Sunday, March 10, 2013

திருக்கேதீச்ச‌ர‌த்தில் சிங்க‌ள‌ பெள‌த்த‌ ஆக்கிர‌மிப்பை எதிர்த்து இந்துக்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ உல‌க‌த்த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் குர‌ல் கொடுக்க‌ வேண்டும்.
"பண்டு நால்வருக்கு அறம் உரைத்தருளிப் பல்லுல கினில் உயிர் வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிலங்கை தொழக்காதலித் துறை கோயில்
வண்டு பண்செயுமாமலர்ப் பொழின் மஞ்சை நடமிடு மாதோட்டம்
தொண்டர் நாடொறும் துதிசெய அருள் செய் கேதீச் சரமதுதானே "
                                                                                                                                             (சம்பந்தர்)Thiru Ketheeswaram
ம‌காசிவ‌ராத்திரி நாள் ஈழ‌த்தில் பாட‌ல்பெற்ற‌ சிவால‌ய‌ங்க‌ளில் ஒன்றாகிய‌ திருக்கேதீச்ச‌ர‌த்தில் மிக‌வும் சிற‌ப்பாக‌க் கொண்டாட‌ப்ப‌டும் விழாவாகும். "ப‌த்தாகிய‌ தொண்ட‌ர் தொழும் பாலாவியின் க‌ரைமேல் செத்தாரெலும்ப‌ணிவான் திருக்கேதீச்ச‌ர‌த்தானே" என‌ சுந்த‌ரரால் பாட‌ப்பெற்ற‌ பாலாவித்தீர்த்த‌த்தின் புனித‌நீரினால், எந்தவித‌ சாதி வேறுபாடுக‌ளுமின்றி, அக‌ழ்வாராய்ச்சியில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட, இராவ‌ணனால் பூசிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌க் க‌ருத‌ப்ப‌டும் ப‌ழ‌மை வாய்ந்த‌ சிவலிங்க‌த்தை முழுக்காட்டும் வ‌ழ‌க்க‌ம் திருக்கேதீச்ச‌ர‌த்திலுண்டு. வ‌ட‌ இந்தியாவில் சாதி வேறுபாடின்றி, காசியில் கூட‌ அனைவ‌ரும் சிவ‌லிங்க‌த்துக்குப் பூசை செய்தாலும், த‌மிழ்நாட்டில் எந்த‌ பாட‌ல்பெற்ற‌ புராத‌ன‌மான‌ சிவால‌ய‌த்திலும் இப்படி அனைவ‌ரும் சிவ‌லிங்க‌த்துக்கு அபிடேக‌ம் செய்யும் வ‌ழ‌க்கம் இருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை.

"பங்கஞ்செய்த மடவாளடு பாலாவியின் கரைமேல்
தெங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே"
ஈழத் தமிர்களைப் பொறுத்த வரையில் சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை. அதே போல் இன மதவெறிபிடித்த சிங்களவர்களும் தமிழர்களின் பழமையான, கோயில்களை  இலங்கையில் தமிழர்களின் வரலாற்றின் அடையாளங்களாக, தமிழர்களை மறுக்க முடியாத ஈழமண்ணின்  பூர்வீக குடிகளாக உறுதிப்படுத்தும் சின்னங்களாக நினைத்து அஞ்சுகிறார்கள். அதனால் தான் பாடல் பெற்ற தலமாகிய திருக்கோணேச்சரத்தை இன்று சிங்களமயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தேவாரப்பாடல் பெற்ற தலமாகிய. திருகோணமலையில் நடைபெற்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தால், அங்கு தமிழர்களை விட சிங்களவர்கள் பெரும்பான்மையாகி விட்டார்கள். கோணேசர் கோட்டையினுள்ளேயே பாரிய புத்தர் சிலையைவைத்து தமிழ்த்தன்மையை அகற்றி விட்டார்கள்.

கதிர்காமமும் தமிழர்களின் கையை விட்டுப் போய்விட்டது. கதிர்காமம் தென்னிலங்கையில் இருப்பதால் அது தவிர்க்க முடியாதவொன்று ஆனால் தமிழீழத்திலும் திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்புக்குத் தமிழர்களின் பாரம்பரிய நிலமும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த. எமது முன்னோர்களால் பேணிப்பாதுகாக்கப்பட்ட எமது வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவதும், சிங்கள ஆக்கிரமிப்புக்குள்ளாவதும் உலகம் வாழ் தமிழர்களால் மட்டுமல்ல, சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்குப் மதிப்பளிக்கும் அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டியதொன்றாகும்.

திருக்கேதீஸ்வ‌ர‌ம் ஆல‌ய‌த்தின் நுழைவாயிலில் சிங்க‌ள‌ பெள‌த்த‌ கொடிக‌ள்

பெளத்தமதம் இந்துக்களுக்கு எதிரானதல்லவெனவும், பெளத்தமும் இந்து மதத்தின் ஒரு அங்கம் என இந்தியாவில் பாரதீய ஜனநாயகக் கட்சிக்காரர்களும், இந்துத்துவாக்களும்   வாதாடுவதை நாமறிவோம். ஆனால் சிங்களவர்கள் அப்படியெல்லாம் நினைப்பதில்லை. இராமகோபாலன்கள் எல்லாம் பங்களாதேசிலும் பாகிஸ்தானிலும் இந்துக் கோயில்கள் அழிக்கப் படுவதைப்பற்றி மட்டும் தான் பேசுகிறார்கள்.  ஈழத்தமிழர்கள் இந்துத்துவாக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளவர்களல்ல ஆனால் சிங்கள பெளத்தம், ஈழத்தமிழர்களின் சைவத்தையும், அவர்களின் கோயில்களையும் தமிழர்களின் அடையாளமாக, தமிழர்களின் கலாச்சார பாரம்பரியத்தின் பிரிக்க முடியாத அங்கமாகவே பார்க்கிறார்கள்.

பாலாவிக்க‌ரைப் பிள்ளையார் கோயில்
தமிழ்நாட்டில் கூட பார்ப்பனீயத்தின் மீதுள்ள கோபத்தைத் தீர்ப்பதற்காகப் பலர் பெளத்த மதத்தில் இணைந்துள்ளார்கள் அவர்கள் சிங்கள பெளத்தத்தின் தமிழின எதிர்ப்பு வெறியை அறிந்திருக்க வாய்ப்பில்லை.  தமிழீழத்தில் சிங்களவர்கள் புத்தர் சிலைகளை வணங்குவதற்காக மட்டும் நிறுவுவதில்லை, அவர்கள் புத்தர் சிலைகளை, குறிப்பாக தமிழர்களின் பழமையான கோயில்களிலும், வரலாற்று முக்கியத்துவமுள்ள இடங்களிலும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களிலும் நிறவுவதன் காரணம் தமிழ்மண்ணை பறிப்பதற்கும், தமிழர்களின் வரலாற்றை மறுப்பதற்கும், சிங்கள குடியேற்றங்களை தொடர்வதற்குமேயாகும்.

பாலாவி தீர்த்த‌க்க‌ரை
தமிழ்க்கடவுள் முருகனின் கதிர்காமம் பறிபோய்விட்டது, பாடல்பெற்ற தலங்களின் ஒன்றான திருக்கோணேச்சரமும் சிங்கள மயமாக்கப்பட்டு விட்டது. இன்று சிங்கள இனவெறியர்கள்,  "மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்னகர்" என ஞானசம்பந்தரால் போற்றப்பட்ட திருக்கேதீச்சரத்திலும் கைவைத்து விட்டனர். இந்திய அரசால், போர்க்காலத்தில் சிங்கள இராணுவத்தால் சூறையாடப்பட்ட திருக்கேதீச்சர ஆலயத்தை திருத்தியமைப்பதற்காக அளிக்கப்பட்ட320 மில்லியன் ரூபாய்களைக் கொண்டே திருக்கேதீச்சர எல்லைக்குள் பெளத்த ஆலயமும் சிங்களக் குடியேற்றமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

பாலாவித் தீர்த்த‌க்க‌ரையில் புத்த‌ர்சிலை
 சிங்க‌ள‌ ஆக்கிர‌மிப்பின் அடையாள‌ச்சின்ன‌ம்
தம்புள்ளையில் புத்தரின் புனித பூமிக்குள் பள்ளிவாசல் இருக்கக் கூடாதென வாதாடும் அதே சிங்கள பிக்குகள் தான் இன்று  ஐயாயிரமாண்டுகள் பழமை வாய்ந்த தமிழர்களின் திருக்கேதீச்சரத்தில், தமிழர்களின் பாரம்பரிய மண்ணில் தமிழ்நாட்டுத்தமிழர்களின் வரிப்பணத்திலேயே தமிழர்களின் பாரம்பரியத்தையும், உரிமையையும் அழித்து சிங்களக் குடியேற்றம் நடாத்துகிறார்கள். பல  ஈழத்தமிழர்கள் இன்று சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வாழ்கிறார்கள், அதனால் அவர்களால் எதையும் எதிர்த்து பேசமுடியாது ஆனால் தமிழ்நாட்டிலோ அல்லது உலகெலாம் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்களல்லாத தமிழர்களிடமிருந்தோ அல்லது இத்தனை கோடி இந்துக்களிடமிருந்தும் ஈழத்தின் பாரம்பாரிய ஆலயங்களை சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பதை எதிர்த்து   மூச்சுக் கூட விட‌வில்லை. ஒரு பள்ளிவாசலுக்கு சிறு கல்லெறி விழுந்தால் கூட அத்தனை முஸ்லீம்களும் கொதித்தெழுந்து விடுவார்கள், அவர்களுடன் பெரியாரிஸ்டுக்களும், திராவிட‌த் த‌லைவ‌ர்க‌ளும், தொண்ட‌ர்க‌ளும் ஏன் த‌லித்துக்க‌ளும் கூட ஒன்றிணைந்துத அவர்களுக்காகக் குரல் கொடுக்கிறார்கள். அதைத் தவறென்று நான் இங்கு கூறவில்லை. பள்ளிவாசலைக் காக்க ஒன்றுபட்டது போல் ஈழ‌த்தில் திருக்கேதீச்ச‌ர‌ம், கோணேச்ச‌ர‌ம் போன்ற‌ ப‌ழ‌மையான‌ கோயில்க‌ளையாவ‌து அழிவிலிருந்து காக்க‌வும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்.


ஈழத்தில் சைவாலயங்கள் தமிழ்க்கலாச்சாரத்தினதும், தமிழர்களினதும் அடையாளமாகவுள்ளதென்பதையும், அங்கு பார்ப்பன ஆதிக்கம் இல்லை என்பதையும் தமிழ்நாட்டின் பகுத்தறிவுவாதிகள் பலரும் உணர்வதில்லை.  தமிழ்நாட்டுத் திராவிடவாதிகளின் மேலுள்ள காழ்ப்புணர்வால், தமிழரல்லாத இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் இந்துக்களாகவிருந்தும்  ஆதரவளிப்பதில்லை. ஆனால் திராவிட வீர்ர்களும் தம்மிடையேயுள்ள பிளவுகளை மறந்து ஈழத்தமிழர்களின் வரலாற்றைக் கலாச்சார விழுமியங்களை உணர்ந்து ஈழத்தமிழர்களின் ஆலயங்களும் அவர்களின் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படும் போதும் ஆக்கிரமிக்கப்படும் போதும்  அவர்களுக்காக ஒன்றுபடுவதில்லை.  ஈழத்தமிழர்களின் பாடு இரண்டும் கெட்ட நிலை தான்.
கோயிலுக்க‌ருகில் புதிதாக‌
அமைக்க‌ப்பட்ட‌ சிங்க‌ள‌ ராஜ‌ம‌கா விகாரை

பெரும்பாலான ஈழத்தமிழர்கள் சைவத்தையும் தமிழையும் தமதிரு கண்களாக மதித்தாலும், இந்துக்களாக மட்டும் அல்லாமல் தமிழர்களாக ஒன்றுபடவே விரும்புகிறார்கள். ஈழத்தமிழர்களின்  பாடல்பெற்ற பாரம்பரிய தலமாகிய சிவபூமி திருக்கேதீச்சரம் சிங்கள ஆக்கிரமிப்புக்குள்ளாகி பறிபோய்க் கொண்டிருக்கும் இக்காலகட்ட்த்தில், தமிழீழம் முழுவதும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாக ஆக்கிரமிக்கப்படும் நிலையில், உல‌க‌மெல்லாம் ப‌ர‌ந்து வாழும் த‌மிழ‌ர்க‌ள் அனைவரும் மதவேறுபாடுகளை மறந்து,  திருக்கேதீச்சர ஆலயத்தில் சிங்கள ஆக்கிரமிப்பை, ஈழத்தமிழர்களின் நிலவுரிமை மட்டுமல்ல வாழ்வுரிமைப்  பிரச்சனையாக உணர்ந்து, நாம் தமிழர்களாக ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்,  அத‌ற்கு இந்திய அரசை வற்புறுத்த வேண்டுமென்பதே ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.


திருக்கேதீச்ச‌ர‌த்தில் ஐம்பெருந்தேர் (ப‌ஞ்சர‌த‌ம்) திருவிழா

"-வேட்டுலகின்
மூதீச் சரமென்று முன்னோர் வணங்கு திருக்

கேதீச் சரத்திற் கிளர்கின்றோய்". (அருட்பா)
No comments: