக்கேற்ப மேளத்தை ஒலிக்க வேண்டும்.  சிங்கள நடனத்தில் வண்ணம் என்றழைக்கப்படும் நடனத்தின் உச்சகட்டம் இது.  

சிறுமருவு:
தமிழ்ச் சொல்லாகிய சிறுமருவு என்ற சொல்லை  மென்மையாக, மெதுவாக ஆடப்படும் நாட்டிய அசைவுகளுக்கு சிங்களவர்கள் இன்றும்  பாவிக்கிறார்கள். காத்திரத்தின் போது பலமான நாட்டிய அசைவுகளையும், சுழன்றும், துள்ளியும் ஆடிக் களைத்துப் போன நாட்டியக்காரரம், மேளகாரரும்  சிறுமருவின் போது இளைப்பாறிக் கொள்ளுவர்.  
இவை மட்டுமன்றி சிங்களவர்கள் தமிழர்களின் வேறு பல நாட்டிய, கலை வடிவங்களை இரவல் வாங்கியிருக்கிறார்கள். தமிழ்பெயர்களையும் அப்படியே வைத்துக் கொண்டே மகாவம்ச காலத்தில் விஜயன்  நையாண்டி நடனமாடினார் புத்தர் பறந்து வந்திருந்து பார்த்தார்  என்று வாய் கூசாமல் பொய் கூறித் தமக்கும் தமிழர்களுக்கும் மட்டுமல்ல, தமது கலைகளுக்கும் தமிழர்களுக்கும் கூடத் தொடர்பில்லை என மறுப்பார்கள் சிங்களவர்கள்.

நையடி (Naiadi) அல்லது நையாண்டி

நையாண்டி பாரம்பரியம்  இன்றும் தமிழ்நாட்டில் உண்டு. இலங்கையிலும் சிங்களவர்களால் கதிர்காம முருகனை வேண்டி பம்பை, நையாண்டி மேளம் என்பவை ஆடப்பட்டன. ஆனால் இன்று விஸ்ணு கோயில்களிலும் ஆடப்படுகிறது. பம்பை, நையாண்டி என்று தமிழ் பெயர்களால் அழைத்துக் கொண்டே அது வட இந்தியாவிலிருந்து மகிந்த தேரோ அறிமுகப்படுத்தினார் என்று கூறும் சிங்களவர்களுமுண்டு.

உடெக்கி (சிங்களம்) அல்லது உடுக்கு(தமிழ்)

தமிழர்களைப் போலவே உடெக்கி மேளத்தை சிவனுடனும் அதிலிருந்து வரும் ஒலியை விஷ்ணுவுடனும் தொடர்பு படுத்துகின்றனர் சிங்களவர்கள்.

Thammettam drummer/ தம்பட்டம் 

பந்தெறு (சிங்களம்)/ பந்தெறி (தமிழ்)

பந்தெறு நடனம் கண்ணகி அல்லது பத்தினி தெய்வத்த்தின் அருளை வேண்டி ஆடப்படுகிறது. ஆனால் இந்த பந்தெறி நடனம் புத்தர் சித்தார்த்தன் என்ற பெயரில் இளவரசனாக இருந்த காலத்தில் போரின் வெற்றியைக் கொண்டாட கொண்டாடினாராம், அதனால் சிங்கள அரசர்களும் போர் வெற்றியைக் கொண்டாட ஆடினார்களாம் என்று சில சிங்களவர்கள் புருடா விடுவதுமுண்டு.

இந்தப் பதிவின்  நோக்கம் தமிழர்களுக்கும்சிங்களவர்களுக்கு மிடையிலுள்ள நெருங்கிய இன, கலை, கலாச்சாரத் தொடர்புகளைக் காட்டுவது மட்டுமல்ல, எங்களுடைய கலைகளையும், இலக்கியங்களையும், வரலாற்றையும் இரவல் வாங்கி அல்லது திருடிக் கொண்டவர்கள் எமது வரலாற்றைத் திரித்து தமிழர்களை வந்தேறிகளாக காட்ட முனைகிறார்கள். ஏனென்றால் அவர்களின் கையில் அரசும், ஆட்சியுமிருக்கிறது. 

அத்துடன் தமிழர்களாகிய நாங்கள் சிங்களவர்களுடன் ஒப்பிடும்போது எமது பழமையைப் பாதுகாப்பதுமில்லை, அதைப் பற்றிப் பெருமைப்படுவதும் குறைவு. நாங்கள் சிங்களவர்களைப் போல் மற்றவர்களின் வரலாற்றுத் தடயங்களைத் திரித்து எங்களுடையதென்று சொந்தம் கொண்டாடாது விட்டாலும் கூட எமது கலை, கலாச்சார, வரலாற்றுப் பாரம்பரியங்களை அழியாமலும், தமிழரல்லாத வர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும்.  


Ref: 
arts of Sri Lanka
TITLE: South Asian arts 
SECTION: Kandyan dance
The kandyan dance is highly sophisticated and refined. It flourished under the Kandyan kings from the 16th through the 19th centuries, and today it is considered the national dance of Sri Lanka. It has four distinct varieties: The pantheru, naiyadi, udekki, and ves (the most artistic and renowned). Its energetic movements and postures are reminiscent of India’s.
http://www.britannica.com/EBchecked/topic/310955/Kandyan-dance

 Vannama: A Classical Dance Form and its Musical Structure

2 comments:

Anonymous said...

அருமையான பதிவு. சிங்கள வாழ்வியல், மொழியில் தமிழ் சாயல் மிகுதி. உதா. நடன முறைகள் போன்றவற்றில் தமிழக, கேரள் சாயல்களை காணலாம். இது இங்கிருந்து அங்கு ஏற்பட்ட மக்கள் பெயர்வும், கலப்பும், அரசியல், கலைப் பண்பாட்டு தொடர்பும் செய்த மாயம். மதுரைக்கும் சிங்களத்துக்கும் பண்டு தொட்டே தொடர்புகள் மிகுதி. ஓர் இடத்திலும் பாண்டியரை இழிவாக மகாவம்சம் கூறியதில்லை, சோழர்களையே கடிந்துரைத்திருக்கும். பாண்டிய முடியரசின் மணிமுடியை சோழர்கள் கைப்பற்றும் போது சிங்கள நாட்டில் வைத்து பாதுக்காப்பதும். அதனை மீட்க சோழர் சிங்களத்தின் மீது போர் தொடுத்தலுமே வரலாறாய் நீண்டதுண்டு. சிங்கள படைகள் பாண்டிய படைகளுக்கு துணையாக பல போர்களில் பங்கு பற்றிய குற்றிப்புகள் உள்ளன. தென் பாண்டிய கொல்லம் முதல் கொற்கை வரையிலானோர் பலரும் தான் இலங்கையில் பெருமளவில் குடியேறினார்கள். ஆகவே சிங்களத்துக்கும் - தமிழகத்துக்குமான தொடர்புகள் ஆளமானவை. வீரசோழியம் என்ற தமிழ் பவுத்த இலக்கண நூலைக் கொண்டே சிங்கள இலக்கணமும் வகுக்கப்பட்டது. தமிழகத்தில் பவுத்தம் வீழ்ந்த பின் பலர் இலங்கையில் அடைக்கலமாய் சிங்களத்தோடு கலந்தும் விட்டனர். இன்னும் நிறைய இருக்கு.சிங்களவர் திருடினார் என்ற பதத்தில் உடன்பாடு இல்லை, இங்குள்ள மக்கள் அங்கு புகும் போது அவை அங்கும் சென்றன அவ்வளவே. வடக்கத்திய இந்து மதத்தை தமிழர் திருடினார்கள் என்று சொல்லலாமா? அதே போன்றே. நன்றிகள்.

viyasan said...

//சிங்களவர் திருடினார் என்ற பதத்தில் உடன்பாடு இல்லை//

உங்களின் கருத்துக்கு நன்றி. அவர்கள் இரவல் வாங்கியதை, அல்லது தமிழர்களிடமிருந்து கற்றுக் கொண்டதை அல்லது அவர்களுக்கும் தமிழர்களுக்குமுள்ள இனத் தொடர்பையும் கூட மறுக்கும் போது, திருடினார்கள் என்பதை நீங்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் சுதந்திரத்துக்குப் பின்னர். இனவாதம் பிடித்த சிங்களப் பேராசிரியர்களும், புத்தபிக்குகளும் தமிழர்களில் வரலாற்றை, தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை, பாரம்பரிய கதைகளை திருடி, உருமாற்றி சிங்களமாக்கியது மட்டுமல்ல சிங்களமாக்கிக் கொண்டுமிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் நிறைய உண்டு.