Sunday, June 30, 2013

தமிழ் இந்துக்கள் தமிழ்க் கிறித்தவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்




இலங்கையில் இருந்தாலென்ன  உலகத்தில் எந்த மூலை முடுக்குச் சென்றாலும் தமிழை, தமிழ்ப்பண்பாட்டை மறக்காதவர்கள் இலங்கையின் தமிழ்க் கிறித்தவர்கள். இலங்கைச் சைவத்தமிழர்கள் குறிப்பாகக் யாழ்ப்பாணச் சைவத்தமிழர்கள் தமிழ், தமிழுக்கு முன்னிடம் என்று பீற்றிக் கொண்டாலும், புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் மூலைக்கு மூலை கோயிலைக் கட்டி, தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்ல, கேரளத்திலிருந்தும் பார்ப்பனர்களை அழைத்து வந்து  சாதியையும், சமக்கிருதத்தையும்,  வளர்த்து விட்டது தான் மிச்சம்.





ஆனால் தமிழ்க் கிறித்தவர்கள் எங்கு போனாலும் தமிழில் பூசை தமிழில் சொற்பொழிவு, அழகான தமிழில் பாடல் என்று தமிழுக்கு முதலிடம் கொடுக்கின்றனர்.  சுவிற்சர்லாந்தில் உள்ள கருப்பு மாதாவின் தேவாலய வருடாந்த திரு விழாவை ஈழத் தமிழ்க் கிறித்தவர்கள் தமிழில் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்று இந்தக் காணொளியில்  பாருங்கள்.

இதைப் பார்க்கும் பொது அன்னை மரியாளுக்கு தமிழில் தமிழர்களின் வேண்டுதலைப் புரிந்து  கொள்ள முடிகிறது   ஆனால் தமிழ்க்கடவுள் முருகனுக்கும் அன்னை மாரியம்மனுக்கும் மட்டும் ஏன் சமக்கிருதம் தேவைப்படுகிறது என்று வியக்காமலிருக்க முடியவில்லை. அது கூட குறிப்பிட்ட சாதியினர் சொன்னால் மட்டும் தான் புரிகிறது. இந்த விடயத்தில் கிறித்தவரல்லாத ஈழத் தமிழர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

தமிழர்களின் கோயில்களில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கும் போராட்டங்கள் பல தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டாலும் பல காரணங்களால் அவர்களால் அதில் வெற்றி கொள்ள முடியவில்லை. ஈழத்தமிழர்களின் கோயில் நிர்வாகிகள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கோயில்களிலாவது முற்று முழுதிலும் தமிழில் பூசையை நடத்தாது விட்டாலும், தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க ஆவன செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்  கோயில்களில் தமிழிலும் பூசை செய்யப்படும் என்ற அறிவிப்பாவது இருக்கும் ஆனால் ஈழத்தமிழர்களின் கோயில்களில் அதுவும் கிடையாது எல்லாம் சமக்கிருதத்தில் தான்.  அதனால் தமிழைக் கோயில்களில் பூசை செய்யும் மொழியாக்கும் புரட்சி  ஈழத்தமிழர்களிடமிருந்து தொடங்க வேண்டும். ஈழத் தமிழ்க் கிறித்தவர்களைப் போன்றே நாங்களும் எமது வழிபாட்டை தமிழாக்க வேண்டும்.

அத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆலயங்களில்  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் முறையாகப் பயிற்சி பெற்ற தமிழர்கள்  அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும். இதே நடைமுறையை சிங்கப்பூர், மலேசியா, பிஜீ போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் பின் பற்றினால், சாதியொழிவது மட்டுமல்ல, தமிழர்களின் இந்து மதம் மீண்டும் தமிழாக்கப்படும். தகுதியற்றவர்களையும் பிறப்பின் அடிப்படையில் குருமார்களாக்கும் முட்டாள்தனம் நீங்கும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டும் கோயில்களில் நியமிக்கப்படாத  தமிழர்கள்.

12 comments:

நிரஞ்சன் தம்பி said...

தாய் மொழிகளில் வழிபடுவதே சால்ச் சிறந்தது. ஆனால் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் சாங்கத மொழிக்கே முன்னுரிமைக் கொடுக்கின்றனர், அத்தோடு புதிய புதிய கடவுள், சாமியார்களை முன்னிறுத்தி கோவில்கள், மடங்கள் கட்டுகின்றனர். வியாபார நோக்கில் மட்டுமே எல்லாம் செயல்படுவது போல் உள்ளது. கடவுளை நம்பாதவன் என்ற நிலையில் என்னால் இதற்கு மேல் பேச விருப்பமில்லை, ஆனால் தமிழர்கள் போதியளவு தமிழுக்கு முக்கியத்துவம் தருவது, நல்லது. சாதி ரீதியான கோவில்களை கட்டுவதைக் கைவிட்டு, அனைத்து சாதியும் ஒருங்கே குழுமும் கோவில்களை நட்டத்த வேண்டும். ஆனால் யாரும் கேட்கப் போவதில்லை, :/

viyasan said...

கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தமிழர்கள் என்ற முறையில் எல்லோரும் ஈழத் தமிழர்களின் கோயிலில் கூட தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்பதைப் பேச வேண்டும் அதைப்பற்றி எழுத வேண்டும், தமிழ்நாட்டில் முயன்றார்கள் ஆனால் அது வெறும் பிராமண எதிர்ப்பின் காரணமாக உருவெடுத்ததால் வெற்றியடையவில்லை. ஆனால் ஈழத்தமிழர்கள் தமிழர்களின் கோயில்களின் தமிழுக்கு முதலிடம் கொடுக்கும் போராட்டத்தை ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும், ஏனென்றால் தமிழ்நாட்டைப் போல் தமிழ் எதிரிகளின் ஆதிக்கம் எங்களின் மத்தியில் கிடையாது. இதைப்பற்றி உங்களைப் போன்ற எல்லா தமிழர்களும் எழுத வேண்டும். இது தான் நாம் ஈழத்தமிழர்கள் செய்யும் முக்கியமான தமிழ்த்தொண்டாக அமைய முடியும்.

நந்தவனத்தான் said...

//ஏனென்றால் தமிழ்நாட்டைப் போல் தமிழ் எதிரிகளின் ஆதிக்கம் எங்களின் மத்தியில் கிடையாது.//

தமிழ் எதிரிகள் யார் பார்ப்பனர்களா?

தமிழின் சொத்துக்களான பழந்தமிழ் பாடல்களை மீட்டெடுத்தவரே ஒரு பார்ப்பனர்தான். இந்த தொண்டுக்கு நிகரான ஒன்றினை இனி மேலும் யாரும் செய்ய இயலுமா என தெரியவில்லை. தமிழ்க் கவிதையின் போக்கினை மாற்றியாமைத்த பாரதி முதல் உரைநடையினை மாற்றிய சுஜாதா வரை பார்ப்பனரின் தமிழ் பணி நிச்சயம் தன்னிகரற்றது. திராவிட இயக்கம் செய்ததைவிட நிச்சயம் இது அதிகமே.சுஜாதா உட்பட பார்ப்பனரை பற்றி இன்ன பிற குற்றச்சாட்டுக்களை கூறலாமே ஒழிய அவர்களின் தமிழ் பற்றி குறை சொல்லவது மனசாட்சி இருக்கும் யாருக்கும் கடினமே.

அப்புறம் தமிழ் பார்ப்பனர் தமிழை நீசபாசை என பார்பனர் கூறுகிறார்கள் என திராவிட அமைப்புகள் குற்றம் சாட்டுகிறதே என்ற கேள்வி வரலாம். இந்த மாதிரி தமிழை மட்டம் தட்டும் பார்ப்பனர் பெரும்பாலும் புரோகிதராக இருப்போர். இவர்களின் பிழைப்பே சம்ஸ்கிருத மந்திரங்களை நம்பியிருக்கிறது. இவை மற்ற தமிழருக்கு தெரியாது என்பதினால் பிழைப்புக்காக சம்ஸ்கிருதத்தை தூக்கி பிடிக்கிறார்கள். அவ்வளவுதான், இவர்களின் கருத்து ஒதுக்கப்பட வேண்டியது என்பதும் உண்மைதான்.

சில நாட்களுக்கு முன் ஜெயலலிதா கன்னடரா என பேச்சு வந்த போது ஒருவர் சொன்னார்.. 'ஜெ-வின் ஐயங்கார் சமூகம் ஸ்ரீரங்கத்திலிருந்து கன்னடத்துக்கு போன குடும்பங்களில் ஒன்று, இன்றும் கன்னடத்தில் வசிக்கும் ஐயங்கார்களுக்கு தமிழ்தான் தாய்மொழி' என்று. பெரும்பாலான பார்ப்பனர்களுக்கு சம்ஸ்கிருதமே தெரியாது என்ற போதும் என்னவோ அவர்களின் தாய்மொழி சம்ஸ்கிருதம் போலவும் வீடுகளில் அவர்கள் சமஸ்கிருதம் பேசுவது போலவும் பில்டப் உருவாக்கிவிட்டன பிழைப்புவாத திராவிட அமைப்புகள்.

வருண் said...

@viyasan

*** கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தமிழர்கள் என்ற முறையில் எல்லோரும் ஈழத் தமிழர்களின் கோயிலில் கூட தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்பதைப் பேச வேண்டும் அதைப்பற்றி எழுத வேண்டும், தமிழ்நாட்டில் முயன்றார்கள் ஆனால் அது வெறும் பிராமண எதிர்ப்பின் காரணமாக உருவெடுத்ததால் வெற்றியடையவில்லை.***

"தமிழ்நாட்டுத்தமிழன் எவனும் எதையும் ஒழுங்கா செய்யமாட்டான். பிராமனனை வணங்கி, கெஞ்சுதான் தமிழை வச்சு கடவுளுக்கு ஒப்பாரி வைக்கணும். அப்படி அவன் செய்யாமல் பிராமண எதிர்ப்புனு இறங்கி வீணாப்போயிட்டான்."னு வியாசன் வியாக்யாணம்!! சரி, இருக்கட்டும்.

தமிழ், தமிழன் என்று மூச்சுவிடும் உங்களுக்கு ஏன் இந்த சோதனை, வியாசன்?

உங்களால் முடியாத (அதான் கடவுளுக்கு தமிழ்ல ஒப்பாரி வைத்தல், வேண்டுதல் விடுக்க, இத்யாதி) இயலாமையை தமிழ்நாட்டுத் தமிழனைக் காட்டி சமாளிப்பது படுகேவலமா இருக்கு, வியாசன்!

சிறு வயதில் ஃபெயிலான சிறுவன் ஒருவன், இன்னொரு ஃபெயிலான சிறுவனைக் காட்டி "அவனும் ஃபெயிலுதான்"னு சமாளிக்கிறமாரி இருக்கு உங்க வியாக்யாணம்!

cheatnono said...

தமிழர்கள் என்றால் ஆண்கள் மட்டும் தானோ? தமிழ் படித்தார்கள், கோயிலுக்குள் விடுவது இல்லை என்கிறார்கள்? எதை படித்தாலும், எந்த மதத்தில் நுழைந்தாலும், பணம் கொடுபதற்க்கும், கரிவேர்பிலை போல ஊதாசீன படுத்தவே பிறந்தவர்களோ பெண்கள்? தமிழர் என்ற உணர்வு இனி எதற்கு? ஆண்பிள்ளை, ஆண்பிள்ளை என்று அலையும் இந்த இனம் அழிந்தால் என்ன?பார்பனர்கள் பெண்களை வீட்டிலாவது மதிப்பார்கள். இவனுங்க பஸ்சில் கூட நிம்மதியாக போக விட மாட்டானுங்க !

viyasan said...

///இயலாமையை தமிழ்நாட்டுத் தமிழனைக் காட்டி சமாளிப்பது படுகேவலமா இருக்கு, வியாசன்!///

சகோ.வருண்,

உங்களின் வருகைக்கு நன்றி. ஆனால் வந்த முதல்நாளே விதண்டாவாதமா? :)

ஒன்றில் உங்களுக்கு நான் சொல்வது புரியவில்லை, அல்லது நான் தெளிவாகச் சொல்லவில்லை போல் தெரிகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இவ்வளவு ஆட்பலம், அதாவது எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும் பல விடயங்களில் அவர்களிடம் ஒற்றுமையில்லாததால் கோட்டை விட்டு விடுகிறார்கள் என்ற ஆதங்கம் இலங்கைத் தமிழர்களிடம் உண்டு, அதற்கு நாங்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களை வெறுக்கிறோம், அல்லது அவர்களை தாழ்வாக நினைக்கிறோம் என்றெல்லாம் சிலர் கற்பனை செய்து கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அதேவேளையில் தனது தோல்விகளை அல்லது கையாலாகத்தனத்தை நினைத்து அண்ணனுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தால், அதற்கு தம்பி என்ன செய்ய முடியும்?

தமிழ் நாட்டில் முயன்றார்கள் முடியவில்லை என்பது என்னுடைய கற்பனை அல்ல. அது உண்மை. தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு, சும்மா கவனிப்பாரில்லாமல் கிடக்கிறது. திருவேங்கடத்திலிருந்து ஈழத்தின் திருக்கோயில் வரையுள்ளது பாரம்பரிய தமிழர்களின் மண், மற்ற நாடுகள் எல்லாம் இடம்பெயர்ந்த நாடுகள். அதனால் தமிழ்நாட்டால் முயன்று முடியாமல் போன எந்த தமிழ் சம்பந்தமான விடயத்தையும், ஈழத்தமிழர்கள் முன்னெடுப்பது தான் முறை. அது தான் வழக்கமும் கூட, உதாரணமாக உங்களின் தனிநாட்டுப்போராட்டம் தோல்வியடைந்த பின், உலகில் தமிழர்களுக்கென நாடமைக்கும் போராட்டத்தை நாங்கள் தொடங்கவில்லையா, அதில் ஈழத்தமிழர்கள் வெற்றி பெறா விட்டாலும், உண்மையான உணர்ச்சியுடன் கூட உயிரைக் கொடுத்துப் போராடினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.. அது போல தமிழ்நாட்டவர்கள் முயன்று, முடியாமல் பிசுபிசுத்துப் போன தமிழர்களின் கோயில்களில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கும் போராட்டத்தையும் ஈழத்தமிழர்கள் முன்னெடுக்க வேண்டுமென்பது தான் என்னுடைய வேண்டுகோள். இதில் இயலாமையோ அல்லது சமாளிக்கும் நோக்கம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. :)

cheatnono said...

பார்பனர்கள் பெண்களை வீட்டிலாவது மதிப்பார்கள். இவனுங்க பஸ்சில் கூட நிம்மதியாக போக விட மாட்டானுங்க ! தமிழர் என்பது ஆண்களை மட்டுமே குறிக்கும் சொல்லோ? எந்த கோயிலுக்குள், எந்த மதத்தில் நுழைந்தாலும், சும்மா வெறும் பணம் கொடுபதற்க்கும், கறிவேப்பிலை போல உதாசீன படுத்த வேண்டியது. ஆண் பிள்ளை, ஆண் பிள்ளை என்று அலையும் இந்த இனம் அழிந்தால் என்ன?சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற மரபு நமது. அப்படியா நடக்குது. கருகலைப்பும், கள்ளி பால் readyaaga இருக்கும் பிறவி எடுக்கும்போதே. உங்களால் நாங்கள் இழந்தது சொல்லி மாளாது! சாவட்டும் இந்த தமிழ் ஆண்கள்!

viyasan said...

//தமிழ் எதிரிகள் யார் பார்ப்பனர்களா? //

சகோ. நந்தவனத்தான்,

தமிழ் எதிரிகள் என்றதும் உங்களுக்கு பார்ப்பனர்களின் நினைவு வந்ததற்கு நான் பொறுப்பல்ல. தம்மை தமிழர்களாக எண்ணும் பார்ப்பனர்களும் இருக்கிறார்கள், அதே வேளையில் தமிழை தாழ்த்தி, தம்மை தமிழர்களை விட உயர்வாகக் காட்டி, தமிழ் நாட்டிலேயே தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதை எதிர்க்கும், முட்டுக்கட்டைகள் போடும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, தமிழரல்லாதவர்களின் ஆதிக்கமும் தமிழ் நாட்டில் உண்டு. அதனால் தமிழுக்கு தமிழ் நாட்டிலேயே முன்னுரிமை கொடுப்பதை எதிர்ப்பவர்கள் எல்லோரும் தமிழ் எதிரிகள் தான்.

viyasan said...

//தமிழின் சொத்துக்களான பழந்தமிழ் பாடல்களை மீட்டெடுத்தவரே ஒரு பார்ப்பனர்தான். இந்த தொண்டுக்கு நிகரான ஒன்றினை இனி மேலும் யாரும் செய்ய இயலுமா என தெரியவில்லை.//

நீங்கள் சுவாமி நாதையரைத் தானே குறிப்பிடுகிறீர்கள்? அவர் செய்த தமிழ்த்தொண்டை மறுக்கவில்லை. ஆனால் அந்தப் புகழிலும் பெருமையிலும், தமிழ்தொண்டில் யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலருக்கும் முக்கிய பங்குண்டு. புகழ் பெற்ற தமிழ் அறிஞர் வி. கல்யாணசுந்தரனாரின் கூற்று இது.

"In the field of editing, and publishing old manuscripts Navalar laid the foundation, C.V.Thamotharampillai built the walls and U.V.Swaminatha Iyer beautifully roofed it".


“The credit of editing and publishing many of the works included the Cankam literature and the Five Great Epics(Civakacintamani, Cilappatikaram, Manimekalai, Valayapati and Kuntalakeci) goes to U. V. Swaminatha Aiyar (1855-1942). In this endeavour it has been rightly observed that Arumuka Navalar laid the foundation, C. W. Thamotherampillai raised the walls and U.V.Swaminatha Aiyar built the superstructure."

(from Tamil Renaissance and Dravidian Nationalism, by Nambi Arooran, K., Professor & Head of Department of History, Madurai Kamraj University, Koodal Publishers, Madurai, 1980)

எல்லாப் புகழுக்கும் சுவாமி நாதையருக்கு அல்ல ஈழத்தமிழர்களுக்கும் பங்குண்டு. :)

viyasan said...

The credit of editing and publishing many of the works included the Cankam literature and the Five Great Epics(Civakacintamani, Cilappatikaram, Manimekalai, Valayapati and Kuntalakeci) goes to U. V. Swaminatha Aiyar (1855-1942). In this endeavour it has been rightly observed that Arumuka Navalar laid the foundation, C. W. Thamotherampillai raised the walls and U.V.Swaminatha Aiyar built the superstructure."

@நந்தவனத்தான்,

அழிந்து போய்க்கொண்டிருந்த தமிழ் நூல்களைக் காப்பதில் முன்னணியில் நின்ற மூவர்களின் ஆறுமுகநாவலர் மட்டுமல்ல சி.வை. தாமோதரம்பிள்ளையும் ஈழத்தமிழ்மகன் தான்.

நந்தவனத்தான் said...

//தமிழ் எதிரிகள் என்றதும் உங்களுக்கு பார்ப்பனர்களின் நினைவு வந்ததற்கு நான் பொறுப்பல்ல.//

உண்மைதான், சந்தேகம் என்பதாலேயே தமிழ் எதிரிகள் யார் பார்ப்பனர்களா? என கேட்டிருந்தேன்!

//தமிழுக்கு தமிழ் நாட்டிலேயே முன்னுரிமை கொடுப்பதை எதிர்ப்பவர்கள் எல்லோரும் தமிழ் எதிரிகள் தான்.//

ஒப்புக்கொள்ளுகிறேன்.

//எல்லாப் புகழுக்கும் சுவாமி நாதையருக்கு அல்ல ஈழத்தமிழர்களுக்கும் பங்குண்டு,மூவர்களின் ஆறுமுகநாவலர் மட்டுமல்ல சி.வை. தாமோதரம்பிள்ளையும் ஈழத்தமிழ்மகன் தான்.//

இங்கு பார்ப்பனர் பற்றிய குற்றசாட்டு என (தவறாக) கருதியே வ.உ.சா வை பற்றி மட்டும் எழுதினேன். மற்றபடி அவர் பார்பனர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழர்க்கும் - ஈழத்தமிழர்க்கும் சேர்த்துதான், சொந்தமானவர். அதே போலத்தான் மற்ற இருவரையும் ஈழத்தமிழர் மட்டும் சொந்தம் கொண்டாடுவது சரியல்ல. அவர்களும் அப்படி கருதவில்லை என்பதற்கும் நாவலர் யாழ்பாணத்தில் ஒரு அச்சகமும் தமிழ்நாட்டில் ஒரு அச்சகமும் நடத்தியதும் அவரது தமிழ்நாட்டுத் தொடர்புகளும் சாட்சி. மேலும் இவர்கள் அந்நூல்களை சேகரித்து பதிப்பித்தவர்களே. அவ்வோலை சுவடிகளை காத்து பேணிய பேர் தெரியா தொண்டர் (unsung heroes) வேறு இருக்கிறார்கள்! நன்றி சகோ வியாசன்.

viyasan said...

சகோ. நந்தவனத்தான்,

யார் தமிழ் எதிரிகள் என்பதில் என்னுடைய கருத்தை நீங்களும் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியே.

யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் தமிழுக்கு தமிழர்கள் முன்னுரிமை கொடுப்பதை எதிர்த்தால் அவர்கள் தமிழெதிரிகள் தான், இதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கக் கூடாது. இலங்கைத் தமிழர்கள் மத்தியில் யாரும் அப்படித் துணிந்து தமிழுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டே. தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதை வெளிப்படையாக எதிர்க்கக் கூடியளவுக்கு, துணிச்சலும், செல்வாக்குமுள்ள பலர் இருக்கிறார்கள். அந்த நிலையை, அப்படியானவர்களுக்கு அவ்வளவு கொழுப்பு வருமளவுக்கு இடம் கொடுத்ததை தான் தமிழ்நாட்டுத் தமிழர்களின் கையாலாகாத்தனமாக நாங்கள், ஈழத்தமிழர்கள் கருதுகிறோம்.

அந்த ஆதங்கத்தை, என்னைப் போன்ற ஈழத்தமிழர்கள் எம்மையறியாமலே எங்களின் எழுத்தில் காட்டி விடுகிறோம், அதனால் சில தமிழ் நாட்டுத் தமிழர்களின் பகையையும் சம்பாதித்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

நீங்கள் சொல்வது போல் தமிழ்த்தொண்டாற்றிய அனைவரும்- தமிழ்ப்புலவர்கள், சான்றோர்கள், நாயன்மார்கள், கிறித்தவ பாதிரிமார்கள், இஸ்லாமிய புலவர்கள், ஐரோப்பியர்கள் உட்பட எல்லோரும் உலகத் தமிழர்கள் அனைவராலும் போற்றப்பட வேண்டியவர்கள். ஆனால் எண்ணிக்கையில் குறைவான ஈழத்தமிழர்கள், தமது பங்குக்கதிகமாகவே செய்த தமிழ்த்தொண்டு வேண்டுமென்றே தமிழ்நாட்டில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றதோ என்ற உணர்வு ஏற்படுகிறது. அதனால் தான் என்னைப் போன்ற ஈழத்தமிழர்கள் எமது முன்னோர்களின் தமிழ்த்தொண்டையும் நினைவு படுத்த வேண்டிய நிலைமைக்கு உந்தப்படுகிறோம். :)